ஹேமா
சக்கர நாற்காலி பேசுகிறது
இதழ்கள் மட்டுமல்ல சிலருக்கு கண்களும் பேசும் என்று நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். வாய் பேசாது, கை பேசும் பார்த்துக்கோ! என்று கோபத்தில் நண்பர்கள் கூறுவதுமுண்டு. உடல் அங்கங்கள் மட்டுமில்லை பலருக்கும் உடல் அங்கமாக செயல்படும் சக்கர நாற்காலியும் பேசலாம். சக்கர நாற்காலியின் பேச்சை சற்று விளக்கமாக கேட்போம்.
நீங்கள் எப்பொழுதாவது சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா? அல்லது சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்பவர்களைப் பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் கட்டுரையை வாசித்துவிட்டு தெரியப்படுத்துங்கள். ஊனம் என்ற வார்த்தை குறைபாடு என்று பொருள்படும். உடற் குறைபாடு மட்டுமல்லாது அறிவுத்திறன், புலன், உளவியல் குறைபாடுகள் உள்ளவர்களையும் மாற்றுத்திறனாளிகள் என்று அழைக்கிறோம். அரசு பேருந்துகளில் முதலிரண்டு இருக்கையில் ஊனமுற்றோர் முதியோர் என்று எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் அதில் மாற்றுத்திறனாளிகள் ஏறி நான் பார்த்ததேயில்லை.
பேருந்தில் மூன்று படிகளை ஏற இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்தில் ஏறி வந்து இருக்கையில் அமர்வதெல்லாம் சவாலானதுதானே. குறைந்தபட்சம் மாற்றுத்திறனாளிகள் வந்தால் இருக்கை தர வேண்டும் என்ற எண்ணமாவது அந்தப் பலகையைப் பார்க்கும்போது நமக்கு வரும் அல்லது வரவேண்டும். உலகின் மிகப்பெரிய சிறுபான்மையினர் மாற்றுத்திறனாளிகள் என்று குறிப்பிடுகிறது உலக சுகாதார நிறுவனம்.
மரபணு காரணங்களினாலோ, ஏதாவது நோயினாலோ, அம்மாவின் கருவில் இருக்கும் போது ஏற்படும் மாற்றங்களினாலோ, விபத்தினாலோ மனிதர்களுக்கு உடல் ஊனம் ஏற்படலாம். சில நேரங்களில் அதற்கான மூல காரணங்கள் கண்டுபிடிக்க முடியாமலும் போகலாம்.
வளர்ந்து வரும் நாடுகளில் வறுமையால் பாதிக்கப்பட்டவர்களில் இருபது சதவிகிதம் மக்கள் மாற்றுத்திறனாளிகளாவர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப் பட்டவர்களில் இரண்டாயிரத்து எழுநூற்றி எண்பத்தாறு மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள் என்பது அதிர்ச்சி தரக்கூடிய தகவல். இலங்கை போர் மட்டுமே இத்தனை மாற்றுத்திறனாளிகளை உருவாக்கியிருக்கிறது என்றால் உலகப்போர்கள் எத்தனையெத்தனை மாற்றுத்திறனாளிகளை உருவாக்கி இருக்கும். நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.
இந்த மாற்றுத்திறனாளிகளில் குறிப்பாக சக்கர நாற்காலியில் தன் வாழ்நாளை செலவிட்ட மனிதர்களை குறித்து பார்ப்போம். சக்கர நாற்காலியைப் பற்றி பேசும்போது நாம் தவிர்க்க முடியாத ஒரு நபர் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். தன்னுடைய இருபத்தொரு வயதில் இயக்கு நரம்பணு நோயால் பாதிக்கப்பட்ட இவர் உடலளவில் பாதிப்புகள் பல இருந்தபோதும் இயற்பியல் ஆராய்ச்சியிலும் எழுத்துத் துறையிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். கருந்துளைகள் மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய புரிதலுக்கு மிக முக்கிய பங்காற்றியவர். இவர் எழுதிய ‘த பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்னும் புத்தகம் முப்பத்தைந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வியட்நாம் மீதான போர், ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு என தன் சக்கர நாற்காலியில் பயணித்தபடியே மக்களுக்காக குரல் கொடுத்தவர். சொல்லப்போனால் குரலற்ற நிலையிலும் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து சக்கர நாற்காலி என்றவுடன் தன் கடைசி காலங்களில் சக்கர நாற்காலியில் கழித்த முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள்தான் என் நினைவிற்கு வருகிறார். முதுமையில் முதுகுவலியால் சக்கர நாற்காலியை உபயோகித்த போதும் மக்கள் பணி செய்த தலைவர் கலைஞர். மூத்திரப் பையோடு பகுத்தறிவு பேசியவர் பெரியார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த போதும் மக்கள் தொண்டு செய்தவர் நம் அறிஞர் அண்ணா என்பதெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் அறிந்த செய்திகள்.
பிறப்பிலிருந்தே பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு தன் தொடர் முயற்சியின் மூலமாக வெற்றி கொண்டிருக்கும் கார்த்திக் சந்திரசேகர் அவர்களுடனான உரையாடலின் தொகுப்பைப் பார்க்கலாம்.
த வே ஐ சி இட் (The way I see it) என்கிற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் கார்த்திக் சந்திரசேகர். எம் ஏ வரலாறு மற்றும் எம் ஃபில் ஆங்கிலம் கற்றவர். இப்போது ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். பெருமூளை வாதத்தால் கை கால்கள் பாதிக்கப்பட்ட இவர் குறைமாத பிரசவத்தில் பிறந்தவர். சக்கர நாற்காலி இவர் வாழ்வில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஆறு பட்டங்களையும் பதினைந்து டிப்ளமோக்களையும் பெற்றவர். இவ்வளவு படித்திருந்தும் தன்னுடைய குறைபாட்டால் வேலையில்லாமல் பல வருடங்களாக தவித்தவர். ஆனால் மனம் தளராத அவரின் ஊக்கம் இன்று ஒரு நல்ல வேலையை அவர் தக்கவைத்துக்கொள்ள உதவியிருக்கிறது.
‘தன் இயலாமையின் காரணமாக தன் வாழ்நாளில் எத்தனையோ ஏளனங்களைச் சந்தித்திருக்கிறேன். என்னை மனிதனாகவேப் பார்க்காமல் வேற்று கிரகவாசி போல பார்க்கும் மனிதர்களின் மனநிலையை என்னவென்று சொல்ல?’ என்ற கேள்வியை வருத்தத்துடன் பதிவிடுகிறார் கார்த்திக்.
எனக்கு ஒரு கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது தீராத ஆசை. ஆனால் என் நிலையில் அதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எல்லோரும் வெவ்வேறானவர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். எனக்கான தேவைகளை வாழ்வை நான் கண்டடைகிறேன் என்கிறார் கார்த்திக்.
மற்றவர்களுக்கு நம்பிக்கையூட்டும் இடத்தில் தான் இருப்பதாகவும் நியாயமான ஆசைகளை நோக்கி தன் வாழ்வை திருப்பியிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
சக்கர நாற்காலியை அரசிடமிருந்து பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
வாழ்வில் இத்தனை சவால்கள் இருந்தும் தான் ஒளியாக மாறி மற்றவர்களுக்கு வெளிச்சமூட்டும் கார்த்திக் சந்திரசேகர் அவர்களுடனான உரையாடல் தன்னம்பிக்கையின் ஊற்று என்றால் அது மிகையல்ல.
அடுத்தது மற்றொரு மாற்றுத்திறனாளியான மீரா பாலாஜி அவர்களுடனான உரையாடலின் நெகிழ்ச்சியான தொகுப்பு. தன்னுடைய ஏழாவது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவர். கை கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சில வருடங்கள் இருந்து பின்பு கைகள் நலம் பெற்றன. கால்களுக்கு கேலிபர் எனப்படும் பிரத்யேகமான காலனியோடு நடக்க ஆரம்பித்திருந்தார். பள்ளிக்கூடம் போக முடியாத சூழல். அதனால் வீட்டிலிருந்தே பள்ளி படிப்பைத் தொடர்ந்தார். ஒரு தவறான சிகிச்சை மூலம் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அவர் மேலும் பிரத்யேக காலனியின் மூலம் நடப்பதுகூட சிரமமானது. இரண்டு வருடங்கள் ஒருவர் கொடுத்த தவறான சிகிச்சையால் மேலும் பலவீனம் அடைந்தார் மீரா.
அதிலிருந்து மெல்ல மீண்டு வந்தவர் டைப்ரைட்டிங், ஸ்போக்கன் இங்கிலீஷ் என்று தன்னை படிப்பில் மேம்படுத்திக் கொண்டார். பிகாம் பட்டப்படிப்பை படிக்கத் தொடங்கினார். ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வில் தேர்வாகி வேலைக்குச் சேர்ந்தது மிகப்பெரிய ஆறுதலும் மகிழ்ச்சியும். கஸ்டம்ஸில் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சியை நிரந்தரமாக்கிக் கொள்ள அவரால் இயலவில்லை. அலுவலகக் கழிவறை உபயோகம் செய்வதென்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது அவருக்கு. ‘கழிவறைப் பிரச்சனையால், வேலைக்கு சென்றால் நாள் முழுக்க சிறுநீர் கழிக்காமல் இருப்பது மிகுந்த சிரமமாக இருக்கும் என்று தன் மனவேதனையைக் கூறுகிறார் மீரா.
இரண்டு மூன்று படிகளை ஏறுவது கூட மிகச் சிரமமான விஷயமாக இருக்கும். ஹிந்தி பரிட்சையின்போது தேர்வறையில் மூன்று படிக்கட்டுகள் இருந்தன. அப்பாதான் என்னை அழைத்துச் சென்றார். அந்த படிக்கட்டுகளில் அப்பா தவறி விழுந்துவிட்டார். அதைத் தொடர்ந்து நானும் விழுந்துவிட்டேன். அன்று ரத்த காயத்தோடுதான் தேர்வு எழுதினேன். என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளையும் மனதில் கொண்டு தேர்வு மையங்கள், அலுவலகங்கள், சாலைகள், பொது கழிப்பிடங்கள் போன்றவற்றை மாற்றியமைக்க வேண்டும் என்று தன் கோரிக்கையை வைக்கிறார் மீரா.
பின்பு சக்கர நாற்காலியை உபயோகிக்கத் தொடங்கிய பிறகும் வெளியிடங்களுக்கு சென்று வரும்போது பல்வேறு இடர்களை சந்தித்ததாக கூறுகிறார் மீரா. அதைத்தொடர்ந்து மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மீரா நோயின் கொடுமையைக் காட்டிலும் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதும் அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை இல்லாததும் சிகிச்சைக்காக சிகிச்சை மேஜையில் ஏறி படுக்கவும் பின்னர் இறங்கவும் தான் பட்ட கஷ்டங்களை சொல்லி மாளாது என்று கூறுகிறார். சில வருடங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு திட்டம் மூலம் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற மீரா தான் பணி ஓய்வு பெற்றதற்கான முழுமுதற் காரணமாக சொல்வது கழிப்பறை பிரச்சனைகளைத்தான்.
‘டயப்பர் கூட பயன்படுத்தி பார்த்தேன். ஃபங்கல் இன்பெக்ஷன் வந்ததுதான் மிச்சம். பொது இடங்கள், அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என பல இடங்களிலும் மாற்று திறனாளிகளின் தேவை குறித்த எந்த விழிப்புணர்வும் யாருக்கும் பெரும்பாலும் இல்லை என்பது மிகுந்த வேதனையான ஒன்று’ என்று இந்த சமூகத்தை, நம்மை, அரசைக் கைகாட்டும் மீரா போன்ற பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம்?
ஒரு மாற்றுத்திறனாளி கடற்கரைக்கு செல்வதே சவாலாக இருந்த காலகட்டத்தில் அதற்காக மெரினா கடற்கரையில் சாலை அமைத்துக் கொடுத்தது தமிழக அரசு. அதைப் போலவே அவர்கள் நலனை மனதில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களையும் அரசும் தனியார் நிறுவனங்களும் செய்ய வேண்டும் மக்களும் அவர்களை பார்க்கும் போது ஐயோ பாவம் என்று இரக்கம் காட்டுவதோடு இல்லாமல் தங்களால் இயன்ற ஏதாவது உதவிகளையும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.
உண்மையில் யாருடைய வலியையும் பிரச்சனையையும் நம்மால் புரிந்துகொள்ள இயலாது. அவரவர் வலியும் வேதனையும் அவரவருக்கு மட்டுமே விளங்கும். குறைந்தபட்சம் அவ்வலியை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். அவ்வளவே. சக்கர நாற்காலியில் அமர்ந்தும் சரித்திரம் படைத்தவர்கள்தான் இவர்கள் ஒவ்வொருவருமே. மனதில் பெரிய நம்பிக்கையோடு வாழும் ஒவ்வொருவரும் தன்னளவில் சாதனையாளர்களே. தொடர்ந்து எளிய மனிதர்களுடன் உரையாடுவோம்.
எளிய மனிதர்களின் வாக்குமூலமாக கதையல்ல வாழ்வு தொடரும்.
ஹேமா
6 comments on “கதையல்ல வாழ்வு – 11 “சக்கர நாற்காலி பேசுகிறது “”
rajaram
சிறப்பு. நல்ல கட்டுரை. வாழ்த்துகள். Https://www.Facebook.com/mokanr1 இவரைப் பற்றியும் தெரிஞ்சிக்கங்க.
சே.குமார்
அருமையான கட்டுரை, சிறப்பு
Hema
மிக்க நன்றி ராஜாராம் @Rajaram
Hema
நன்றி குமார். நிச்சயம் பார்க்கிறேன் @சே.குமார்
Akila
சக்கர நாற்காலியுடன் சேர்ந்து நகரும் அவர்களின் மன வலியும், பாரமும் காதில் கேட்கிறது.
JAZEELA BANU
வலியை வார்த்தைகளில் கோக்கும் முயற்சியாகதான் இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன் ஹேமா. சிறப்பு.