பகுதி – 13
இத்ரீஸ் யாக்கூப்
(இத்தொடர் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளிவரும்)
முந்தைய அத்தியாயத்தை வாசிக்க…
*********
செம்மங்குடி நெருங்க, எம்.எம்.டி மஹாலிலிருந்து அந்த பாட்டு காதில் விழ ஆரம்பித்தது…
‘அஞ்சுகத்தின் கல்யாணத்தை
ஆசையோடு பார்த்தேனே
கொஞ்சி உந்தன் நாதஸ்வர
ஓசை அங்கு கேட்டேனே
என்னை அங்கு மாப்பிள்ளையாய்
மணவறையில் பார்த்தாயா
உன்னை என்னை ஜோடியாக்கி
ஒன்றில் ஒன்று சேர்த்தாயா
நாம் என்று கேட்போம் நாயன ஓசை
நாளாகும்போது பெருகுது ஆசை
மீனாட்சி அம்மா கண் பார்க்கணும்
மாறாமல் நம்மை கை சேர்க்கணும்
ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி
ராசாத்தி ராசாத்தி
உன்னை எண்ணி
மனம் உருகி நின்றேனடி
செந்தாழம் பூவே
சிறுகூடல் முத்தே
முத்துப்பூ சூடிக்கொள்ளும்
நாள் சொல்லவா
ராசாவே… ராசாத்தி…
ராசாவே… ராசாத்தி…’
மாமனோடு அந்த பாடலை உள்வாங்கிக் கேட்டுக்கொண்டே கல்யாண மண்டபத்தைக் கடந்த வேளையில் மல்லிகை பந்தலில் முகம் புகைத்து எழுந்தவள் போல அத்தனை வெட்கங்களையும் பரவசங்களையும் முகத்திலே சூடியிருந்தாள். பாறையை அழுத்திச் சுகம் காணும் சிறு பூவைப் போல் தன்னிலை மறந்து அவனை இன்னும் இன்னும் இறுக உரசினாள். அவனோ தெப்பக்குளத்தில் தள்ளாடித் தழும்பும் தேங்காய் மட்டை போல் எழுந்தும் முங்கியும் அவள் எறிந்து கொண்டிருந்த ஆசை கற்களால் அவஸ்தைக்கு உள்ளானான்.
அவனுக்கு இந்த நிலை முற்றிலும் புதிது என்று சொல்லிவிட முடியாது. இன்று பட்டது அவஸ்தை என்றால், அன்றொரு நாள் சபையிலே தன்னிலை மறந்து அவளைத் தீண்டாமலேயே திணறத் தொடங்கியவன்தான்.
அது தவமணியின் பள்ளி ஆண்டுவிழா நாள்! கலை, விளையாட்டு என பல பிரிவுகளில் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பும் சான்றிதழ்களும், முக்கியதஸ்தர்களின், நிர்வாகிகளின் உரைகளுக்கு அடுத்து வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததையடுத்து அழகுப் போட்டிக்கான முடிவுகளை அறிவிக்கும் கலைச்செல்வி டீச்சர், போட்டி முடிவுக்குப் பின் உங்களுக்கெல்லாம் விருந்தொன்று காத்திருக்கிறதென எதிர்பார்ப்பைக் கூட்டினார்.
அந்த அழகுப் போட்டிக்காக தவமணி போட்ட அழிச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சமா..! இதற்காகவே மொத்த குடும்பமும் கும்பகோணம் போக வேண்டியிருந்தது! ஏஞ்சல் ட்ரெஸ் போடணும், உலக அழகி ஐஸ்வர்யா ராய் போல தலையில சின்னதா கிரீடம் வச்சிக்கணும்னு, ரோஸ் பவுடர் தீர்ந்துவிட்டது, லிப்ஸ்டிக் இந்த கலர்லதான் வாங்கணும்… என்று ஏகப்பட்ட கண்டிஷன்ஸ்! அதனால் அவளுக்கும் அந்த போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டிய கட்டாயம் வேறு!
இத்தனைக்கும் அது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் அழகி போட்டி போல ஒய்யாரமா நடந்ததெல்லாம் காட்டத் தேவையில்லை, நின்றோ அமர்ந்தோ புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது போல தன்னைக் காட்டிக் கொண்டால் போதும்.
பக்கத்து வீட்டு கிரிஜாதான் அன்று அதற்கான ஒப்பனைகள் அனைத்தையும் செய்துவிட்டிருந்தாள், உண்மையிலேயே தேவதையாகத்தான் ஜொலித்தாள்! முதலிடமும் அவளுக்கே கிடைத்தது. ஆனால் அது அதோடு நின்றுவிடவில்லை! அந்த நிகழ்ச்சியில் எல்லோரும் முன்பும் ஆடத் தயாராகிக் கொண்டிருந்தாள்!
“அழகு போட்டி… முதல் பரிசு தவமணி..! இரண்டாம் பரிசு ரஞ்சிதா…! மூன்றாம் பரிசு பூமா தேவி… ஆறுதல் பரிசு அனு…!” என்று கலைச்செல்வி டீச்சர் அறிவித்ததும் நான்கு பேரும் மேடைக்கு ஏற, மதியும் குடும்பத்தினரும் ஆனந்தக் கோலம் பூண்டனர். கிரிஜா கலவையான மனநிலையோடு தவமணியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இதோ முதல் பரிசை வென்ற தவமணி நடனமாடி உங்களையெல்லாம் மகிழ்விக்க உள்ளார்!” எனக் கூறிய பதினைந்து நிமிடங்களில் மேடை கொஞ்சம் சரிசெய்யப்பட்டு வண்ண விளக்குகள் அணைந்து அணைந்து எரியத் தொடங்கின. மதிக்கு சுதி ஏறத் தொடங்கிற்று.
‘ஆச அதிகம் வச்சு மனச ஒளிச்சு வக்கலாமா எம்மாமா
ஆள மயக்கிப்புட்டு அழக ஒளிச்சு வக்கலாமா எம்மாமா…‘
சக மாணவர்கள் குதூகலமாயினர்.
பெற்றோர்கள் – ஆசிரியர்களில் சிலர் தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டனர்.
தவமணியோ ‘நானநானா… நானநானா…’ என்று தனது ஆட்டத்தில் பெரும்பாலானோரை ஒரு மேனகையைப் போல பாவனைகள் செய்து வசீகரித்துக் கொண்டிருந்தாள்.
‘சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான்
செங்கமலம் நான் புது தேன்கிண்ணம் நான்
வெல்லக்கட்டி நான் நல்ல வெள்ளிரதம் நான்
கன்னுக்குட்டி நான் நல்ல கார்காலம் நான்
ஒரு பொன்தேரில் உல்லாச ஊர் போகலாம்
நீ என்னோடு சல்லாப தேர் ஏறலாம்
அடி ஆத்தாடி அம்புட்டும் நீ காணலாம்
இது பூச்சூடும் பொன்வேலைதான் என் செல்லக்குட்டி!’
அந்த ‘பொன்தேரில்‘ வரிகளைத் தொடர்ந்து மதி கிட்டத்தட்ட அவள் அழகில் வீழத் தொடங்கிய தருணம் அந்த தருணம்தான். இதற்கு நடனம் சொல்லிக் கொடுத்தது கிரிஜாவே என்றாலும் இந்த பாடலுக்கு தவமணி ஆடுவது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அவர்கள் நெசவு செய்யும் குடும்பத்தினர் என்பதினால் முதலில் கிரிஜா தெரிவு செய்து கொடுத்தது பொற்காலத்தில் வரும் சிங்குச்சா பாட்டுதான். ஆனால் தவமணியின் விருப்பப்பாடல் சற்று பழைய பாடல் என்றாலும் அந்த குறிப்பிட்ட பாடலுக்கு அடம் பிடித்து ஆடியது அவளின் வயதே தவிரவும் மாமன் மீதான மோகமும் என கூறலாம்.
அந்த பாடலுக்கு ஆட கிரிஜா மறுப்பு தெரிவித்ததில் தவமணிக்கு கோபம் வந்துவிட்டது, மதிதான் சமாதானம் செய்து வைத்தான். அதனால் அன்று கிரிஜா சற்று வருத்தத்தோடுதான் இந்த விழாவுக்கும் கூட வந்திருந்தாள். கூடவே கல்யாணம் ஆகி குழந்தைகள் இருந்தாலும் இது போன்றவற்றில் கலந்து கொள்வதில் கிரிஜாவிற்கும் ஆர்வம் அதிகம். அதனாலும் தவமணியைச் சேர்த்துக் கொண்டு சுற்றுவாள்.
ஆடி முடித்து மகிழ்ச்சியும் நாணமும் கொப்பளிக்க அந்த சிவப்பு சாட்டின் மிடியோடு குடுமபத்தினரை நோக்கி வர, மதி தாய்மாமன் என்ற அந்தஸ்திலிருந்து கொஞ்சம் சரிந்து, கிறங்கி தனிமைப்பட்டு நின்றிருந்தான். இதையெல்லாம் கிரிஜாவும் கவனிக்க தவறவில்லை!
ஆனால் அந்த கிளர்ச்சியும் சந்தோசமும் மதிக்கு வெகு நேரம் நீட்டித்திருக்கவில்லை. நன்றாக இருந்த வானத்தில் சட்டென மேகங்கள் சூழ்ந்தது போல் அவனுடைய மனநிலைகள் மாறிவிட்டன.
மதிக்கு பிரபாவின் ஞாபகங்கள் வந்துவிட்டன.
‘அம்மா..! அம்மா..!’ என்ற அலறல் சத்தம் அவனுக்கு மட்டும் காதுகளில் அசரீரியாய் கேட்டுக் கொண்டிருந்தது. அவன் என்ன ஆசைப்பட்டுவிட்டான்? இது போன்றதொரு பள்ளி விழா மேடையில் தானும் கூட ஆசைப்பட்ட பாடலுக்கு ஆட நினைத்தான்.
அவனது விருப்பத்தில் தவறில்லை என்றாலும் பொதுவாக பெண்கள் ஆடும் ‘அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட’ பாடலை அதற்கு தெரிவு செய்ததுதான் தவறாகிப்போய்விட்டது.
அடிப்படையிலேயே தன் பையன் மேடையேறுவதை எல்லாம் பிரபாவின் அப்பா விரும்பவில்லை. பிரபாவின் நளினங்களைக் கண்டுவிட்டு மற்றவர்கள் அவனைக் கூடுதலாக கேலிச் செய்யவும், கைத்தட்டிச் சிரிக்கவும் கூடுமென்று சற்று யோசனையோடுதான் விசயம் கேள்விப்பட்டதிலிருந்து திரிந்துக் கொண்டிருந்தார். ஒரே மகனாச்சே ஒரேடியா அவனை அடக்கி வைக்கவும் மனமில்லை.
ஆனால் குறிப்பிட்ட பாடலுக்கு அவன் பள்ளியில் ஒத்திகைக்காக அபிநயம் பிடித்துக் கொண்டிருப்பதை எதேச்தேயாக அங்கு வந்தவர் பார்த்துவிட்டு கோபம் தலைக்கேறி அங்கிருந்த குச்சியால் சரமாரியாக அவனை வெளுத்து வாங்கினார். மதி பக்கத்திலிருந்தாலும் அவருக்கு பயப்பட முடிந்ததே தவிர எதையும் தடுக்க முடியவில்லை.
தடுக்க வந்த கிருஷ்ணவேணி டீச்சரையும் “உன் பிள்ளையா இருந்தா இந்த பாட்டுக்கெல்லாம் ஆட விடுவியா..?” தாளாத ஆதங்கத்தில் மரியாதை குறைவாக சத்தம் போட்டு விட, டீச்சர் அங்கே ஸ்தம்பித்தது மட்டுமல்லாமல் பிரபாவை ஆண்டு விழாவில் மேடையேற்றும் தனது முயற்சியையும் அத்தோடு கைவிட்டார்.
வாங்கிய பூசையில் பிரபாவிற்கு கை, முதுகு என எல்லா இடங்களும் வரி வரியாய் கண்ணிப் போய்விட்டிருந்தன. அவனுடைய அம்மாவிற்கு வலித்தாலும் தனது மகனுக்கு இப்படியெல்லாம் இருக்காதே என்று தேற்றி, அறிவுரைகள் சொன்னபடி ஒத்தடம் வைத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அந்த அடியோ ஒத்தடமோ பிரபாவை அவனுடைய இயல்புகளிலிருந்து மாற்றிக் கொள்ள உதவவில்லை என்பதுதான் அப்போதைய நிதர்சனம். பிரபாவிற்கு எப்படியும் இது போன்றதொரு மேடையில் தான் நினைத்த மாதிரி நடிக்க வேண்டும், அபிநயங்கள் பிடிக்க வேண்டும் என்ற தீராத ஆசை மனசுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
அதற்காக ஒரு நாள் மதியோடு தனது வகுப்பு நண்பர்களான ராஜேஷ் மற்றும் முருகதாஸையும் கூட கூட்டிக் கொண்டான். அன்று பெருமாள் கோயிலிலிருக்கும் சிமெண்ட்டில் அமைக்கப்பட்டிருந்த மேடை பக்கம் சென்றார்கள். அங்கேதான் திருவிழா காலங்களில் கர்நாடக சங்கீத மற்றும் விகடகவி கச்சேரிகள் நடந்தேறும்.
அது தை பூசத் திருவிழா நடந்து முடிந்திருந்த வேளை கூட. அதையொட்டி அவன் மனதில் அங்கே பார்த்த சரஸ்வதி சபதம் ஓடிக்கொண்டேயிருந்தது.
மேடையேறியதும் பிரபா ஆளுக்கு ஒரு வேடத்தைக் கொடுத்தான். அதில் பிரபாதான் சரஸ்வதி, ராஜேஷ் லட்சுமி வேடம், முருதாஸிற்கு பார்வதி என வசனங்களை அந்த படத்தில் வருவதை போன்றே சொல்லிக் கொடுத்து தானும் அபிநயித்துக் கொண்டிருந்தான். இதில் மதிக்கு மட்டும் நாரதர் வேடம் என்பது குறிப்பிடதக்கது.
அப்போது பிரகாரத்தில் சுற்றிக்கொண்டிருந்த சிலர் இவர்களது அந்த குழந்தை நாடகத்தை ரசித்தபடி கடந்துச் சென்றனர். அதில் ஒருவர் எதுவும் பேசாமல் இவர்களை கவனித்துவிட்டு, தலையைத் தொங்கவிட்டபடிச் சென்று கொண்டிருந்தார். அது பிரபாவின் மாமா ஆஞ்சநேயலு!
“யோவ் நல்லவரே..!” என்ற குரல்தான் அப்போது சட்டென நிகழ்காலத்திற்கு அவனைக் கொண்டு வந்துச் சேர்த்தது. அந்த பெண் இவனைப் பார்த்து அசட்டையாக சற்று தலையை சாய்த்து ஆட்டியபடி கேலி செய்வது போல் சிரிக்க, தவமணியுடன் சென்ற மதிக்கு அதிர்ச்சியும் படபடப்பும் தொற்றிக் கொள்ள துவங்கியது.
கொஞ்சம் தடித்த, முப்பதைத் தாண்டிய, வெற்றிலையைக் குதைத்தபடி வழியில் எதிர்ப்பட்ட அந்த பெண் இவனுக்கு பரிச்சயமானவள் போல்தான் தவமணிக்கு தென்பட்டாள். வழக்கத்திற்கு மாறாக அவனது காதுகளிருந்து கழுத்திற்கு வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி “யாரு மாமா அது?” நடப்பது ஒன்றும் புரியாமல் தவமணி விசாரித்தாள்.
இவன் என்ன பதில் சொல்வான் அவளிடம்..?
கோபமும் பயமும் கலந்து பிடரியில் சூடேறிக்கொண்டிருந்தது.
அந்த பெண்ணை மரியாதையாக விலகிப் போகும்படி கண்காட்டினான்.
அவள் தனக்கு காசு வேண்டும் என்பது போல் சைகைக் காட்டி ‘ஹாஹா’ என்று சிரித்தபடி நகர்ந்துச் சென்றாள்.
நடப்பவை தவமணிக்கு ஒன்றும் புரியாமல் மீண்டும் அவள், “அது யார் மாமா..?” என்றாள்.
“அதுவா லைன்ல நம்மக்கிட்ட சரக்கு வாங்குற பொம்பளதான்… போன வாரம் நல்ல சீவலாதான் அதோட கடையில போட்டுட்டு வந்தேன். அது ஓட்டக் கூரையில நல்லா நனைய விட்டுவிட்டு நான் நமுத்துப் போன சீவலக் குடுத்தேட்டேனு பாக்குற நேரமெல்லாம் அதச் சொல்லி குடுத்த காசத் திரும்பக் கேட்டுகிட்டே இருக்கு பாப்பா..! இரு இப்பவே போயி நஸ்டமானாலும் செட்டில் பண்ணிட்டு வர்றேன்.. அது இப்புடி போகும்போதும் வரும்போதும் கேக்குறதே அசிங்கமா இருக்கு!” என்று செல்ல எத்தனித்தவனைக் குறுக்கிட்டு,
“அப்புறம் ஏன் சிரிச்சுகிட்டே போவுது?” என்றாள்.
“அது ஒரு லூசு பொம்பள, அது அப்படிதான். இந்தா வர்றேன்..” என்று பைக்கை நிறுத்திவிட்டு அவளையும் காத்திருக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றான்.
தவமணிக்கு அவனது நடவடிக்கைகள் புதிதாக இருந்தன.
மதி, அந்த பெண்மணியைச் சந்தித்துவிட்டு திரும்பி வந்தபோது அதற்குமுன் அவனிடம் கண்ட தடுமாற்றங்களில் துளியும் இல்லை; நொடியில் யாவும் மறைந்து விட்டிருந்தன..!
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்
Leave a reply
You must be logged in to post a comment.