வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
————————————————–
அபூ சுபியான் தனது படையுடன் வந்து இதை பார்த்ததும் திகைத்து நின்றார். “என்ன இது புதிதாக இருக்கிறது? இது அரபிகளின் முறை இல்லையே? இது எப்படி சாத்தியமானது? கடுமையான பாறைகள் நிறைந்த இந்த பூமியில் இத்தனைப் பெரிய அகழியை எப்படி இவர்களால் தோண்ட முடிந்தது?” பல கேள்விகளோடு ஆச்சரியத்தோடும் செய்வதறியாது அங்கே நின்று விட்டார்.
போன வேகத்தில் மதினாவில் புகுந்து மதினாவை தரைமட்டமாக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு, நீண்டு நிற்கும் இந்த அரணை என்ன செய்வது என்று தெரியவில்லை.
அகழியின் இந்தப்புரம் முஸ்லிம்களும் எதிராக அபூ சுபியான் படையும் கூடாரம் அமைத்து மதினாவை சுற்றி முற்றுகையிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த முற்றுகை நீடித்தது.
அங்கிருந்து அம்புகளை மட்டும் எய்து கொண்டிருந்தார்கள். அப்படி வீசிய ஒரு அம்பு மதீனாவின் பூர்வ குடி மக்களின், அதாவது அன்சாரிகளின் தலைவராக இருந்த சஅது பின் முஆத் (ரலி) அவர்களின் கையில் பட்டு அதிகமான ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த சூழலில் மதினாவிற்கு பக்கத்தில் மிகப்பெரிய கோட்டைகளை அமைத்து யூதர்களின் ஒரு குலமான பனு குறைலா என்று அழைக்கும் ஒரு கூட்டம் இருந்தது.
இப்பொழுது நபியவர்களுக்கு ஒரு செய்தி வருகிறது ‘எதிரிகள் இங்கிருந்து தாக்கி உள்ளே வரும் பொழுது நம் ஊருக்குள் புகுந்து பனுகுறையிலா தாக்குவதற்கு தயாராக எதிரிகளுடன் ஒப்பந்தம் செய்து விட்டார்கள்’ என்று.
அதைக் கேட்டதும் நபியவர்களுக்கு என்ன செய்வதென்றேத் தெரியவில்லை குர்ஆனிலே அந்த நேரத்தைச் சொல்லும் பொழுது.
‘எதிரிகள் உங்களின் மீது மேலிருந்தும் கீழிருந்தும் படையெடுத்து வந்த பொழுது உங்கள் கண்கள் பீதியினால் மருண்டு விட்டன. இதயம் தொண்டைக் குழியை அடைத்துக் கொண்டன’ என்று இச்சம்பவத்தை கூறுகிறது.
நபிகளார் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை சாதாரணமாக எதிர்கொண்டார்கள். ஆனால் நயவஞ்சகர்களும் துரோகிகளும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தினார்கள். இது போன்ற நம்பிக்கைத் துரோகிகளால் பல தோழர்களை நபிகளார் இழந்தார்கள். “எங்கள் பகுதிகளில் உங்கள் மதங்களை சொல்லுங்கள்” என்று நபித்தோழர்களை அழைத்து சென்று கொன்று விடுவது என்று நம்பிக்கை துரோகிகள் நிறையவே இருந்தார்கள். இப்படி 70-க்கும் மேற்பட்ட நபி தோழர்கள் இறந்திருக்கிறார்கள்.
அப்படி நம்பிக்கை துரோகம் செய்த அத்தனை பேர்களையும் மதினாவை விட்டு விரட்டியிருந்தாலும் பனு குறைலா மட்டும் இதுவரை அவர்களுடன் சேராமல் இருந்தார்கள். அவர்களும் தற்பொழுது நயவஞ்சகர்கள் ஆக மாறி இருப்பது நபி அவர்களுக்கு பெரும் மன உலைச்சலை ஏற்படுத்தியது.
ஒரு பக்கம் பஞ்சம், பசி, பட்டினி, பெரும் படை, தங்களை அழிப்பதற்கு தயாராக நிற்கிறது. இன்னொரு புறம் நயவஞ்சகர்கள் தங்கள் ஊருக்குள் புகுந்து பெண்கள் குழந்தைகள் மட்டும் இருக்கக்கூடிய நேரத்தில் அவர்களை தாக்க தயாராக இருக்கிறார்கள்.
நபியவர்கள் உடனடியாக மதினாவில் இருக்கக்கூடிய பெண்கள், குழந்தைகள், அனைவரையும் ஒரே இடத்தில் பத்திரமாக தங்க வைத்தார்கள். எதிரிகள் கண்ணில் படாதவாறு மறைத்து வைத்தார்கள். வேவு பார்க்க வந்த யூதர்களும், அங்கு யாரையும் காணாமல் தேடினார்கள். அதில் ஒருவன் அவர்கள் இருக்கக்கூடிய இடத்தை கண்டுபிடித்து விட்டான். அங்கிருந்த பெண்கள் அவனை அடித்துக் கொன்று வெளியே வீசி இருந்தார்கள்.
அவனது உடலைக் கண்ட மற்றவன் உடனடியாக திரும்பச் சென்று ‘பனு குறைலா’ கூட்டத்திடம் சொன்னான் “முஹம்மத் எல்லா ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறார். ஊருக்குள் போனோமென்றால் திரும்பி வரமுடியாது! அங்கும் அவர் படைகளை மறைவாக வைத்திருக்கிறார்”. என்று அவன் கூறியதும் ஊருக்குள் வரும் தங்களது முடிவை ஒத்தி வைத்தார்கள்.
இந்த சமயத்தில் ஒரு நாள் கடும் குளிரும், மழையும், காற்றும் வீசியது, அது எதிரிகள் கூடாரம் அமைத்து இருந்த பகுதிகளில் கடுமையான சேதாரங்களை ஏற்படுத்தியது. எதிரிகளின் கூடாரங்கள் காற்றில் பறந்து சென்றன எதிரிகள் தடுமாறி போயினர் இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்பதைத் தெரிந்துக் கொண்ட அபுசுபியான் “உடனடியாக அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும்” என்று கூறினார்.
உடனடியாக அவரும் அவர் கூட்டத்தாரும் கிளம்பியதும் மற்றவர்களும், “அபூ சுப்யானே போனதுக்கு பிறகு இனி ஏதும் செய்ய முடியாது” என்று உடனே மற்ற கூட்டத்தார்களும் ஒரு மாதம் காலம் இருந்த முற்றுகையை தொடர விரும்பாமல் கைவிட்டு கிளம்பினார்கள். அனைவரும் திரும்பிவிட்டார்கள் என்பதை முழுவதுமாக தெரிந்துக் கொண்டப் பிறகு அங்கிருந்து முஸ்லிம் படைகள் மதினாவுக்கு திரும்பியது இந்த அகழ் போரில் ஐந்து தோழர்கள் இறந்திருந்தார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.
தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்றி, தங்கள் கருத்துக்களையும் சொன்னால் எழுத்தாளருக்கு இன்னும் மகிழ்வாக இருக்கும்.