வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
————————————————–
அகழ் போர்
அன்றைய காலகட்டம் உணவகம், காவல்துறை இல்லாத காலம். ஆகவே அரபுகள் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். யார் எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு இருப்பவர்களிடம் ஒப்பந்தம் போடுவது வழக்கம்.
அதேபோல் ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு ஒருவர் பயணித்தால் அங்கு இருக்கும் ஒரு குடும்பத்தில் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். இவர் அங்கிருந்து திரும்பும் வரைக்கும் அந்த குடும்பம் தான் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். உணவு வழங்க வேண்டும். அதேபோல் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் இவர் ஊருக்கு வந்தால் இவருடைய குடும்பம் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உணவு வழங்க வேண்டும்.
அந்தப் பழக்கம் இன்று வரை அரபு உலகில் உள்ளது. நம் நாட்டிலிருந்து அரபு நாட்டிற்குச் சென்றால் நமக்கு ஸ்பான்ஷர் என்று சொல்லக்கூடிய, அரபியில் கபில் என்றுச் சொல்வார்கள். அவருடைய பாதுகாப்பில் தான் நாம் வேலைக்கோ! சுற்றுலாவுக்கோ! செல்ல முடியும். நம்முடைய அனைத்துப் பொறுப்பும் அவரிடம் தான் இருக்கும். அவர் பெயரில்தான் அரசாங்கம் விசாவை வழங்கும்.
அப்படிதான் மக்காவிலிருந்து நபியவர்கள் மதினாவிற்குச் சென்ற பொழுது அங்கிருந்த கூட்டங்களில் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். மதினாவின் பூர்வ குடிகளாக அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்கள் இருந்தார்கள். இரண்டு கோத்திரங்களும் இஸ்லாத்தை ஏற்றதற்குப் பின்பாக அவர்களை அன்சாரிகள் என்று அழைத்தார்கள். அதேபோல் மதினாவிலும் மதினாவைச் சுற்றி சிறுசிறு கோத்திரங்களாக யூதர்களும் இருந்தார்கள்.
அவர்களிடமும் நபியவர்கள் ஒப்பந்தம் செய்து இருந்தார்கள். ‘உங்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் இருப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் எதிரிகளுக்கு நாங்கள் உதவி செய்ய மாட்டோம். எங்கள் எதிரிகளுக்கு நீங்கள் உதவி செய்யக்கூடாது’ இதுதான் ஒப்பந்தம்.
மதினாவில் எப்படி யூதர்கள் வந்தார்கள்? என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்… ‘ரோமப்பேரரசுகளை எதிர்த்து யூதர்கள் களமிறங்கியதால், அவர்களின் ஆட்சிப் பகுதியில் இருந்து விரட்டினார்கள். அப்படி ஒரு கூட்டம் மதினாவிற்குள் தஞ்சம் புகுந்தார்கள்’ என்று கூறுகிறார்கள்.
‘கடைசியாக ஒரு நபி வருவார்’ என்பது யூதர்களின் நம்பிக்கையாகவும் இருந்தது. ‘அந்த தூதர் தங்கள் மதத்தைச் சார்ந்தவராக தான் இருப்பார்’ என்று நம்பி இருந்தார்கள். அந்தச் சூழலில் தான் முகமது நபி இறுதி தூதராக குறைஷிகள் கூட்டத்திலிருந்து வந்தார்கள். இதுவே அவர்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.
பத்ரு போரிலே குரைஷிகளின் தலைவர்கள் நிறைய இறந்துப் போயிருந்தார்கள். அதேபோல உஹது போரிலே முஸ்லிம்கள் சார்பாக நிறையத் தலைவர்கள் இறந்திருந்தார்கள். ஆகவே ‘சரிக்குச் சமமாக ஆகிவிட்டது’ என்று அபுசுப்யானும் அடுத்தப் போரைப் பற்றி சிந்திக்கவில்லை. பெரும் சேதாரங்களை மக்காவுக்கு ஏற்படுத்தி தந்த இந்த போர்களுக்குப் பிறகு ‘வேறு போர்கள் வேண்டாம்’ என்பது போல் அவரும் அமைதியாகத் தான் இருந்தார்.
திடீரென்று யாருடைய தூண்டுதலாலோ ஒரு பெறும்படையை அபுசுப்யான் திரட்டுகிறார் என்று நபியவர்களுக்குச் செய்தி கிடைக்கிறது.
இதுவரை மக்கா வாசிகள் மட்டுமே படையெடுத்த நிலையில் இம்முறை குறைஷிகள் அல்லாது மற்ற குலங்களைச் சேர்ந்தவர்களும் மக்காவைச் சுற்றி இருக்கக்கூடிய சிறு சிறு கூட்டங்களையும் ஒருங்கிணைத்து கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை திரட்டினார் அபுசுப்யான்.
மதினாவில் ஒட்டுமொத்த மக்கள் கூட இவ்வளவு பேர் இல்லை! புதிய மதம் தோன்றியுள்ளதால் அதை அழிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த அரபுகளும் ஒன்று திரண்டு இருந்தார்கள். என்ன செய்வது? நபி அவர்கள் தோழர்களிடம் ஆலோசனை நடத்தினார்கள்.
இறுதியாக ‘மதினாவைச் சுற்றி அகழ் தோண்டுவோம்’ என்று முடிவு எடுத்தார்கள் . பத்து பேர் கொண்ட ஒரு குழுக்களாக அகழ் தொண்ட ஆரம்பித்தார்கள். மதினாவிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. உணவுப் பற்றாக்குறை, பஞ்சம், பசி என்று மிகவும் சிரமமான காலகட்டத்தில் இருந்தார்கள். மதினாவை காப்பாற்ற வேண்டும்! வேறு வழி இல்லை. வரலாற்றிலே சொல்லும் பொழுது, ‘பசி தெரியாத அளவிற்கு நபியவர்களும் தோழர்களும் வயிற்றிலே கற்கலைக் கட்டிக்கொண்டு அந்த வேலையை செய்தார்கள்’.
நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை! ஊரை விட அதிகமான போர் வீரர்களை சமாளிக்க முடியுமா? ஆனாலும் நபியவர்களும் அவர்களுடைய தோழர்களின் அந்தத் தன்னம்பிக்கையும் தான் உலக வல்லரசுகளை பயப்பட வைத்தது.
மிக நீளமான, ஆழமான, குதிரைகள் தாண்ட முடியாத அகலத்தில் அகழ் தோண்டப்பட்டது.
நன்றி : படம் இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்.
இந்தத் தொடர் இனி வாரம் இருமுறை – (திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை) வெளிவரும்.
தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்றி, தங்கள் கருத்துக்களையும் சொன்னால் எழுத்தாளருக்கு இன்னும் மகிழ்வாக இருக்கும்.