சிறுகதை : பகையும் நட்பும்

கமலா முரளி

ராஜூ புரண்டு படுத்தான்.

‘அம்மா, தலை வலிக்குதும்மா’ என்று சொல்லிக் கொண்டே பக்கத்தில் படுத்திருந்த அம்மாவை நெருங்கிக் கட்டிக் கொண்டான்.

கட்டில் தலைமாட்டில் இருந்து, துளசி தைலத்தை எடுத்து, அவன் தலையில் தடவி, முடியைக் கோதி விட்டு, “சரியாப் போயிடும்” என்றாள் அஞ்சுகம்.

வலியின் காரணமாக முனங்கிக் கொண்டே படுத்திருந்தான் ராஜூ.

ராஜூவின் அப்பா திருப்பூரில், தனியாகத் தங்கி வேலை பார்த்து வந்தார். மாதாமாதம் முதல் வாரத்தில் அவர் அனுப்பும் பணம், வீட்டுச் செலவுகளுக்கே போதாது.

அஞ்சுகம் சில வீடுகளில் பணிப்பெண்ணாகவும், மற்ற நேரங்களில் வீட்டில், தையல் வேலை செய்தும் கிடைத்த சொற்ப பணத்தையும் வைத்து எப்படியோ ஈடு கட்டி வருகிறாள்.

இரண்டு நாட்களாக ராஜூ சோர்வாக இருக்கிறான். சாப்பாடு இறங்கவில்லை. ஜூரம் வருவதற்கான அறிகுறிகள் !

இன்று அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் . தான் மட்டும், ஜோதியம்மா வீட்டுக்குப் போய் விட்டு வந்துவிடலாம் என நினைத்து, படுக்கையை விட்டு எழுந்தாள் அஞ்சுகம்.

ராஜூவுக்கு கஞ்சி தயாரித்தாள்.

கிளம்பும் முன், “ராஜூ, கஞ்சி போட்டு வைத்து இருக்கேன். குடி, அம்மா, சீக்கிரம் வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

ராஜூவைத் தேடி அவன் பள்ளி நண்பர்கள் தீபனும் சந்தோஷும் வீட்டுக்கே வந்து விட்டனர்.

“ராஜீ, என்னடா ஆச்சு ! அடடா ! அனலா கொதிக்குதே !” என வருந்தினான் தீபன்.

“டேய், அதான் நீ கோகோ ப்ராக்டீஸ் வரல்லயா ?” விசாரித்தான் சந்தோஷ்.

பள்ளி முடிந்தபின், அருகில் ஒரு மைதானத்தில் தினமும் விளையாடுவார்கள் நண்பர்கள்.

இரண்டு நாள் முன்பு அங்கே ஒரு சண்டை.

அதே மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த அண்ணன்கள், இவர்கள் கோகோ விளையாடும் போது கூச்சலிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

“டேய், ஏன்டா கத்துரீங்க ? ரொம்ப ஓவரா இருக்கு” என்று   ஒரு அண்ணா சொல்ல,

“நீங்க கூடத் தான் ஷாட்ஸ் அடிச்சா, ஓங்கிக் கத்துறீங்க , நாங்க எதுவும் சொன்னமா ?” என்று தெனாவெட்டாக சந்தோஷ் கேட்க,

அந்த அண்ணன், சந்தோஷை ஓங்கி ஒரு அடி அடித்தான்.

ராஜூ அதற்கு அவர்களிடம் சண்டைக்குப் போனான்.

“பேசிக்கிட்டுத்தானே இருக்கோம். எதுக்குப் போட்டு அடிக்கிறீங்க… எங்க கை பூ பறிக்காது.”

“என்னடா பண்ணுவ ? சுண்டைக்கா பய நீ ?”

“கிரௌண்ட் எல்லாருக்கும் தானே ! என்னவோ உங்க வீட்டு தோட்டம் போல பேசறீங்க” ராஜூ.

“டேய், சத்தம் போடாம ஓடிடு…இல்ல..” என்றபடி அந்த அண்ணன் மட்டையை வீச, ராஜூ முகத்தில் விழுந்தது.

தாக்குதலை எதிர்பாராத ராஜூ கீழே விழுந்தான்.

பெரிதாக அடி ஏதும் இல்லை. முகம் சற்று சிவந்து, கன்னப்பகுதியில் கொஞ்சம் வீங்கி இருந்தது.

அண்ணன்களில் சிலரும் வந்து, ராஜூவைத் தேற்றினர்.

”சத்தம் போடாம விளையாடுங்கடா” என்றனர்.

“இல்லண்ண, அடுத்த வாரம், மாவட்ட அளவிலான கோகோ போட்டி, அதுக்கு நல்லா பயிற்சி பண்றோம். ஆர்வத்தில அதிகமா சத்தம் போட்டு விட்டோம்.”

அன்றிலிருந்தே ராஜூவுக்கு உடல்நிலை சரியில்லை.

அம்மாவிடம் சண்டை பற்றி சொல்ல வேண்டாம் என தலைவலி பற்றியும் சொல்லவில்லை.

பள்ளியிலும், கோகோ பயிற்சியிலும் அமைதியாக சுரத்தில்லாமல் இருந்தான்.

“பசிக்குதுடா, அம்மா கஞ்சி வச்சிருக்காங்க, எடுத்துக் குடுடா”என ராஜூ கேட்க, தீபன் கஞ்சி ஆற்றிக் கொடுத்தான்.

வாசலில் சைக்கிள் மணி சத்தம்.

“அஞ்சுகம் அக்கா ! அஞ்சுகம் அக்கா ! “

“வாங்க, கதவு திறந்து தான் இருக்கு “

உள்ளே இருப்பவர்களுக்கும், உள்ளே வந்தவனுக்கும் அதிர்ச்சி !

“டேய், எல்லாரும் இங்க இருக்கீங்க” என்றான் உள்ளே வந்த மோகன், அவன் தான் , ராஜூவை அடித்த அண்ணன்.

“ராஜூ வீடு இது தாண்ணே ! அவன் கோகோ ப்ராக்டீஸ் வரல , அதான் பாத்துட்டுப் போக வந்தோம். “ சந்தோஷ்.

“நீங்க எங்கண்ண இங்க ?” தீபன்.

“எங்கம்மாவுக்கு அஞ்சுகம் அக்கா கொஞ்ச நாளா பழக்கம். துணி தைக்க குடுத்து விட்டு இருக்காங்க ! ”

படுத்திருந்த ராஜூவின் தலையில் கையை வைத்துப் பார்த்தான் மோகன்.

“ரொம்ப ஹை ஃபிவரா இருக்கே !” மோகன்.

”அன்னிலேருந்தே டல்லாத் தான் இருந்தான். இப்ப ஜூரம். !”

“சாரிடா, நா பேட்டால அடிக்க நினைக்கவே இல்லை. ஏதோ ஒரு வேகத்தில கையிலேருந்து பிச்சுகிட்டு போயிடுச்சு.” மோகன்.

“ நல்லா விளையாடுவான். அடுத்த வாரம் மாவட்ட போட்டி வேற “ தீபன்.

“வாங்கடா, என் அப்பா ஃப்ரெண்ட் டாக்டரா இருக்காரு. அவர்ட்ட அழைச்சுட்டுப் போறேன்” மோகன்.

டாக்டர் சரவணன், காதில் அடி விழுந்து, இன்ஃபெக்‌ஷன் ஆகி உள்ளது என்றார். உடனடியாக ஈ.என்.டி மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.

மோகன் மிகவும் வருத்தப்பட்டான். உடனடியாக தன்னுடன் தினம் விளையாடும் நண்பர்களை அழைத்து ஆலோசனை செய்தான்.

இளைஞர் குழு டக்கென வேலையில் இறங்கியது.

பிரபல காது மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தில், அப்பாயின்மெண்ட் வாங்கி தேவையான பரிசோதனைகள் செய்து…

“நல்லா விளையாடற பையன். நெக்ஸ்ட் வீக் மேட்ச் “

”நத்திங் டு வொரி. சரியான டைமில வந்துட்டீங்க ! இந்த ட்ராப்ஸ், டெப்லெட்ஸ்ல சரியாயிடும். “

செலவுகளை மோகனும் அவன் நண்பர்களும் பகிர்ந்து கொண்டனர்.

அண்ணன்களும்… தம்பிகளும் நண்பர்கள் ஆகிவிட்டனர்.

”ரெண்டு நாளா ஒண்ணுமே புரியலண்ணா ! ரொம்ப பயந்துட்டேன்.” ராஜூ.

“அன்னிக்கி என்னவோ பெரிய வீரன் மாதிரி பேசுன ?” மோகன்.

 ”அது வேற வாயி… “ என்றான் தீபன்.

நண்பர்கள் சிரித்தனர்.

”அண்ணே, எங்க அம்மாவுக்கு நான் அடி வாங்கினது தெரியாது. சொல்லிடாதாதீங்கண்ணே ! “

“டேய், நா தான் அடிச்சேன்னு யார்ட்டயும் சொல்லிடாதடா “

மீண்டும் குபீர் சிரிப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *