வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
————————————————–
மக்காவிலே ஒரு கொள்கையை 12 ஆண்டுகளாக சொல்லி வந்தவர்களை அடக்குமுறைப்படுத்தி விரட்டி அடித்தார்கள். அவர்களை அப்படியே விட்டிருந்தால் அந்த ஒரு கொள்கை ஒரு மதமாக மட்டும் இருந்திருக்கும். விரட்டி அடித்ததற்கு பின்பாகவும் அவர்களை ஒழிக்க வேண்டும் என்று நினைத்து போனவர்களை ஒழித்துக் கட்டினார்கள்.
ஆம் சாதுவாகத் துறவறம் மேற்கொண்ட நபிகள் நாயகம் அவர்களை இன்று ஆயுதத்தை தூக்க வைத்து விட்டார்கள். இப்பொழுது நபிகள் நாயகம் அவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. காரணம் ஓடிப்போனவர்கள் மிகப்பெரிய படைபட்டாளத்துடன் மீண்டும் வருவார்கள் அடுத்த முறை வரும்போது அவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் இல்லை என்பதை அறிந்தே வைத்திருந்தார்கள்.
தன்னுடைய வார்த்தைகளைக் கேட்டுத் தன்னை நம்பி மக்காவில் இருந்து வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதுபோல தங்களுக்கு தஞ்சம் அளித்த மதினா மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
ஆயுதத்தை கீழே வைத்து விட்டால்…? மதினாவில் புல் பூண்டுகளை கூட விட்டு வைக்க மாட்டார்கள் எதிரிகள் என்பதையும் நபிகள் உணர்ந்தே இருந்தார்கள்.
அவர்களை எல்லாம் காப்பாற்ற வேண்டும் என்றால் ஆயுதத்தை ஏந்தித் தான் நிற்க வேண்டும்! என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.
உஹது போர்
இதுவரை ஒரு கிராமமாக இருந்த மதினா இன்று முதல் தனி நாடாகிறது. அந்நாட்டின் முழுப் பொறுப்பையும் முஹம்மது நபி (ஸல்)அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அங்கு இருப்பவர்கள் அனைவரும் போர் வீரர்களாக மாறுகிறார்கள். இனி நாட்டிற்கு ஆபத்து என்றால் அனைவரும் போரில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் வருகிறது.
நினைத்தது போலவே அடுத்த ஓராண்டில் மீண்டும் மதினாவைப் போர் மேகம் சூழ்ந்து விடுகிறது. குர்ஆனிலே போரினுடைய சட்டத் திட்டங்கள் வருகிறது.
பத்ருப்போரிலே நடத்தச் சண்டையில் மக்காவைச் சேர்ந்த முக்கியமானத் தலைவர்கள் எல்லாம் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆனால் குரைஷிகளின் தலைவராக இருந்த அபூசூப்யானும் இன்னும் சில தலைவர்கள் மட்டும் தப்பி இருந்தார்கள்.
அபூசூபியான் எதிரிகளின் தலைவராக சும்மா தேர்ந்தெடுக்கவில்லை. மக்காவைச் சுற்றி இருக்கக்கூடிய அத்தனைப் பகுதிகளையும் தெரிந்து வைத்திருந்தார்கள். அத்தனை மக்களையும் அறிந்து வைத்திருந்தார்கள். போர்த் தந்திரங்களில் மிகச்சிறந்த திறமைசாலி.
அவர்தான் அடுத்த போரிற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஓராண்டு காலம் எடுத்துக் கொண்டார்.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சிறியசிறிய கூட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்தார். தனித்தனிப் படைப் பிரிவுகளை உருவாக்கி ஒவ்வொன்றுக்கும் தளபதிகளையும் நியமித்தார்.
கடந்த முறை ‘சிறிய கூட்டம் தானே?’ என்று அலட்சியத்துடன் சென்றார்கள். ஆனால் இம்முறை பெரும் படையுடன் சென்று சுத்தமாக மதினாவையே அழித்து விட வேண்டும்! என்று கங்கணம் கட்டினார்கள்.
பத்ருப்போரிலே கொல்லப்பட்டவர்களில் அபூசூபியானின் நெருங்கிய உறவுக்காரர்கள் இருந்தார்கள். பத்ருப் போரிலே முதலில் நடந்த ‘மூவர்’ சண்டையில் எதிரிகள் சார்பாக மூன்று பேர் களமிறங்கினார்கள். அந்த மூன்று பேரும் வெட்டி வீழ்த்தப்பட்டார்கள் அல்லவா? அம்மூவரில் அபூசூபியானின் மனைவி ஹிந்தாவின் தந்தையும் சகோதரனும் அடங்குவார்கள்.
இம்முறை அபூசூபியான் கிட்டத்தட்ட 3000 வீரர்களை தயார் செய்து விட்டார். இந்த முறை முஸ்லிம்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தனித்தனியாக ஏற்பாடுகள் செய்தார்கள்.
முக்கியமாக தந்தை, சகோதரன், மகனை இழந்திருந்த ஹிந்தா அவர்கள், வகுஷி என்னும் ஒரு அடிமையைத் தயார் செய்தார். வகுஷி ஈட்டி எறிவதில் பெயர் போனவர் அவரிடம் ஹிந்தா, “நீ இந்தப் போரிலே ஹம்சாவை கொல்ல வேண்டும். அப்படி செய்தாய் என்றால் உனக்கு பொன் பொருளோடு விடுதலையும் தருகிறேன்” என்று வாக்குறுதி கொடுத்தார்.
யார் இந்த ஹம்சா?
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்