அத்தியாயம் – 6
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
வெளி வாசல் கிரில் கேட்டை ஆத்திரத்தோடு எட்டி உதைத்தபடி சரண் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்தார் தீப்தியின் அப்பா. சூறாவளியைத் தொடரும் பெரு வெள்ளம் போல அவரின் பின்னாலேயே பொங்கிக் கொண்டும் பொருமிக்கொண்டும் வந்தாள் தீப்தியின் அம்மா.
“ஏய் தீப்தி! வெளியே வா“, தீப்தியின் அப்பாவின் அலறல் எட்டு ஊருக்கும் கேட்கும்படி ஒலித்தது.
“தீப்தி, வாடி வெளியே” தீப்தியின் அம்மாவின் குரலிலும் டெஸிபல்களுக்கு குறைவில்லாமல் இருந்தது.
“சார், எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள வச்சிப் பேசிக்கலாம். உள்ளே வாங்க சார்.” சரணின் அப்பா தன் சாதுவான குரலில் சொன்னார்.
“வீட்டுக்குள்ள வந்து பேச நான் என்ன உங்க கூட சம்மந்தம் பேசவா வந்திருக்கேன்? முதல்ல எம் பொண்ணை வெளியே அனுப்பு.”
“கல்யாணத்துக்கு நிக்கிற பொண்ணு விஷயம். வீதியில வேண்டாமே? நீங்க உள்ளே வாங்களேன்” தீப்தியின் அப்பாவை சாந்தப்படுத்த மிகவும் பிரயத்தனப்பட்டார் சரணின் அப்பா.
ஆனால் சாந்தமும் வேகவில்லை. சமாதானமும் எடுபடவில்லை. தீப்தியைப் பெறவர்களிடம்.
அதற்குள் அங்கே நடந்து கொண்டிருந்த களேபரத்தை வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்து விழிகள் தயாராகிவிட்டன. அந்த விழிகள் ஏற்கனவே அறிந்த விஷயம்தான் சரண் – தீப்தி காதல் விஷயம்.
தீப்தியின் பெற்றவர்கள் குணமும் கூட அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த சமாச்சாரம்தான்.
ஒரு அடிதடி, ஒரு வெட்டுக் குத்து என சில சுவாரஸ்யங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் அவர்கள்.
“எங்க வீட்டுப் பொண்ணுக்கு உங்க வீட்ல என்ன வேலை?” களத்தில் புகுந்தாள் தீப்தியின் அம்மா.
“அதை நீங்க உங்கப் பொண்ணுகிட்டதான் கேக்கணும்” என்றான் அங்கே வந்த சரண்.
“எல்லாம் எங்க தலையெழுத்து. குணங்கெட்ட பொண்ணைப் பெத்ததுக்கு கண்ட கழுதையோட பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு நிக்க வேண்டியிருக்கு.”
சரணுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. அவனைக் கழுதை என்று அழைத்தது கூட அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. நடு வீதியில் நின்றுகொண்டு அவன் காதலிக்கிறப் பெண்ணை ‘குணம் கெட்டவள்’ என்று சொன்னது அவனுக்கு உண்மையிலேயே வலித்தது.
“தீப்தியைப் பத்தி தப்பாப் பேசுனீங்க?” அவள் அம்மாவைப் பார்த்து விரலை உயர்த்தினான்.
“என்னடா? என்னடா பண்ணுவே?” கட்டியிருந்த வேட்டியை இறுக்கிக்கொண்டு எகிறினார் தீப்தியின் அப்பா.
“பாக்குறியா? என்ன பண்றேன்னு பாக்கிறியா?” சரணும் திமிற,
“என்னடா சரண் இது? நீயுமா?” அவன் அப்பாவிடம் உண்மையான வருத்தம் தெறித்தது. “பெரியவங்களை இப்டி மரியாதையில்லாமப் பேசலாமா?”
“பெரியவங்க, பெரியவங்க மாதிரியா பேசுறாங்க இவங்க?” சரண் அவர்களைக் கைகாட்ட,
“நிறுத்துங்கடா உங்க டிராமாவை. முதல்ல தீப்தியை வரச்சொல்லுங்கடா”, தீப்தி அப்பாவின் வேட்டி முழங்காலுக்கு மேல் உயர்ந்தது. சண்டைக்கென்றே வடிவமைக்கப்பட்டவைகளோ வேட்டியும், கைலியும்?

தன்னைப் பெற்றவர்களின் அடா பொடாப் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தீப்தி, சங்கரி தடுக்கத் தடுக்க வாசலுக்கு விரைந்தாள்.
“என்ன? இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” தீப்தி கேட்டதும்தான் தாமதம். ஒரு ஆவேசத்தோடு அவள் மேல் பாய்ந்த அவள் அம்மா, தீப்தியின் தலைமுடியை கொத்தாகப் பிடித்தாள். அவளின் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தாள்.
“பொண்ணாடி நீ? உன் உடம்பு சுகத்துக்குப் பெத்தவங்களை உதறிட்டு இங்க ஓடி வந்து ஒளிஞ்சிக்கிட்ட?”
அலறக் கூடத் தோன்றாமல் விதிர் விதிர்த்துப் போனாள் தீப்தி.
“ஏய், விடு. விடு அவளை”, சரண் தீப்தியை அவள் அம்மாவின் பிடியிலிருந்து விடுவிக்க முயன்றான்.
அதற்குள், “என் பொண்டாட்டி மேலேயே கை வைக்கிறியாடா?”, தீப்தியின் அப்பா சரணின் சட்டைக் காலரைப் பிடித்தார்.
சாது, சமாதானப் புறா சரணின் அப்பாவோ, “கடவுளே!”, தலையில் கையை வைத்துக்கொண்டு கீழே சரிந்தார்.
உள்ளேயிருந்து ஓடி வந்த சங்கரி, “என்னங்க?” தன் கணவரைத் தாங்கிப் பிடித்தாள்.
சரணையும் மீறி தீப்தியை அவள் அம்மா அடித்து இழுத்துக்கொண்டு போனாள்.
“சரண்”, அலறினாள் தீப்தி.
“தீப்தி!”, பின்னாலேயே ஓடினான் சரண்.
“இங்கேருந்து என்னைக் கூட்டிட்டுப் போனா, நான் செத்ருவேன்!”, தீப்தியின் அழுகுரல் அறிவித்தது.
“இந்த வீட்ல நீ உயிர் வாழறதைவிட எங்க வீட்ல பொணமா சாவுடி. ஓடுகாலி”, தீப்தியின் அப்பாவின் நாக்கு தடித்த வார்த்தைகளை வீசியது.
சரணுக்குள் ஏதோ ஒன்று சடாரென்று முறிந்தது. தன்னைத் தடுத்த தீப்தியின் அப்பாவைப் பிடித்து கீழே தள்ளினான். அவள் அம்மாவை அதுவரை தொடாமல் இருந்தவன், அவளையும் பிடித்து இழுத்து தள்ளிவிட்டு தீப்தியை அவள் அம்மாவின் பிடியிலிருந்து விடுவித்தான்.
“தீப்தி”, நடுங்கிக் கொண்டிருந்தவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
“சரண்.. சரண்..” தீப்தியின் அழுகை கட்டுக்கடங்காமல் பொங்கியது.
“விடுடி. விடுடி அவனை”,
தீப்தியின் அம்மா மகளின் முதுகில் கைகளால் அறைந்தாள்.
அவள் அறைய அறைய தீப்தி சரணை இன்னும் அழுத்தமாக இறுக்கிக்கொண்டாள்.
“டேய்.. விடுறா. விட்றா அவளை” சரணின் தோளைப் பிடித்து இழுத்தார் தீப்தியின் அப்பா. அவர் இழுக்க இழுக்க, சரணின் கரங்கள் தீப்தியை இன்னும் அதிகமாக அணைத்துக்கொண்டன.
அடி வாங்கியபடியே, அழுதுகொண்டிருந்த சரண்-தீப்தியின் இறுக்கம் அங்கிருந்த அனைவரையும் அசைத்தது.
எதிர் வீட்டுக்காரர் ஓடி வந்தார். தீப்தியின் அப்பாவை சரணிடமிருந்து விலக்கினார்.
அடுத்த வீட்டுப் பெண்மணி ஓடி வந்தாள். தீப்தியை அவள் அம்மாவின் பிடியிலிருந்து அகற்றினார்.
“போங்க சார். போங்க. சின்னஞ்சிறுசுக. மனசுக்குப் புடிச்சிப் போச்சு. விஷயத்தைப் பெரிசு பண்ணாதீங்க” யாரோ ஒருவர் தீப்தியின் அப்பாவுக்கு அறிவுறை சொன்னார்.
“பெத்தவங்க மானத்தை வாங்கிட்டியேடி. நீ நாசமாத்தான் போவ” தீப்தியின் அம்மா அலறியபடியே போனாள்.
“தீப்தியின் அப்பாவோ” விடமாட்டேண்டா உன்னை” சரணைப் பார்த்து விரலை நீட்டி பயமுறுத்தியபடியே வெளியேறினார்.
அவரின் பயமுறுத்தல் என்னவாக இருக்கும் என்று சரணுக்கோ யாருக்குமோ யோசிக்க நேரமே கொடுக்காமல், அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்று அச்சுறுத்தியது அந்த போலீஸ் ஜீப்!
வெள்ளிக்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.