அத்தியாயம் – 3
கல்பனா சன்னாசி
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :
*******************
என்ன பிரச்சினைகள்… என்ன சிக்கல்கள் வந்தாலும் செய்ய வேண்டிய வேலைகள் யாரையும் விட்டு வைப்பதில்லை.
விடாமல் துரத்தியடிக்கும்.
அப்படித்தான் இருந்தது அஷோக்கிற்கும்.
கோர்ட் கேஸ் என்று முந்தின நாள் மண்டையை பிளக்க வைத்தன கவலைகள்.
அதற்கு அடுத்த நாள் திறக்கப்பட வேண்டிய அவன் கம்ப்யூட்டர் சர்வீஸ் கடை அவனை துரத்தியது.
இரவு முழுவதும் தூங்கவில்லை அவன்.
கண்கள் எரிந்தன.
உடல் முழுக்க ஒரு வித அயர்ச்சி.
மனம் சோர்ந்தால் உடலும் சேர்ந்து சோர்ந்து போகத்தானே செய்கிறது.
அசதியையும் களைப்பையும் தூக்கி மூட்டை கட்டி தூரத்தில் போட்டான்.
கடைக்கு கிளம்பினான்.
“அப்பா, போய்ட்டு வரேன்.”
“சாப்பிடாம போறியேப்பா? கொஞ்சம் இரு. பிரெட் டோஸ்ட் பண்ணித் தரேன்.”
“இல்லப்பா. பசியில்லை. வேண்டாம்.”
“ராத்திரி கூட சாபிடலியேப்பா நீ..?”
“இருக்கட்டும்ப்பா. பரவாயில்லை.”
“வழியில ஹோட்டல்லியாவது ஏதாவது சாப்பிட்டுக்க அஷோக்.”
“ம்.”
ஒற்றை எழுத்தில் பதில் சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டான் அஷோக்.
அப்பாவிடம் பசியில்லை என்று சொல்லிவிட்டானே தவிர வயிறு நம நமவென்றது.
ஏகத்துக்குப் பசித்தது.
சுப்ரியா வீட்டில் இருந்தவரை அவனுக்குப் பசியின் வாசனை தெரியாமல்தான் இருந்தது.
தாமதமில்லாமல் உணவு தயாராகிவிடும் சுப்ரியா இருந்தால். சமையலின் ருசி ‘ஆஹா’ “ஓஹோ” என பாராட்ட சொல்லும் ரகம்.
பாதகி..! குணம் எப்படி இருந்தாலும் சுவையாக சமையல் செய்வதில் கெட்டிக்காரி.
எதில்தான் அவள் கெட்டிக்காரி இல்லை? எல்லாவற்றிலும்தான். கெட்டிக்காரி மட்டுமா? பலே கைகாரி கூட.
ஏதேதோ எண்ணமிட்டபடியே வாசல் கதவைத் திறந்து வெளியேற முற்பட்டான் அஷோக்.
அடைத்துக்கொண்டு நின்றிருந்தாள் மீனாட்சி அத்தை.
“அசோக்கு! நல்ல வேளை. நீ வீட்டுல இருக்கே… உன்னையத்தான் பாக்க வந்தேன் நான்.”
திகைத்தான் அஷோக்.
‘என்னைப் பாக்கவா வந்திருக்கிறார் இவர். இன்று நான் கடைக்குப் போன மாதிரிதான்…’
“என்ன அசோக்கு? அப்டியே திகைச்சுப் போயிட்டே? அத்தையை வான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?”
“வா… வாங்க.”
அதற்குள் அரவம் கேட்டு அங்கே வந்தார் சுந்தரேசன்.
“அடடே! மீனாட்சியா? வா.. வா.. வா.. சௌக்கியமா இருக்கியா? வீட்ல எல்லாம் நல்லா இருக்கங்களா?”
சுந்தரேசனின் சித்தப்பா மகள் மீனாட்சி. அவருக்கு தங்கச்சி முறை. அஷோக்கிற்கு அத்தை.
“எல்லாம் சௌக்கியமா இருக்காங்க. ஆமா, நான் ஒரு நல்ல சேதி கேள்விப்பட்டேன். நிசமா?”
“எதை சொல்றே..?”
“நம்ம அசோக்கு விவாகரத்துக்கு கேஸு கொடுத்ருக்காமே? நெசமாவா?”
“ஆமாம் மீனாட்சி. நிஜம்தான். நேத்து கூட கோர்ட்டுக்குப் போயிருந்தோம்.”
அசௌகரியமாக உணர்ந்தான் அஷோக்.
“நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் கடைக்கு கிளம்பறேன்.”
“அட இரு அசோக்கு. உங்கிட்ட ஒரு முக்கியமான சமாச்சாரம் பேசணும். அதுக்குள்ளே கிளம்பறியே?”
புறப்பட யத்தனித்த அஷோக் பேசாமல் உட்கார்ந்துவிட்டான்.
தொடர்ந்தாள் மீனாட்சி.
“அசோக்கு, உன்னைப் புடிச்ச சனியன் உன்னை விட்டுதுன்னு நினைச்சிக்க. இனிமே உனக்கு நல்ல காலம்தான். இனிமேதான் உனக்கு வாழ்க்கையே இருக்கு. ஆனா ஒரு விஷயம். நீ எதையும் டிலே பண்ணக் கூடாது. சூட்டோட சூடா முடிச்சிடணும். என்ன நான் சொல்றது?”
மீனாட்சி அத்தை எதைப்பற்றிப் பேசுகிறாள் என்று அஷோக்கிற்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை.
தன் சந்தேகத்தை கேள்வியாக்கினான்.
“நீங்க என்ன சொல்றீங்க அத்தை? எனக்கு ஒண்ணுமே புரியலை.”
“ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க அசோக்கு. பொண்ணு ஏற்கனவே பாத்து வச்சிருக்கேன் நான் உனக்காக” கிசுகிசுத்தாள் மீனாட்சி அத்தை.
அதிர்ந்தான் அஷோக்.
விவாகரத்தே இன்னும் முடியவில்லை. அதற்குள் இந்த அத்தை என்ன இப்படி பேசுகிறார்?
“பொண்ணு வீட்ல உன் விவரம் எல்லாம் சொல்லியாச்சு அசோக்கு. அவுங்க ஓகேன்னு சொல்லிட்டாங்க. கேஸு முடியறப்ப முடியட்டும். நாம போய் பொண்ணைப் பாத்துட்டு வந்துடலாம்.”
“இல்லத்தை.. அது… வந்து…”
“நீ ஒண்ணும் சொல்ல வேணாம். பேசாம எங்கூட வா. பொண்ணைப் பாரு. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்.”
“கேஸு முடியாம எப்டி அத்தை?”
“பொண்ணு கொடுக்கிறவங்களே ஓகேன்னு சொல்லும்போது நீ ஏன் அநாவசியமா யோசிக்கிறே? ஒண்ணு மட்டும் சொல்றேன், மனசுல வச்சிக்க. நீ சீக்கிரமா இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டாதான் அந்த ராங்கிக்காரி, அதாம்ப்பா உன் மொத பொண்டாட்டி சுப்ரியா, அவளுக்கு புத்தி வரும்.”
கேட்டுக் கொண்டிருந்த சுந்தரேசன்,
“உன் அத்தை சொல்றது சரிதான் அஷோக். சீக்கிரமா உன் ரெண்டாவது கல்யாணத்தை முடிச்சிடலாம். அதுதான் அந்த சுப்ரியாவை செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும்” – மீனாட்சியின் பேச்சுக்கு தூபம் போட்டார்.
அத்தை, அப்பா இருவரும் மாறி மாறி வேப்பிலை அடிக்க, மந்திரிச்சு விட்டது போல் ஆகிப்போனான் அஷோக்.
ஆமாம். அந்த சுப்ரியாவின் முகத்தில் கரியைப் பூச இதுதான் சரியான வழி.
நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“சரி அத்தை. பொண்ணு பாக்க நான் ரெடி.”
நன்றி : படம் இணையத்திலிருந்து
சனிக்கிழமை ‘காதல் திருவிழா’ தொடரும்
2 comments on “தொடர்கதை : காதல் திருவிழா”
rajaram
பொண்ணு பாக்க ரெடியா? அடுத்து என்ன ட்விஸ்ட்டு இருக்குனு தெரியலையே?
Kalpana Sanyasi
தொடரும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றிகள் சார்! அன்புடன் - கல்பனா சன்யாசி