வேலியன்ட் சிம்பொனி 1
இராஜாராம்
இசைஞானி அவர்கள், சிம்பொனி நிகழ்ச்சியை லண்டனில் நிகழ்த்த போகிறார் என்றவுடன், அளவற்ற மகிழ்ச்சி எல்லா இரசிகர்களைப் போல எனக்குள்ளும்..!
நானும் பாலாஜி அண்ணனும் மொபைலில் அதிகமாக பேசிக்கொள்வது இசைஞானியைப் பற்றிதான், அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை இளையராஜா அவர்கள் நடத்தப் போகும் முன், பாலாஜி அண்ணன் என்னிடம் சொன்ன பல விடயங்கள் இன்றுவரை எனக்கு ஆச்சரியமே..! அதையெல்லாம் விட அவர் சொன்னதில் மிக முக்கியமானது, “பெரியவர் மார்ச் 8-ம் தேதி லண்டனில் அரங்கேற்றம் நிகழ்த்தி முடிந்ததும், மார்ச் 15-ம் தேதி அமீரகத்தில் நாம் அவருக்காக ஒரு நிகழ்ச்சி நடத்தி, கொண்டாட வேண்டும். யார் யாரை அழைக்கலாம் என்று ஒரு பட்டியல் போடு” என்றதுதான்.
நீங்க, நான், பால்கரசு, குமார் அண்ணன், அப்புறம் ஹரீஷ் எனப் பெயர்களை அடுக்கிக் கொண்டே போனவன், தலையில் கொட்டியதுபோல் நம்ம தோழர், இசைஞானியோடு ஒரே மேசையில் மதிய உணவு சாப்பிட்டவர், அது மட்டுமா? அபுதாபியில் இந்திய தூதரகம் சார்பில் மரியாதை நிமித்தமாக பெரியவரை அழைத்து ஒரு நிகழ்ச்சியே நடத்தியவர், அவரில்லாமலா? என்றேன்.அதோடு நில்லாமல் இந்தியாவில் இசைஞானியின் தேனீக்கள் குழுமத்தின் அட்மின் அலெக்ஸ் ராஜா அவர்களையும் பேச அழைக்கலாம்ண்ணே என்று சொன்னதும் அண்ணன் அதை ஆமோதித்தார். இருவரும் முடிவெடுத்தபின் “அப்ப பிர்தோஸ்சிடம் பேசிடுப்பா” என்று பொறுப்பை என்னிடம் கொடுத்தார்.
உடனே தோழருக்குத் தகவலைத் தெரிவித்தேன். அதற்கு மேலே…. சொல்லவா வேண்டும்..? மிகைப்படுத்தி சொல்லவில்லை., தோழர் ஒரு விடயத்தில் தலையிட்டால் அந்த நிகழ்வின் அமைப்பும் தோற்றமும் வேறு வடிவம்தான். பிறகு யார் யாரை அழைக்கலாம் என்று தோழர் சொன்ன பட்டியலை கேட்டவுடன் பாலாஜி அண்ணனுக்கு மட்டுமல்ல எனக்கும் மயக்கம் வராத குறைதான். ஆம்… அவருடைய பட்டியலில் இசைஞானி அவர்கள் மட்டும்தான் இல்லை.
தோழர் சொன்ன அனைவருமே பிரபலமானவர்கள். தங்களின் பணிச்சூழல் காரணமாக எப்போதும் பிஸியாக இருக்கும் மனிதர்கள். பட்டியல் நீளம் என்பதைவிட இத்தனை பிரபலங்களை ஒருங்கிணைத்து நிகழ்வு நடத்த முடியுமா என்ற பயமும் பதட்டமும் இருந்தாலும் முடியும் என்ற நம்பிக்கை அதற்கு முன் நின்றதால் நிகழ்வுக்கான வேலையில் இறங்கினோம்.
இசைஞானி அவர்கள் மார்ச் 8-ம் தேதி புறப்படுவதற்கு முன்பாக அவரை வாழ்த்தி, வழியனுப்பி மரியாதை செலுத்தும் விதமாக, மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரடியாக இளையராஜா அவர்களின் ஸ்டுடியோவுக்கே சென்று பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
அந்த சமயத்தில் பாலாஜி அண்ணன் என்னிடம் சொன்ன செய்தி, “தம்பி…இராசராமு நீ வேணும்னா எழுதி வச்சுக்க… முதல்வர் போய் வாழ்த்தியாச்சுல்ல… இனி எத்தனை பேர் பெரியவரை வந்து பார்க்க போறாகனு மட்டும் பாரு” என்றார். சொல்லி வைத்தாற்போல் அனைத்து அரசியல் தலைவர்களும் நேரடியாகவும், எக்ஸ் வலைதளத்திலும் வாழ்த்துகளை குவித்து விட்டனர்.
மார்ச் 8-ம் தேதி லண்டனில் பெரியவரின் சிம்பொனி நிகழ்ச்சி இனிதே நடந்தேறியது. இதில் எனக்கு இன்ப அதிர்ச்சி என்னவென்றால் சகோதரர் ஹரீஷ் அவர்கள் குடும்பத்துடன் லண்டன் சென்று நிகழ்வை நேரில் கண்டு களித்த புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்திருந்ததுதான். ஆஹா… சிறப்பு… மகிழ்ச்சி! அப்போ நம்ம நிகழ்வில் ஒருவரின் அதுவும் ராஜாவின் தீவிர ரசிகரின் நேரடி அனுபவத்தையும் கேட்கலாம் என்ற எண்ணம் மகிழ்வை இரட்டிப்பாக்கியது. அதைவிட பாலாஜி அண்ணனின் புகைப்படத்தை இங்கிருந்து கொண்டு சென்று அதையும் பகிர்ந்திருந்தார்.
அமீரகத்தில் “வேலியன்ட் சிம்பொனி 1” கொண்டாடுவதற்கான வேலைகள் விரைவாகத் தொடங்கின. இங்கே இருந்து இந்தியாவில் உள்ளவர்களை காணொளி அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு பேச எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. பாலாஜி அண்ணனின் பாசத்துக்கும், மரியாதைக்கும் ஏற்றாற்போல் அவருடைய இந்த முன்னெடுப்பிற்கு அவரின் நட்பு வட்டம் அவரை விட பம்பரமாகச் சுழன்று ஆளுக்கொரு பொறுப்பை எடுத்துக்கொண்டு வேலை செய்தது.
அண்ணன் பிலால் அலியார் அவர்கள் அருமையான பேனர் ஒன்றை தயார் செய்து கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கேக் வெட்டி கொண்டாட தீர்மானித்தவுடன், அண்ணன் பாலாஜி முருகேசன் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க, அவர் கேக்குடன் வந்து இறங்கி விட்டார். இப்படி ஆளுக்கொரு பொறுப்பை எடுத்துக்கொண்டு கவனமாக செயல்பட்டோம்.
தோழர் மூலமாக அலெக்ஸ்ராஜா அவர்கள் இந்தியாவில் உள்ள இசைஞானியின் தேனீக்கள் குழும ரசிகர்களை ஒருங்கிணைத்து நிகழ்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்.
தற்போது ரமலான் மாதம் என்பதால் இந்த நிகழ்வுக்கு முன்பாக நோன்பு திறக்கும் ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தோம். நோன்பு திறப்பு சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. அதன் பின்பு இந்திய நேரப்படி இரவு ஒன்பது மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்கத் தயாரானோம்.
இந்நிகழ்வன்று (15/03/25) காலையில்தான் ஹரீஷ் அவர்கள் குடும்பத்துடன் லண்டனில் இருந்து வந்து சேர்ந்தார். நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து எனறவுடன் அண்ணன் பிலால் அலியார் அவர்களின் குழந்தைகளான அயாஸ், அதிஃபா இருவரும் தயாராகி விட்டார்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிந்தவுடன், நிகழ்வைத் தொகுத்து வழங்கும் பொறுப்பை வழக்கம்போல சகோதரர் கலைஞன் நாஷ் கையிலெடுத்துக் கொண்டார்.
காணொளி அழைப்பின் மூலம் பேசுவதற்கு தோழர் பிர்தோஸ் பாஷா அவர்களின் அழைப்பின் பேரில் கவிஞரும் எழுத்தாளருமான சுகா அவர்களும், உலகின் சிறந்த பியானிஸ்ட் விருது பெற்றவரும், இசை அமைப்பாளரும், நடிகருமான லிடியன் நாதஸ்வரம் அவர்களும், அவரது தந்தை இசையமைப்பாளர் சதிஷ் வர்ஷன் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசியது இன்ப அதிர்ச்சி. மறக்க முடியாத நிகழ்வு.
இதில் இயக்குனர்கள் திரு. அமுதேஸ்வரன், திரு. ரவிரத்னம், இயக்குனர் திரு. அருள் சங்கர், பாடலாசிரியர் திரு. முருகன் மந்திரம், இசையமைப்பாளர் திரு. ஜோகன், இசைஞானியின் ரசிகை கவிதா அந்தோணி, பண்ணைபுரத்தில் இருந்து திரு மார்ட்டின், திரு. சிவகுமார் மற்றும் திரு.மித்ரன் ஸ்ரீ ஆகியோர் இசைஞானியைப் பற்றிப் புகழ்ந்து புகழாரமாக சிலாகித்துப் பேசினார்கள்.
கவிஞர் சுகா அவர்கள் பேசும்போது அவருக்கும் இசைஞானிக்குமான நெருக்கத்தையும், இயக்குநர் பாலு மகேந்திராவின் மாணவனாக இசைஞானியிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பின் மூலம், பாலு மகேந்திரா அவர்களுக்கும் இசைஞானி அவர்களுக்குமான இடையே நடந்த சுவாரசியமான விவாதங்களையும் ரசனையுடன் பகிர்ந்து கொண்டார். இவை இதுவரை எந்த சமூக ஊடகங்களிலும், வெளிவராத தகவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாடலாசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் பேசும்போது, அவர் எழுதிக் கொண்டிருக்கும் இசைஞானி குறித்தான கட்டுரைத் தொகுப்பு பற்றிச் சொல்லி, அதில் ஒரு கட்டுரையை வாசித்தும் காண்பித்தார். அது, இசைஞானியை நேரில் அவர் சந்தித்தது பற்றியது… சுவாரசியமாக இருந்தது, அதாவது இசைஞானியின் கரங்களுக்கு முத்தமிட்டது பற்றியும், அந்த சமயத்தில் அவர் தன் கட்டுப்பாட்டை இழந்து இருந்தது பற்றியும் பேசும் கட்டுரை அது. அவர் பேசும்போது அந்தச் சமயத்தில் இசைஞானி அவர்கள் எனது கட்டுப்பாட்டில் இருந்தார் என்று நகைச்சுவை ததும்பச் சொன்னது அழகு (அந்த நிழற்படத்தையும் பகிர்ந்து கொண்டார்).
லிடியன் நாதஸ்வரம் அவர்கள் பேசும்போது, தனக்கு இசைஞானி அவர்கள் எந்த மாதிரியான அறிவுரையும், ஊக்கமும் தந்தார் என்பதைச் சொல்லி, உன் வீடு முழுவதும் விருதுகளாக குவிக்க வேண்டும் என்று அவர் சொன்னதை நினைவு கூர்ந்து பல சுவாரசியமான தகவல்களையும், தான் செய்து கொண்டிருக்கும் திருக்குறள் இசைவடிவம் குறித்தும் அவர் பேசியதையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அதேபோல தன்னுடைய சிம்பொனி முயற்சியைப் பாராட்டி ஒருசில அறிவுரைகள் தந்தார் என்பதையும் குறிப்பிட்டுச் சொன்னார்.(அதாவது லிடியான் நாதஸ்வரத்திற்கு இசைஞானி அவர்கள் அறிவுரை கொடுத்தார் என்பதே உன்மை, தற்போது ஊடகங்கள் பிதற்றுவதுபோல மாற்றி வாசிக்க வேண்டாம்.)
அவரைத் தொடர்ந்து, லிடியன் நாதஸ்வரம் அவர்களின் தந்தை இசையமைப்பாளர் திரு சதீஷ் வர்ஷன் அவர்கள் பேசினார். சாதாரணமாகவே, நான் சமூக ஊடகங்களின் வாயிலாக பார்த்தவரை அவ்வளவு மரியாதையான மனிதர், அவரின் வாழ்வில் இசைஞானி அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதை இசைஞானியின் பெயரைச் சொல்லும்போதே அவர் கண் கலங்குவதை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம். தன் மகனின் உழைப்பை, அதாவது சராசரியாக ஒரு நாளில் தொடர்ச்சியாக 16 மணி நேரம், பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசினார். மே மாதம் வெளிவர இருக்கும் திருக்குறளும் விளக்கமும் கூடிய இசைவடிவம் அதற்கான மெனக்கெடலொடு ஓடிக் கொண்டிருக்கிறோம். இந்த சமயத்தில் சமூக ஊடகங்களின் தவறான புரிதலைச் சொல்லி, எங்களை பகடையாக்கி இசைஞானியை சீண்டுகிறார்கள் என்று சொல்லும் போது மனம் நொந்து அழுதே விட்டார். அதன் பிறகு சமூக ஊடகங்களில் சொல்வது போன்ற வதந்திகளால் நாங்கள் மனமுடைந்து இருக்கிறோம், இந்த வதந்திகள் அவரைப் பாதிக்காமல் வளர வேண்டும்… வளரும் கலைஞனான என் மகனுக்கு உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் எனக் கேட்டு மனமுறுகி விட்டார்.(அவரின் விசும்பலில் அத்தனை உண்மை தெரிந்தது)
அடுத்ததாக இளையராஜா தேனீக்கள் குழும அட்மின் அலெக்ஸ்ராஜா அவர்கள், பேசினார் எனக்கு, எழுதுவதென்றால் சரளமாக வரும், பேசுவது கடினம் என்றார். சமீபத்தில் இசைஞானி அவர்களை சந்தித்ததையும் பகிர்ந்தார். சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
அவர்களின் பேச்சினை தொடர்ந்து அண்ணன் பாலாஜி பாஸ்கரன் பேச, பாலாஜி அண்ணன் பெரியவரைப் பற்றி பேசச்சொன்னால் இந்த ஒரு நிகழ்வு போதாது, அது பாகம் 1, பாகம் 2 என்று போயிக் கொண்டே இருக்கும். வழக்கமாக நானும் அவரும் பேசிக் கொள்ளும் தகவல்களைத்தான் பகிர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து சகோதரர் ஸ்ரீ ஹரீஷ் அவர்கள் தான் கண்ட நேரடி அனுபவத்தையும், இளையராஜா அவர்கள் அவருக்குள் தந்த தாக்கத்தையும் அத்தனை உருக்கமாகவும், நேர்த்தியாகவும் பேசினார். சிம்பொனியின் பாகம் ஒன்று, இரண்டு என்று மொத்தம் நான்கு பாகம்… மூன்றாவது பாகம் என்னை எங்கோ கொண்டு சென்று விட்டது. முதல் முறையாக இசைஞானி அவர்கள் எந்தவித அழுத்தமும் இல்லாமல் தன்னுடைய இசையை நம்மைப்போல ஒரு பார்வையாளனாக ரசித்தார். அதேபோல, என் மகனுக்கு எவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வில் இருக்கிறோம் என்று இப்போது தெரியாது, அவன் வளர்ந்து விவரங்கள் தெரியும்போது புரிய வரும், இப்போதும் அவன் ஒரு இசைஞானியின் இரசிகனாகத்தான் வளர்ந்து கொண்டிருக்கிறான் என்று நெகிழ்ந்து பேசினார்.
அதேபோல ஸ்ரீ ஹரீஷின் இணையர் இலக்கியா அவர்களும் பேசினார், தன்னுடைய இசை புரிதல் ஹரிஷ் அளவுக்கு இல்லையென்றாலும், அந்த நிகழ்வில் நான் கேட்ட இசையும், அந்தச் சூழலும் வேறொரு புதிய அனுபவத்தை தந்தது நன்றி ஹரீஷ் என்று சிறப்பாக சொன்னார்.
பிறகு சகோதரர் கலைஞன் நாஷ், தன்னுடைய இசைஞானி மீதான இசை அனுபவத்தை பகிர்ந்தார். தோழர் பிர்தோஸ் பாஷா அவர்கள், இசைஞானியை சந்தித்தது, அமீரக இந்திய தூதரகம் அழைத்து அவருக்கு பாராட்டும், கௌரவப்படுத்திய நிகழ்வை அந்த அனுபவத்தை மிக சுவாரசியமாக பகிர்ந்தார். பெரியவரோடு இந்திய தூதரக அதிகாரி பாலாஜி சார் வீட்டில், ஒரே மேசையில் காலை உணவு சாப்பிட்டதை இன்றும், என்றும் மறக்க முடியாத நிகழ்வு என்று உணர்ச்சி ததும்பலோடு பேசினார்.
நானும் பேசினேன், என்னளவில் என் அறிவுக்கும், அனுபவத்திற்கும் எட்டிய தகவலோடு பேசினேன், நானும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டு பேசியது பேருவகை.
இறுதியாக அண்ணன் பிலால் அலியார் அவர்கள் சுருக்கமாக பேசினாலும், இரத்தின சுருக்கமாக கழகத்திற்கே உரிய பாணியில், பெரியவரின் தொடக்கம் முதல் இன்று அவர் தொட்டிருக்கும் உயரம் வரை, தன் இசை பயணத்தில், அவர் சந்தித்த அழுத்தங்களும், சாதித்த பெருமைகளும் பற்றிச் சொல்லி தனக்கே உரிய திராவிட சித்தாந்த பார்வையில் பேசி முடித்தார்.
இந்த நிகழ்வில் ஜெஸிலா மேடம், அண்ணன் பாலாஜி முருகேசன், நண்பர் பால்கரசுஆகியோர் பேசுவார்களென்று எதிர் பார்த்தோம், காலத்தின் அருமை கருதி அவர்கள் பேசவில்லை. அருமையான மன நிறைவான நிகழ்வு, கேலக்சியின் நிகழ்வுகளில் இது ஒரு மறக்க முடியாத மைல்கல் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
சிம்பொனி அமைத்த இளையராசாவுக்காக முதல் பாரட்டுக் கூட்டம் அவருடைய தேனீக்களை வைத்தே அமீரகத்தில் மன நிறைவுடன் நடத்தியதை கேலக்சி கலை இலக்கிய குழுமம் பெருமையுடன் கருதுகிறது.
Add comment
You must be logged in to post a comment.