ஹேமா
துப்புரவு? தூய்மை? மனிதம்?
காட்சி 1:
1978 ல் நாகர்கோவிலில் உள்ள ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடந்த சம்பவம் இது.
வேகமாக பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் சரசு. பள்ளியில் ஆயா வேலைக்கு சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இருபது வயதில் திருமணமாகி இருபத்தோரு வயதில் குழந்தை பிறப்பு, இருபத்தாறு வயதில் கணவரின் மரணம் என்று வாழ்க்கை அவளை புரட்டிப் போட்டிருந்தது. ஐந்து வயது மகளையும் அதே பள்ளியில் சேர்த்துவிட்டு தானும் துப்பரவுப் பணியாளராக அங்கேயே சேர்ந்து கொண்டாள்.
மொத்தம் நான்கு ஆயாக்கள் அந்த பள்ளியில் இருந்தார்கள். பள்ளி வளாகத்தையும் வகுப்பறைகளையும் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற வேலைகள் பணிக்கப்பட்டிருந்தன. மகளோடே காலையில் பள்ளிக்குப் போய்விட்டு மாலையில் திரும்பிவிடலாம் என்பது சுலபமாக இருந்தது சரசுக்கு. அன்றும் அப்படித்தான் பள்ளிக்கு பிள்ளையோடு சென்றிருந்தாள். குழந்தையை வகுப்பறையில் விட்டுவிட்டு பள்ளி வளாகத்தைப் பெருக்குவதற்காக சென்றுவிட்டாள். குழந்தைகள் ஒன்றாம் வகுப்பில் பாடம் கற்றுக் கொண்டிருந்தன. திடீரென்று ஒரு பிள்ளை மலம் கழித்துவிட்டது. சிறிய பிள்ளைகள் இதுபோல சிறுநீர் கழிப்பதோ மலம் கழிப்பதோ சாதாரண விஷயம்தான். உடனே எல்லாப் பிள்ளைகளும் ச்சீ என்று கத்திக்கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். வகுப்பாசிரியர் ஒரு பையனிடம் ஓடிப்போய் ஆயம்மாவைக் கூட்டிட்டு வா என்றார். அவனும் ஓடினான். இதை மற்ற பிள்ளைகளைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சரசுவின் மகள் வித்யா.
அதற்குள் பக்கத்து வகுப்பாசிரியை வந்து ‘என்ன இவ்ளோ நேரமாகுது அந்த பொம்பள வர’ ‘ ஏ பொண்ணு நீ அவங்க மகதானே. அப்புறம், பாத்துட்டு நிக்கற. போய் முறமும் துடைப்பமும் இருக்கு பாரு எடுத்து அள்ளு’ என்று சொல்கிறார். ஒன்றும் விளங்காத அந்த பெண்குழந்தை அருகிலிருந்த முறத்தை எடுத்து அந்தக் கழிவை சுத்தம் செய்யத் தொடங்குகிறது. மற்ற குழந்தைகளுகளெல்லாம் மூக்கைப் பிடித்துக் கொண்டு வித்யாவைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். யாரோ ஒரு பிள்ளையின் கழிவை நான் ஏன் சுத்தம் செய்ய வேண்டும் என்ற கேள்வி மனதில் வந்தாலும் ஆசிரியர் சொன்ன தோரணை அச்சத்தையே வரவழைத்திருந்தது அவளுக்கு.
அழுது கொண்டே சுத்தம் செய்து கொண்டிருந்த பிள்ளையை நோக்கி ஓடி வந்தாள் அம்மா சரசு. ‘நீ ஏண்டி இதெல்லாம் செய்யற, தள்ளு’ என்று கூறிவிட்டு அவளும் கண்ணீர் ஒழுக அவ்விடத்தை சுத்தம் செய்தாள். அன்று அந்த அவமானத்தால் பள்ளியை விட்டு நின்ற வித்யா அடுத்த பதினைந்து வருடங்கள் கழித்து அதே சாலையை தன் மகனை இடுப்பில் சுமந்து கொண்டு சுத்தம் செய்து கொண்டிருந்தாள். இது ஒரு உண்மைச் சம்பவம். நான் கேள்வியுற்றதிலிருந்து மனதை விட்டு நீங்காத உண்மைச் சம்பவம். ஒரு துப்புரவு தொழிலாளியின் மகளின் வாழ்வை சீர்குழைத்த ஒரு ஆசிரியரைக் பற்றிய கதை மட்டுமல்ல அந்த ஆசிரியரைப் போன்ற பலதரப்பட்ட கொடூர சமுகப் பார்வைகளால் தன் படிப்பைத் தொலைத்த ஒரு துப்பரவு பணியாளரின் மகளின் நிஜக் கதையுமாகும்.
காட்சி 2:
ஆறாம் வகுப்பில் அறிவியல் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள் கெளரி. பள்ளி ஆசிரியரிடம் பியூன் வந்து கெளரியை கைக்காட்டி ஏதோ சொல்ல, ‘ கெளரி நீ வீட்டுக்கு கிளம்பு. உங்க அப்பா இறந்துட்டாராம் ‘ என்றார் ஆசிரியர். ஒன்றும் புரியாமல் இருக்கையிலிருந்து எழுந்து புத்தகப் பையை எடுத்துக் கொண்டு சைக்கிளை வேகமாக ஓட்டிக் கொண்டு போனாள். ‘ என்னாச்சு, அப்பாக்கு? காலையில நல்லாதானே வேலைக்குப் போனார் என்று மனதுக்குள் அழுதபடியே சைக்கிளில் போனாள். வீட்டு வாசலில் நிறைந்த கூட்டம். அம்மா தலைவிரி கோலமாக அழுது கொண்டிருந்தாள்.
அப்பாவை சாக்கடை நீரோடு கயிறு கட்டிலில் படுக்க வைத்திருந்தார்கள். ‘என்னாச்சு அப்பாவுக்கு? செத்துட்டாரா ? எப்படி? விஷ வாயு தாக்குனதா எல்லாரும் சொல்றாங்க? அப்பா செப்டிக் டேங்க் கிளீன் பண்ணதான பக்கத்து தெருவுக்கு வேலைக்குப் போனாரு? செப்டிக் டாங்க்ல விஷ வாயு இருக்குதா? எங்க அப்பாவக் கடைசியாக்கூட இந்த சாக்கடை நாற்றத்தோட படுக்க வைச்சிருக்காங்களே? ஐயோ என்று அலறி வீட்டு வாசலருகில் இருந்த கிணற்றடியில் அமர்ந்தாள். அப்பாவை குளிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.
மரண வீடாக அவள் வீடு மாறி ஏற்கனவே இரண்டு மணிநேரங்கள் ஆகியிருந்தன. அப்பாவின் தலைமாட்டில் விளக்கும் ஊதிபத்தியும் வைக்கப் பட்டிருந்தன. அப்பா உடலிலிருந்த கழிவுகள் நீக்கப்பட்டிருந்தன. ஆனால் மலக்குழியில் அவர் குடித்த கழிவை என்ன செய்திருப்பார்கள்? அது வயிற்றுக்குள்தானே இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. இரவில் தன் வயிற்றில் சாய்த்துக் கொண்டு உறங்க வைக்கும் அப்பாவின் வயிற்றை மனிதர்களின் கழிவு நிறைத்திருக்கிறதா என்று தோன்றியவுடன் அவள் அழுகை மட்டுப்படாமல் அதிகமானது. வீட்டில் சம்பாதிக்கும் ஒரு நபரும் இறந்து விட்டதால் நாளை அவள் கல்வி என்னவாகும் என்பதே கேள்வியாக மாறியது.
காட்சி 3 :
சென்னை ஆவடியில் துப்புரவுப் பணி செய்து கொண்டிருந்த விஜயா அக்கா பற்றிய செய்தி இது. ஒவ்வொரு வீட்டிலும் வந்து பெல் அடித்தால் குப்பையைப் போடுவார்கள். விஜயா அக்காவைப் பார்த்து குப்பை வருது, குப்பை வருதுனு சொல்லுவாங்க. ‘குப்பை, குப்பை வண்டினு கூப்டறதெல்லாம் பழகிப் போன ஒன்னுனு சொல்றாங்க விஜயா அக்கா. குப்பை வண்டியோட போகும்போது பாட்டில்ல தண்ணியும் சாப்பாடும் எடுத்துட்டு போயிடுவேன். ஒருநாள் மறந்துட்டேன். யாரும் அவங்க வீட்டுப் பாத்திரத்தில சாப்பாடு தரல. உன் பாத்திரம் இருந்தா குடு. சாப்பாடு தரேன். இல்லனா நாளையில இருந்து பாத்திரம் எடுத்துட்டு வந்துட்டு கேளு னு சொன்னாங்க. அவங்க குப்பைய இரண்டு கையை ஏந்தி வாங்குறேன். ஆனா எனக்கு ஒரு வாய் சாப்பாடு கொடுக்க அவங்களுக்கு கை வர மாட்டேங்குது.
பெரிய சாதிக்காரங்கலாம் இந்த வேலையை செய்யறதில்ல. எங்கள மாதிரி ஏழை சாதிசனம்தான் இதுல இருக்கு. வயித்துப் பொழப்பு, எல்லா வேலையும் செஞ்சுதானே ஆவனும். எங்கள சுத்தம் இல்லனு சொல்லுவாங்க. ஆனா ஒரு வாரம் நாங்க வரலனா அப்பதான் தெரியும் அந்த தெருவோட நிலமை என்று மென் சிரிப்பு சிரிக்கிறார் விஜயா அக்கா.
துப்புரவுப் பணியாளர்களை இனி தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்க வேண்டுமென்று தமிழக அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. அவர்களை முன்களப் பணியாளர்கள் என்றும் அழைக்கிறோம். தெருவைப் பெருக்கிச் சுத்தம் செய்தல், கழிவு நீர்க் கால்வாய்களை சுத்தம் செய்தல், வீட்டு வேலை செய்தல், நகராட்சி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களை சுத்தம் செய்தல், சாக்கடைகளை சுத்தம் செய்தல், கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தம் செய்தல், மருத்துவமனைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்பவர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கிறோம். பெரும்பாலும் நாள் முழுக்க உழைக்கும் இம்மக்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது.
கழிவுநீர் அகற்றுதல் போன்ற பணிகளில் கைமுறை அகற்றுதல், இயந்திரங்களின் மூலமாக அகற்றுதல் என்ற இருமுறைகள் உள்ளன. மனிதக் கழிவை மனிதனின் கைகளைக் கொண்டே அகற்றும் முறை இன்னும் முழுமையாக அகற்றப்படாதது சமூக அவலத்தின் உச்சம். மனிதக் கழிவுகளை இயந்திரங்களின் மூலமாகத்தான் அகற்ற வேண்டும் என்று சட்டம் இருந்தாலும் அது முழுமையாக நடைமுறை படுத்தப் படுவதில்லை. அதுதான் சட்டம் வந்துவிட்டதே? இவர்கள் ஏன் இன்னும் இவ்வேலையை செய்கிறார்கள் என்னும் அரைவேக்காட்டுத்தனமான வாதங்களில் பொருளில்லை. சமுகம் இன்னமும் அவர்களை அவ்வேலைகளைச் செய்யப் பணித்துக் கொண்டிருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்காகக் கல்வி அறிவு பெறாத மக்கள் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லாமல் கைகளால் மனிதக் கழிவை அகற்றுகின்றனர்.
துப்புரவு பணியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கையை உலகமெங்கிலும் சரியாகக் கணிக்க இயலவில்லை. ஏனெனில் முறைசாரா முறையில் பலரும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளிகளின் எண்ணிக்கை சில வருடங்களுக்கு முன்பு ஐந்து மில்லியனாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதில் 50 சதவிகிதம் பெண்கள். பல்வேறு சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் இப்பணியாளர்கள் ஆளாகிறார்கள்.
நிதி பாதுகாப்பின்மை குறிப்பாக முறையான வேலை ஒப்பந்தங்கள் இல்லாதவர்கள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள் போன்ற பல்வேறு சிக்கல்களைக் குறிப்பிடலாம். பாதுகாப்பற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பணிகளால் தலைவலி, காய்ச்சல், ஆஸ்துமா, கண் நோய்கள் தோல் நோய்கள் மற்றும் தண்ணீரால் பரவும் நோய்கள் என பல நோய்களால் அவர்கள் மிக எளிதாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகள், பாதுகாப்பு உபகரணங்களை அரசு தருவதன் மூலம் இந்நோய் தொற்றுகளை ஓரளவிற்கு குறைக்கலாம். இப்பணியைத் தவிர வேறு பணி செய்யத் தெரியாதவர்களுக்கும் இப்பணியால் மிக மோசமாக உடல்நலம் பாதிக்கப்படுபவர்களுக்கும் வேறு துறைகளில் பணி நியமனம் செய்யலாம்.
சென்னை வில்லிவாக்கத்தில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரியும் பாக்கியா அக்காவிடம் நடந்த உரையாடலின் சில துளிகள்.
அக்கா, எத்தனை வருஷமா இந்த வேலையில் இருக்கீங்க?
நான் எட்டு வருஷமா இந்த வேலைலதான் இருக்கேன். இங்க பக்கத்திலிருக்க xxx மருத்துவமனையில கிளீனிங் வேலை செய்றேன்.
என்ன படிங்சிருக்கீங்க அக்கா’?
படிச்சிருந்தா நான்லாம் ஏம்மா இந்த வேலைக்கு வரேன். படிக்காததாலதான் இங்க ஆஸ்புத்திரிய பெருக்கிட்டும் பாத்ரூம் கழுவிக்கிட்டும் இருக்கேன்.
இந்த வேலைல இருக்கிற சிரமங்கள் என்னக்கா?
ஆஸ்பத்திரியில வேலை செய்றதே கஷ்டம்தாம்மா. டாக்டருங்கள்லாம் கடவுளுங்க. கோவில் கட்டி கும்பிட்டாலும் தப்பில்ல. எனக்கு முதல்ல, பிரசவ கேஸ் முடிஞ்சு அந்த ரூமை சுத்தம் செய்ற வேலையை கொடுத்தாங்க. ஒரே ரத்தமும் வாடையும். வாந்தி எடுத்துட்டேன். அப்பறம் சமாளிச்சு செஞ்சிட்டேன். இப்போ பழகிருச்சி. வாடையிலியே மோசமான வாடை மனுச வாடைதான்னு எனக்கு இங்க வந்தபிறகுதான் தெரிஞ்சுது.
எனக்கு பரவாயில்ல. சுத்தம் செய்ய களவுஸ் எல்லாம் குடுக்கிறாங்க. என் வீட்டுக்காரர் செப்டிக் டேங்க் கிளீனிங் வேலை, காவா அடைச்சிக்கிச்சினா கிளீன் பண்றதுலாம் செய்வாரு. கிளவுஸ் ஒன்னும் போடாம செய்வாரு. அடிக்கடி சீக்கு வந்துரும். அந்த வேலையை விட்டுடுனு சொன்னாலும் விட்டுட்டு என்ன செய்யறதுனு கேப்பாரு. அதுவும் சரிதான். வேலையில்லாம என்ன செய்வோம்.
எனக்கும் வேலைக்கு சேர்ந்த புதுசுல யாராவது வாந்தி எடுத்துட்டு கிளீன் பண்ண சொன்னா ஒப்பவே ஒப்பாது. எனக்கும் வாந்தியா வரும். இப்பலாம் ஒண்ணுமில்ல. இல்லாதபட்டவங்க எல்லா நாத்தத்தையும் பழகிக்கனும்.
குழந்தைங்க இருக்காங்களா அக்கா?
ஆமாம். இரண்டு பொண்ணுங்க. இரண்டு பேரையும் டாக்ரடாக்கனும்னு ஆசை எனக்கு. ராணிங்க மாதிரி வேலை செய்யனும். எல்லாரும் அவங்கள கையெடுத்து கும்புடனும்.
வாழ்த்துகள் அக்கா. உங்கள் எண்ணம் எல்லாம் நிறைவேறும்.
முன்களப் பணியாளர்கள் என்று பெயர் கொடுப்பதால் மட்டுமோ அல்லது ஹெலிகாப்டரில் மலர் தூவுவதாலோ அவர்கள் பயனடையப் போவதில்லை. துப்புரவுப் பணியாளர்களின் ஆழமான பிரச்சனைகளைக் குறித்த அலசலும் விழிப்பும் தீர்வும் நமக்குத் தேவை. இதில் அரசின் பங்கு மிக முக்கியமானது.மலக் குழியில் வேலை செய்து, விஷ வாயு தாக்கி இறக்கும் மனிதர்களின் மரணங்களை இனியும் சகிக்க இயலாது.
எளிய மனிதர்களின் வாக்குமூலமாக கதையல்ல வாழ்வு தொடரும்…
ஹேமா
நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து.
4 comments on “கதையல்ல வாழ்வு – 8 “துப்புரவு? தூய்மை? மனிதம்?””
சே.குமார்
சிறப்பான கட்டுரை. என்னதான் சொன்னாலும் அவர்களுக்கு அது வாழ்வாதாரம் என்பதால் அதை விட்டு வேறு வேலைக்குச் செல்லமாட்டார்கள். இங்கே அவர்களை வேலைக்கு அழைப்பவர்களைச் சாடுவதைவிட, அதற்கான எல்லா வசதிகளும் இருந்தும் அதை முழுமையாகச் செயல்படுத்தாத அரசுகளைத்தான்
rajaram
சிறப்பான பதிவு, ஆங்காங்கே, எழுதிக்கொண்டும், குமுறிக்கொண்டும் இருக்கிறோம்., ஆனாலும் மாற்றம் பெரிதாக அமைய வில்லையே என்ற வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
Akila
நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டால் இன்றும் தொடரும் இந்த சமூக அவலத்திற்கு ஓரளவு தீர்வு கிடைக்கும்.
K Gowritamilselvan
எளிய மக்கள் படும் துயரங்களை மிக தெளிவாக எடுத்துரைத்துள்ள எழுத்தாளர் ஹேமா அவர்களுக்கு பாராட்டுகள்