இப்படியெல்லாம் எழுதவே வேண்டாம் என்பதற்கும் இப்படி எழுத வேண்டியுள்ளது என்பதற்கும் இடையில் எழுந்த கவிதைகள் இவை. ஒரு வகையில் இதுவே ஒரு ஆய்க்கினைதான். ஆனால், மறுவகையில்
இது விடுபடலுக்கான வழியும் கூட. வேறு கதியில்லை. எனக்கு, உங்களுக்கு, நம் காலத்துக்கு எல்லாவற்றுக்குமே. எதெல்லாம் நடக்கக் கூடாது என்றாலும் அதெல்லாம் நடந்து விடுகின்றது. அப்படித்தான் ஈழப் போராட்டமும் அதனுடைய கனவும்.
விடுதலை பற்றிய கனவை விதைத்து விட்டுப் பார்த்தால் பதர்களும் முட்புதர்களுமாகவே விளைந்தது நிலம். விளைந்த நிலமோ கொலைக் களமானது. ஒடுக்கு முறைக்கு எதிரான பயணம் அப்படியே நேரெதிராகத்திரும்பி ஒடுக்குமுறையாகியது. விடுதலைக்கான நடையும் அப்படித்தான். எதிர் நிலையானது. எல்லாமே நேர் – எதிர், எதிர் - நேர் என மாறிமாறிக் குழப்பமாகியது. இன்னும் இந்தக் குழப்பம் தீரவில்லை.
அப்படித்தான் நானும் நீங்களும் நம் காலமுமானது. இது மத்தியூவின்
காலம். சரியாகச் சொன்னால், மத்தியூவை உருவாக்கியதே இந்தக் காலம்தான். இந்தக் காலத்தில் நிகழ்ந்தவை, நிகழ்த்தப்பட்டவை.
நிகழ மறுத்தவை எல்லாம்தான் இந்தக் கவிதைகள். இதற்கு மேலென்ன சொல்ல?
- கருணாகரன்
ஆதாமுக்கு ஆபில் காபில் என்று இரண்டு மகன்கள் உண்டு. அகங்காரம் பிடித்த ஒருவன் தனது உடன் பிறந்தானை பொறாமையில் கொன்றுவிட்டு என்ன செய்வதென்று அறியாது தவிக்கும்போது ஒரு காகம் தோன்றி இறந்து போன மற்றொரு காகத்தை குழி தோண்டிப் புதைக்க. அது கண்ட ஆதாமின் மகனும் அவ்வாறே செய்தான் என்பது இஸ்லாமிய, கிறிஸ்துவ, யூத பண்பாட்டு விழுமியங்களின் ஆதிக்கதை என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த நன்றிக் கடனின் எச்சம் தான் இறந்தவர்களுக்கான பிண்டம், திதி, பித்ரு, படையல் எல்லாவற்றிலும் காகத்தை ஆரம்பமாய் முன் நிறுத்துவதாகக் கூட இருக்கலாம்.
தமிழக கடற்புறமான இணையம் புத்தன்துறை ஊரில் இருந்து சிரியா நாட்டின் அலிப்போ வரை இந்த கதையை சுமந்து செல்ல காகமே துணை நின்றதால் கடற்காகம் பெயர் உருப்பெற்றது.
மணலில் நீந்தி கரை சேராத மனித வாழ்வின் தர்க்கங்கள் கேள்வியும் பதிலுமாய் முளைத்து நிற்பதை நாவலின் வழியே சொற்பமாய்ச் சொல்ல முனைந்துள்ளேன்.
பூடகங்களோ, படிமங்களோ, நவீன வடிவங்களோ அற்ற கவிதைகள், நிலத்தின், இன உணர்வின், அழகியலின் பாசாங்கற்ற சொற்களைக் கொண்டு ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்து காட்டுகின்றன. மொழியின் பலம் வகைப்படுத்துதலைக் கடந்து கவிதைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. அந்தவகையில் ஒரு நல்ல பயணத்திற்கான தொடக்கமென இதை எந்த சந்தேகமுமற்று சொல்லலாம்
சொற்கள் ஜீவன் பெறுகின்றன, ஜீவித்தது யாவுமே மேலே பறக்க எத்தனிக்கின்றன. என் தாள்களில் ஒட்டியிருக்கின்ற எழுத்துகள் குறுகிய காலங்கள் கொண்டவை தான், ஆனால் அது அவளால் மாறியது.
என்னைச் சபித்தவற்றை நினைவு கூறி, என்னை எப்போதும் முத்தமிட ஈர்க்கும் அந்த ஆபரணங்களற்ற
கழுத்துத் தொண்டையிலிருந்து எழும்சொற்கள். ஓசைகளைவிட மேலான வடிவில் – மொழியைக் கடந்த ஒன்றை மேலெழுப்பும், அது உயிர்கொண்டது. அதை நான் மொழியால் வீழ்த்தும்போது கதையாய் ஜனிக்கிறது.
இதில் இருக்கின்ற பிரச்சனை ஒன்றே ஒன்று தான் அவை கீழே விழும் போது நான் மிகச்சரியாக தாளில் ஏந்திட வேண்டும்.
– ஜீவ கரிகாலன்
ஒரு கதையில் கனவுக்கான மொழி நம்மிடம் இல்லாததாலேயே அதை எழுத முடிவதில்லை என்கிறார் ஆசிரியர். ஆனால் தொகுப்பின் பல கதைகள் கனவில் நிகழ்வது போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்குகின்றன. வாழ்வின் சாபங்களையும் மனிதர்களின் அவலங்களையும் பூடக மொழியில் எழுதிச் செல்கிறார் ஜீ.முருகன். எந்தக் கதையின் முடிவும் இன்னொரு தொடக்கத்தை வேண்டி நிற்பதே இதற்குச் சான்று. சமகால அரசியலைப் பகடி செய்யும் நடையில் சித்திரப்படுத்தியிருக்கும் ‘கைவிடப்பட்ட கதை’யும், ஆவணக் கொலைகளை விவரிக்கும் ‘பாம்பு’ கதையும் தொகுப்பில் இருவேறு நடையில் புதிய அனுபவத்தைத் தருகின்றன. ஏழு ஆண்டுகளாக எழுத்திலிருந்து விலகி இருந்த ஜி.முருகன், அந்த இடைவெளியை ‘கண்ணாடி’ சிறுகதை தொகுப்பு மூலம் பூர்த்திசெய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
-விகடன் ’தடம்’
திரைக்கதை என்பது இலக்கியமாகுமா அல்லது படப்பிடிப்பிற்குத் தேவைப்படுகிற அத்தியாவசிய கருவியா என்பதைப் பற்றிய விவாதங்கள் எழுந்திருக்கின்றன. எப்படியாயினும் ஒரு எழுத்துப் படைப்பு திரைக்கதையாக உருமாரும்போது அதன் மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் ஒரு திரைக்கதையாசிரியருக்கு முன்பாக உள்ள சவால்.
இப்படி ஒரு சிறுகதை அல்லது புதினத்திலிருந்து திரைக்கதை மாறியவிதம் பற்றியும் அதைக் கையாண்டவிதமும் எப்படி கையாளப்பட்டிருக்கிறது என்பதையும் குறித்து நாம் அதிகம் உரையாட வேண்டியிருக்கிறது. அதன் ஒரு தொடர்ச்சியே இந்தப் புத்தகம்.
இக்கட்டுரைகள் வெறுமனே வாசித்துக் கடந்து போகிற கற்பனைகள் இல்லை. மெய்யான அனுபவங்களிலிருந்து வாசித்தும், கேட்டும் பெற்ற மகிழ்ச்சியை, துக்கத்தை, வாசகனுக்கும் கடத்துகிற நேர்மையான இலக்கியப்பணி. அதை ரூபன் சிவராஜா அவர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்.
வெகுஇயல்பான எழுத்தின் மூலம் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை கதைக்களமாக்கியிருக்கிறார் நாச்சியாள் சுகந்தி. இன்றைய வைஃபை சூழ் நாட்களின் ஒளிச் சிதறல்கள் இச்சிறுகதைகளின் எல்லாப் பக்கங்களி லும் ஆங்காங்கே தேங்கியிருக்கின்றன. வால்பாறையில் கழிந்த இவரு டைய இளம்பருவத்து வாழ்வின் ஞாபகங்கள் சில கதைகளில் புன்னகைக்கின்றன. இத்தொகுப்பில் 11 கதைகளில் ஒன்று புரியாது பூசணிக்கா என்றொரு கதை. இளம்பருவத்தில் ஏற்படும் எதிர்பாலினக் கிளர்ச்சிக்கு ஆட்படாமல், இரு உள்ளங்களின் உரையாடலுக்கு இடையே பூத்திருக் கும் நட்பைப் பேசும் கதை. கதையில் வரும் சண்முகம், புத்தகங்களால் ஜன்னல் செய்பவன். புத்தகம்தான் அவனுக்கு வேட்டை, புதையலும் அதுதான் அவனுக்கு. இப்படித்தான் சிலரது மாடத்தில் சண்முகம் போன்ற சிலர் அகல்விளக்கு ஏற்றி வைத்துவிடுகிறார்கள். அதுவும் அணையா விளக்கு. இன்னொரு கதை,அறுத்துக் கட்டினவ உக்கிரம் மிதக்கும் கதை. குழந்தையுடன் தனித்து வாழும் செல்லம்மா என்கிற ஒரு வயல் மனுஷியைக் கண்முன்னே நிறுத்தும் கதை. ஆதித் திமிர் அவள் கண்களில் ஜொலித்தது என்று கதை நிறைவுறும்போது, நம் கிராமங்களின் ஏதோ ஒரு முகம் சட்டென்று மின்னி மறைவதை உணர முடிகிறது.
புனைவு கொடுக்கின்ற கட்டற்ற சுதந்திர வெளியை,மொழி கொடுக்கின்ற அற்புத வாய்ப்புகளைக் கலைஞனின் சிந்தனையோட்டத்தின் வேகத்திற்கோ அல்லது அதன் வீச்சிற்கு இணையாகவே அல்லது ஓரளவுக்கு அதனைத் துரத்திப்பிடிக்கும் அளவிற்குப் புனைவுகளில் பயன்படுத்துவது மிகவும் அரிதாகவே நம் மொழியில் நடைபெறுகின்றது.
உலகின் மாற்றங்களை வேறு ஒரு புள்ளியிலிருந்து கவனிக்க ஆரம்பித்தால்,யதார்த்தம் என்று நம்பப்படும் யாவுமே வேறு எங்கோ சுழல ஆரம்பிக்கும்,ஏனெனில் கலைக்கு மையம் என்பது நிரந்தரப் புதிர்.மாதவன் அப்படியான ஒரு சுழற்சியை உணர்ந்து பார்த்திருக்கிறார்.அதுதான் கனவு ராட்டினம்.
ஜீ.முருகனின் கதைகள் புதிய வடிவங்களுக்காக முயற்சிசெய்பவை எனச் சொல்லலாம். அவ்வாறு முயற்சி செய்யாத கதைகள் எளிய சித்தரிப்புகளாக நின்று விட்டிருக்கின்றன. ஜீ.முருகனின் முக்கியமான பலம் அவருக்கு மொழியாளுமையில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது. அவரது கதைகள் ஒரு யதார்த்த தளத்திலிருந்து எழுந்து சித்தரிப்பின் ஒரு அம்சத்துக்கு மட்டும் மேலதிகமான குறியீட்டு அழுத்தத்தை அளித்து ஒரு படிமத்தை உருவாக்க முயல்கின்றன. இது அவரின் கவிதைத் தொகுப்பு