வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
————————————————–
அன்சாரிகளின் தலைவர் சஅது (ரலி) அவர்கள் நபிகளாரிடம் கேட்டார் “நான் கூறக்கூடிய தீர்ப்பை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என்றார்கள்.
“ஆம் ஏற்றுக் கொள்கிறோம்” என்று நபி அவர்கள் கூறினார்கள்.
தலைவர் பனு குறைலாவிடம் கேட்டார்கள். “நான் கூறக்கூடிய தீர்ப்பை நீங்களும் ஏற்றுக் கொள்கிறீர்களா?”
உடனே அவர்களும் “கண்டிப்பாக நீங்கள் கூறக்கூடியத் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்” என்றார்கள்.
மதினாவின் தலைவர் சஅது ரலி அவர்கள் தீர்ப்பைச் சொன்னார்கள். “பனுகுறைலா ஆகிய உங்களின் ஆண்களுக்கு மரண தண்டனை விதிக்கிறேன்” என்று சொன்னார்கள்.
இதைக் கேட்டதும் பனு குறையிலா ஆடிப் போய்விட்டனர் நமக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வார் என்று நினைத்திருந்த வேளையில் இப்படி ஆகும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இனி ஒன்றும் செய்ய முடியாது. நபிகளார்க்கூட பேசி இருந்தாலாவது மன்னித்து இருப்பார்கள். இப்படி ஆகிவிட்டதே என்று நொந்து கொண்டார்கள். அவர்களுடைய மமதையே இதற்கு காரணமாக அமைந்தது.
இந்த செய்தி அரபு உலகில் இருந்த சிறு சிறு குழுக்களுக்கு எல்லாம் சென்று சேர்ந்தது. அவ்வளவுதான் இனி முஸ்லிம்களுக்கு எதிராக ஒன்று திரளுவதோ! அல்லது ஒன்று திரண்டவர்களுக்கு உதவி செய்வதோ! மிகப்பெரிய ஆபத்து! என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
இந்த வெற்றிக்குப் பிறகு அவர்களை எதிர்த்து வந்தவர்களுடன் சிறுசிறு சண்டைகளாக நடந்து கொண்டே இருந்தன.
ஹுதைபியா உடன்படிக்கை:
நபிகளாரின் வரலாற்றில் இந்த உடன்படிக்கை மிக முக்கியமானது.
மக்காவை விட்டு மதினாவிற்குச் சென்றவர்களை ‘முஹாஜிர்கள்’ என்று அழைப்பார்கள். அப்படி அவர்கள் மக்காவை விட்டு மதினாவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. வந்தவர்களுக்கு தங்கள் ஊரையும் தங்கள் சொந்தங்களையும் காண வேண்டும்! என்று மிகவும் ஆசைப்பட்டார்கள் அப்படிப்பட்ட சூழலில் நபிகளாரின் தலைமையில் ‘உம்ரா’ என்னும் புனிதப் பயணம் மேற்கொண்டார்கள்.
மக்காவில் இருக்கக்கூடிய புனிதப் பள்ளியான ‘காபா’தான் உலகின் முதல் பள்ளி. அதை தரிசிக்க உலகத்தின் பல நாடுகளில் இருந்து இன்றளவும் சென்று கொண்டிருக்கிறார்கள். காபாவிற்கு செல்லக்கூடியவர்கள் ஆயுதங்கள் ஏந்தி செல்லக்கூடாது, அங்கு சண்டை இடக்கூடாது, அங்கு வருபவர்களை தடுக்க கூடாது என்று பல சட்ட திட்டங்களை அன்று முதலே வைத்திருக்கிறார்கள்.
ஆகவேதான் மதினாவில் இருந்து நபிகளாரும் தோழர்களும் நிராயுதபாணிகளாக உம்ராவினுடைய ஆடையை உடுத்தி மக்காவிற்குச் சென்றார்கள்.
போகும் வழியில் நபிகளாருக்கு ஒரு செய்தி கிடைக்கிறது ‘மக்காவின் எல்லையில் காலித் பின் வலித் அவர்களின் தலைமையில் ஒரு படை தயாராக நிற்கிறது’ என்று.
இந்த செய்தியை கேள்விப்பட்டதும் நபி அவர்கள் உடனே தனது பாதையை மாற்றுகிறார்கள். அது மக்காவிற்குச் செல்லக்கூடிய கரடு முரடான கற்களும், முற்களும் நிறைந்த மலைப்பாதை. மிக சிரமப்பட்டு அந்த பாதையிலே கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட தோழர்களோடு சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு குன்றின் அருகிலே செல்லும் பொழுது 80 பேர் கொண்ட ஒரு எதிரி குழு மேலிருந்து இவர்களை நோக்கி அம்பெய்கிறார்கள். இதை சற்றும் எதிர்பாராத நபியவர்களும் “வேண்டாம் அவர்களோடு சண்டை வேண்டாம்” என்று சொல்லிவிட்டு “அவர்களை திருப்பித் தாக்காமல் பிடியுங்கள்” என்று கட்டளையிடுகிறார்கள்.
தோழர்கள் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்கிறார்கள். பிறகு நபியவர்கள் அவர்களிடம் கூறுகிறார்கள். “நாங்கள் மக்காவாசிகளிடம் சண்டையிடுவதற்காக வரவில்லை! எங்களது காபாவை தரிசிக்க புனிதப் பயணம் மேற்கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே எங்களை அனுமதிக்க வேண்டும்!” என்று சொல்லி அவர்கள் அனைவரையும் மக்காவிற்குத் திரும்பிப் போகச் சொல்கிறார்கள்.
அதைத்தொடர்ந்து இவர்கள் வருவதை அறிந்து கொண்ட மக்காவாசிகளும், நபிகளாரையும் தோழர்களையும் ஹுதைபியா என்னும் இடத்திலேயே தடுத்து நிறுத்துகிறார்கள்.
பல கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபடுகிறார்கள். மதினாவாசிகளோ “நாங்கள் புனிதப் பயணம் தான் மேற்கொள்ள வந்திருக்கிறோம் எங்களை நீங்கள் அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
மக்காவாசிகளோ “நீங்கள் ஊருக்குள் வரக்கூடாது” என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.