நான் மிகச்சிறந்த வாசிப்பாளரில்லை. சமீப வருடங்களில்தான் என் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திருக்கிறேன். காலம் நம் மேல் வீசும் கற்களிலிருந்து தப்பித்துக்கொள்ள, புரிந்து கொள்ளவே இயலாத இவ்வாழ்வைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வாசிப்பு பழக்கம் பேருதவியாக இருக்கலாம். ஒரு சரியான புத்தகத்தின் முன்னிலையில் நாம் ஒரு காலி பாத்திரமாக நம்மை மாற்றிக்கொள்ள மெல்ல நம்மை நிரப்பிக்கொள்ளலாம். நம்மை நாமே காலி செய்வதும் நிரப்பிக் கொள்வதும் தொடர் நிகழ்வுகளாக நடக்கும் வாசிப்பினூடே. புத்தகங்கள் தரும் அறிவு வாழ்வு தரும் அனுபவத்தோடு இணை சேரும் போது இவ்வாழ்வை நாம் வேறு ஒன்றாக பார்க்கக் கடவோம்.
வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதரின் குணநலன்களை முற்றிலுமாக மாற்றி விடுமா என்றால் அப்படி சொல்லிவிட முடியாது என்றே எண்ணுகிறேன். வாசிப்பு பழக்கம் அனைவரையும் குற்றமற்றவர்களாக மாற்றிவிடுமென்றால் இப்பூமி குற்றங்களற்ற நல்ல இடமாக இந்நேரம் மாறியிருக்க வேண்டுமே. நிறைய புத்தகங்களும், புத்தகங்களை வாசிப்பவர்களும் இருந்தும் ஏன் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன? வாசிப்பின் சாரத்தை, வாசிப்புத்தரும் விசாலமானப் பார்வையை, நுண்ணறிவை, நுட்பத்தை நம் வாழ்க்கையின் ஊடே பயன்படுத்தினாலன்றி வெறும் வாசிப்பு நம் வாழ்வை மலர்த்தி விடாது என்பதே என் எண்ணம்.
இந்த ஒற்றை வாழ்வில் ஒளிந்திருக்கும் ஓராயிரம் புதிர்களில் ஒரு சில புதிர்களையாவது அவிழ்க்க நல்லதோர் வாசிப்பு பழக்கம் நமக்கு உதவலாம்.
தனக்கு நடைபெறவிருந்த அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைக்க முடியுமா என்று கேட்டாராம் அறிஞர் அண்ணா. நல்ல நேரம் கெட்ட நேரம் என்பதிலெல்லாம் நம்பிக்கையற்றவர் அண்ணா என்பதினால் ஆச்சரியமடைந்த மருத்துவர், எதற்காக தள்ளிவைக்க சொல்கிறீர்கள் என்றாராம். தான் ‘மாஸ்டர் கிறிஸ்டியன்’ என்றொரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பதாகவும் அதை முடித்த பின்பு அறுவை சிகிச்சையை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினாராம் அறிஞர் அண்ணா. மெய் சிலிர்க்க வைக்கும் இந்த காட்சி உங்களுக்கு புரட்சியாளர் பகத்சிங்கை நினைவு படுத்துகிறதல்லவா? தூக்குக் கயிற்றை முத்தமிடும் முன்னரும் புத்தகங்களை ஆரத் தழுவிய பெருந்தகைகள் வாழ்ந்த மண் இது.
வாசிப்பு பகுத்தறிவை நோக்கி நம்மை நகர்த்த வல்லது. வாசிப்போம்! வளர்வோம்!
-பேச்சாளர் ஹேமலதா