ஜெஸிலா பானு
முன்பெல்லாம் தினமும் கிட்டத்தட்ட 45 கி.மீ. துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு வண்டி ஓட்ட வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் பறக்கும் கார் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்வேன். என்னைப் போலவே யாரோ பறக்கும் காரை கற்பனைச் செய்து காட்சிப்படுத்தி அதனைச் செயல்படுத்தியும் இருக்கிறார்கள். விரைவில் துபாயில் பறக்கும் கார் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
கற்பனை செய்வதெல்லாம் நனவாகுமா? ஆகும். ஆனால் எப்படி கற்பனை செய்கிறோம் என்பதைப் பொருத்தது.
உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டால் அது எப்படி வேண்டுமானாலும் செயல்படும். ஒரு விஷயத்தில் வெற்றி கிடைக்க வேண்டுமென்று நினைக்கும் போது வெற்றிக் கோப்பை வாங்குவதை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சியடையலாம் அல்லது அந்த வெற்றிப் பாதைக்கான ஒவ்வொரு நிகழ்வையும் கற்பனை செய்து உருவாக்கியும் வெற்றியை அடையலாம். உங்கள் குதிரையின் ஓட்டத்தைப் பொருத்ததுதான் நாம் நினைத்ததைச் சாத்தியமாவதும்.
நாம் கற்பனை செய்யும் எல்லாக் காட்சிகளையும் நம் மூளையில் உள்ள நியூரான்கள் செயல்படுத்த முயல்கின்றன. ஆனால் அவை நம் ஐந்து புலன்களின் மூலம் கிடைக்கும் தரவுகளான நம் ஆழ்மனதில் உள்ள நம்பிக்கையை, அனுமானங்களை, மதிப்பீடுகளை, என்று நமக்கான தகவல்களைச் சேகரித்து எது முக்கியம் என்பதைத் தீர்மானித்து வடிக்கட்டி ’ரெட்டிகுலர் ஆக்டிவேட்டிங் சிஸ்டத்தை (RAS)’ செயல்படுத்தும். ஆகையால் காட்சியாக விரியும் நம் கற்பனை சாத்தியமாகும் கூறுகள் அதிகரிக்கும்.
காட்சிப்படுத்தல் முக்கியமானது, ஏனெனில் இது ஒரு சூழ்நிலை ஏற்படுவதற்கு முன்பு அதை எவ்வாறு எதிர்கொள்வது, அனுபவிப்பது என்பதைத் தயார் செய்து உங்களுக்குக் கற்பிக்க உதவுகிறது. உங்கள் மனதில் உள்ள வெற்றியைப் பார்க்கவும், கேட்கவும் மற்றும் உணரவும் உங்கள் மூளையை நிலைநிறுத்துவதன் மூலம் உங்கள் இலக்குகளை அடைய இது உதவுகிறது.
எனக்கு ஜீப் வாங்க வேண்டுமென்று ஆசையிருந்தது. அதன்பின் அது ஆர்வமாக மாறியது. என்னால் வாங்க இயலும் என்ற நம்பிக்கை ஆழமாகப் பதிந்தது. நான் ஓட்டும் வண்டியை ஜீப்பாக நினைத்துக் கொண்டு ஓட்டத் தொடங்கினேன், கற்பனையாக. அதன் நிறம், அதில் உள்ள பயன்பாடுகள், நான்கு டயர்களின் தடிமானம், உயரம், எல்லாவற்றையும் காட்சிப்படுத்திப் பார்ப்பேன், அந்தக் கணத்திலேயே இருப்பேன். நம்புங்கள் எனக்கு மிக விரைவில், நான் எதிர்பார்த்த விலையிலேயே எனக்கு மிகவும் பிடித்த வகையில் எனக்கான ஜீப் அமைந்தது. இதை நான் மட்டும் சொல்லவில்லை, பல மனோத்தத்துவ நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் சொல்லியுள்ளனர். இதனையே பல ஆய்வுக் கட்டுரைகளும், புள்ளிவிரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்கும்போதெல்லாம், உங்கள் செயல்திறன் உங்களுக்குள் மறைந்திருக்கும் தகவல்களை வைத்து இது நிறைவேறும், இது கிடைக்காது என்று முடிவெடுத்துவிடும். அதனால் இலக்கு தெளிவாக இருக்க வேண்டும். நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள், ஏன் அதை அடைய விரும்புகிறீர்கள் என்பதற்கான விரிவான பார்வையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களுக்கான தெளிவான இலக்கைக் கொண்டு வர உங்கள் ஆழ்மனதில் அதற்கான ஆழமான அர்த்தத்தைக் கண்டறிவது அவசியம். நீங்கள் ஆழ்மனதில் நினைப்பதே நிறைவேறுகிறது. இந்த விஷயத்தை நீங்கள் உள்ளார்ந்து விளங்கிக் கொண்டாலே காட்சிப்படுத்துதலைக் கொண்டு உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
நாம் தெளிவாகக் கற்பனை செய்வதற்கும், உண்மையான ஒன்றுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நம் மூளையால் பிரித்தறிந்து பார்க்க இயலாது. அதனால்தான் தூங்கும்போது வரும் கனவுகள் நம்மைப் பயந்து நடுங்கவைக்கின்றன, வியர்த்துக் கொட்டவைக்கின்றன, இதயத்தைப் படபடக்கவைக்கின்றன. கனவை விடுங்கள், நனவில் கற்பனை செய்யும் விஷயங்களுக்கும் நடுங்குகிறோமே, மேடையில் ஏறிப் பேச வேண்டுமென்று கேட்டவுடன் ஏற்படும் தடுமாற்றத்திற்கு முக்கியக் காரணம் அதனை நம் மனதில் கற்பனையாக ஒட்டிப் பார்க்கிறோம், அந்தக் கற்பனையில் காட்சிப்படுத்துதலில் ஏற்படும் பயத்தினால்தான் நடுங்குகிறோம். இதையே நாம் கைத்தட்டல் பெறுகிறோம். நன்றாகப் பேசியதாகப் பலரும் பாராட்டுகிறார்கள் என்று மனதில் நிறுத்திக் கொண்டு மேடை ஏறிப் பாருங்கள், நான் சொல்வது புரியும்.
சொல்லும் வார்த்தைகளைவிடக் காணும் காட்சிகளுக்கு வலிமை அதிகம் என்பதால்தான், ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்கிறார்கள்.
உன் முகம் நினைவிலிருக்கிறது பெயர் மறந்துவிட்டது என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஆனால் உன் பெயர் நினைவிலிருக்கிறது உன் முகம் மறந்துவிட்டது என்று சொல்பவர்கள் குறைவு – சரிதானே? நமது நினைவாற்றலும் காட்சியை நினைவில் வைத்திருக்கும் அளவிற்குச் சொற்களை நினைவில் வைத்திருக்காது. அதற்கேற்ற ஒரு சீனப் பழமொழியுண்டு, ‘நான் கேட்பதை மறந்துவிடுகிறேன். நான் பார்ப்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குப் புரிகிறது’. இதன் மூலம் செயல்பாடுக்குக் கேட்பதைவிடப் பார்ப்பதே வீரியம் அதிகம் என்று புலப்படுகிறது.
புதிய கண்டுபிடிப்பின் முதல்படி கண்டிப்பாகக் கற்பனையாகவும் காட்சிபடுத்துதலாகவும்தானே இருந்திருக்க முடியும்? நன்றாக யோசித்துப் பாருங்கள்.
கி மு நானூறிலேயே மனிதன் காற்றாடி உயரத்தில் பறப்பதைப் பார்த்து, தானும் பறந்தால் நன்றாக இருக்குமே என்று கற்பனை செய்ய ஆரம்பித்தானாம். அதன் பிறகு பறவைகள் போல் சிறகு முளைக்க வேண்டுமென்று தன்னையே காட்சிப்படுத்தினானாம். கி பி 1485 இல் லியோனார்டோ டா வின்சி தன் கண்களில் விரியும் கற்பனைக் காட்சிகளைக் கிட்டத்தட்ட 100 ஓவியங்களாக உருவாக்கினாராம். இந்தக் கற்பனைகளின் தொடர்ச்சியாகத்தான் ரைட் சகோதரர்களுக்கு 1871ல் பறக்கும் விமானம் சாத்தியப்பட்டது. ஆகையால் எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கப் புள்ளி உண்டு. ”நான் என்னத்த கண்டுபிடிக்கப் போகிறேன், எதற்கு இந்தக் கதைகள்?” என்று நீங்கள் நினைக்கலாம். உங்களையே நீங்கள் கண்டுபிடிங்கள்! அது எத்தனையோ திறப்புகளுக்கு வழிவகுக்கும்.
”புத்திசாலித்தனத்தின் உண்மையான அடையாளம் அறிவு அல்ல, அறிவை விடக் கற்பனை முக்கியமானது. அறிவுக்கு வரம்புண்டு. கற்பனை உலகம் முழுவதையும் தழுவி, முன்னேற்றத்தைத் தூண்டுகிறது, பரிணாமத்தை உருவாக்குகிறது” இது நான் சொன்னதல்ல, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது.
ஒரு விளையாட்டை இருவர் உட்கார்ந்து விளையாடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது பலகை விளையாட்டானாலும் சரி, கணினி விளையாட்டானாலும் சரி. இருவரும் ஒரே சூழலைப் பார்க்கிறார்கள், ஆனால் அதனை அவர்களின் மூளை எப்படி உணர்கிறது என்பதை வைத்துதான் அவர்களின் மனம் முடிவு எடுக்கிறது. ஒரே சூழல், இரு வீரர்கள், இருவருக்குள்ளும் வெவ்வேறு தகவல்கள், மதிப்பீடுகள், கடந்த கால முடிவுகள், அனுபவங்கள், நம்பிக்கைகள், அனுமானங்கள் மற்றும் காரணிகள். இதன் அடிப்படையில்தான் அமைகிறது அவர்களின் வேகமும், விவேகமும், வெற்றி தோல்வியும். எப்படி விளையாடிப் பயிற்சி செய்து வெற்றிகளை மாற்ற முடிகிறதோ, அதேபோல் காட்சிப்படுத்தல் என்பது உங்கள் மனதிற்கான பயிற்சியாகும். நல்ல வீரர்கள் தங்கள் திறமைகளைப் பயிற்றுவிப்பார்கள்; சிறந்த வீரர்கள் தங்கள் மனதையும் பயிற்றுவிப்பார்கள்.
சிக்காக்கோ பல்கலைக்கழகம் கூடைப்பந்து வீரர்களை மூன்று குழுவாகப் பிரித்து. முதல் குழுவினரை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மைதானத்தில் பயிற்சி செய்யச் சொன்னார்களாம். இரண்டாவது குழுவினரை, பயிற்சியை முற்றிலும் நிறுத்த சொன்னார்களாம். மூன்றாவது குழுவினரை மனதில் காட்சிப்படுத்திக் கற்பனையில் மட்டும் ஒரு மணி நேரம் பயிற்சி செய்யச் சொன்னார்களாம். இதன் முடிவு, மைதானத்தில் பயிற்சி செய்த முதல் குழுவினர் 24 சதவீதம் விளையாட்டில் முன்னேற்றம் அடைந்தனராம். இரண்டாம் குழுவினர் பயிற்சி இல்லாமல் பின்னடைவைக் கண்டனராம். கற்பனைக் காட்சியில் பயிற்சி செய்த மூன்றாவது குழுவினர் 23 சதவீதம் விளையாட்டில் முன்னேற்றம் அடைந்தனராம். இந்த ஆராய்ச்சியின் மூலம் நாம் காட்சிப்படுத்துதலின் சக்தியைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.
ஆராய்ச்சிக்காகச் சில முதியவர்களை எடுத்து ஓர் அறையில் அவர்கள் இருபது வருடத்திற்கு முன்பு வாழ்ந்திருந்த சூழலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு 20 வயது குறைந்ததாக அவர்களைக் கற்பனை செய்ய வைத்தார், அதற்கான சூழலையும் ஏற்படுத்தித் தந்தார். சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் 20 வயது இளயவராகத் திரும்பினர். அவர்களின் செவிப்புலன், நினைவாற்றல் ஆகியவற்றில் வியத்தகு மேம்பாடுகளைக் காட்டியது. இந்த ஆராய்ச்சியைப் பற்றி விரிவாகத் தனது நூலான ‘கவுண்டர்கிளாக்வைஸில்’ (Counterclockwise) ஹார்வர்ட் உளவியல் பேராசிரியர் எலன் ஜே. லாங்கர் எழுதியுள்ளார். இந்த ஆராய்ச்சிகளையெல்லாம் பார்க்கும் போது மனதில் காட்சிப்படுத்துதல் என்பது வெறும் அணுகுமுறை மட்டும்அல்ல; கற்பனையை நிறைவேற்றிக்கொள்ள உதவும் தூண்டுகோளும் கூட. மாறாக அது மனதில் நீங்கள் விரும்பும் துல்லியமான காட்சியில் கவனம் செலுத்தி அதனை நிறைவேற்றிக் கொள்ள உதவும் ஒரு தூண்டுகோள் என்பதை அறியலாம்.
இளம் வயதில் எதிர்காலத்தில் மருத்துவராகலாம், பொறியாளராகலாம் என்று பல கனவுகள் இருக்கும். அதன் பின் வாலிப வயதில் பிடித்தவரை மணம் முடிக்க வேண்டும், வாழ்க்கை இன்பமாக அமைய வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். அதன்பின் வேலை, உயர்பதவி, பெற்ற குழந்தைகள் வாழ்வு என்று வெவ்வேறு லட்சியங்களும், வீடு கட்ட வேண்டும், உலகம் சுற்ற வேண்டும், கை நிறையப் பணம் வேண்டும், என்று பலவித கனவுகளும் ஏற்படும். கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னைத் தூங்க விடாமல் செய்வது எதுவோ அதுவே இலட்சியக் கனவு என்றார் அப்துல் கலாம். அப்படியான மனதில் நிறுத்தும் கனவுகளை மறந்து போகிற போக்கில் வாழ்தல் கனவுகளை நிறைவேற்றாது.
உங்கள் இலக்குகளைக் காட்சிப்படுத்துகிறீர்களா? உங்கள் கனவுகளைக் காட்சிப்படுத்துகிறீர்களா? நீங்கள் விரும்பியது நிறைவேறியதாக மனதளவில் ஒத்திகை பார்க்கிறீர்கள்? எல்லாம் சரியாக நடக்கிறதா? இதைச் சரிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எதிர்மறையாகச் செய்தால், அதாவது நடக்காமல் போய்விடுமோ போன்ற சிந்தனைகளைக் காட்சிப்படுத்தினால் அவை சுய விழிப்புணர்வின் எதிர் இடத்திற்குக் கொண்டுசென்று விட்டுவிடும்.
கனவை நிறைவேற்ற உங்கள் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும், அதுவே காட்சிப்படுத்தலின் சக்தியாகும். உடல் செயல்பாடுகளைப் போலவே மனதிற்கும் அந்தப் பயிற்சி அவசியம். இறுதி இலக்குகளை நோக்கி முன்னேற்றமடையத் திரும்பத் திரும்பக் காட்சிகளைக் கண்களில் நிரைத்து இலக்குகளை அடைந்த மகிழ்ச்சியை உள்வாங்கும் பயிற்சியைத் தொடர்ச்சியாகச் செய்வதின் மூலம் நன்மை விளையும், வெற்றி கிட்டும். வெற்றி என்பது ஓர் உள்-வெளி செயல்முறை.
வெற்றிக்கான சூத்திரமே, நம் இலக்கை காட்சியாகப் பார்த்து, உணர்ந்து, கேட்டு, நம்பி அதற்காகத் தினமும் உழைத்தல். நல்லவற்றையே எண்ணுவோம், நல்லவற்றையே காண்போம், நல்லவையே நடக்கும். நாளை நமதாகும்.
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
2 comments on “நலம் வாழ: கட்டுரைத் தொடர் 9 – கனவு மெய்ப்பட”
rajaram
சிறப்பு, இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது, இசைஞானி அவர்கள் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. எப்போதும் இசையைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பதால்தான் தன்னால் இத்தனை படங்கள் தர முடிந்தது. சிறுவயதில் தூக்கத்தில்கூட ஆர்மோனியம் வாசிப்பதுபோல கனவு வருமாம்.
JAZEELA BANU
மிக்க நன்றி ராஜாராம். வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் இப்படிதான் கனவுகள் மெய்ப்படும் வரையும் அதன் பிறகும் அந்தக் காட்சியினுடனே பயணக்கின்றனர். உங்களை உறங்கச் செய்யாமல் இருக்கும் கனவு என்ன?