நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
மானூர் என்னும் அழகிய சிற்றூரில் விக்ரமன் என்னும் சிறுவன் வசித்து வந்தான். தாய் தந்தையரை இழந்த அவனுக்கு வயதான பாட்டி மட்டுமே துணை. விக்ரமன் சுறுசுறுப்பானவன். புத்திசாலி. நன்றாக உழைப்பவனும் கூட பாட்டிக்கு கூட மாட ஒத்தாசையாக இருந்து வேலைகளில் உதவி செய்வான்.
ஒரு நாள் அவன் தன் குடிசை வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தபோது குளவி ஒன்று அவனை சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. அது சுவற்றில் கூடு கட்ட முனைந்து கொண்டிருந்தது. எரிச்சல் அடைந்த விக்ரமன் அதை விரட்டினான். ஒரு அட்டையை எடுத்து அதை அடிக்க முயன்றான்.
அப்போது அந்த குளவி பேசியது “நண்பா! என்னை அடிக்காதே!” என்றது. விக்ரமன்ஆச்சர்யத்துடன் “யாரது குளவியா பேசுவது?” என்றான். “ஆம் குளவிதான் பேசுகிறேன். நண்பா என்னை அடிக்காதே! என்னுடைய உதவி உனக்கு ஒரு சமயத்தில் தேவைப்படும் என்னை விட்டுவிடு!” என்றது.
விக்ரமனும் குளவிதானே என்று எண்ணாமல் “குளவியாரே உன்னை கொல்வதால் எனக்கும் ஒன்றும் இல்லைதான்! ஆனால் என்னை தொந்தரவு செய்யாமல் போய்விடு!” என்றான்.
குளவியும் ” நண்பரே! உனக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் என்னை நினைத்து குளவி நண்பா என்று அழை நீ எங்கிருந்தாலும் உன் முன் வந்து உனக்கு உதவுவேன். நான் ஒரு கந்தர்வன் ஒரு ரிஷியின் சாபத்தால் குளவியானேன்.இதனால்தான் உன்னோடு பேச முடிந்தது” என்று கூறி பறந்து சென்று விட்டது. சில வருடங்களில் பாட்டியும் இறந்துவிட விக்ரமன் வேலைதேடி பக்கத்து நாட்டுக்கு பயணித்தான்.
இரண்டு நாட்கள் பயணித்த அவன் மூன்றாம் நாள் இரவுஒரு காட்டை அடைந்தான். அதை கடந்தால் தான் பக்கத்து நாட்டினை அடைய முடியும். நடுக்காட்டில் ஒரே இருள். பாதை புலப்படாமல் அவன் அங்கேயே தங்க முடிவு செய்தான். உடனே அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி தங்குமிடம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தான்.தூரத்தில் ஒர் வெளிச்சம் தென்பட,மரத்திலிருந்து இறங்கி, அந்த வெளிச்சத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான். ஒரு பத்து நிமிடத்தில் அந்த வெளிச்சத்தை அவன் நெருங்கினான். அது ஒரு அழகிய மாளிகை! அதனுள் நுழைந்தான். மாளிகையில் யாரும் இல்லை. மாளிகை முழுவதும் பாறாங்கற்கள் இறைந்து கிடந்தன.
இவ்வளவு அழகிய மாளிகையில் மனிதர்களே வசிக்க வில்லையா? ஏன் பாறாங்கற்கள் இறைந்துகிடக்கிறது என்று யோசித்தவாறே உள்ளே நுழைந்தான். அப்போது ஓர் அறையிலிருந்து பெண்ணின் அழுகுரல் விசும்பலாக வெளிவந்தது. விக்ரமன்அங்கு சென்றான்.
அங்கு ஒரு இளம்பெண் பஞ்சணையில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தாள்.
விக்ரமன் “பெண்ணே நீ யார்? ஏன் அழுகிறாய்?” என்றான்.
அவனைக் கண்டு திடுக்கிட்டவள், ” நீங்கள் யார்? எப்படி இதனுள் வந்தீர்கள் அதை முதலில் சொல்லுங்கள்?” என்றாள்.
விக்ரமன் தன்னுடைய விவரங்களை சொல்லி முடிக்க, அவள் “நான் ஒரு இளவரசி இந்த மாளிகை ஒரு அரக்கனுடையது. அவன் என்னை கடத்திக் கொண்டு வந்து இங்கு அடைத்து வைத்துள்ளான். என்னை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று முயன்று வருகிறான். நான் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தட்டிக் கழித்து வருகிறேன். என் விருப்பம் இல்லாமல் என்னை தொட்டால் இறந்துவிடுவேன் என்று மிரட்டியதால் என்னை விட்டு வைத்திருக்கிறான். வெளியில் கற்களாக இருப்பவர்கள் என்னை மீட்க வந்தவர்கள். அரக்கன் எதிரில்யார் வந்தாலும் அவர்களை அரக்கன் கல்லாக்கி விடுவான்” என்று கூறி முடித்தாள்.
“பெண்ணே கலங்காதே நான் உன்னை மீட்கிறேன்!” என்ற விக்ரமன் என்ன செய்யலாம் என்று யோசித்தான். பின் இளவரசி எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இரவில் அரக்கன் வரும் சமயம் விளக்கை அணைத்துவிடுங்கள் அவன் கண்ணால் பார்த்தால்தானே கல்லாக்க முடியும். நான் பாறை மறைவில் அமர்ந்து சவால் விட மற்றதை என்னுடைய நண்பன் பார்த்து கொள்வான் என்று சொன்னான்.
“நண்பரா அது யார்?” என்றாள் இளவரசி “இப்போது வருவான் பாருங்கள்!” என்று குளவியை மனதில் நினைக்க, அங்கு குளவி தோன்றியது.
குளவியிடம், “இளவரசியை மீட்க வேண்டும் இரவில் இருட்டில் நான் பாறை மறைவில் அமர்ந்து அவனோடு பேசுவேன். நீ அவன் கண்கள் இரண்டையும் கொட்ட வேண்டும். அப்புறம் உன் படை வீரர்கள் அவன் உடல் முழுதும் கொட்டினால் அவன் தீர்ந்தான்.” என்றான் விக்ரமன்.
அன்றைய இரவில் அரக்கன் நுழைந்ததும் விளக்கை அணைத்து விட்டாள் இளவரசி. “ இளவரசி! என்ன இது மாளிகை இருட்டாகிவிட்டதே!” என்று அரக்கன் குரல் கொடுக்கும் போதே, “ உன் முடிவு நெருங்கி விட்டது அதனால்தான் இருட்டாகிவிட்டது” என்று குரல் கொடுத்தான் விக்கிரமன். இருளில் ஆள் தெரியாமல் ”யார் யார் அது?” என்று அரக்கன் தேடவும் “நான் உன் முன்னால் தான் நிற்கிறேன் என்னை தெரியவில்லையா?” என்று பாறை பின்னால் ஒளிந்து குரல் கொடுத்தான் விக்ரமன்.
“யாரடா நீ என் பலம் தெரியாமல் மோதுகிறாய்! இதோ விளக்கு ஏற்றிவிட்டு உன்னை கவனிக்கிறேன்!” என்று விளக்கை ஏற்றமுயன்ற அரக்கனின் கண்ணில் குளவி கொட்டியது மாற்றி மாற்றி கொட்ட வலியால் துடித்தான் அரக்கன். “ஆ அம்மா! என் கண் போயிற்றே!” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் ஏராளமான குளவிகள் அரக்கனை சூழ்ந்து கொண்டன.
குளவிகளின் கடி தாளாது அலறிய அரக்கன் முன் வாளோடு பாய்ந்த விக்ரமன் அவனை வெட்டிச்சாய்த்தான். அரக்கன் மறைந்ததுமே அவனது மந்திரசக்தியும் மறைந்துபோனது. கல்லானவர்கள் உயிருடன் வந்தார்கள்.இளவரசி விக்கிரமனை தன்னுடைய நாட்டிற்கு அழைத்துச்சென்றாள். .அங்கு விக்ரமனுக்கு பலத்த வரவேற்புகிடைத்தது. அந்நாட்டு மன்னர் இளவரசியை விக்ரமனுக்கு மணம் முடித்து வைக்க, இளவரசியும் விக்ரமனும் சுகமாக வாழ்ந்தனர்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.