ஹேமா
கைவிடப்பட்ட முதிய குழந்தைகள்
‘பெத்த மனம் பித்து. பிள்ள மனம் கல்லு’ என்ற சொல்லாடலை நாம் பலரும் கேட்டிருப்போம். நம் பெற்றோரிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். அவர்களுக்கு அக்கறையாக தினமும் தொலைபேசுகிறோமா அல்லது அடிக்கடி நேரில் சென்று பார்த்துக் கொள்கிறோமா? அவர்கள் நம்மைப் பற்றி பதறும் காரியங்களில் நாம் எவ்வளவு மெத்தனமாக இருக்கிறோம். அதையே நம் பிள்ளைகள் என்று வரும்போது நம் கவனம் எப்படி மாறுகிறது, நாம் எப்படி பதறுகிறோம் என்கிற வித்தியாசத்தை உற்று நோக்கும்போது இந்த பழமொழி எவ்வளவு சரியாக இருக்கிறது என்பது நமக்கு விளங்கும்.
வயதானவர்களிடம் இயல்பாகவே ஒரு குழந்தைமை குடி கொள்வதை நம்மால் பார்க்க இயலும். மனதளவில் அவர்கள் குழந்தைகளாகவே மாறிவிடுகிறார்கள். இந்தியாவிலே அதிக முதியவர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு என்கிறது அண்மையில் ஐ.நாவின் மக்கள்தொகை நிதியகம் நடத்திய ஆய்வு. இவ்வளவு முதியவர்களைக் கொண்ட மாநிலத்தில் முதியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது மகிழ்ச்சியாக நடத்தப்படுகிறார்களா என்ற கேள்வி மிக முக்கியமானது. சில நிஜ சம்பவங்களை மனதில் காட்சிபடுத்திப் பார்ப்போம்.
காட்சி 1 :
நாகர்கோவிலில் அது ஒரு அழகான கூட்டுக் குடும்பமாகத்தான் இருந்தது. அப்பா அம்மா இரண்டு மகன்கள் மருமகள்கள் பேரப் பிள்ளைகளென்று இருந்த குடும்பத்தில் அப்பா தவறினார். அம்மா மேலும் தளர்ந்து போனார். மூத்த மகன் வேலை மாற்றம் செய்து கொண்டு பெங்களூர் போனான். இளைய மகனாலும் மருமகனாலும் அம்மாவைப் பார்த்துக் கொள்ள இயலவில்லை. ஆறுமாதம் மூத்த மகன் வீடு ஆறு மாதம் இளைய மகன் வீடு என்று மாற்றி மாற்றி அம்மாவை வரவழைத்துக் கொண்டார்கள். பக்கவாதத்தில் விழுந்தார் அம்மா. அவரைப் பார்த்துக் கொள்வது மேலும் சிரமமானது இரு மகன்களுக்கும்.
‘இப்படியே போனா கருணைக் கொலைதான் செய்யனும்.’
‘என்னாலயும் வேலைய விட்டுட்டு இவங்கள பாத்துக்கிட்டு இருக்க முடியாது’
என்று மகன்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அம்மா கண்ணீர் சிந்தினார். இயலாமையில் பாத்ரூமிலிருந்த ஃபினாயிலை எடுத்துக் குடித்தார். உயிர் போகவில்லை. மேலும் படுத்த படுக்கையானார். உடலில் உணர்வும் உயிரும் மட்டுமே ஒட்டிக் கொண்டிருந்தன.
காட்சி 2:
பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வந்து முப்பத்தைந்து வருடங்கள் ஆகின்றன. ஐம்பெத்தெட்டு வயதில் வேறொரு இடத்திற்கு வந்திருக்கிறார் மஞ்சளா அம்மாவும் அவர் கணவரும். கணவரோடுதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி. இது சென்னை அரக்கோணத்தை தாண்டி அமைந்துள்ள ஒரு முதியோர் இல்லம். காற்று வசதியோடு செடி கொடிகளோடு காப்பகம் நன்றாகத்தான் இருந்தது. வாழ்ந்த வீட்டையும் குழந்தைகளையும் விட்டு வந்ததுதான் தாங்கமுடியாத துக்கமாக இருந்தது. முதியோர் காப்பகத்தில் பல முதியவர்கள் முதுமையோடு ஏக்கத்தையும் சுமந்திருந்தனர். வருடம் ஒரு முறை மகனும் மகளும் தங்களை வந்து பார்ப்பதாக உறுதியளித்திருந்தது நினைவிற்கு வந்தது. இவர்கள் வந்து சேர்ந்த இரண்டு வருடங்களில் ஒருமுறைகூட யாரும் வந்து பார்க்கவில்லை என்ற உண்மை சுளீரெனச் சுட்டது. வேலை வேலைக்கு உணவு, தங்கிக் கொள்ள படுக்கை என்று எந்த பிரச்சனையுமில்லை. ஆனால் உடல் உபாதைகளோடு பிள்ளைகளாலே கைவிடப்பட்டுவிட்டோம் என்ற உணர்வுதான் மனதை அழுத்தியது.
காட்சி 3:
திருவள்ளூரில் வீர ராகவன் தெருவில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு அந்த ஊர்மக்கள்தான் உதவி செய்து கொண்டிருந்தனர். அவர்கள் உதவியால் சில வேளைகள் உணவு கிடைக்கும். மருத்துவ வசதி கிடைக்கும் அளவுக்கு அந்த உதவி போதவில்லை. கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் யாரும் வெளியில் வரவில்லை. உணவோ வேறெந்த உதவியோ சரியாகக் கிடைக்கவில்லை. கொரோனாவால் முதியவர்கள் இருவருக்கும் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. ஐந்தாறு நாட்களாக முதியவர்கள் இருவரையும் காணவில்லை என்று பேசிக் கொண்டனர் தெருக்காரர்கள். அருகில் ஏதோ கெட்ட நாற்றம் அடிக்க அவர்கள் வீட்டை திறந்து பார்த்ததில் இருவரும் வீட்டிலேயே இறந்து அழுகிய நிலையில் இருந்தனர். அநாதைப் பிணங்களாக அவர்கள் எரியூட்டப்பட்டனர். அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர் என்பதும் பெற்றோர்கள் எங்கிருக்கிருக்கிறார்கள் என்பதைக் குறித்து அவர்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறியவற்றில் எதுவுமே கற்பனையில்லை. வயோதிகமும் நோயும் ஏழ்மையும் பெற்ற பிள்ளைகளிடமிருந்தே பெற்றோரைப் பிரித்துவிடுகிறதா? சொத்தைப் பிடுங்கிக் கொண்டு பெற்றோர்களை நடுத்தெருவில் விட்ட பிள்ளைகளும் உண்டு. அப்படி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மூத்த குடிமக்களுக்கான சொத்துரிமை பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் சொத்தை மீட்க முடியும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வயோதிகத்தைப் பெருஞ்சுமையாகப் பார்க்கும் பிள்ளைகளும் உண்டு. குழந்தைகள் நாம் சொல்வதை கேட்பதில்லை என்றாலும் நாம் செய்வதைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். பெற்றோர்களையும் மற்றவர்களையும் நாம் நடத்தும் விதத்தை அவர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விட இயலாது.
இதற்கு மறுபுறம் ஒன்றும் இருக்கிறது. முதுமையைக் காரணமாகக் காட்டி பிள்ளைகளிடம் சிடுசிடுவென்று பேசும் பெற்றோர்கள், பிள்ளைகளிடம் மிக அதீத எதிர்பார்ப்புடன் இருக்கும் பெற்றோர்கள், பிள்ளைகள் எவ்வளவு கவனித்துக் கொண்டாலும் குறை சொல்லும் பெற்றோர்கள், வயோதிகம் காரணமாக தன்னால் செய்யமுடியாததை மகளோ மருமகளோ செய்தால் ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் என்று இந்தப் பட்டியலும் நீளும். இப்படிப்பட்ட பெற்றோர்களைக்கூட சகிப்புத் தன்மையோடு கவனித்துக் கொள்ளும் நிறையப் பிள்ளைகளும் உண்டு.
மருத்துவ காப்பீடு கொண்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சுகாதாரமான நல்ல முதியோர் காப்பகங்கள் பல இடங்களில் முதியவர்களுக்காக செயல்படுகின்றன. ஆனால் பிள்ளைகளிடம், பேரன் பேத்திகளிடமிருந்து அன்பை எதிர்பார்க்கும் அந்த ஜீவன்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமானது. தன் வீட்டில்தான் தன் உயிர் பிரியவேண்டும் என்று ஆசைப்பட்டு ஏதோ ஒரு காப்பகத்திலோ மருத்துவமனையிலோ பிரிந்த உயிர்கள் ஏராளம்.
முதுமை என்பது உடலின் ஒவ்வொரு பாகத்திலும் பிரதிபலிக்கும் என்பது நமக்குத் தெரியும். முதியவர்கள் உடல்நலப் பிரச்சனைகள் மட்டுமல்லாமல் பல உளவியல் சிக்கல்களையும் எதிர் கொள்கிறார்கள். தோற்றத்தில், பழக்கவழக்கத்தில், நினைவாற்றலில், உடல் மற்றும் மன நிலையிலும் முதுமையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள்.
தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம் என்ற திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை ஆதரவற்ற முதியோர்களுக்காக வகுத்துள்ளது. அத்திட்டங்களை பொதுமக்களாகிய நாம் அறிந்து கொண்டு பயனடைய வேண்டும்.
1. முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
2) உழவர் பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
3) ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
4) கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
5) ஆதரவற்ற முதிர்கன்னி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
6) மாற்றுத் திறனாளி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
7) இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
8) இந்திரா காந்தி தேசிய விதவையர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
9) இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளி ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
10) இந்திரா காந்தி தேசிய கணவனால் கைவிடப்பட்டவர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்.
11) இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை திட்டம்
போன்ற பல திட்டங்களை அரசு வகுத்துள்ளது குறிப்பிட வேண்டிய செய்தி. ஆனால் இத்திட்டங்கள் பரவலாக அறியப் பட்டிருக்கிறதா அல்லது இத்திட்டங்கள் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கியமான கேள்வியாகவே உள்ளது.
கொச்சியின் காக்கநாட்டில் வசிக்கும் ரெஞ்சிமா குஞ்ஞுண்ணி தம்பதிகளோடு நடந்த உரையாடலின் ஒரு பகுதியைப் பார்க்கலாம்.
வணக்கம். இதுதான் உங்க சொந்த ஊரா? உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்க?
வணக்கம். ஆலப்புழா நான் பிறந்த இடம். கணவரின் ஊர்தான் கொச்சி. இங்கு வந்து ஐம்பது வருடங்களுக்கு மேலாகிறது. கணவர், நான், இரண்டு மகன்கள். இதுதான் எங்க குடும்பம். ஒரு பையன் யூ கே ல இருக்கான். இன்னொருத்தன் கத்தார்ல இருக்கான். மாசம் மாசம் சரியா பணம் அனுப்பிடுவானுங்க. கணவர் படுக்கையில போய் இன்னையோட மூன்றரை வருஷம் ஆகுது. நர்ஸம்மா வருவாங்க. டாக்டரும் மாசம் ஒருமுறை வந்து பாத்துப்பாரு.
மகன்கள் வந்து பாக்குறாங்களா?
பெரிய மகன் வந்து இரண்டு வருஷமாகுது. மூத்தவன் நாலு மாசத்துக்கு முன்னாடி வந்துட்டு போனான்.
மகன்கள ரொம்ப மிஸ் பண்றீங்களா?
எதுக்கு வாழ்றேனே தெரியல. பிள்ளைங்கதான் உலகம்னு இருந்துட்டேன். இப்ப பணத்தக் குடுத்து ஏஜென்சி மூலம் பாத்துகிறாங்க. அவரும் பேச்சில்லாம கிடக்கிறாரு. எனக்குப் பேச்சு துணைக்குக் கூட ஆளில்லை. அவங்க வர்ற நாளுக்காக காத்துக்கிட்டே இருப்பேன். இங்க அக்கம் பக்கமும் வீடுங்களெல்லாம் தூரமா இருக்கு. எனக்கும் ரொம்ப நடக்க முடியாது. இந்த வீடே கதினு இருக்கேன்.
அடிக்கடி பிள்ளைங்களோட சின்ன வயசு ஃபோட்டோவெல்லாம் எடுத்து பாத்துப்பேன். நானும் போய் சேந்துட்டா இந்த மனுசன் நிலைமை என்னான்னு நினைச்சாதான் பக்குனு இருக்கும். இப்பவே சாப்டியானு கேட்கக்கூட ஆளில்ல. கால் வலில ரொம்ப கஷ்டப்படுவேன். அப்போலாம் மகன்கள் தைலம் தேய்ச்சி மிதிச்சி விடுவானுங்க. இப்ப யாரும் என்னானு கேட்க நாதியில்ல. வயசானால் எல்லாருக்கும் இதான் நிலைமையானு தோணும்.
இதற்கு மேல் என்னால் அவர்களிடம் பேச இயலவில்லை. ஏக்கமும் கண்ணீரும் நோயும் முதுமையும் கலந்த அந்த தாயின் சொற்கள் நீங்காமல் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கும்போது நம் வீட்டு முதியவர்களின் நிலை என்ன என்பதை ஒரு கணம் நாம் திரும்பிப் பார்ப்போமேயானால், அவர்கள் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளைக் கூட அவர்கள் குழந்தைத்தனத்தைப் புரிந்து கொண்டு கடந்து சென்றோமானால் இக்கட்டுரையின் வெற்றியாக அதையே கருதுகிறேன்.
நம்மையும் வயோதிகம் ஒருநாள் வந்து சேரும். நம் பிள்ளைகளும் நம்மைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எளிய மனிதர்களின் வாக்குமூலமாக கதையல்ல வாழ்வு தொடரும்…
ஹேமா
3 comments on “கதையல்ல வாழ்வு – 7 “கைவிடப்பட்ட முதிய குழந்தைகள்””
kumar
மனதிற்கு மிக கனமான கட்டுரைதான், சந்தர்ப்பம் சூழல் என்று ஒரு பக்கம் நினைத்தாலும்...கண்டிப்பாக நாம் ஏதாவது காரணம் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். முடிந்தவரை தாய், தகப்பனோடான உரையாடல்களையாவது தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அதுவே அவர்களுக்கு மிகப் பெரிய ஆ
Rajaram
சிறப்பான கட.டுரை. எங்கள் வீட்டு நிகழ்வுகளை நினைத்துப் பார்க்க வைத்தது.
Akila
முதியவர்கள் நமக்கு வழிகாட்டிகள் எனும் எண்ணம் இளம் சந்ததியினர் மனதில் ஆணித்தரமாக ஊன்ற வேண்டிய கட்டாயம் தற்போது உருவாகியுள்ளதை இடித்துரைத்துள்ளீர்கள். நெகிழ்வான கட்டுரை.