ஹேமா
தெய்வம் தந்த வீடா வீதி?
கவிஞர் சுந்தர ராமசாமியின் கதவைத் திற என்ற கவிதையைப் பலரும் சிலாகித்து சொல்ல, கதவு இருப்பவன் சிலாகிக்கலாம். கதவு, ஜன்னல், வீடு என்று ஏதுமில்லாதவன் எப்படி சிலாகிப்பது என்று கேட்டார் கவிஞர் யுகபாரதி அவர்கள். வாடகை வீட்டில் இருந்துகொண்டு எப்படியாவது சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் பலரையும் நாமறிவோம். வீடு என்ற ஒன்றே கனவாகச் சாலைகளில் வசிக்கும் மனிதர்களைப் பற்றி நாம் நினைத்து பார்த்ததுண்டா? அது சொந்த வீடோ வாடகை வீடோ கூரை வீடோ ஓட்டு வீடோ ஏதோ ஒரு வீட்டில் வசிக்க வேண்டும் என்பது கனவாக உள்ள மனிதர்களின் உள்ள வெளிப்பாடே இக்கட்டுரை.

மனிதர்கள் நாடோடிகளாக வாழ்ந்த காலகட்டத்தின் தொடர்ச்சிதான் சாலையோரங்களை வசிப்பிடமாக மாற்றியிருக்கிறார்களோ என்று என் அறியாத வயதில் எனக்குத் தோன்றும். ஆனால் சாலையோரத்தில் பிறக்கும் ஒரு குழந்தை சாலையோரத்தில்தானே வளர முடியும். இந்தியாவில் சாலையோரங்களில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை எத்தனை? உலகம் முழுவதிலும் இதுபோன்ற சாலையோரங்களில் வாழ்பவர்கள் இருக்கிறார்களா? ஏன் இவர்களுக்கு வீடில்லை? அரசு ஏன் இவர்களுக்கு உதவி செய்யவில்லை? போன்ற எத்தனையோ கேள்விகளை இளவயதிலிருந்தே சுமந்து கொண்டிருக்கிறேன். சாலையோரத்தில் வாழ்பவர்களைக் குறித்து எழுதும் இந்த பதிவு மனதில் ஒரு ரணமாகவே இருக்கிறது எனலாம்.
சாலை என்பது மனிதர்கள் நடந்து செல்வதற்காகவும் வாகனங்களை ஓட்டிச் செல்வதற்காகவும் அமைக்கப்பட்ட ஒன்று. இங்கேதான் பலரின் வாழ்க்கையுமிருக்கிறது என்பது ஒன்றும் நமக்கு தெரியாத விஷயமில்லை. நாம் சாலையில் வாகனங்களிலோ நடந்தோ செல்லும்போது இப்படி எத்தனையோ சாலையோரத்தில் வாழும் மனிதர்களை பார்த்திருப்போம். அவர்களில் யாரேனும் பிச்சை எடுத்தால் எப்போதாவது காசு கொடுத்திருப்போம். சாலையோரத்தில் வாழ்பவர்களைக் குறித்த திரைப்படத்தை யாரேனும் எடுத்து பெருவெற்றி பெற்றிருந்தால் அப்படத்தைப் பார்த்து கண் கலங்கியிருப்போம். நம் சமூகப் பணி நிறைவடைந்து விட்டதாக கருதிக் கொண்டு அவரவர் சொந்த வேலைகளில் மூழ்கி விட்டிருப்போம். இந்த கட்டுரையை எழுதும் போதுகூட என் மனம் கேட்ட கேள்வி, ‘இதை எழுதுவதன் மூலமாக இவர்கள் வாழ்வில் நீ எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தி விடப் போகிறாய்? என்பது தான்.
இந்த முதலாளித்துவம் எங்கிருந்து பிறந்தது? பணம் உடையவன் மேலும் பணம் உடையவனாகவும் வறியவன் மேலும் வறியவனாக மாறும் அபாயம் உள்ள தேசத்தில்தானே நாம் வாழ்ந்து வருகிறோம்.

காட்சி-1
அது ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் சாரதா. புதுமனை புகுவிழா குறித்து தமிழ் ஆசிரியர் வகுப்பில் கட்டுரை ஒன்றை எழுதச் சொல்லியிருந்தார். சாரதா எழுதாமல் ஜன்னல் காட்சிகளையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஸ்கூல் பெல் அடித்தவுடன் பையை மாட்டிக் கொண்டு வீட்டிற்கு ஓடினாள். சென்னை நகரத்தின் பிரதான சாலை ஓரம்தான் அவள் வீடு. குப்பை தொட்டிகளுக்கு அருகில் வசிக்க இயலவில்லை என்பதால் அடுத்த தெருவுக்குள் குடி புகுந்தது அவர்கள் குடும்பம். ‘தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு’ என்ற கண்ணதாசன் பாடியது தனக்காகத்தான் என்பது போல பெரிய சிரமங்களை மனதில் சேகரித்துக் கொள்ளாமல் இயல்பாகத்தான் இருந்தாள் இவ்வளவு காலமும்.
முன்பு எப்போதையும் விடவும் எட்டாம் வகுப்பு வந்த பிறகு அவளின் சுமைகள் கூடி இருந்ததாக உணர்ந்தாள். பொதுக் கழிப்பறையே பெரிய சுமை என்றால் மாதாந்திர நேரத்தில் பொதுக் கழிப்பறை மிகப் பெரும் பிரச்சினையாக இருந்தது. இரவில் பாதுகாப்போடு உறங்க முடியவில்லை என்று பெரிய கவலையும் சேர்ந்து கொண்டது. இரவு முழுவதும் உறங்காத களைப்போடு இருந்த மகளை அம்மா எழுப்பினார்.
‘எழுந்துருடி ஸ்கூலுக்கு போகனும்ல’ ‘
நான் போலமா’
ஏன் என்னாச்சு ?
‘என் மிஸ் புதுமனை புகுவிழா பத்தி கட்டுரை கேட்கிறாங்க’
‘அப்படின்னா ?’
‘அதான் புது வீடு கட்டிக்கிட்டு போறாங்களே. அதைப் பத்தி எனக்கு என்ன தெரியும். அதான் நான் ஒன்னும் எழுதல. இன்னிக்கு லீவ் போட்டுட்டேன். இல்லன்னா அந்த மிஸ் கேப்பாங்க’
‘சரி, எங்கூட வியாபாரத்துக்கு நீயும் வா. எல்லாம் ஐஸ் மீனு. சீக்கிரம் விக்கணும் கிளம்பு.’
சாரதா ‘மீனு’ ‘மீனு’ என்று கத்திக்கொண்டு வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் புதுமனை புகுவிழாவிற்கு ஒருநாள் நாமும் போக வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.
காட்சி 2
இரவு 2 மணிக்கு சென்னை புரசைவாக்கம் அருகிலுள்ள சாலை ஓரத்தில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். லாரி ஓட்டுநர் ஒருவர் குடித்துவிட்டு வேகமாக வண்டி ஓட்டியதில் ஒரு குடும்பத்தில் இருவரின் கால்கள் துண்டாகி விட்டன. வண்டியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார் லாரி ஓட்டுநர். வலியால் துடித்த அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே காலதாமதமாகிவிட்டது. கால்களை மீண்டும் பொருத்த இயலாது என்று கைவிரித்தார் மருத்துவர். காயம் சரியாகி மீண்டு வர இருவருக்கும் மூன்று மாதங்களானது. மூன்று மாதங்களுக்கு பிறகு கால்களின்றி இரு உடல்களும் மீண்டும் அதே சாலையோரத்தில் உறங்கத் தொடங்கின.
காட்சி-3
ஊரெங்கும் உலகமெங்கும் கொரோனா. எல்லா இடங்களிலும் லாக் டவுன். யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கியில் உத்தரவு பிறப்பித்திருந்த நேரம். வீடு உள்ளவர்களுக்கு இது பொருந்தும். வீடற்றவர்கள் என்ன செய்வார்கள்? சுத்தமாக இருங்கள் அடிக்கடி கை கழுவுங்கள் என்று அரசு வலியுறுத்திக் கொண்டே இருந்தது. தங்கள் சாலையோரங்களில் சற்று கூட்டிச் சுத்தம் ஆக்கிக் கொள்வதைத் தவிர எந்த சுத்தத்தை கையாள்வது என்று தெரியவில்லை அவர்களுக்கு. காற்றில் பரவும் கொள்ளை நோய்க்கு மாஸ்க் வாங்க கூட அவ்வப்போது திண்டாட்டமாக இருந்தது. சோற்றுக்கே வழியில்லாதவன் எப்படி மாஸ்க் வாங்குவான் என்பதைக் குறித்தெல்லாம் அரசு யோசித்ததாகத் தெரியவில்லை என்கிறார் சாலையோரத்தில் வசிக்கும் ஒருவர். மழை காலங்களில் எல்லா இடங்களிலும் ஈரம் பரவிக் கிடக்கும். ‘தார்பாய் போட்டுதான் தூங்குவோம். மழை காலத்தில் பெரும்பாலும் தூங்கவே முடியாது. இரண்டு வேளை சாப்பாடு கிடைத்தாலே பெரிய விஷயம் மூன்று வேளைகளெல்லாம் நான் சாப்பிட்டதே கிடையாது’ என்கிறார் இன்னொரு சாலை வாசி.

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை உறைவிடம் இவைகளில் பெரும்பாலும் எதுவுமே கிடைக்கப் பெறாத மனிதர்கள்தான் இந்த சாலை வாசிகள். சென்னையில் மட்டுமே சாலையோரத்தில் பதினோராயிரம் மக்கள் வசிப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது. இது சரியான தகவலா என்று தெரியவில்லை. ஏனெனில் சென்னையில் நாற்பதாயிரம் பேர் சாலையில் வசிக்கிறார்கள் என்கிறது தெருவோரம் வாழ் மக்கள் உரிமைச் சங்கம். சாலை ஓரங்கள், பாலத்திற்கு அடியில், பூங்காக்களில், இரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் என பல இடங்களிலும் மனிதர்கள் வசிக்கிறார்கள். சென்னை மாநகராட்சி 28 இரவுநேர தங்கும் விடுதிகளை இயக்கி வருகிறது. ஆனால் சாலையோர மக்கள் பெரும்பாலும் இதில் தங்குவதில்லை. குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர், ஆதரவற்றோர் போன்றோரே தங்குகிறார்கள் என்று செய்திகளில் குறிப்பிட்டுள்ளார் தெருவோரம் வாழும் மக்கள் உரிமை சங்கத் தலைவர் ஸ்ரீதர். ஏனென்றால் இந்த விடுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால் சாலையோரம் வாழும் மக்கள் இங்கு தங்குவதில்லை என்று குறிப்பிடுகிறார்.
ஓரிடத்தில் வாழாமல் தொடர்ந்து இடம் விட்டு இடம் வாழும் மக்களை நாடோடிகள் என்றுழைக்கிறோம். உலகமெங்கிலும் மொத்தம் 30 முதல் 40 மில்லியன் நாடோடிகள் இருக்கலாம் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. தாசரிகள், மணியாட்டக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், கூத்தாடிகள், பகல் வேஷக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள் என பலவிதமான பெயர்களில் அழைக்கப் படுகிறார்கள் நாடோடிகள். தமிழகத்தில் 5 லட்சம் மக்கள் நாடோடிகளாக வசிப்பதாக தகவல் இருக்கிறது. நாடோடி மக்களின் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்விகூட கிடைப்பதில்லை. இந்த விளிம்பு நிலை மக்கள் அவர்கள் வாழ்வில் மேம்பாடு அடையப் போவது எப்போது என்ற கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது.
இங்ஙனம் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நிலையிலும் தன் திறமையின் மூலமாக சாதனை படைக்கும் மனிதர்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. அப்படி சாலையோரத்தில் வாழ்ந்தும் சரித்திரம் படைத்த சகோதரி சாக்கர் சங்கீதா அவர்களுடனான நெகழ்ச்சியான உரையாடலை அவரின் அனுமதியோடு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சாலையோரத்தில் பிறந்து, வளர்ந்து, சாலையோர குழந்தைகளுக்கான உலகளாவிய கால்பந்து போட்டிகளில் ஸ்காட்லாந்து மற்றும் ரஷ்யா வரை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணக்கம் சங்கீதா. சென்னையில் எங்கு வசிக்கிறீர்கள்? எவ்வளவு காலமாக அங்க வாழ்றீங்க?
வணக்கம். நான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள வால்டாக்ஸ் ரோட்டில் வசிக்கிறேன். மூன்று தலைமுறைகளாக நாங்க இங்கதான் இருக்கோம்.
உங்க குழந்தை பருவம் பற்றி சொல்லுங்களேன்.
அப்பா குடிச்சி குடிச்சே குடும்பத்தை பார்க்க முடியாம போயிட்டாரு. அம்மா, அண்ணா, அக்கா, நானு எல்லாரும் ஒண்ணா இருக்கோம். சின்ன வயசுல நான் ரோட்ல வாழ்றேன்னு எனக்கு தோணினதேயில்லை. நான் இங்கதான் பொறந்தேன். இதுதான் என் வாழ்க்கைனு இருந்தேன். ஓரளவு விவரம் தெரிஞ்ச பிறகுதான் நான் ரோட்ல இருக்கேன்னு எனக்குப் புரிஞ்சது. ஆனா அதுல எதும் அவமானம் இல்லை. அது எனக்கு அப்போ புரியலை. ஏன் ஸ்கூல் ஃபிரண்ட்ஸ் யாராவது உன் வீடு எங்க இருக்குன்னு கேட்டா சொல்லவே மாட்டேன். அது ஏதோ அவமானமாகவே தோணும். இப்பத் தோணுது இதுல என்ன அவமானம் இருக்குனு.
உங்க பள்ளி வாழ்க்கையைப் பத்தி சொல்லுங்க.
பதிமூனு வயசு வரைக்கும் ஒழுங்காதான் ஸ்கூல் போயிட்டு இருந்தேன். வீட்ல ரொம்ப பணக்கஷ்டம். அதனால ஸ்டீல் பாலிஷ் போட்ற வேலைக்கு போனேன். அம்மா திட்னாங்க. அத காதுல வாங்காம வேலைக்குதான் போயிட்டுருந்தேன். அப்ப தான் கருணாலயாங்கற அமைப்பில இருந்து எங்களுக்கு உதவி பண்ண ஆட்கள் வந்திருந்தாங்க. அவங்கதான் பலமுறை பேசி என்னை திரும்பவும் ஸ்கூலுக்கு அனுப்பி வச்சாங்க.
ஃபுட்பால் விளையாட்டில் எப்படி எப்போதிலிருந்து ஆர்வம் வந்தது?
கருணாலயா டீம் சம்மர் கேம்ப்ல ஃபுட்பால் சொல்லிக் கொடுத்தாங்க. நான் எப்பவும் ஆம்பள பசங்களோடதான் விளையாடிட்டிருப்பேன். ஆனா பசங்களோட அதிகமா நான் ரொம்ப நல்லா விளையாடுறேன்னு என்ன டீம்ல எடுத்துகிட்டாங்க. என்கிட்ட அப்ப ஷூகூட கிடையாது. ஃபுட்பால் விளையாடனும்னா ஸ்கூல் ஒழுங்கா போனும்னு சொன்னாங்க. அப்புறம்தான் நான் கரெக்டா ஸ்கூல் போக ஆரம்பிச்சேன்.

சாலையோரத்தில் வசிக்கறதுல இருக்க பிரச்சினைகள் எல்லாம் என்னென்ன?
நிறைய பிரச்சனைங்க இருக்கு. என்னால மறக்க முடியாத ஒரு விஷயம் கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி நைட்டு தூங்கிட்டு இருக்கும்போது குடிபோதையில் வந்த லாரி டிரைவர் எங்களோட தூங்கிட்டு இருந்த ரெண்டு பேர ஏத்தி கொன்னுட்டான். அவங்க வேறு யாரும் இல்லை என் பெரியம்மாவும் அக்காவும்தான். காசு எதோ கொடுத்தாங்க. உயிரை திரும்பி கொண்டு வரமுடியுமா? எங்க உயிருக்கெல்லாம் அவ்ளோதான் மதிப்பு. வேறு ஒரு சமயம் நான் தூங்கிகிட்டு இருந்த போது என் கட்ட விரல்ல வண்டி ஏறி ஒரே ரத்தம், பயங்கர வலி. அந்த டிரைவர் ‘அறிவிருக்கா? ரோட்டோரத்தில் தூங்குனா வண்டி வெச்சி ஏத்தாம என்ன செய்வாங்கன்னு மோசமா திட்டினான். கை வலிச்சதோடு எந்த தப்பும் பண்ணாம அவன்கிட்ட திட்டு வங்கினதுதான் ரொம்ப வலிச்சுது.
பாத்ரூம் போறது ரொம்ப பெரிய பிரச்சனை. பொதுக்கழிப்பிடம் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும். நைட் 8 மணியோட பப்ளிக் டாய்லெட் மூடிடுவாங்க. ராத்திரி பாத்ரூம் போகணும்னாலும் பீரியட்ஸ் சமயத்துல பேட் மாத்தனும்னாலும் எங்கேயும் போகமுடியாது. காலையில ஆகற வரைக்கும் வெயிட் பண்ணனும். பகல்ல பாத்ரூம் போனாலும் யாராவது எட்டிப் பார்ப்பாங்க. போட்டோ வீடியோ எடுப்பாங்களோனு பயந்து பயந்துதான் போகணும். ரோட்ல வாழ்றதுல எந்தவித பாதுகாப்பும் இல்லனு எப்பவும் தோணும்.
நைட் தூங்கும் போது எவனாவது குடிச்சிட்டு வந்து பக்கத்துல படுத்துப்பானுங்க. அவங்கள வெரட்டி அடிக்கணும். நிறைய தப்பா நடந்துக்க முயற்சி செய்வாங்க. அந்த பிரச்சினைகளிலிருந்து எல்லாம் தப்பிச்சி வரணும்.
ஃபுட்பால் விளையாட்டு உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?
அதுவரைக்கும் வேறு மாநிலத்துக்கே போகாத நான் உலகக் கோப்பை ஃபுட்பால் மேட்சுக்காக ரெண்டு நாடுகளுக்கு போனேன். இரண்டாவது தடவை போகும்போது என் குடும்பத்துல எல்லாரையும் ஏர்போர்ட்டுக்கு உள்ள கூட்டிட்டு போனேன். அதெல்லாம் மறக்கவே முடியாது. முதல்முறை ஏர்போர்ட் போனபோது என்னை மீறி அழுதிட்டேன். அவ்வளவு சந்தோஷம். இரண்டு மேட்ச்லயும் வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிட்ட இடத்திற்கு அதாவது முப்பத்தைஞ்சு டீம்ல ஐஞ்சாவது இடத்துக்கு வந்திருந்தோம். ரொம்ப சந்தோஷமா இருந்தது.

வெளிநாட்டில் போய் விளையாடிட்டு வந்தபிறகு என்னவெல்லாம் மாறிடுச்சி?
அப்படிலாம் ஒன்னும் மாறிடல. சில நியூஸ் சேனலில் பேப்பர்லலாம் போட்டாங்க அவ்வளவுதான். காசுலாம் எதுவும் கொடுக்கல. அரசியல்வாதிங்க, எல்லாரையும் வெறும் ஓட்டாதான் பார்க்கிறாங்க. அங்க விளையாடிட்டு வந்த பிறகும் நான் தெருவுல பிளாட்பாரத்தில்தான் இருக்கேன். பிளாட்பாரத்தில்தான் தூங்குறேன். எந்த வேலையும் இல்ல. என்னதான் முன்னேறி வந்தாலும் ஏதாவது பெரிய ஆளுங்க சப்போர்ட் இருந்தால்தான் மேல வர முடியும்.
இந்த சமூகத்துக்கு நீங்க சொல்ல நினைக்கிறது என்ன?
முன்னமே சொன்னதுதான். தெருவோரம் வாழ்றது அவமானமில்ல. நாங்க அங்க பொறந்ததால அங்க வாழ்றோம் அவ்வளவுதான். அங்க இருக்குற எல்லோரும் மோசமானவங்க இல்லை. எல்லாரும் எங்கள அப்படித்தான் பார்க்குறாங்க. இங்கே நிறைய திறமையான குழந்தைங்க இருக்காங்க. ஆனா அவங்களால வெளில வர முடியல.
என்னென்ன அரசு திட்டங்கள் எங்களுக்காக இருக்குன்னு எங்களுக்கே தெரியாது. தொண்டு நிறுவனங்கள் உதவி செய்யலனா எங்க நிலைமையெல்லாம் இன்னும் மோசமா இருந்திருக்கும்.
கவர்மெண்ட் ஏதோ ஒதுக்குப்புறமாக எங்களுக்கு வீடு ஒதுக்குறாங்க. எங்கள் வாழ்வாதாரம் இங்க இருக்கும்போது நாங்க எப்படி வேறெங்கோயோ போக முடியும். வீடே கொடுத்தாலும் இவங்கல்லாம் பிளாட்பாரத்தில்தான் இருப்பானுங்கன்னு மக்கள் நினைக்கிறாங்க. ஆனா எங்க பிரச்சினைகளைப் புரிஞ்சுக்கரதுக்கு யாருமில்லை.
உங்க வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?
என்னோட விடுபட்ட படிப்பை படிச்சிடனும். எப்படியாவது ஒரு டிகிரி படிச்சிரனும். முன்னாடிலாம் எனக்கு ஐஏஎஸ் ஆகணும்னு ஆசை. இப்போ ஒரு டிகிரி படிச்சா போதும்னு இருக்கு. ஃபுட்பால் கோச் ஆகனும். என்னை மாதிரி இருக்கற நிறைய பேருக்கு கத்துத்தரனும். அவ்ளோதான்.

‘வாழ்த்துகள் சங்கீதா. உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறும்’ என்று வாழ்த்து செய்தியோடு உரையாடலை நிறைவுற்றேன். சாலை ஓரத்தில் வாழ்ந்து சாதனை படைத்தாலும் மீண்டும் சாலையோரத்திற்கே புறந்தள்ளப்படும் இவர்களின் அவல நிலையில் மாற்றம் வரப்போவது எப்போது? குரலற்றவர்களின் குரல் கேட்க வேண்டியவர்களின் காதுகளில் கேட்கப் போவது எப்போது?
குரலற்றவர்களின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரும்…
ஹேமா
4 comments on “கதையல்ல வாழ்வு – 6 “தெய்வம் தந்த வீடா வீதி ? “”
Rajaram
வலியான கட்டுரைதான். அரசே இதை கவனத்தில்கொண்டு இதற்கு வழி வகுக்க வேண்டும். அடிப்படை நிறைவு பெறாத மக்களுக்கு அரசே பொறுப்பு, அதற்குமேல் என்னதான் சாதித்தாலும் பயனில்லை. குடிசை மாற்று வாரியம் போல சாலையோரம் வசிப்பவர்களுக்கும் வழிவகை செய்ய வேண்டும்.
kumar
சிறப்பான கட்டுரை. மனதை ரொம்பவே பாதித்தது. சிறப்பான பயணமாய் ஒவ்வொரு வாரமும் பயணிக்கிறீர்கள். மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
Akila
'வலி'களால் வழி''தேடும் சாலையோரம் வசிக்கும் வறியவர்களைப் பற்றி வலியுடன் சொல்லியிருக்கிறீர்கள். மனம் கனக்கிறது. தொடருங்கள்...
mohamedfirthouse
மூன்று மாதங்களுக்கு பிறகு கால்களின்றி இரு உடல்களும் மீண்டும் அதே சாலையோரத்தில் உறங்கத் தொடங்கின. It give hope to me