“நீர்க்கோல வாழ்வை நச்சி…” என்று கம்பன் எழுதிய வார்த்தைகள் வாழ்வின் நிலையாமையைச் சொல்லும். சின்னஞ்சிறிய வாழ்க்கை. சாசனம் எழுதித்தந்து நூறாண்டு வாழ்ந்தாலும், வாழ்நாட்கள் சற்று ஏறக்குறைய வெறும் 36,500 நாட்கள் தான்.
கல்பகோடி ஆண்டுகள் வாழ்கிற, வாழப்போகிற பேருலகில்…நமது வாழ்நாள் வெறும் 36,500 நாட்கள் தான். இதற்குள் தான் அத்தனை ஆரவாரம். அத்தனை அலட்டல். அத்தனை அழிச்சாட்டியம். அத்தனை அலட்சியம். இத்தனைக்கும் நூறாண்டு வாழ்வோம் என்பதற்கு எந்தவித உறுதியும் யாரும் தரவும் இல்லை. Trial & error முறை வாழ, செய்து திருத்தம் செய்து அழித்தெழுதி வாழ இது தேர்வுத்தாளல்ல… வாழ்க்கை.
அறியாத ஆச்சர்யங்கள் காத்திருக்கும் இந்த வாழ்க்கைப் பயணத்தின் பெருவெளியில் “யாரேனும் ஒருவர்… ஏதேனும் ஒரு கரம் நம்மை வழிநடத்தி சரியான பாதையில் நடக்க வைத்து விடாதா?!” என எண்ணுகின்ற பெரும்பாலான மனங்கள் ஆன்மீகத்தில் சாய்கின்றன. அதில் சில மனங்கள் வாசிப்பில் தோய்கின்றன.
வாசிப்பினால் மாத்திரமே… – பல்வேறு வாழ்க்கை அனுபவங்களின் திரட்சியை ஒரே வாழ்க்கையில் காண இயலும்.
வாசிப்பினால் மாத்திரமே… – குறைந்தபட்சத் தவறுகளுடன் வாழ்வை வாழ இயலும்…
வாசிப்பினால் மாத்திரமே… – தவறிச் செய்த தவற்றில் இருந்து குறைந்தபட்ச சேதாரத்துடன் வெளிவர இயலும்.
வாசிப்பினால் மாத்திரமே… – ஒருவர் நம்மிடம் பேசத்துவங்கிய ஐந்தாம் நிமிடத்தில் அவரின் எண்ணங்களை ஓரளவு எடை போட இயலும்.
வாசிப்பினால் மாத்திரமே… – பிறன் வலியைத் தனது வலியாக உணர இயலும் அறிவினைத்தரும்.
நல்ல ஆழ்ந்த வாசிப்பினால் மாத்திரமே…
நல்ல ஆழ்ந்த வாசிப்பினால் மாத்திரமே…
– அன்பென்பது மதத்தின் வழி வருவதல்ல ஜாதிகளின் வழி வருவதல்ல, இனத்தின் வழி வருவதல்ல, குலத்தின், குடும்பத்தின் வழி வருவதல்ல… அன்பென்பது மனிதம் மட்டுமே என்பதை உணர இயலும்.
வாசிப்பினால் மாத்திரமே…
வரலாற்றை புரிந்து கொள்ள இயலும்,
போர்களின் உயிர்வதையை உணர இயலும்,
“Wars will make civilians as lumpens”
போர்கள் உருவாக்கும் கேவலமான சமூகப் பொறுப்பின்மைச் சமூகத்திற்கான அவசியமின்றிச் செய்ய இயலும்.
வாசிப்பினால் மாத்திரமே…
வாசிப்பைத் துறந்து தன்னுள் ஒரு உள்முகப் பயணம் நிகழ்த்த வழி செய்ய இயலும். அவசியமின்றிச் செய்ய இயலும்.
கேட்டலும், பார்த்தலும்… ஒரு சம்பவத்தை செய்தியாக, ஒரு தகவலாக மட்டுமே நமக்குக் கடத்தும். வாசிப்பு மட்டுமே சம்பவத்தை ஒருசிந்தனையாக, அனுபவமாக நமக்குள் கொண்டு சேர்க்கும்.வாசிப்பென்பது தவம்.
அவமானங்களை செரித்துக்கொண்டு அனுபவ உரமாக்கிக்கொள்ள பழக்குவது கூட வாசிப்பு பழக்கம் எனத் தோன்றுகிறது.
ஒரு புத்தகத்தை, சிறுகதையை, புதினத்தை வாசிக்கத் துவங்குகிற கணத்தில், அதில் விவரிக்கப்படும் ஓர் இடம் நமது எண்ணங்களில் சித்திரமாக விரியும், நமது வாழ்வின் அனுபவங்களுக்கேற்ப, மனிதர்கள் அணுக்கமாவர்… சம்பவங்கள் நமது அனுபவங்களுடன் கைக்கோர்க்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். மொழி வளம், மொழி ஆளுமை செறிவாகும். எந்தவொரு நிகழ்வு குறித்தும் நமது பார்வையும், அணுகுமுறையும் 360 கோணங்களில் விரிவடையும்.
ஒரு நாள் 20 பக்கங்கள்
ஓராண்டுக்கு பக்கங்கள் 7300 பக்கங்கள்
அதிகம் வேண்டாம்.
75 ஆண்டு சராசரி ஆயுளெனில், 5,47,500பக்கங்கள்
எனில் 3000 புத்தகங்கள் (@200பக்கங்கள்)
75 ஆண்டு வாழ்வில் 3000 வாழ்வின் அனுபவங்களை ஓரளவு பெற முயற்சிக்கவேனும் வாசிப்பு அவசியம்.
வாசிக்காதவர்கள் வாழவில்லையா? எனக் கேட்கலாம். வாசிப்பின்றியும் வாழலாம்… பெரும்பான்மை மக்கள் பள்ளிக் கல்லூரி படிப்பைத் தவிர வேறெந்த வாசிப்பு பரிச்சயமின்றியே வாழ்கின்றனர். திசையறிந்த பயணம், திக்கு திசையறியாப் பயணம் இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தான் வாசிப்பவர்களுக்கும், வாசிப்புப் பழக்கமில்லாதவர்களுக்கும் உள்ள வேறுபாடு.
புலன வாசிப்பும், முகநூல், சமூக வலைத்தள வாசிப்புகள் பெருகிவிட்டதால், சமூகத்தின் வாசிப்பும் பெருகிவிட்டதாக சிலர் பேசுவது நகைப்பிற்குரியது. காணொளி, ஒலித் தகவல்களுக்கூடே புல்லுக்கு நீராகத் தான் வாசிப்பிற்கு பொசிகிறது. அதன் நம்பகத்தன்மையும், மொழி பயன்பாடும் வருத்தப்பட வேண்டிய வேறு விஷயம்.
புத்தக அச்சின் மணமும், புரட்டுகிற பக்கங்களின் சப்தமும், முனைகள் ஒட்டிக்கிடக்கும் பக்கங்களை லாவகமாகப் பிரித்து, நாற்காலியில் சாய்ந்து, மழைக்கால வேளைகளில், மழை வீழும் ஒலியும், மண் மணமும் சுழல… வாசித்த கதை மாந்தர்கள் ஆண்டுகள் பல கடந்தும் நம்முடன் வருகின்றனர்.
கோடை நாட்களில் மொட்டைமாடியில், வேட்டித்துணியில் அம்மா இட்டுச் சென்ற வற்றலுக்கு தற்காலிக கூடாரம் அமைத்து, அரை டசன் புத்தகங்களுடன் காவலிருந்து, காக்கைகளிடம் ஏமாந்து போனபோதும், வாசிப்பினால் காலத்திடம் ஏமாறாமல் இன்றும்…
“Reading might be your habit But, what time you are bringing it to your life justifies your habit” — என வாசித்திருப்பது நினைவுக்கு வருகிறது.
வாசிப்பு வழி தடுமாறும் போது கைப்பற்றி உடன் வருகிறது… துவண்டு நிற்கும் போது தோள்தட்டி ஆறுதல் சொல்கிறது… நிலைகுலைந்து வீழும் போது தூக்கிக்கொண்டு உயரப் பறக்கிறது…
“அலமாரியில் நிறைந்திருக்கும் வாசிக்காத புத்தகங்களை பார்க்கும் போதெல்லாம்… அவையனைத்தையும் வாசித்து விட இன்னும் ஒரு ஐம்பதாண்டுகள் வாழ்ந்து விட மாட்டோமா? என இந்த 74 வயதில் ஏக்கப்பட வைக்கிறது ” என்பார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.
வாழவேண்டும் அதனால் வாசிக்க வேண்டும்.
வாசிக்க வேண்டும் … அதற்காக வாழ வேண்டும்.
-சசி.S.குமார்