அத்தியாயம்-8
ஆர்.வி.சரவணன்
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க…
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அத்தியாயம்-7
மதனுக்கு அப்பாவின் வார்த்தைகள் கோபத்தை கிளப்பி விட தடாலென்று எழுந்த அடுத்த நொடி மதனின் அம்மா ஏதும் பேசாதே என்பதாக ஜாடை காண்பித்தார். கூடவே விக்கியும் மதனின் கையைப் பிடித்து இழுக்கவே, என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கணம் தடுமாறியவன் செல்போனைப் பேசுவது போல் காதில் வைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் நகர்ந்தான்.
மூர்த்தி, முதலாளி சொல்வதெல்லாம் என்னை ஒன்றும் செய்து விடாது என்ற இறுமாப்பில் இருந்தாலும் கால் பிடித்து விடுவதை நிறுத்தவில்லை. அவரது மனைவி கௌரி ஏற்கனவே இந்த மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் நிறைய வாங்கிச் சலித்து போயிருந்ததாலோ என்னவோ விரக்தி மனநிலையில் நின்றிருந்தார். ஆனால் பிரியா இதை எதிர்க் கொள்வது இதுவே முதல் முறை என்பதால் முணுக்கென்று கோபம் வந்து அவளது மூக்கு நுனி இன்னும் சிவந்தது.
” ஏங்க. அவர்களுக்கு உடம்பில் வலு இருக்கு உழைக்கிறாங்க. நம்ம வேலையப் பார்க்காம ஓபி அடிச்சிட்டா வேற இடத்துல சம்பாதிக்கிறாங்க.”
“நீ வாயை மூடு” என்றவர் ” இனிமே பாக்கெட் ஒண்ணு வச்சி தச்சுக்காதடா. ரெண்டு மூணு வச்சுத் தச்சிக்க. பணத்தை வைக்க இடம் வேணும்ல”
அடுத்த ஏவுகணை இப்படியாக பாய்ந்து வரவும் பிரியா நிமிர்ந்து வாய் திறக்கப் போக , மதன் நான் பேசுகிறேன் என்பதாக கண் ஜாடை காட்டி விட்டு அப்பாவை நோக்கித் திரும்பினான்.
” டாடி. பார்த்துப் பேசுங்க. உங்களைப் பார்த்து சினிமாத் துறையில் நீங்க சம்பாதிக்கிறது பத்தாம பையனையும் இறக்கி விட்டுச் சம்பாதிக்குறீங்களேனு அவர் திருப்பிக் கேட்டுட்டார்னா சொல்றதுக்கு உங்க கிட்டப் பதில் இருக்கா”
மூர்த்தி , ” நான் ஏன் தம்பி அந்த மாதிரிலாம் கேட்கப் போறேன்” பரிதாபமாக சொன்னார்.
அம்மா” டேய் “என்று ஆரம்பிக்க “நீ குறுக்க வராதம்மா” என்றான்.
‘தமிழ்ல ஹிட்டான தன் படத்தை அப்படியேவா விட்டுடறாரு. எல்லா மொழியிலயும் எடுத்து காசு பார்க்கிறார்ல. இவர் மட்டும் எங்கங்கே சம்பாதிக்க இடம் இருக்கோ சம்பாதிக்கலாம். ஏழை அது மாதிரி உழைக்க கூடாதா’ உள்ளுக்குள் விக்கி பொரிந்தான்.
” என்னடா மூர்த்தி. என் பையன் வந்து நாலு நாள் தான் ஆச்சு. அவனை எதுனா மாய மந்திரம் போட்டு உன்பக்கம் இழுத்திட்டியா..?”
” என்னை யாரும் மயக்க முடியாது. நானா மயங்கினாத்தான் உண்டு. ஒருத்தர் சம்பாதிக்கிறது அவரோட விருப்பம். அதை நேர்மையா சம்பாதிக்கிறாரானு தான் பார்க்கணும். அத விட்டுட்டு நீ எப்படி சம்பாதிக்கலாம்னு கேட்கறது எதெச்சதிகாரம்”
” இந்த டயலாக்கெல்லாம் உன் படத்தோட வச்சிக்க. என் கிட்ட வேண்டாம்.” என்று கோபமாய் மதனை பார்த்து கை நீட்டி எச்சரித்த விஜயராகவன், கோபமாய் “விட்ரா” என்றபடி காலை உதைத்து எழுந்தார். மூர்த்தி தடுமாறி விழ போகவே விக்கி தான் ஓடி வந்து அவர் விழாமல் தடுத்தான்.
எழுந்தவர், ” உன் பிள்ளைய ஒழுங்காப் பேசச் சொல்லு. காரை உடைச்சவனைப் பிடிச்சு அவனை நாலு அறை விடத் துப்பில்லை. பேச வந்துட்டான். ” ஸ்டூலை உதைத்தார். அது சுவரில் போய் மோதி நிற்க, லிப்டை அடைந்து பட்டனை அழுத்தி திறந்ததும் உள்ளே சென்று மறைந்தார்.
” என்னடா மதன். எல்லாரையும் வச்சுகிட்டு அப்பாவை இப்படிலாம் பேசக் கூடாதுடா,” அம்மா
” அவர் மட்டும் பேசலாமா. நம்மகிட்டே காசு இருக்கு அவங்க கிட்ட இல்ல. அதனால நம்ம கிட்ட வேலை பார்க்கிறாங்க. அவங்களோட தேவைகளை நாம நிறைவேத்த முடியலைனாலும் அவங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறதை கொச்சைப்படுத்திடக் கூடாது. இதுல காலை பிடித்து விட சொல்றதுலாம் அடிமைத்தனம்.”
“உங்க ரெண்டு பேருக்கு இடையில் நான் மாட்டிட்டு முழிக்கிறேன்” என்றபடி எழுந்தார் மதனின் அம்மா.
கௌரி “அம்மா நைட் சாப்பாடு என்ன பண்றது..?”
” இத இப்ப அவர்கிட்டக் கேட்க முடியாது கௌரி. நீ எதுனா பண்ணு சாப்பிட்டுக்கிறோம்” என்றார் சலிப்பாக.
“அம்மா என்னாலே தான் உங்களுக்குள்ள தகறாரு. மன்னிச்சிகங்கம்மா”
“இல்ல மூர்த்தி. அவர் வாய் தான் காரணம்.” என்றபடி மதனின் அம்மாவும் லிப்டின் உள்ளே சென்று பட்டனை அழுத்தினார்.
கதவு மூடும் வரை காத்திருந்து பின் மதன் சொன்னான்.
“அப்பா பேசினதுக்கு சாரி “
“அட என்ன தம்பி நீங்க. அவர் எப்பவும் இப்படிதான் பேசுவாரு. நீங்க இத கண்டுக்காம விட்டுருக்கலாம்.” என்ற படி சமையலறைக்குள் சென்றார்.
“இல்லப்பா . அவர் பேசலைனா நான் பேசிருப்பேன்.” அவரை தொடர்ந்து வந்த பிரியா தீர்மானமாக சொன்னாள்.
“பிரியா இந்த கொத்தடிமைத்தனம் எங்களோட போகட்டும்னு தான் உன்னை நாங்க என் தங்கச்சி வீட்ல வச்சு படிக்க வச்சோம். இதில் நீ குறுக்க வந்து அசிங்கப்படாதே” கௌரி இடைமறித்தாள்.
” அப்ப கடைசி வரைக்கும் இந்த ஏச்சுப் பேச்சுகளை வாங்கிட்டே இருக்கப் போறீங்களா. நான் தான் வேலை பார்க்கிறேன் இல்ல. நீங்க வேலைய விட்டுடுங்க”
மூர்த்தி கண் கலங்கினார். ” அப்படி எல்லாம் விட்டுட்டு போக கூடாதும்மா. வாங்கின கடனை கொடுத்து முடிக்காம எப்படிம்மா போறது. பொண்ணுக்கு வேலை கிடைச்சதும் விட்டுட்டு போயிட்டான்னு சொல்வாங்க. உனக்கு கல்யாணம் ஆகிற வரைக்குமாவது நாங்க இங்க வேலை பார்த்தே ஆகணும்.”
” அதையாவது பண்ணி தொலைங்க ” வெறுப்பை உமிழ்ந்த படி கிளம்பி சமையலறை வாசல் வரை சென்றவள் திரும்பி தன் அப்பா அம்மாவை பார்த்து சொன்னாள்.
” என் கல்யாணத்தை ஆசைப்பட்டுலாம் பண்ண சொல்லல. உங்களுக்கு அப்பவாவது சுதந்திரம் கிடைக்கும்ல அதுக்காக சொல்றேன்”
*****
” இங்க பாருடா. நாட்ல ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு பிரச்னை இருக்கு. எத்தனை பேரை நீ காப்பாத்துவே. கண்ணீரைத் துடைப்பே.”
“என்னால விட முடியலைடா. அந்த குடும்பத்தைக் கஷ்டப்பட விடக் கூடாதுன்னு மனசுக்குள்ள ஒரு குரல் சொல்லிட்டிருக்கு”
“என்ன காரணம்? “
” நான் சின்னக் குழந்தையா இருக்கிறப்ப ரொம்ப அழுவேனாம். மூர்த்தி தான் சமாதானப்படுத்தி தோள் மேல போட்டு தட்டி கொடுப்பாராம்.சில சமயம் மடியில படுக்க வச்சு தூங்க வைப்பாராம். சின்ன அசைவுன்னாலும் நான் முழிச்சுக்குவேன்னு ஒரு மணி நேரமானாலும் அப்படியே இருப்பாராம் . எங்கம்மா சொல்லியிருக்காங்க. ஒரு வேளை அது கூட காரணமா இருக்கலாம்”
அப்போது விக்கியின் செல் போன் அடித்தது.
மதன் இயக்கப் போகும் புதிய படத்தின் தயாரிப்பாளர் ரங்கராஜன் தான் பேசினார்.
திரையுலகில் இருபது வருடங்களாக இருப்பவர். நிறைய படங்கள் எடுத்தவர்.
சமீபத்திய அவரது இரு படங்கள் சரியாக ஓடாததாலே நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்.
மதன் அட்வான்சோடு வரிசை கட்டி நின்ற தயாரிப்பாளர்களை மறுத்து விட்டு இவருக்கு கை கொடுக்க முன் வந்திருக்கிறான்.
விக்கி ஸ்பீக்கர் ஆன் செய்து மதனின் கையில் செல்லை கொடுத்தான்.
“வணக்கம் தம்பி .ஸ்கிரிப்ட் ஒர்க் எப்படி போயிண்டிருக்கு”
“எங்க. இங்க பஞ்சாயத்து தான் போயிண்டிருக்கு.” விக்கி கிண்டலடித்தான்.
மதன் விக்கியை முறைத்தான்.
“என்னை நலம் விசாரிக்காம ஸ்கிரிப்ட் பத்தி விசாரிச்சீங்க பாருங்க. அங்க நிக்கிறீங்க.”
” சாரி தம்பி. ஸ்கிரிப்ட் நல்லா வந்துருச்சின்னாலே நாம ரெண்டு பேரும் நல்லாயிருப்போம் தானே”
“இல்ல தப்பா சொல்லல. உங்களுக்கு இருக்கிற அக்கறைய சொன்னேன்.”
“7 கோடி கிட்ட கடன் இருக்கு தம்பி. வட்டி கட்டி மாளல. நல்ல வேலையா நீங்க கை கொடுத்தீங்க. என்னை இது வரைக்கும் பிடுங்கி எடுத்தவங்க எல்லாரும் அமைதியாகிட்டாங்க. காசு வந்திரும்னு. உங்க படத்தை அனவுன்ஸ் பண்ணதுக்கு அப்புறம் தான் நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிருக்கேன்”
“என் பொறுப்பு ஜாஸ்தியாகிட்டு.”
“நம்ம படத்துக்கு ஹீரோ ஹீரோயின் யாருன்னு இன்னும் முடிவு பண்ணல. பெரிய ஹீரோவா இருந்தா நல்லாருக்கும். அதான் கேட்டான்.”
” இது ஆக்சன் படம். பெரிய ஹீரோ பண்ணா நல்லாருக்கும்னு தோணுது. ஸ்கிரிப்ட்டை முடிச்சிட்டு யாருன்னு யோசிப்போமே”
” சரி தம்பி. நீங்க இன்னும் படத்துக்கு அட்வான்ஸ் வாங்கல. பையனுக்கு அட்வான்ஸ் ஏன் இன்னும் கொடுக்காம இருக்கீங்கனு அப்பா கூட கேட்டாரு. ”
மதன் முகம் சிவந்தான்.
“படம் ரெடியாகட்டும். வெயிட்டா மொத்தமா வாங்கிக்கிறேன்.”
“தேங்க்ஸ் தம்பி.” போனை வைத்து விட்டார்
” வேணும்னா நாம இடத்தை மாத்திருவோமா. இங்க ஒரே பிரச்னையா இருக்கே” விக்கி யோசனையாக சொன்னான்.
” இதெல்லாம் வேண்டாம். ஸ்கிரிப்ட் இங்க தான் முடிச்சிக்கிறோம்.”
“அப்படினா அடுத்தவங்க விசயத்தை உன் காதுல போட்டுக்காம இரு.”
தலையாட்டினான்.
சில விநாடிகளில் அம்மா லிப்டை திறந்து ஹாலுக்கு வந்தார்.
“மூர்த்தி.”
“என்னம்மா..?”
“அவர் உன்னை கணக்கு வழக்கெல்லாம் எடுத்துட்டு வர சொல்லி கூப்பிடறாரு. டிரிங்கஸ் வேற ஆரம்பிச்சிட்டாரு. நீ கொஞ்சம் கவனமா பேசு. என்ன”
“சரி்ம்மா “
பிரியா வந்து செல்பை திறந்து கணககு வழக்கு உள்ள பையை எடுத்து கொடுக்க வாங்கி கொண்டு படிக்கட்டுகளில் ஏறினார்.
மதன் தானும் மேலே செல்லலாமா என்று யோசித்தான்.
விக்கியை பார்த்தான்.
உதைப்பேன் படவா என்றபடி விக்கி விரல் நீட்டி எச்சரிக்கவும் அமைதியானான்.
பிரியா படிக்கட்டுகளில் ஏறி சென்ற தன் அப்பாவை வேதனையோடு பார்த்து கொண்டிருந்தாள். அவளது வேதனை மதனையும் தொற்றி கொண்டது.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
அடுத்த திங்கள் தொடரும்.