ஆர்.வி.சரவணன்
முன்கதை :
காதல் பிரச்சினையால் ஊருக்கே வராத மாதவன் நண்பனின் திருமணத்துக்காகத் தட்டமுடியாமல் வந்த போது திருமண மண்டப வாசலில் இருக்கும் பேனரில் தன் முன்னாள் காதலி மீராவின் போட்டோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாக, அதே நேரம் எதேச்சையாக அவளின் அப்பா மீது மோத, பழைய நினைவுகள் வந்து போகின்றன. அவர் மிரட்ட, இவனோ என்ன செய்துவிடுவாய் என்பதாய் எதிர்த்துக் குரல் கொடுக்க, அவனைத் தேடி இளைஞன் ஒருவன் வருகிறான்.
****
இனி…
மாதவன் சொன்ன வார்த்தைகள் ராஜனை மிரள வைத்திருக்கிறது எனபதை அவரது முகமே சொன்னது. அதை மறைக்க சிரமப்பட்டவர் அவனுக்கு என்ன பதில் சொல்லலாம் என்று வார்த்தைகளை தேட ஆரம்பித்திருந்தார்.
இதற்கிடையே பைக்கை விட்டு இறங்கி வந்து கொண்டிருந்த இளைஞன் மாதவனை நெருங்கினான். அவன் மண்டபத்தின் அலங்கார வாயிலில் இருந்து ரோட்டில் இறங்க, பின்னாலிருந்து ‘மிஸ்டர் மாதவன்’ என அந்த இளைஞன் கூப்பிடவும் சரியாக இருந்தது.
மாதவன் நின்று திரும்பிப் பார்த்தான்.
“அலோ நீங்க தானே மாதவன்”
“எஸ்”
“அப்பறம் என்ன பாஸ்… மிஸ்டர் மாதவன்… மிஸ்டர் மாதவன்னு கூப்பிட்டும் கேக்காமப் போறீங்க…”
“சாரி… வேறொரு நினைப்பு… அதான்…”
“நான் உங்களை தான் பஸ் ஸ்டாண்டு வரைக்கும் போயி தேடிட்டு வரேன்”
“என்னையா…? ஆமா நீங்க..?”
“மாப்பிள்ளை சேகரோட நண்பன் நான். உங்களை அழைச்சிட்டு வர சொல்லி அனுப்பி வச்சான். பஸ் ஸ்டாண்டு புல்லா போய் தேடிட்டு வரேன். நீங்க என்னடான்னா இங்க நிக்கறீங்க” செல்போனில் சேகர் அனுப்பியிருந்த மாதவனின் போட்டோவை காட்டினான்.
“ஓ… சேகரோட பிரண்டா…” என்ற மாதவன் நான் கொஞ்சம் கடை வரைக்கும் போயிட்டு வந்துடறேனே” என மெல்ல இழுத்தான்.
“உள்ள கூட வராம, நீங்க இன்னும் வரலையேன்னு நினைச்சிக்கிட்டு இருக்கிற மாப்பிள்ளையக் கூடப் பார்க்காம அப்படி என்னங்க அவசரம்..” என்ற இளைஞன் ” சரக்கா” என்று கண்ணடித்தான்.
இல்லை என்று அவசரமாக மாதவன் தலையாட்டவே, “அதானே… அதெல்லாம் வாங்கி ரெடியா வச்சாச்சு. நீங்க இப்ப உள்ள வாங்க” என்று விடாப்பிடியாக கை பிடித்து இழுத்து சென்றான்.
இதையெல்லாம் கண் சிமிட்டாது அதிர்ச்சியாகி பார்த்து கொண்டிருந்தார் ராஜன்.
அவரை தாண்டி போகையில் அந்த இளைஞன் இப்படி சொன்னான்.
“நம்ம மாப்ளையோட நெருங்கிய நண்பன். காலேசுல காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லனு பாடிட்டு திரிஞ்சவங்க. “
அவர் பதில் ஒன்றும் சொல்லத் தோணாமல் நிற்க, மாதவன் இது என்னை மீறிய செயல் என்பதாக ராஜனுக்கு சைகை காட்டினான்.
மண்டப ஹாலுக்குள் நுழைந்தார்கள்.
வண்ண விளக்குகள் கண்ணை பறித்து கொண்டிருந்தது.
‘வாத்தி கமிங் ஒத்து ‘ பாடல் ஒரு பக்க மேடையில் ஒலித்து கொண்டிருக்க, அந்த மேடைக்கு முன்னே சிலர் நடனமாடியும் சிலர் வேடிக்கை பார்த்தும் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு பக்க மேடையில், மணமக்களை காண இன்னும் வரிசை இருந்தது.
அங்கொன்று இங்கொன்றாக சிலர் முகங்களில் மட்டும் மாஸ்க் தென்பட்டது.
எங்கே தப்பி விடுவானோ என்பது போல் அந்த இளைஞன் மாதவனைப் பாதுகாப்பு அரணாக மாறி அழைத்து கொண்டு வந்து வாழ்த்து சொல்லி இறங்கி வரும் மேடையில் ஏற்றினான்.
“மாப்ளையும் பொண்ணும் நீங்க வர்றதுக்காக தான் வெயிட்டிங். உங்களுக்காக நாங்க வெயிட்டிங். எங்களையும் சாப்பிட விடாம உங்களுக்காக வெயிட் பண்ண வச்சிருக்கான் பாசக்காரப் பய. இல்லேன்னா நாங்க இந்நேரம் ரெண்டாவது ரவுண்ட் போயிருப்போம்”
புன்னகைத்தான் மாதவன்.
சேகர் அவனை பார்த்ததும் உற்சாகமாகி மாப்ளே’ என்று மாதவனை கட்டி பிடித்த படி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வரவேற்றான்.
கூடவே மணமகளிடம் அறிமுகப்படுத்தினான்.
மாதவன் கை கூப்பி வணக்கம் சொல்ல, தோழியுடன் பேசி கொண்டிருந்த திவ்யா திரும்பினாள்.
மகிழ்ச்சியில் திளைத்திருந்த முகம் ‘இவன் எங்கே இங்கே வந்தான்?’ என்று குழப்பத்துக்குள் குடிபுகுந்து, ‘என்ன கலாட்டா பண்ண போறானோ தெரியலயே?’ கலவர நிலைக்கு சென்றதை மாதவன் கவனிக்கத் தவறவில்லை.
சபை நாகரீகம் கருதி அவளும் ஒப்புக்கு கை கூப்பினாள்.
போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக பொட்டோகிராபர் நண்பர்களை ஒழுங்குபடுத்தி கொண்டிருக்க. மாதவன் பார்வை மண்டபமெங்கும் சுற்றி சுழன்றது.
ஆர்கெஸ்டராவில் அடுத்த பாட்டுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள்.
‘எங்கிருக்கிறாள் அவள்..?’
கீழே ராஜன் போயிட்டு வரேன் என்று சொன்ன உறவினரோ நண்பரோ அவரிடம் குழைந்து நன்றி சொல்லி கொண்டிருந்தார். அவ்வப்போது அவர் பார்வை மேடையில் இருந்த மாதவன் மீது திரும்பியது.
அவனை எப்படி வெளியேற்றுவது என்ற சிந்தனை வயப்பட்டவராய் பதட்டத்துடன் காணப்பட்டார்.
மாதவன் தோள் மீது ஒரு கையும் மணப்பெண் திவ்யா மீது ஒரு கையுமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தான் சேகர்.
போட்டோகிராபர் தான் படம் எடுத்து முடித்து “ஒரு நிமிசம் அப்படியே இருங்க” என்ற படி விடீயோவிற்கு வழி விட்டார்.
ரெடிமேட் புன்னகையுடன் அப்படியே இருக்க முடியவில்லை மாதவனால். காரணம் அவள் வந்து கொண்டிருந்தாள்.
ஏழுவருடம் முன்பு பார்த்ததை விட இன்னும் அழகாய் இன்னும் கெத்தாய் பட்டு புடவையில் கையில் ரோஜாப்பூக்கள் நிரம்பிய தட்டை ஏந்தி தோழியுடன் சிரித்து பேசிய படி இறங்கி வந்து கொண்டிருந்தாள் மீரா.
‘வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்…
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்’
என இளையராஜாவின் குரலில் பாடகர் ஒருவர் பாட ஆரம்பித்திருந்தார்.
வெள்ளிக்கிழமை தொடரும்.
Leave a reply
You must be logged in to post a comment.