(இத்தொடர்கதை திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 2
நடந்தது :
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையை வீட்டு வேலைக்காரியிடம் இருந்து ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் சுகுமாரன்.
நடப்பது:
“சொன்னது புரிஞ்சிச்சா….? எனக்கு… உண்மையான…. பதில்… வேணும்…” அவளை முறைத்துப் பார்த்தபடி ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாய்ச் சொன்னார் சுகுமாரன்.
“ம்… சொ… சொல்றேன் சா…ர்… உ… உண்…மையைத்தான் சொ… ல்…. றே… ன்” குளிரிலும் அவளுக்கு வேர்த்தது. பற்கள் தந்தியடித்தன.
“உம் பேரு என்ன?” அதட்டலாய்க் கேட்டார்.
“ல…ல…லதா” அதட்டலுக்குப் பயந்தவளுக்கு வார்த்தை சிக்கியது.
“லதா…. ம்.. லதாதானா… இல்ல ஹேமலதா, சாருலதா இந்த மாதிரி எதாவது லதாவா..?”
“ல… லதாதான் சார்…”
“பயப்படாத… கையில என்ன கம்பு வச்சிக்கிட்டா நிக்கிறேன்… இல்லயில்ல…” கொஞ்சம் முகத்தில் சிரிப்பைக் கொண்டு வந்தார்.
அவளும் முகம் துடைத்துக் கொண்டாள்.
“கல்யாணம் ஆயிடுச்சா..?”
“ஆச்சு சார்…”
“புருஷனுக்கு என்ன வேலை..?”
“பெயிண்ட் மேஸ்திரி…”
“பிள்ளைங்க…?”
“ஒரு பையன் ரெண்டாவது படிக்கிறான்…”
“சரி… நீ இங்க எத்தனை வருசமா வேலை பாக்குறே…?”
“ரெண்டு வருசமா?”
“ம்… பகல்ல மட்டும் வருவியா… இல்ல ராத்திரியில..?”
“ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்குப் போயிட்டு காலையில ஆறுமணிக்கு மேலதான் வருவேன்…. இங்க ராத்தங்க மாட்டேன்…”
“இன்னைக்கும் ஆறு மணிக்குத்தான் வந்தியா..?”
“ம்…”
“வந்தோடனே உங்கய்யா செத்துக் கிடக்கதைத்தான் மொதல்ல பார்த்தியா..? நேரா அவர் ரூமுக்குத்தான் வருவியா..?”
“இல்ல… வாசத் தொளிச்சிக் கோலம் போட்டுட்டு, கீழ வீட்டக் கூட்டிட்டு, காபி போட்டுக்கிட்டுப் போயித்தான் ஐயாவை எழுப்புவேன். எப்புடியும் ஏழு, ஏழரைக்குத்தான் மேல ஐயா ரூமுக்குப் போவேன். அதுக்கு முன்னால அவர் எந்திருக்க மாட்டார். எப்பவும் போலத்தான் இன்னைக்கும் போனேன்… ஆனா அங்கே ஐயா… ஐயா…” அழ ஆரம்பித்தாள்.
அவளின் முகத்தையே பார்த்தார்.
அந்த அழுகையில் உண்மை இருப்பதை உணர்ந்ததாய்க் காட்டிக் கொள்ளாமல் அடுத்த கேள்வியை யோசித்துக் கொண்டே அவள் அடங்கும் வரை அமைதி காத்தவர், அவள் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு ஒரு செருமலுடன் மூக்கை உறிஞ்சியபடி அவர் முகத்தைப் பார்த்ததும், “அவரு மதுரைதானே… இங்க அடிக்கடி வருவாரா…?” என்றார்.
“ஆமா சார். மாசத்துக்கு ரெண்டு மூனு டைம் வருவாரு… ரெண்டு நாள் இல்லேன்னா மூணு நாள் இருப்பாரு… அப்ப மட்டும்தான் எனக்கு இங்க வேலை… மத்தநாள் வரவேண்டியதில்லை. மத்த இடத்துல மாசம் பூராம் வேலை பார்த்தாலும் சம்பளம் கொடுக்கிறப்போ அது நொட்டை இது நொட்டைன்னு சொல்லிக்கிட்டுக் கொடுப்பாங்க. அதிகமான சம்பளமெல்லாம் கிடைக்காது. இங்க சம்பளமும் நிறையக் கொடுப்பாரு… வேலையும் கம்மி. அதான் நான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டேன்…”
“ம்… எப்ப வருவேன்னு உனக்குச் சொல்லுவாரா..? இல்ல இந்த இந்த நாள்ல வருவார்ன்னு உனக்குத் தெரியுமா..?”
“இல்ல…. அதெல்லாம் தெரியாது. எனக்கு அவரு நேரடியாப் பேசினதெல்லாம் இல்லை. அவரு வர்றதுக்கு முதல் நாள் ரெத்தினண்ணன் போன் பண்ணி விபரம் சொல்லும்…”
“அதாரு ரெத்தினம்… அண்ணன்…” கேலியாய் இழுத்துப் பேசினார்.
“இங்க வாட்ச்மேனா இருக்கு…”
‘வாட்ச்மேன் ரெத்தினம்… ஆளை இப்ப வரைக்கும் ஆட்டையில காணோமே’ என நினைத்துக் கொண்டே, “ஓகோ… ஆளு எப்படி…?”
“யாரு…?”
“அதான்… இப்ப நீ சொன்னியே அந்த ரெத்தினம்…”
“ரொம்ப நல்ல மனுசன்… தங்கமான குணம்.”
“சரி… இருக்கட்டும்… நல்லவனா கெட்டவனா… தங்கமா பித்தளையான்னு நாங்க பாத்துக்கிறோம்” என்றபடி மீண்டும் ஒரு சிகரெட்டுக்கு மாறினார்.
சிகரெட் புகைக்கு அவள் முகத்தைச் சுளித்தாள்.
சிரித்துக் கொண்டே அவள் முகத்துக்கு நேரே புகையை ஊதியபடி, “உங்க ஐயா இங்க வர்றப்போ யாராலயும் பிரச்சினை… இல்லை யார்க்கிட்டயும் பிரச்சினைன்னு எதுவும்…?”
“அப்படியெல்லாம் எதுவுமில்லை… சார்”
“யோசிச்சுச் சொல்லு”
“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், நானிருக்கிற பகல் நேரத்துல எதுவும் பிரச்சினை இல்லை. ராத்திரியில எதுவும் நடந்தாலும் ரெத்தினண்ணன் சொல்லியிருக்கும்”
“ஓ… அப்ப இங்க நடக்கிறதெல்லாம் ரெத்தினம் உங்கிட்ட சொல்லிருவாரு… அப்படித்தானே”
“அப்படியில்ல சார். சில விசயங்கள் சொல்லும்”
“சரி… ஆமா மதுரையில இருந்து இங்க எதுக்கு வர்றாரு..? இங்கிட்டு எதாவது வீட்டுக்குத் தெரியாம…”
“அதெல்லாம் இல்லை சார்…” அவசரமாக மறுத்தாள்.
“ரொம்ப நல்லவரோ?” என்றபடி சிகரெட் துண்டை கீழே போட்டு ஜூவால் தேய்த்தார்.
லதா பாவமாய் நின்றிருந்தாள்.
“கூத்தியாவோ… குட்டியோ இல்லைன்னா குடி… அதானே… குடிப்பாரா..?”
தன்னுடைய பேச்சு அவளுக்கு முகச் சுளிப்பைக் கொடுப்பதை கவனித்துக் கொண்டார் சுகுமாரன்.
“ம்… அதிகம்….”
“அவரு மட்டுமா?”
“பகல்ல ஏதோ பிசினஸ் வேலையின்னு வெளி பொயிட்டு வருவாரு. மத்தியானம் வந்தாருன்னு உடனே பாட்டிலத்தான் எடுப்பாரு… ஆம்லெட், ஆப்பாயில், சிக்கன், மீன் ப்ரைன்னு எதாச்சும் செஞ்சு கொடுக்கணும்.”
“ம்… தனியாக் குடிக்கவா அங்க இருந்து இங்க வர்றாரு மனுசன்…?”
“இல்ல கொஞ்சம் பிரண்ட்ஸ் வருவாங்க… எல்லாரும் எல்லா நேரமும் வரமாட்டாக. பெரும்பாலும் ராத்திரியில வருவாங்கன்னு ரெத்தினண்ணன் சொல்லும். அதுக்காக நான் எப்பவும் கறியோட, மீன், சிக்கன் ப்ரையெல்லாம் பண்ணி வச்சிட்டுத்தான் போவேன். அவருக்கு பீப்பும், போர்க்கும் ரொம்பப் பிடிக்கும்”
“ம்…”
“அவருக்கு நெருக்கமான ப்ரண்ட் ஒருத்தர் இருக்கார்…”
“அது யாரு…?”
“டாக்டர் சிவராமன்… ஐயா இங்க வந்துட்டா டாக்டர் சார் பெரும்பாலும் இங்கதான் இருப்பார்… வெளியில போனாலும் ரெண்டு பேருமாத்தான் போவாங்க”
“ம்… அப்ப சிவராமன்தான் கொன்னிருக்கணும்… இல்லையா?” எனக் கேட்டுவிட்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தார் சுகுமாரன்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
(திங்கள் கிழமை – விசாரணை தொடரும்)