எழுத்து : மோகன் ஜி / படம் : தேவா
“நாளைக்கு ஆரஞ்சு கலர்ல புடவை டீ! மறந்துடாதே!”
“சரி மாமி! ஆரஞ்சுல பிங்க் பார்டர் புடவை போன வருஷம் நல்லியிலே வாங்கினேன். மேட்சிங் பிளவுஸும் பிங்க்லயே வச்சிருக்கேன்”
“ என்னவோ போ! இன்னைக்கு சாம்பல் கலர்ல கட்டிகிட்டு வரச்சொன்னா, நீங்கல்லாம் வானவில் போல எல்லா கலர்லேயும் கட்டிகிட்டு வர்றீங்க! நவராத்ரில நித்தியம் ஒரு புடவை கலர் தான் சம்பிரதாயம்னா கேக்குறீங்களா?“
“நாமெல்லாம் தினம் ஒரு வீட்டில ஒண்ணா சேர்ந்து கொண்டாடுறதும் சாப்பிடறதும் நல்லாத்தான் இருக்கு மாமி“
“இருக்காதா பின்னே? நம்ம ஒருநாள் மட்டும் மெனக்கெட்டாப் போதுமே? மீதி எட்டுநாளும் அக்கடான்னு சாப்பிடலாமே”
“ஆனா இந்த மூணு நாளும் சொல்லி வச்ச மாதிரி எல்லா வீட்டிலயும் ரவா கேசரி, இட்லி, வடைன்னு அதே காம்பினேஷன்ல போரடிக்குது மாமி”
“ எல்லோருமா பேசி வச்சிகிட்டு ஒவ்வொருத்தரும் ஒரு தினுசா பண்ணலாமே கோமளி? நீ இதை எல்லாரோடையும் பேசி வெரைட்டியா தயார் பண்ண வையேன். “
“சரி மாமி! புதுசா வந்திருக்காங்களே அந்த பரோடா லேடி … தினமும் ‘சக்கர ராஜ சிம்மாசனேஸ்வரி’யையே பாடிடறா. குரல் நல்லாஇருந்தாலும் பரவாயில்லே. கத்தறா! அம்பாளோட சிம்மாசனமே நகந்துரும் போல இருக்கு!”
“ நீ குறும்பு பிடிச்சவடி கோமளி! அவளை பொண்ணு பார்க்க வந்தப்போவே சக்கர ராஜ தான் பாடினாளாம்! விடு”
“ ஸி ப்ளாக் சாவித்ரி கிட்ட ஆரஞ்சு கலர்ல பட்டுப்புடவையில்லையாம்.அந்தக் கலர்ல நைட்டி தான் இருக்காம் மாமி”
“ கவலைப் படாதே. பத்மா கிட்ட இரண்டு புடவை அதே கலர்ல இருக்கு. தரச் சொல்றேன். ‘இன்னொருத்தர் புடவை எனக்கெதுக்கு?’ன்னு சாவித்ரி மக்கர் பண்ணாம இருக்கணும்”
“பத்மா முதல்ல புடவையைக் கொடுக்கணுமே மாமி?”
“இதுக்குல்லாம் ஒரு யோசனை வச்சிருக்கேன். இதுக்கு ஒரே வழி, எல்லோருமா சேர்ந்து ஒன்பது கலர்லயும் ஒரே மாதிரி பட்டுப்புடவைகளா
ஒண்ணா வாங்கிக்கணும். “
“ஆளாளுக்கு ஒன்பது புது பட்டுப் புடவைகளா? ரொம்ப செலவாகுமே மாமி. எங்காத்துக்காரர் ஆகாசத்துக்கும் பூமிக்குமா இல்லே குதிப்பார்?”
“ஒரு மாசத்துக்கு ஒரு புடவையா வாங்கலாம். செலவு தெரியாது. அடுத்த வருஷமாவது ஒரே மாதிரி கட்டிகிட்டு தினமும் போட்டோ எடுத்துக்கலாம்”
“ஐடியா நல்லாத்தான் இருக்கு மாமி.
நேத்து நவராத்ரில புடவைகளுக்கு தினம் ஒரு வண்ணம்னு சாஸ்த்ரத்துல எங்க இருக்குன்னு கேட்டார் எங்க ஆத்துக்காரர்”
“ உன் ஆம்படையானுக்கு தினம்தினம் தினுசு தினுசா சுண்டல் மட்டும் பரவாயில்லையாக்கும்?”
“ புடவைக்கு இன்ன கலர்னு சொல்றியே… இன்னைக்கு அம்பாள் என்ன சொரூபத்துல வழிபடணும்னு தெரியுமான்னும் கேட்டார் மாமி”
“ இதுல்லாம் பெண்டுகள் சமாச்சாரம்… நீங்க சிவராத்திரிக்கு மட்டும் உபவாசம் கிடங்கோன்னு சொல்ல வேண்டியது தானே?”
“என்னவோ மாமி! ஒன்பது நாளும் ஜிலுஜிலுன்னு ஒன்பதுவகை நெக்லஸ் போட்டுகிட்டாலும் நல்லாத்தான் இருக்கும்.”
“ உனக்கு பேராசைடீ! ஆசைப் பட்டுட்டேல்ல….அதுவும் வந்துடும்”
“ இவ்ளோ சிறப்பா நவராத்ரி கொண்டாடுறோம். அம்பாள் சந்தோஷப்பட்டு ஆசைப்பட்டதெல்லாம் தரமாட்டாளா என்ன?”
“ சரிதான்டி. போலாம்… இன்னைக்காகத் தயாராகணும்”
Leave a reply
You must be logged in to post a comment.