அத்தியாயம் – 7
முந்தைய அத்தியாயங்களை வாசிக்க
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
“லேக் கார்டன் தெருதானய்யா?” கேள்வியுடனே ஜீப்பை விட்டு உதிர்ந்தார் இன்ஸ்பெக்டர்.
“ஆமா சார், ஆமா சார்” என்று பவ்யமாக பதில் சொன்னபடியே கீழே இறங்கினார் ஜீப்பின் ஓட்டுநர் சீட்டில் இருந்தவர்.
கான்ஸ்டபிளாக இருக்க வேண்டும்.
இரண்டு தப்படி முன்னால் நடந்த இன்ஸ்பெக்டர், “ஆனா அது புகார் கொடுத்தவங்க இருக்கிற தெரு இல்ல?”
“கம்ப்ளெயிண்ட் கொடுத்தவங்க, அக்யூஸ்டு, ரெண்டு பேருமே ஒரே தெருதான் சார். பக்கத்துப் பக்கத்து வீடு. இதோ” கையை நீட்டினார் கான்ஸ்டபிள்.
“ம்..ம்..ம்..” பேண்ட்டை மேலே ஏற்றிக் கொண்டபடி, சரண் வீட்டுப் படியேறினார் இன்ஸ்பெக்டர். கடமை தவறாமல் அவர் வாலைப் பிடித்தபடி வந்தார் கான்ஸ்டபிள்.
வீட்டுக் கதவு மூடியிருக்கவும், “பெல் அடிய்யா”, கான்ஸ்டபிளை ஏவினார்.
கான்ஸ்டபிள் அழைப்பு மணியை அழுத்தவும், கதவு திறந்தது.
காக்கிச் சட்டை முகங்களைப் பார்த்ததும் பதைபதைத்துப் போனார் சரண் அப்பா.
காலையில் வீட்டு வாசலில் நடந்தேறிய களேபரத்தில் இருந்தே அவர் இன்னும் மீண்டிருக்கவில்லை.
அதற்குள் வீட்டு வாசலில் காக்கி முகங்கள்.
“யாருய்யா சரண்?” இன்ஸ்பெக்டர் கர்ஜித்தார்.
“என் மகன்தான்.”
“கூப்டு அவனை” இன்ஸ்பெக்டரின் ஒருமை அழைப்பு அப்பாவை உறுத்தியது. ஆனாலும் காட்டிக்கொள்ளாமல்,
“அவன் வீட்டில் இல்லை.”
“எங்கே போயிருக்கான்?”
“அ.. அது.. ஃப்ரெண்டைப் பாக்க.”
“பாய் ஃப்ரெண்டா? கேர்ல் ஃப்ரெண்டா?”
“சார்?”
“ஆமா, இது உன் பையனுக்கு எத்தனாவது கடத்தல்? உன் பையன் மட்டும் தானா? இல்லை உன் குடும்பத்துக்கே வயசுப் பொண்ணுங்களை கடத்துறதுதான் தொழிலா?”
“சார் கடத்தல் அது இதுன்னு வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. வீ ஆர் எ டீசண்ட் ஃபேமிலி.”
“ஆமா பெரிய டீசன்ண்டு. எங்க ட்யூட்டில நாங்க பாக்காத புண்ணாக்கு டீசண்ட்டு. கான்ஸ்டபிள், உள்ள போய்த் தேடு. அந்தப் பய இருக்கானா பாரு.”
“இதோ சார்” கான்ஸ்டபிள் வீட்டிற்குள்ளே நுழைய முற்பட அப்பா குறுக்கிட்டார்.
“சார், வீட்ல லேடீஸ் இருக்காங்க. நீங்க இப்டி அத்து மீர்றது சரியில்லை.” அப்பாவின் குரல் ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் உயர்ந்திருக்கலாம்.
சுவற்றில் மாட்டியிருந்த டி.வியை ஒரே இழுப்பில் இழுத்து ஓங்கி தரையில் கடாசினார் இன்ஸ்பெக்டர். சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியது அந்த தொலைக்காட்சி.
அது உடைந்ததில் எழுந்த பெரும் சத்தம் வீட்டின் உள்ளே மாடியில் இருந்த சரணை கீழே ஹாலுக்கு இழுத்தது.
என்ன ஏது என்று அவன் சுதாரிக்கும் முன்பாக, அவனது சட்டைக் காலரைப் பிடித்து தரதரவென்று இழுத்தார் இன்ஸ்பெக்டர்.
இளைஞன் சரண். தன் பலத்தை உபயோகித்து இன்ஸ்பெக்டரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவன்,
“சார், என்னப் ப்ரச்சனை? எதுக்கு வீடு புகுந்து இப்டி கலாட்டா பண்றீங்க? இது சட்டப்படி தப்பு.”
“சட்டம்? ம்? கேளு சொல்றேன்” கனைத்துக் கொண்டார் இன்ஸ்பெக்டர். “அந்தப் பொண்ணு… பேரென்னய்யா?” நெற்றியைத் தடவினார்.
“தீப்தி சார்”, எடுத்துக் கொடுத்தார் கான்ஸ்டபிள்.
“ஹாங்.. தீப்தி. எங்க ஒளிச்சி வச்சிருக்கீங்க அவளை?”
“ஒளிச்செல்லாம் வச்சில்லை. வீட்டில்தான் இருக்கா. இருங்க. கூப்பிடுறேன். தீப்தி..!” அழைத்தான் சரண்.
“என்ன சரண்?” வந்தாள். காக்கிச் சட்டைக்காரர்களைப் பார்த்ததும் கலவரமானாள்.
“ஏய் பொண்ணு. கிளம்பு. உங்க வீட்டுக்குப் போ. உங்கப்பா உன்னைத் தேடிக்கிட்டு இருக்கார்.”
“என்னை யார் தேடுனா எனக்கென்ன? தேடுறவங்க வீட்டுக்கெல்லாம் நான் போய் அட்டென்ன்ஸ் கொடுத்திட்ருக்க முடியாது.”
“பளார்” என அறை விழுந்தது சரண் முகத்தில். இன்ஸ்பெக்டரின் இரும்புக் கரம் அவன் மேல் இடியாக இறங்கியது. சரணின் கைகள் அடிபட்ட தன் கன்னத்தை தடவாமல், இன்ஸ்பெக்டரின் சட்டைக் காலரைப் பிடித்தன. ஒரு விநாடி அவரை முறைத்தவன், “உங்க யூனிபார்முக்காக உங்களை விடறேன்”, தன் பிடியைத் தளர்த்தினான்.
“இல்லேன்ன? என்னடா பண்ணுவே?” இன்னொரு இடி இறங்கியது சரண் கன்னத்தில்.
“இன்ஸ்பெக்டர்”, அலறினாள் தீப்தி. “எதுக்கு இப்ப சரணை அடிக்கிறீங்க?”
“உங்கப்பா உன்னைக் காணோம்னு தேடிக்கிட்டு இருக்கார். உங்க வீட்டுக்கு கிளம்பு நீ.”
“அவ எங்கேயும் வரமாட்டா. இங்கதான் இருப்பா” சரண் தீர்மானமாக சொன்னான்.
“அப்ப நீ வா” இன்ஸ்பெக்டர் சரணை தரதரவென்று இழுத்தார்.
“சரண்!” தீப்தி கதறினாள்.

“தீப்தி. பயப்படாதே. நீ இங்கேயே இரு. என்னைப் பத்தி யோசிக்காதே” இன்ஸ்பெக்டரால் இழுபட்டுக்கொண்டே வார்த்தைகளை உதறினான் சரண்.
சரண் அப்பாவுக்கு என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை.
“சரண்! இன்ஸ்பெக்டர்! சரண்!” என்று மாறி மாறிக் கத்தியபடியே பின்னால் சென்றார்.
“யோவ் பெருசு”, சரண் அப்பாவை நோக்கி விரலை உயர்த்திய இன்ஸ்பெக்டர், “அந்தப் பொண்ணை அனுப்பிட்டு உன் பையனை வந்து கூட்டிட்டுப் போ.”
வேடிக்கை பார்க்க மறுபடியும் ஒரு சுவாரஸ்யம் கிடைத்தது என மகிழ்ந்தது அக்கம் பக்கம்.
வெறும் மனிதர்கள் பிரச்சனை எனில் தீர்த்துவைக்க சில நியாயவாதிகள் ஆஜராவார்கள்.
சாதாரண நபர்களின் சண்டை எனில், விலக்கி வைக்க சிலரும், களத்தில் இறங்க சிலரும் முற்படலாம்.
ஆனால் போலீஸ்காரர்களின் தலை அங்கே தெரிந்தால் எந்த நியாயவாதியும் முன்வர மாட்டார்கள்.
சரண் போலீஸால் அடித்து இழுத்து செல்லப்படுவதை ஒரு கொடூர திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தார் அடுத்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த தீப்தி அப்பா.
சரணை ஜீப்பில் தள்ளி, “எடுய்யா வண்டியை”, கான்ஸ்டபிளை ஏவினார் இன்ஸ்பெக்டர்.
புழுதியைக் கிளப்பியபடி ஒரு உறுமலுடன் கிளம்பியது போலீஸ் ஜீப்.
“சரண், சரண்..”, ஜீப் பின்னாலேயே ஓடினார் சரண் அப்பா.
“வாங்கப்பா வக்கீலைப் பார்க்கலாம்”, சரண் அப்பாவை கையைப் பிடித்து வீட்டுக்குள் அழைத்து வந்தாள் தீப்தி – தன் வீட்டு வாசலில் இருந்த தன் அப்பாவை நோக்கி ஒரு கோபப் பார்வையை வீசியபடி.
திங்கள்கிழமை தொடரும்
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
Add comment
You must be logged in to post a comment.