தொடர்கதை : காதலின் தீபம் ஒன்று

அத்தியாயம் – 8

முந்தைய அத்தியாயங்களை வாசிக்க

அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2

அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7

ழுது அரற்றிக் கொண்டிருந்த சங்கரியை சமாதானப்படுத்திவிட்டுக் கூட வரக் கிளம்பிய தீப்தியை, “நீ வந்தா சிக்கலாயிடும்மா”, என்று தடுத்துவிட்டு காவல் நிலையத்துக்கு விரைந்தார் சரண் அப்பா.

இருக்கும் மனநிலையில் காரை சரியாக ஓட்ட முடியுமா என்று சந்தேகமாக இருந்தது.

பேசாமல் ஒரு ஆட்டோ பிடித்துப் புறப்பட்டார். மேடு பள்ள சாலையில் ஆட்டோ தடதடத்தது. ஆட்டோவைப் போலவே அந்த தந்தையின் மனமும் தடதடத்தது.

தடதடப்பின் ஊடே தன் அலைபேசியை எடுத்து அவரின் நிறுவனத்தின் வியாபார விவகாரங்களை கவனிக்கிற வக்கீல் சாரங்கனின் எண்களை அழுத்தினார். ரிங் போனது எடுக்கவில்லை.

மறுபடியும் முயற்சித்தார்.

அழைப்பு எடுக்கப்படவில்லை.

அவருக்குப் பதற்றம் கூடிக் கொண்டே போனது.

“கொஞ்சம் வேகமா போப்பா” என்றவரை காவல் நிலைய வாசலில் உதிர்த்துவிட்டுப் பறந்தது ஆட்டோ.

படி ஏறி உள்ளே நுழைந்தவரை உலுக்கியது அந்தக் காட்சி.

சரணை லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தார்கள்.

“சரண்” கதறியபடியே லாக்கப்பை நோக்கி ஓடினார்.

“அப்பா” சரணும் கதறினான்.

தன்னால் அப்பா காவல் நிலையம் வரை வந்து நிற்க வேண்டி வந்தது ஒரு மகன் மனதுக்கு மகிழ்ச்சியை தருகிற விஷயம் இல்லை.

“யோப் பெருசு. மகனை அப்புறம் கொஞ்சிக்கலாம். இப்டி வா”, நாற்காலியில் அலட்சியமாக சரிந்திருந்த இன்ஸ்பெக்டர் கை நீட்டி சரண் அப்பாவை அருகே அழைத்தார்.

“இன்ஸ்பெக்டர் என் பையனை எதுக்கு லாக்கப்பில் வச்சிருக்கீங்க? என்ன தப்பு செஞ்சான் அவன்?”

“முதல்ல உக்காரு பெருசு.”

“நீங்க முதல்ல என்னைப் பெருசு பெருசுன்னு சொல்லாதீங்க. ஐ ஹாவ் அ நேம். கால் மீ மை நேம்.”

“உனக்கு மரியாதை வேணுமா? மகன் வேணுமா?”

இன்ஸ்பெக்டரின் கேள்வியில் எகத்தாளம்.

“உன் புள்ளை நல்லதுக்குதான் சொல்றேன். முதல்ல உக்காரு.”

நாற்காலி நுனியில் பேருக்கு அமர்ந்தார் சரண் அப்பா.

“இங்கப் பாரு. அந்தப் பொண்ணோட அப்பா சிவில் கான்ட்ராக்டராம். கவர்மெண்ட்டு பாலம்லாம் அவர்தான் கட்றாராமே? பாலத்தோடு சேர்ந்து மந்திரிக்கு, அதிகாரிங்களுக்கெல்லாம் கப்பமும் கரெக்டா கட்டிடுவாராம்.”

“மிரட்றீங்களா இன்ஸ்பெக்டர்?”

நாற்காலியை உதைத்து தள்ளிவிட்டு ரௌத்திரத்தோடு எழுந்தார் இன்ஸ்பெக்டர். ரெண்டே எட்டில் லாக்கப்பை நெருங்கினார்.

சரணைப் பிடித்து இழுத்து வெளியேப் போட்டார். கீழே கிடந்தவன் வயிற்றில் எட்டி உதைத்தார். “அம்மா..” வலியில் அலறினான் சரண்.

“இதுதான் மிரட்டல். இன்னும் மிரட்டவா?”

இன்ஸ்பெக்டர் காலை ஓங்க, சரண் அப்பாவின் மொபைல் ஒலித்தது.

ஓங்கிய காலை மடக்கிக்கொண்டு மேஜையில் அமர்ந்தார் இன்ஸ்பெக்டர். “எடுத்துப் பேசு.”

பேசினார் சரண் அப்பா. அது வக்கீல் சாரங்கன்.

“சாரங்கன். இங்க நம்ம சரணை… லாக்கப்பில்..” வார்த்தைகள் கோர்வையற்றுப் பேசினார் சரண் அப்பா.

“யாரு வக்கீலா?” இன்ஸ்பெக்டர் கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு பதிலை எதிர்பார்க்காமல், “போனை ஸ்பீக்காரில் போடு.” அதட்டினார்.

“ஹலோ இன்ஸ்பெக்டர். காரணம் இல்லாமல் என் க்ளையண்ட் சன் சரணை ஸ்டேஷனில் வச்சிருக்கீங்க? முதல்ல அந்தப் பையனை அவன் அப்பாவோட அனுப்பி வைங்க.”

“யோவ் வக்கீலு. முதல்ல உன் பிரசங்கத்தை நிறுத்து. இது கோர்ட் இல்லை. போலீஸ் ஸ்டேஷன். புரியுதா?”

“அப்புறம் காரணம்தானே கேட்டே? அப்பாவும் புள்ளையுமா சேர்ந்து அடுத்த வீட்டு வயசுப் பொண்ணைக் கடத்திக்கிட்டு வந்து அவுங்க வீட்ல வச்சிருக்காங்க. பொண்ணை அதோட வீட்டுக்கு அனுப்ப சொல்லு. நான் இவுங்களை அனுப்பி வச்சிடறேன். இல்லேன்னா அப்பாவுக்கும் மகனுக்கும் லாடம்தான்.”

“அந்தப் பொண்ணு தீப்தி எனக்கு தெரியும் சார். ஃபேமிலி ஃப்ரெண்ட். சரணும் தீப்தியும் லவ்வர்ஸ் சார். நீங்க புரியாம…”

வக்கீல் சாரங்கன் குரல் அலைபேசியின் ஒலிப்பெருக்கி வழியே வழிந்தது. ஆனால் அதில் ஒரு வார்த்தை கூட இன்ஸ்பெக்டரின் காதுகளை சென்றடையவில்லை.

அலைபேசியை அள்ளிக் காதில் வைத்துக்கொண்டார் அந்த இன்ஸ்பெக்டர்.

“இங்கப் பாரு லாயரு. பெரிய இடத்து சமாச்சாரம். இதோட விட்டா தப்ச்சீங்க. இல்லேன்னா பையன் குறைஞ்சது நாலு நாளைக்கு லாக்கப்பில்தான் கிடக்கணும். ஒரு நாள் ஸ்டேஷனில் கிடந்தாலே என்னாவும்னு உனக்குத் தெரியும்ல? பையனுக்கு உயிர் இருக்கும். உறுப்பு இருக்காது. ஆமா சொல்லிட்டேன். நீயே உன் க்ளையண்ட்டுக்கு எடுத்து சொல்லு.”

ஸ்பீக்கர் போனை அணைத்துவிட்டு அலைபேசியை சரண் அப்பாவின் கைகளில் திணித்தார் இன்ஸ்பெக்டர்.

நடுங்கியபடியே அதை வாங்கிய சரண் அப்பா, “ஹலோ சாரங்கன்..”

அந்தப் பக்க சாரங்கன் என்ன சொன்னாரோ? ஏது சொன்னாரோ? சரண் அப்பாவின் முகம் கருத்துப் போனது.

கடைவாயில் ரத்தம் ஒழுகக் கிடந்த சரணைப் பார்க்கப் பார்க்க அப்பாவின் வேதனை அதிகரித்தது.

சரண்தான் பேசினான்: “அப்பா நீங்க வீட்டுக்குப் போங்க. தீப்தி நம்ம வீட்லயே இருக்கட்டும். அப்டி என்னதான் செஞ்சிடுவாங்க இவங்க? பாத்துக்கலாம்.”

“டேய்.. உன்னை…”, மறுபடியும் எகிறிய இன்ஸ்பெக்டரை நிறுத்தியது அவரது அலைபேசி. சரணை விடுத்து அலைபேசியை எடுத்தார். “ஹலோ. ம். ம்… ஓகே… சரி.”

எதிர்முனையில் யார் பேசியது? தெரியவில்லை. என்னப் பேசினார்கள் அதுவும் தெரியவில்லை. ஆனால் பேச்சு முடிந்ததும் தன் நாற்காலியில் சென்று அமர்ந்த இன்ஸ்பெக்டர் கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை.

பிறகு, “சரி. கிளம்புங்க. நீங்க வீட்டுக்குப் போலாம்.”

“என் மகனை இங்கே விட்டுட்டு நான் போக மாட்டேன்”, சரண் அப்பா அழுத்தமாக சொல்ல,

“அட, உன் மகனையும்தான் கிளம்ப சொல்றேன். யாரும் எதுவும் மனசு மாறி எதுவும் செய்யுறதுக்குள்ள இடத்தை காலி பண்ணுங்க முதல்ல.”

இன்னும் கோபத்தில் இருந்த சரணை, ஏதோ சொல்லப் போன அவனை கண்களாலேயே அமர்த்திய அப்பா, கைகளைப் பிடித்து அவனைக் காவல் நிலையம் விட்டு வெளியே அழைத்து வந்தார்.

இரத்தக் கறையுடன் இருக்கும் சரணைப் பார்த்தால் சங்கரி எப்படி தாங்குவாளோ? யோசித்தபடியே காலியாக வந்த ஆட்டோவை கைகாட்டினார் அப்பா.

ஆட்டோ புறப்பட்டதோ இல்லையோ, “ஸாரிப்பா” அப்பாவின் தோள்களில் சாய்ந்தான் சரண். “என்னாலதானே இதெல்லாம்?” அவன் கன்னத்தில் இருந்த இரத்தக் கறையோடு கண்ணீர்க் கறையும் சேர்ந்துகொண்டது.

அப்பாவுக்கும் கண்கள் கரிததன. “எதுக்கு சரண் ஸாரி? நாந்தான் உனக்கு ஸாரி சொல்லணும்.”

தூசு தும்பு பட்டாலும் உறுத்துமோ வலிக்குமோ என்று பார்த்துப் பார்த்து வளர்த்த மகன் அடியும் உதையும் வாங்குவதை தடுக்க முடியாத தன் இயலாமையை அப்பா ரொம்பவே வெறுத்தார்.

அப்பா தழுதழுப்பதை கவனித்த சரண் மேற்கொண்டு எதுவும் பேசி அவரை வருத்தப்படுத்த விரும்பவில்லை. மௌனமாக இருந்துவிட்டான்.

வீடு நெருங்குகையில் சரண்தான் கேட்டான். “அப்பா, அம்மாகிட்ட…”

“நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீயும் எதுவும் சொல்ல வேண்டாம். அவ தாங்கமாட்டா.”

ஆனால், ஆட்டோ வாசலில் நின்றதும்தான் தாமதம். கேட்டருகிலேயே காத்துக் கொண்டிருந்த சங்கரி ஓடோடி வந்தாள்.

தடுமாறியபடி ஆட்டோவை விட்டு இறங்கிய சரணைப் பார்த்ததும் உடனடியாக உடைந்தாள். “என்னடா சரண் இது? என்னடா ஆச்சு?”

“அது ஒண்ணுமில்லைம்மா. ஒரு சின்ன ஆக்சிடெண்ட்.”

“சின்ன ஆக்சிடெண்ட்டுங்கிற? இப்டி அடிபட்டிருக்கு? முகமெல்லாம் வீங்கி… இரத்தம் இன்னும் வருதேடா? இரண்டு விநாடிகளில் மகனின் முகத்தை இருபது தடவைகள் வருடினாள் அந்த அம்மா.

“சொல்றேன்லம்மா? சின்னக் காயம்தான். நீ முதல்ல உள்ளே வா. ஆமா, தீப்தி எங்கே?’

“அது அவ..” சங்கரி தயங்கவும், வீட்டுக்குள் செல்ல முன்னே வைத்த தன் காலை பின்னே இழுத்துக் கொண்டான் சரண். “எங்கேம்மா தீப்தி?” மீண்டும் விசாரித்தான்.

ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து அனுப்பிவிட்டு அங்கே வந்த அப்பா, “முதல்ல உள்ளே போலாம் சரண். வாசல்லியே என்ன விசாரணை? பாரு உன் காயத்துக்கெல்லாம் மருந்து போடணும். உள்ளே வா.”

சரணோ நின்ற இடத்திலே சிலையாக நின்றான்.

“முதல்ல தீப்தி எங்கேன்னு அம்மாவை சொல்ல சொல்லுங்க. நான் அப்புறம் உள்ளே வர்றேன்..”

“அவ போய்ட்டா”, என்றாள் சங்கரி தடாலென்று.

“போய்ட்டாளா? எங்கே?” சரணிடம் தவிப்பு.

“தெரியாது.”

“தெரியாதா? என்னம்மா சொல்றே? எங்கே போறேன்னு கேட்க வேண்டியதுதானேம்மா?”

“கேட்டேன். அவ சொல்லலை.”

“நான் வர்றதுக்குள்ளே அவளை ஏம்மா போகவிட்டே?”

“தீப்தி அப்பாகிட்டேருந்து போன் வந்தது அவளுக்கு. எடுத்துப் பேசினா உடனேயே கிளம்பிட்டா.”

“அவளோட அப்பா, அந்தாளு தீப்தியை எங்கிட்டேருந்து அப்புறப்படுத்துறதுலியே குறி. மிரட்டியிருப்பான் தீப்தியை. அதான், அவள் அவளோட வீட்டுக்கு கிளம்பியிருப்பா. நான் போய் கூட்டிட்டு வரேன்”, சரண் ஏறிய வீட்டு வாசல்படியை விட்டுக் கீழே இறங்கினான்.

“சரண், பெருசு படுத்தாதேப்பா விஷயத்தை. எதையும் நிதானமா யோசிச்சு செய்யலாம்.”

“பயப்படுறீங்களாப்பா?”

“அதில்லை சரண். ஏற்கெனவே லாக்கப் கடத்தல்னு இப்டி போலீஸ்காரங்க்கிட்ட அடி வாங்கிட்டு நிக்கிறே? இன்னும் மேல மேல எதுக்குடா வம்பு?”

அப்பா தன் பேச்சை முடிப்பதற்குள்ளாகவே, “லாக்கப்பா? அடி உதையா?”, சங்கரி கதறினாள். “என்னடா சொல்றார் உங்கப்பா? உண்மையா?” மகனைப் பிடித்து உலுக்கினாள் சங்கரி. “போலீஸ் உன்னை அடிச்சாங்களா?”

“ஆமாம் சங்கரி. என் கண்ணு முன்னாலேயே… நம்ம புள்ளையை…” குலுங்கியது அப்பாவின் சரீரம்.

“அய்யோ கடவுளே”, நெஞ்சில் கையை வைத்துக்கொண்டாள் சங்கரி.

“இப்ப மறுபடியும் அந்த ரவுடி வீட்டுக்குப் போறேன்னு நிக்கிறானே?” அப்பா தலையைப் பிடித்துக்கொண்டார்.

“அதுக்காக? தீப்தியை எப்டிப்பா விடுறது? நான் போய்..” சரண் படிகளை விட்டுக் கீழிறங்க,

“வேண்டாண்டா சரண்”, ஒரு பக்கம் அப்பா அவன் தோளைப் பிடித்து தடுத்தார்.

“சரண், வேணாம்ப்பா”, மறுபக்கம் அவன் கைகளைப் பிடித்துக்கொண்டாள் அம்மா.

“எனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு நீங்க பயப்படுறீங்க. தீப்திக்கு ஏதாவது ஆகிடுமோன்னு நான்… என்னை என்னப்பா செய்ய சொல்றீங்க?” சரண் உருகினான்.

அப்பாவையும், அம்மாவையும் மெதுவாக விலக்கிவிட்டு வாசலை விட்டு இறங்கினான். அவனுக்கு முன்னால் அவனது காதல் மனசு தீப்தி வீட்டு வாசலுக்கு சென்று நின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *