அத்தியாயம் – 7
கல்பனா சன்னாசி
முந்தைய அத்தியாயங்கள் வாசிக்க :
அத்தியாயம்-1
அத்தியாயம்-2
அத்தியாயம்-3
அத்தியாயம்-4
அத்தியாயம்-5
அத்தியாயம்-6
அன்றைக்கு மதிய உணவைத் தனியாக சாப்பிட வேண்டியதாயிற்று சுப்ரியாவுக்கு.
நிஷாவை கல்லூரிப் பக்கம் ஒரு வாரமாகவே காணோம். உடம்பு சரியில்லையாம்.
அவள் உடனிருந்தால் தக்காளி சாதம், உருளைக் கிழங்கு வறுவலும் சுவை இன்னும் கூடியிருக்கும்.
கேரியரை மூடிவிட்டு கையைக் கழுவினாள்.
அலைபேசி ஒலித்தது.
அதில் புதிய எண்கள் பளிச்சிட்டன.
யாராக இருக்கும்..? என்ற யோசனையுடன் போனை எடுத்துக் காதில் ஒற்றினாள்.
“ஹலோ.”
“ஹலோ… நான் அஷோக் பேசறேன். நீங்க சுப்ரியாதானே..?”
அட… அஷோக்..! இவன் எதற்கு நமக்கு போன் செய்கிறான்..?
நிஷாவின் கடற்கரையோர வீட்டின் விலாசம் கேட்கிறானோ..?
அன்று கடையில் நிஷாவுடன் அவன் அடித்த அரட்டை ஞாபகம் வர, சட்டென ஒரு கோபம் பரவியது சுப்ரியாவுக்குள்.
அதே கோபத்துடன், “எனக்கு எதுக்கு நீங்க போன் பண்றீங்க..?”
அவளின் எரிச்சல் கண்டு எரிச்சலானான் அஷோக்.
“விஷயம் இல்லாம உங்களுக்கு போன் பண்ண நான் என்ன உங்க பாய் பிரெண்டா..?” அவனும் அதே சூட்டோடு பதிலுக்குக் கேள்வி கேட்டான்.
அவனின் அந்தக் கேள்வியால் மேலும் சூடானாள் சுப்ரியா.
“இப்ப எதுக்கு பாய் பிரெண்ட் அது இதுன்னு அநாவசியப் பேச்சு..? எனக்கிது சுத்தமா பிடிக்கலை…” கடுகடுத்தாள்.
“ஏங்க விஷயத்தை கேக்காம இப்டி கோபப்படுறீங்க..?”
“சரி… விடுங்க. என்ன விஷயம்ன்னு சொல்லுங்க.”
“உங்க பிரெண்ட் நிஷா, லேப்டாப்பை இன்னும் வந்து வாங்கிக்கவே இல்லை. போன் பண்ணா எடுக்க மாட்டேங்கிறாங்க. அதான் பழைய பில்லிலேருந்து நம்பர் பாத்து உங்களுக்கு போன் பண்றேன்…”
“ஓ அதுவா… சாரிங்க ஏதோ ஞாபகத்துல கோபமாக் கேட்டுட்டேன்… அவளுக்கு உடம்பு சரியில்லைங்க. காலேஜுக்கும் நாலு நாளா வரலை.”
“எந்த காலேஜ்..?” என்றான் ஆவலாய்.
கிடைத்த வாய்ப்பில், நிஷாவைக் கேட்கும் சாக்கில், சுப்ரியா குறித்த தகவலுக்கு அடி போட்டது அஷோக்கின் வாலிப ஆண்மகன் ஆர்வம். அதைப் புரிந்து கொண்டது சுப்ரியாவின் உள்மனம்.
லேசாகப் புன்னகைத்தபடி “நேஷனல் காலேஜ். அங்கதான் நானும் நிஷாவும் வொர்க் பண்றோம்.” என்றாள்.
“ஓஹோ..”
“எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் நிஷாவுக்கு போன் பண்ணிட்டு உங்களுக்கு லைனில் வரேன்.”
“ஓகே..”
நிஷாவோ, தொலைபேசியிலேயே இருமினாள்… தும்மினாள்… மூக்கை உறிஞ்சினாள்.
“என்னால முடியலடி… ப்ரியா இருந்தா லேப்டாப்பை நீயே போய் வாங்கிட்டு வந்துடுடி ப்ளீஸ்…” என்பதற்குள் இருமலும் தும்மலும் போட்டி போட்டன.
“சரிடி… நீ உடம்பைப் பாத்துக்கங்க… ஈவினிங் நான் வாங்கிட்டு வர்றேன்”
***
“ராத்திரி 10 மணி வரைக்கும் கடை இருக்கும் சார். அதுக்கு முன்னாடி எப்ப வேணா வாங்க” என்றுவிட்டு அலைபேசியை உதறிய அஷோக், வாசல் கதவு திறக்கப்படுவதை உணர்ந்து அனிச்சையாகத் திரும்பினான்.
திரும்பியவன் உடனடியாக ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சிக்குப் போனான்.
சுப்ரியா…!!
உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள்.
இள நீல சுடிதார் செட்டில் அவளைப் பார்ப்பதற்கு வானத்தில் இருந்து நேரே பூமிக்கு வந்துவிட்ட ஒரு தேவதை போல் தோன்றியது அஷோக்கிற்கு.
நிஜமான ஆவலோடு புன்னகைத்தான்.
“வாங்க.”
“நிஷாவால் வரமுடியலை. அதான் அவ லேப்டாப்பை நான் வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்.”
“ம்.. நிஷா எனக்குப் போன் பண்ணி நீங்க வருவீங்கன்னு சொன்னாங்க. அவங்களுக்கு உடம்பு சரியில்லையாமே..? இப்ப எப்டி இருக்காங்க..?”
நிஷாவின் மீதான அஷோக்கின் அக்கறை சுப்ரியாவுக்கு அவ்வளவாகப் பிடித்தமாக இல்லை.
“ம்.. நல்லாருக்கா..” முணுமுணுத்தவள், “லேப்டாப்பை தர்றீங்களா..?”
“இதோ… ரெசிப்ட்டைக் கொடுங்க..?”
“ரெசிப்ட்டா..? என்ன ரெசிப்ட்..?”
“என்னங்க இப்படிக் கேக்குறீங்க… வேலைக்குக் கொடுத்தா ரெசிப்ட் கொடுப்போமுல்ல… லேப்டாப்பை என் கிட்ட கொடுக்கும்போது நான் கொடுத்தேனே..? அந்த ரெசிப்ட்… அதை அவங்க கொடுத்து விடலயா..?”
“இல்லையே. அ.. அது… நிஷாகிட்டயில்ல இருக்கு…”
“ரெசிப்ட் இல்லாம லேப்டாப்பை எப்டி கொடுக்கிறதாம்..?” குறுக்கே வந்தான் கடைப் பையன்.
“ஸாரி. ரசீப்ட் வாங்கிட்டு வர மறந்துட்டேன். இன்ஃபேக்ட் நான் நிஷாவைப் பாக்கவே இல்லை. லேப்டாப்பை வாங்கிட்டுப் போலாம்னு இருந்துட்டேன்.”
“பரவாயில்லை விடுங்க. தெரிஞ்சவங்களாயிட்டீங்க. உங்களுக்கு இந்த உதவி கூடப் பண்ணலைன்னா எப்படி..?”
நிஷாவின் லேப்டாப் சுப்ரியாவிடம் வந்தது. பணத்தையும் கட்டி முடித்தாள்.
“தாங்க்யூ” சார் என்று சொல்லப் பிடிக்காமல் இருந்த சுப்ரியாவிடம், “அஷோக்.. என்னங்க பேரை மறந்துட்டீங்க?” என்றான் சிரித்தபடி.
என்ன ஒரு புன்னகை? பளிச்சென்று. லைட்டை போட்டது போல் ஒரு சிரிப்பு. அவளுக்குள் மத்தாப்பு.
“தாங்க் யூ அஷோக்…” சுப்ரியாவிடமும் ஒரு இளஞ்சிரிப்பு மலர்ந்தது.
“தாங்க்ஸ் மட்டும்தானா?”
“வேறென்ன வேணும்?”
ரெசிப்ட் இல்லாம லேப்டாப்பை கொடுத்து நான் உங்களுக்கு ஒரு உதவி பண்ணிருக்கேன் இல்லியா..?”
“ஆமாம்… அதுக்கு..?”
நீங்களும் பதிலுக்கு எனக்கு ஒரு உதவி பண்ணணும்”
“இதென்ன கண்டிஷனா..?”
“கண்டிஷன் எல்லாம் இல்லை சுப்ரியா… வேண்டுகோள்னு வேணா வச்சிக்கங்களேன்.”
“சரி. சொல்லுங்க. என்ன பண்ணணும்?”
“என் கூட ஒரு கப் காபி சாப்பிடணும்.”
“வாட்? என்ன விளையாடுறீங்களா?”
“நோ சுப்ரியா. ஐயாம் வெரி சீரியஸ். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. அதைப்பத்தி உங்ககிட்ட பேசணும். ஆனாலும் ஒரு கப் காஃபி என்ன விஷமா?”
“பாருங்க மிஸ்டர் அஷோக். இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கலை… பிடிக்காது”
“எனக்கு ஒரு வாய்ப்புக் கொடு சுப்ரியா. எனக்கு நீ வேணும்…” ஒருமைக்குத் தாவினான்.
“என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க உங்க மனசுல? நான் ஒண்ணும் அந்த மாதிரிப் பொண்ணில்லை… படக்குன்னு வா போங்கிறீங்க”
“விரும்புற பொண்ணுக்கு எதுக்கு மரியாதை… நீ கூட என்னை அப்படிக் கூப்பிடலாம். இங்கேரு நான் கல்யாணம்… வாழ்க்கை… அதுபத்திப் பேசறேன். நீ என்னடான்னா அந்த மாதிரிப் பொண்ணில்லைன்னு வசனம் பேசறே. அப்டீன்னா நீ என்ன அந்த மாதிரி தப்பான பொண்ணா?”
“ஹவ் டேர் யூ?” சுப்ரியாவின் கோபம், அஷோக்கின் கன்னத்தில் ஒரு சரியான அறையாக விழுந்தது.
ஓங்கி அறைந்துவிட்டாள்.
அஷோக் அதிர்ந்துவிட்டான்.
கன்னத்தைப் பிடித்துக்கொண்டான்.
கண்களும் முகமும் சிவக்க அஷோக் மீது அனலாய் ஒரு ஆவேசப் பார்வையை வீசிவிட்டு வெளியேறினாள் சுப்ரியா, ஒரு இளம் புயலாக..!
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து
சனிக்கிழமை ‘காதல் திருவிழா’ தொடரும்.
2 comments on “தொடர்கதை : காதல் திருவிழா”
rajaram
அருமை, அடி விழுந்ததுதான் சரி, ஆனால், இந்த அத்தியாயம் சீக்கிரமாக முடிஞ்சது மாதிரி தெரியுது.
Kalpana Sanyasi
தங்களின் கருத்து இந்த தொடருக்கு தனி சிறப்பு. நன்றிகள் சார். அன்புடன் - கல்பனா சன்யாசி