கமலா முரளி
எனது புலனத்தில் ஒரு உவமி ! அதாவது வாட்ஸப்பில் ஒரு மீம்ஸ் !
‘கணவனோட ஆதார் எண்னுடன் மனைவியின் ஆதார் எண்ணை இணைக்கணுமாம் !’
‘ஏனாம்..? எதற்காக இணைக்கணுமாம்..?’
‘அப்பத்தான் போலிகளைக் கண்டுபிடிக்க முடியுமாம்..!’
‘இப்படி ஒரு ஆணை வந்தால், என்ன நடக்கும்..?’
‘தனிமனித சுதந்திரத்தில் தலையீடு’
‘நல்ல நோக்கம் தான் ஆனால் நடைமுறைப்படுத்துதல் கடினம்’
‘சரியில்லை, வேறு முக்கிய நிகழ்வுகளில் இருந்து கவனத்தைத் திருப்பும் முயற்சி’
இன்னும்… இன்னுமாய்… பலப்பல கருத்துகள், கலந்தாலோசனைகள், விவாதங்கள், காணொளிகள் வரும்.
சில நாட்களுக்கு…
ஆனால், நம்முடன் ஆதார் பயணிக்கும் என்பது கிட்டத்தட்ட நூறு சதவீத உண்மையாகிவிட்டது என்பதே உண்மை !
ஆதார் என்றால் என்ன ?
ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (யூஐடிஐ) வரையறுக்கப்பட்ட சரிபார்ப்பு நடைமுறைகளின்படி, இந்தியாவில் வசிப்பவர்களின் அடையாளத்தைச் சரிபார்த்து திருப்தி அடைந்த பின்னர் அவர்களுக்கு வழங்கப்படும் பன்னிரெண்டு இலக்க அடையாள எண் ஆகும்.
இந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாகப் பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டத்தட்ட ஒரே பொருளுடனும், உச்சரிக்கவும் எளிதாக உள்ளதால் உருவானதுதான் ஆதார் என்ற பெயர். ஆதார் என்றால் ஆதாரம் அல்லது அடித்தளம் ஆகும்.
இது வசிப்பாளர்களின் உடற்கூறுகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், எந்த வசிப்பாளரும் போலி அடையாள எண்ணை வைத்திருக்க முடியாது. அரசுத் திட்டங்களின் பயன்கள் முறைகேடான வழிகளில் சுரண்டப்படுவதற்குக் காரணமான போலி மற்றும் புனையப்பட்ட அடையாளங்களை ஆதார் மூலமான அடையாளக் கண்டுபிடிப்பின் மூலம் போலிகள் நீக்கப்படுவதால் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு பிற தகுதியுடைய வசிப்பாளர்களுக்கு பயன்களை விரிவுபடுத்த அரசால் முடியும்.
முக்கிய அம்சங்கள்
இந்திய வசிப்பாளராக இருக்கும் எவரும், அவரது வயது, பாலினம் போன்ற பாகுபாடுகள் இன்றி ஆதார் எண் பெறுவதற்காகத் தாங்களாக முன்வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆதார் எண்ணுக்கு பதிவு செய்ய விரும்புபவர்கள் ஒரே ஒரு முறை செய்தால் போதுமானது.
பதிவுகள் இலவசமாகச் செய்யப்படும்.
ஆதார் பதிவின் போது டெமோகிராபிக் தகவல்களையும், உடற்கூறு தகவல்களையும் வழங்கவேண்டும்.
டெமோகிராபிக் மற்றும் உடற்கூறு பதிவு இரட்டை பதிவு நீக்க நடைமுறைகளின் மூலம் தனித்துவம் ஏற்படுத்தப்படுவதால் ஒருவருக்கு ஒரே ஒரு ஆதார் எண் மட்டுமே உருவாக்கப்படும்.
ஆதார் எண்ணை எங்கும் பயன்படுத்தலாம். இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் ஆன்லைன் முறையில் சரி பார்க்க முடியும்.
ஆதார்எண் என்பது எந்த ஒரு நுண்ணறிவின் மூலமாகவும் கண்டுபிடிக்க முடியாத தொடர்பற்ற ( ரேண்டம் )எண் ஆகும்.
ஆதார் பதிவு செய்யும் போது குறைந்த பட்ச டெமோகிராபிக் மற்றும் உடற்கூறு தகவல்கள் மட்டுமே பெறப்படுகிறது. ஆதார் பதிவு முறையில் சாதி, மதம், வருமானம், சுகாதாரம், புவியியல் (சொந்த ஊர், பிறந்த இடம்) உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்படுவதில்லை.
சேகரிக்கப்பட்ட தகவல்கள் தொகுக்கப்படுவது இல்லை.
தகவல் பாதுகாப்பு
பதிவு செய்பவர்களின் தகவல்கள் இரட்டைப் பதிவு நீக்க முறைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதும், திரட்டப்பட்ட அனைத்து தகவல்களும் தொகுக்கப்படுவதில்லை என்பதும் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முதலியவற்றை உறுதி செய்ய உதவும்.
மேலும், வேறு துறைகளுக்காகவோ அல்லது சேவைக்காகவோ தனி நபரின் அடையாளம் மட்டுமே ‘ஆம் /இல்லை’ பதில்களின் மூலம் உறுதி செய்யப்படுமே அன்றி, தனிநபரின் தகவல்கள் பகிரப்படுவதில்லை, பகிர இயலாது. இதுவே, ஆணையத்தின் நிலைப்பாடு. இருப்பினும், சில தரவுகள் கசிந்துள்ளன என்ற சர்ச்சைகள் எழுகின்றன என்பதையும் மறுக்க இயலாது.
அவதியும் கோபமும்
ஆதார் சேவை பற்றிய அறிவிப்பு வந்த நாள் முதல்… இந்த நாள் வரை பிரச்சனைகளையும் சர்ச்சைகளையும், வழக்குகளையும், தீர்ப்புகளையும் அரசியல் சார்பு விளக்கங்களையும், மேலைநாடுகளில் புழங்கும் அடையாள அட்டைகளைப் பற்றிய கண்ணோட்டங்களையும் நமது செய்தி ஊடங்கங்கள் நமக்குத் தரத் தவறவில்லை. ஆதார் அட்டைக்கு நம் செய்தி ஊடகங்களில் ஒரு தனித்துவமான இடம் உண்டு !
குறிப்பாக, வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும்…. பான் கார்டுடன் இணைக்க வேண்டும்…. கல்லூரி, பள்ளிகளில் ஆதார் எண் வேண்டும்… பத்திரப் பதிவு செய்ய, மொபைல் போன் வாங்க, மின் கட்டணம், வாக்காளர் அட்டை, என எத்தகைய பரிமாற்றத்துக்கும் சேவைகளைப் பெறுவதற்கும் ஆதார் வேண்டுமென்பது மெல்ல மெல்ல நடைமுறை ஆகிறது.
வங்கி , வருமான வரி மற்றும் நிதி சார்ந்த அரசு மானியங்கள் மற்றும் சேவைகளில் ஆதார் எண் இணைப்பது போலி பயனாளர்களை இனம் கண்டு கொள்ள உதவுகிறது.
கைபேசி இணைப்புகளுடன் ஆதார் எண் இணைப்பது தேச விரோத சக்திகள் போலி பயனர்கள் எளிதாக சேவை பெற இயலாத நிலையை உருவாக்குகிறது.
ஆதார் எண்ணின் தனித்துவம் மற்றும் அடையாளத்தை எளிமையாக சரிபார்க்கக்கூடிய தன்மை அதன் முக்கியத்துவத்தினைக் கூட்டியுள்ளது.
ஆதார் அட்டையே தேவையா என்ற கேள்வி தொடங்கி, இத்துணை சேவைகளுக்கு ஆதாரை இணைக்க வேண்டுமா என்ற கேள்வியில் நிறுத்தி வைக்கவும் செய்திருக்கிறோம். ஆதார் எண் இணைப்பை நடைமுறைப்படுத்துவதில் சரியான திட்டமிடல் இல்லாததால் அவதியுறும் மக்களின் கோபம் நியாயமானது தானே !
அயல்நாடுகளில் அடையாள அட்டைகள்
குடிமக்களுக்கான அடையாள அட்டைகள் உலகின் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளது. நம் பன்னிரெண்டு இலக்க ஆதார் எண், யு.எஸ் வழங்கும் ஒன்பது இலக்க சமூக பாதுகாப்பு எண்ணுடன் ( எஸ்.எஸ்.என்) ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.
ஆதார் எண் இந்தியாவில் தேசிய அளவிலான அடையாள அட்டை. எஸ்.எஸ்.என் அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமை பெற்ற மற்றும் சில சிறப்பு பிரிவுகளில் வருவோரின் வருமானம் நிதி பயன்பாடு சேவைகளின் தகவல் பெற உதவும் குறீயிடு எண். 1936 ஆம் ஆண்டு முதலே நடைமுறையில் உள்ள எஸ்.எஸ்.என் ஒரு அடையாள அட்டை அல்ல.
எஸ்.எஸ்.என் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் நியுமிடண்ட் முறையில் (Numident) எண் அடிப்படையில் தரவுகள் சேமிக்கும் முறையிலும், ஆதார் தரவுகள் சிஐடிஆர் (CIDR) மையப்படுத்தப்பட்ட தகவல் தொகுப்பு முறையிலும் சேமிக்கப்படுகின்றன.
எஸ்.எஸ்.என் எண்ணைப் பெற பல தகவல்களை சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.என் அட்டையில் எஸ்.எஸ்.என் எண்ணும், பயனாளர் பெயரும் அவரது மாதிரிக் கையொப்பமும் மட்டுமே இருக்கும். ஆதார் அட்டையோ ஒரு இரட்டைப் பதிவு பெற்ற தனித்துவ அடையாள அட்டை. சில தகவல்கள் ஆதார் அட்டையிலேயே இருக்கும். ஒருவரது அடையாளத்தை ஆதார் எண் மூலம் உறுதி செய்யலாம். எனவே தான், இப்போது பல சேவைகளுக்கும் ஆதார் எண்ணை ஒரு சான்றாக கேட்பது வழக்கமாக உள்ளது.
இந்தியாவின் ஆதார் அட்டை ஒரு முன்னுதாரணமாய்…
தகவல் பாதுகாப்பு, தனிநபர் உரிமை மற்றும் இணைய வழி குற்றங்களில் இருந்து பாதுகாப்பு மேலாண்மை போன்ற விஷயங்கள், சட்ட பாதுகாப்பு மற்றும் நடைமுறைப்படுத்தல் சிக்கல்கள் இருந்த போதும், ஆதார் எண் நம் நாட்டில் ஒரு முக்கிய அடையாள அட்டையாக மாறியுள்ளது என்பதில் ஐயமேதும் இல்லை.
அயல் நாடுகளிலும் உலக அரங்குகளிலும் இந்தியாவின் ஆதார் எண் ஒரு பேசுபொருளாக உள்ளது என்பதையும் ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
மிகப் பெரிய ஜனநாயக நாடு ! மக்கள் தொகையில் உலகிலேயே இரண்டாவது இடம் ! பாலின அல்லது வயது பாகுபாடின்றி, பதிவு செய்வதில் மக்களுக்கு ஏதும் பணச்சுமை இன்றி கிட்டத்தட்ட 1.20 பில்லியன் மக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது இமாலய சாதனை தானே!
தொழில்நுட்பத்தை மிகச் சரியான வழியில் கையாண்டு, இந்தியா வெற்றிகரமாக நடத்திச் செல்லும் இத்திட்டத்தை ஒட்டி, மேலும் பல உலக நாடுகள், நாடு தழுவிய அடையாள அட்டைகளை மேம்படுத்தவும், புதிதாக செயல்படுத்தவும் துவங்கியுள்ளன.
துனிஷியா, மொராக்கோ, அல்ஜிரியா போன்ற நாடுகள் இந்தியாவிடம் தங்கள் நாட்டு அடையாள அட்டைக்கான திட்ட வரைவு, திட்ட மேலாண்மை போன்ற விஷயங்களில் உதவுமாறு கேட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக வங்கியும் ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில், இது போன்ற திட்டத்தைத் துவக்க இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளது.
பிரேசில் நாட்டின் அப்ரீட் அமைப்பு உடல்கூறு தகவல்களுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை மேம்படுத்தியுள்ளது. கானா நாட்டின் ‘கானா கார்ட்’ நமது ஆதார் கார்டை போல வங்கி மற்றும் நிதி பரிமாற்றங்களுக்கும் பயன்படும் அட்டையாக உருவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் Karta Tanda Penduduk (KTP) அட்டை இந்தியா மற்றும் சீனாவின் திட்ட வரைவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. மலேசியாவின் MyKad card இன்னும் நவீன நுட்பத்துடன், பயோமெட்ரிக் தகவல்கள், ஒரு கணிணி சில்லில் இருப்பது போல வடிவமைத்துள்ளது.
பொருளாதார மேதை திரு.ரோமர், (உலக வங்கி), உலக அளவில் , அனைவருக்கும் ஆதார் போன்ற அடையாள வடிவம் ஒன்று இருந்தால், மிகச் சிறப்பாக அமையும் எனக் கூறியிருப்பது, உலக நாடுகள் நமது ஆதார் அடையாள அட்டையை அங்கிகரிப்பதைக் காட்டுகிறது.
அடுத்து என்ன ?
அதெல்லாம் சரி ! அடுத்து என்ன அறிவிப்பு வரும் ? எதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் ? எத்தனை நாள் கெடு கொடுப்பார்கள் இணைப்பதற்கு என பொரிந்து தள்ளும் குடிமக்களுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன் ?
‘சோதனை மேல் சோதனை போதுமடா சாமி…’ என்று நீங்கள் பாடினால்,
அந்தப் பாடலிலேயே வரும் வரிகளை நான் பாடுவேன்
‘ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல..!’
‘எதுக்கெடுத்தாலும் ஆதார் கார்டை இணைக்கச் சொல்லுறாங்களே, இந்த கல்யாணம் ஆகாத ஆணோட ஆதாரையும் கல்யாணம் ஆகாத பொண்ணோட ஆதாரையும் இணைக்கச் சொன்னாதான் எனக்கு கல்யாணம் நடக்குமோ’ என அங்கலாய்க்கும் 90 கிட்ஸ் குரல் காதில் விழுகிறது.
நன்றி : படம் இணையத்திலிருந்து