சுடர்விழி சேதுபதி ராஜா
முன்பெல்லாம் கனகாம்பரமும் மல்லிகையோடு சேர்ந்த ஒரு அங்கமாக இருக்கும். எல்லா நற்காரியங்களுக்கும் கனகாம்பரம், மல்லிகை பூ என்று சேர்த்துதான் வாங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அலங்காரம் என்ற பெயரில் புடவைக்கு ஏற்ற நிறத்தில் பூக்களும் வடிவமைப்பு செய்யப்படுவதால் கனகாம்பரத்தின் பங்கை இல்லாமல் செய்து விட்டது.
இன்னொரு விஷயம் கனகாம்பரப்பூ வைத்தவர்கள் பட்டிக்காட்டு ஆட்கள் என்ற நகரத்தாரின் எண்ணமும் கூட இந்த மலரை கல்லூரி மாணவிகள் சூட்டிக் கொள்ள மறுப்பதற்கு காரணமாகும்.
நான் பள்ளியில் படித்த காலத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மா என்னைப் பார்க்க வருவார்கள். அப்பொழுது நிச்சயம் பூ வாங்கி வருவார். அம்மா என்ன பூ வாங்கி வந்தாலும் வாங்கி வந்த பூவைத் தலையில் வைத்து அது வாடியவுடன் எடுத்து பத்திரமாக என் அலமாரியில் வைத்திருப்பேன். அதை பார்க்கும் போதெல்லாம் அம்மா என்னோடு இருக்கும் ஒரு உணர்வைத் தரும். அந்த வாடிய மல்லி, முல்லை, கனகாம்பரம், பிச்சியின் மீது அம்மாவின் வாசம் லேசாக இருக்கும். அது போதுமே அடுத்த வாரம் வரை. உணர்வுப்பூர்வமான விஷயங்களுக்கு நிறம் என்பது ஏது.
நான் எப்போது ஊருக்குச் சென்றால் அங்கு இருக்கும் நாட்களில் சித்தி தன் வீட்டில் மலரும் ஜாதி மல்லிப்பூவை தினமும் யாரிடமாவது கொடுத்து அனுப்புவார். ஒருநாள் கொடுத்துவிட முடியாமல் போனாலும் அதைப் பத்திரமாக பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் பூவோடு சேர்த்து கொடுத்துவிடுவார். அம்மாவுக்கு நிகராக அன்பு செலுத்துவதில் சித்தி எந்தக் குறையும் வைத்ததில்லை.
சில வருடங்களுக்கு முன் நான் ஊரில் இருந்து அபுதாபிக்குக் கிளம்பும் போது என்னை வழியனுப்ப சித்தி வீட்டுக்கு வந்திருந்தார். வரும்போது வீட்டில் இருந்த கனகாம்பரத்தை அழகாகத் தொடுத்துக் கொண்டு வந்திருந்தார். ஒரு ரோஜா பூவும் அதனுடன் இருந்தது.
‘அவந்திகாவுக்கு இந்த ரோஜா பூவை வைத்து விடு, நீ இந்த கனகாம்பரத்தை வைத்துக்கொள்’ என்றார். கூடவே ‘ஊருக்குப் போகும்போது வச்சிட்டு போ’ என்ற அன்புக்கட்டளை வேறு.
கனகாம்பரம் வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது வைத்தால் நல்லா இருக்குமா என்றெல்லாம் தெரியவில்லை.
சித்தி மெனக்கெட்டு கொண்டு வந்து கொடுத்த பூ, எப்படி இருக்கும் என்று பார்த்தால் முடியாது.
இப்ப நாமெல்லாம் ஊருக்காகத்தான் அதிகமாய் வாழ்கிறோம். நமக்கான வாழ்க்கையை நாம் யாரும் வாழ்வதில்லை, அதைத் தொலைத்துவிட்டோம்.
கிளம்பும்போது தவறாமல் பூவை எடுத்து தலையில் வைத்துக் கொண்டேன்.
‘இந்த ஏரியாவுலயே கார் வச்சிருக்கிற கரகாட்டக் கோஷ்டியின்னா அது நாம மட்டும்தான்’ அப்படின்னு கவுண்டர் சொல்ற மாதிரி திருச்சி விமான நிலையத்திலே கனகாம்பரம் வைத்த ஒரே ஆள் நான் தான். பல கண்களுக்கு அது வித்தியாசமாகத் தெரிந்திருக்கலாம். யார் என்ன நினைத்தால் என்ன..? அது எனக்கான வாழ்க்கை… என் சித்தி என் மீது வைத்திருந்த அன்பின் அடையாளம்… அவ்வளவுதான்.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து நினைத்து நம் வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டது.
நம்மை முழுவதுமாய் தொலைத்துவிட்டு புதிய நம்மை இந்த உலகத்திற்கு காட்ட முயல்கிறோம். அதில் வெற்றி பெறுகிறோமா என்பது வேறு விஷயம். ஆனால் சுயம் தொலைந்த தேடல் இங்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
நன்றி : படம் இணையத்திலிருந்து