பரிவை சே.குமார்
கண்ணப்பக் கோனாருக்கு எப்பவும் கருப்பு மேல அப்படி ஒரு ஈர்ப்பு. அவருக்கு வாச்ச மதுரவல்லியும் கருப்புதான். தன்னோட பொண்டாட்டி மேல உயிரையே வச்சிருந்தார். அவரோட தாத்தா காலத்துல இருந்தே நில நீட்சி, ஆடு மாடுன்னு வாழ்ந்து வரும் குடும்பங்கிறதால சின்ன வயசுல இருந்தே ஆடு மாடு வளக்கிறதுல அவருக்கு ரொம்ப ஆர்வம். எல்லா மாட்டு மேலயும் பாசமிருந்தாலும் அவரோட கவனிப்பெல்லாம் அந்த கருத்தப்பசு கருப்பாயி மேல மட்டுதான் என்பது எல்லாருக்கும் தெரியும். அதுவும் மனைவியை விட ஒரு படி அதன் மீதான பாசம் அவருக்கு அதிகம் என்பதை அருகிலிருந்து பார்ப்பவர்களால் கண்டு கொள்ள முடியும்.
கருத்தப்பசு…
இதே வீட்டுல இருந்த மயிலப்பசுவோட வாரிசுதான். மயிலப்பசு இதைப்பிரசவிச்சப்போ கலரைப் பாத்துட்டு இவருக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. இதுக்கு முன்ன பின்ன போட்ட கன்னுக்குட்டியெல்லாம் வெள்ளை, மயிலை, செவலைன்னு வேற வேற கலரு… இது மட்டும் அமாவாசை இருட்டை கரைச்சு ஊத்தின மாதிரி அப்படி ஒரு கருப்பு. உடனே அதுக்கு கருப்பாயின்னு பேரு வச்சிட்டாரு. அப்புறம் கருப்பாயிதான் அவருக்கு எல்லாமுமாய் ஆயிப்போச்சு. குளிக்கப் போறப்போ அதையும் கொண்டு போயி கம்மாயில போட்டு நீந்தவிட்டு குளியாட்டி கொண்டு வருவாரு. அப்பல்லாம் அதுக்கு அவரு பொட்டு வக்கிற அழகே தனிதான். நல்ல கருத்த முகத்துல செவப்புப் பொட்டை வச்சா எடுப்பா தெரியாதுங்கிறதால முதல்ல விபூதிய எடுத்து நல்லா ரவுண்டா தடவிருவாரு…. தண்ணிக்கும் அதுக்கும் சுண்ணாம்பு அடிச்சமாரித் தெரியும். சில நாள் இன்னும் அழகா இருக்கணுமின்னு நினைச்சா மஞ்சளை கலந்து – இந்த மஞ்சள் கருத்த முகத்துக்கு தனி அழகுதான் – தடவிட்டு அது மேல குங்குமத்தால மாங்காய், முக்கோணம், ரவுண்ட் என ஒவ்வொரு நாளும் ஒண்ணொண்ணு வைப்பாரு.
ஆரம்ப காலங்கள்ல அவரும் மதுரவல்லியும் தோட்டத்துக்கு காலையில போறப்போ எல்லா மாட்டையும் கொண்டு போய் கட்டி மேயவிட்டுட்டு வய வேலைகளை பார்ப்பாங்க. நிறைய வேலை இருக்கற அன்னைக்கு வேலைக்கு ஆள் வரச்சொல்லி பார்ப்பாரு. அவரு குணம் தெரிஞ்சதால அவரு வீட்டு வேலைக்கு வர எல்லாரும் ரெடியா இருப்பாங்க. அதனால அவருக்கு ஆள் பிரச்சினை எப்பவும் வராது. மதுரவல்லி தினமும் வேலையோட வேலையா மாடுகளுக்கு புல்லும் அறுத்து அழகா கட்டி வச்சிடும். வீட்டுக்குத் திரும்புறப்போ அவரு மத்த சாமன்களை எடுத்துக்கிட்டு மாடுகளை ஓட்டிக்கிட்டு வர, மதுரவல்லி புல்லுக்கட்டை சுமந்துகிட்டு வரும். அப்பவும் அவரு கையில பச்சைப் பசேர்ன்னு சின்ன புல்லுக்கட்டு இருக்கும். அது அவரோட கருப்பாயிக்கு மட்டும். அதான் இந்த புல்லுக்கட்டு இருக்குல்ல அப்புறம் எதுக்கு தனியா… ஒண்ணா கட்ட வேண்டியதுதானேன்னு மதுரவல்லி கேட்டா, இது என் செல்லத்துக்கு நாந்தனியா பாத்துப் பாத்துப் அறுத்தெடுத்த அருகு என்று சொல்லி தனியாத்தான் கொண்டு வருவாரு.
வருஷங்கள் வந்து போக, கருப்பாயியும் வளர்ந்து கிடேரியாயிடுச்சு. அதோட ஆத்தா நல்ல ஒசரமா இருக்கும். ஆனா இது குட்டையாவும் இல்லாம ஒசரமாகவும் இல்லாம நடுத்தரமாத்தான் இருந்தது. எங்க போனாலும் கண்ணப்பக் கோனாரோட ‘கருப்பாயி’ங்கிற குரலைக்கேட்டா நின்னு திரும்பிப் பாக்கும். அது மாதிரி அவரு ரெண்டு மூணு நாளைக்கு எங்கயாவது பொயிட்டு வந்தா வந்த உடனே அதை பாக்க கசாலைக்கு போயிடுவாரு… அவரைப் பாத்ததும் அங்கிட்டும் இங்கிட்டுமா மருகும்… மூசு மூசுன்னு மூச்ச விடும்… அவரோட கைய முகத்துல வச்சதும் அதோட முகத்தைக் கொண்டாந்து அவரு உடம்போட வச்சி தேச்சுக்கும். அப்ப சத்தமா கத்தாம சின்னதா ஒரு குரல் கொடுக்கும். அவருக்கு மட்டும்தான் அந்த பாசத்தோட அர்த்தம் புரியும். இதை ஆரம்ப காலத்துல பாத்த மதுரவல்லி ஆத்தே… மனுசங்க மாதிரியில்ல கொஞ்சுது. பிள்ளைங்க அப்பானுட்டு பலகாரப் பையை பாக்குதுங்க… இது என்னடான்னா மனுசனை மோந்து மோந்து பாத்துல்ல கத்துதுன்னு வாய் விட்டே சொல்லிட்டா. இதுதான்டி பாசமுன்னு பெருமை பட்டுக்கிட்டாரு.
கருப்பாயி செனையான நாளுல இருந்து அதை பாத்துப்பாத்து கவனிச்சாரு… முதக் கன்னு போடப் போகுது அதனால நல்ல தெம்பா இருக்கணுமினுட்டு புல்லோட தீவனமெல்லாம் வாங்கியாந்து ஊற வச்சிப் போட்டாரு. மதுரவல்லிகிட்ட சொல்லி பச்சரிசி கஞ்சி காச்சி அவரே அதுக்கு வச்சி பக்கத்துல உக்காந்து கலக்கி கலக்கி விட்டு குடிக்க வச்சாரு. அதோட வயித்துக்குள்ள கன்னுக்குட்டி முட்டுறப்போ இவரு தடவிப்பாப்பாரு. ஆரம்பத்துல வயித்துல முட்டின கன்னுக்குட்டி நாள் நெருங்க நெருங்க இடுப்புப் பகுதியில முட்ட ஆரம்பிச்சாச்சு, எலும்பெல்லாம் அமுங்கி தர்றாம் புர்றான்னு நடக்க ஆரம்பிச்சிருச்சு. மதுரவல்லி மோகனுக்கு இப்படித்தான் நடந்துக்கிட்டு திரிஞ்சா… அப்புறம் கவிதா பொறந்தப்போ கொஞ்சம் பரவாயில்லை அவ பொறக்குற வரைக்கும் கட்டுக்கட்டுன்னு வேல பாத்துகிட்டு திரிஞ்சா… அப்புறம் சரசு… அப்புறம் மணியின்னு நாலு பெத்துட்டா… கருப்பாயிய பாக்கும் போதெல்லாம் முத குழந்தைக்கு மதுரவல்லி இருந்த மாதிரிதான் அவருக்கு தோணுச்சி… அடுத்த கன்னுக்கு கொஞ்சம் தேறிடுமுன்னு நினைச்சிக்கிட்டாரு.
அந்தப் பக்கமா போன வெள்ளத்தாயியை பாத்தவரு, சின்னத்தா நம்ம கருப்பாயி கன்னு போடுற மாதிரி நிக்கிது… படுக்கவும் எந்திரிக்கவுமா இருக்கு வந்து பாத்து எப்ப போடுமுன்னு சொல்லிட்டுப் போன்னு கூப்பிட்டு காட்டினாரு. அந்த ஊர்ல மாட்டு மருத்துவச்சி அதுதான்… யாரு வீட்ல கன்னு போட்டாலும் அதுதான் போயி லாவகமா காலைப் பிடிச்சு இழுத்து எடுத்துடும். அது வந்து பாத்துட்டு, ஏலேய்… சட்டமெல்லாம் வடிவாயிடுச்சி… நாளைக்கு மத்தியானத்துக்குள்ள கன்னு போட்டிடும்ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு… ராத்திரியெல்லாம் தூங்காம அடிக்கடி எந்திருச்சுப் போயி பாத்துட்டு பாத்துட்டு வந்தாரு… சத்த படுங்க நாளைக்குத்தான் கன்னு போடுமுன்னு மதுரவல்லி எவ்வளவோ சொல்லியும் அவரை அவ காலையில பாத்தப்போ கண்ணெல்லாம் செவந்து போயித்தான் இருந்தாரு.
எப்பவும் புள்ளைங்க ஸ்கூலுக்குப் போறதுக்கு முன்னாடி தோட்டத்துக்கு போறவரு அன்னைக்கு புள்ளைங்க போயியும் வீட்டை விட்டு நகரலை. என்னங்க தென்னைக்கு உரம் வைக்கணுமின்னு சொன்னீங்க… போகலையா… என்று கேட்ட மதுரவல்லியிடம் பூமிய வக்க சொல்லியிருக்கேன். அவன் வந்து வச்சிருவான்… நான் சாயந்தரமா போயி பாத்துட்டு வாரேன் என்றார். இங்கயிருந்து என்ன பண்ணப் போறீங்க… என்னதான் நம்பிக்கையிருந்தாலும் நாம இருந்து பாக்கிறமாதிரி வருமான்னு சத்தம் போட, என்னடி நீ நம்ம கருப்பாயி கன்னு போடப்போகுது அதான் அப்புறம் போறேன். நீங்க இருந்து என்ன பண்ணப் போறீங்க… கன்னு போட்டா சொல்லிவிடுறேன், இப்ப கிளம்புங்கன்னு கிளப்பி விட்டுட்டா. தோட்டத்துக்கு போனாலும் கருப்பாயி நினப்புதான்.
யாராச்சும் அந்தப்பக்கமா சைக்கிள்ல வந்தா கன்னு போட்டுடுச்சோன்னு நினைப்பாரு. மத்தியானம் வீட்டுக்கு வந்தப்போ சின்னவன் சாப்பிட்டுகிட்டு இருந்தான். அம்மா எங்கடான்னு கேக்க, நம்ம கருப்பாயி கன்னுக்குட்டி போடுதாம். அம்மாவும் வெள்ள அப்பத்தாவும் பாத்துக்கிட்டு இருக்காகன்னு சொல்ல வேகமா ஓடினாரு. அங்க கருப்பாயி செவலைக் கலர்ல ஒரு காளைக்கன்ன போட்டுட்டு இவரைப் பாத்ததும் ‘ம்ம்மா’ன்னு அதோட சந்தோஷத்தையும் வலியயும் இவருகிட்ட பகிந்துக்கிச்சி. அதை தடவிக் கொடுத்தவரு, அது இளங்கொடி போடுற வரைக்கும் அதுகிட்டே இருந்து போட்டதும் அதை ஒரு சாக்குல வச்சு கட்டி நாயி நரி இழுக்காம ஆலமரத்துல கொண்டு போயி கட்டிட்டு வந்தாரு. அப்புறம் கருப்பாயியையும் குளிப்பாட்டி மஞ்சள் தடவி பொட்டு வச்சு கொண்டாந்து கட்ட, கன்னுக்குட்டிய குளிப்பாட்டிய மதுரவல்லி கருப்பாயிகிட்ட முத பாலை பீச்சினாள்.
இது இப்ப நடந்தது போல இருக்கு, அதுக்கப்புறம் எத்தனையோ கன்னு போட்டு இப்ப வயசாயி நிக்கிது கருப்பாயி… அதுகிட்ட முன்ன மாதிரி உடம்புல சதையெல்லாம் இல்லாம் எலும்பு தெரிய ஆரம்பிச்சிருச்சி. அது போட்டதுல ஒரே ஒரு பொட்டக் கன்னுக்குட்டி மட்டும் நல்ல கருப்பா இருந்துச்சி. அதுக்கு சின்னக் கருப்பின்னு பேரு வச்சிருந்தாரு. அதுவும் கன்னு போடுற நிலமயில இருந்துச்சு. இப்பல்லாம் முன்னமாதிரி புல்லறுத்துப் போடமுடியலை. விவசாயமும் பொய்த்துப் போச்சு. சும்மா கெடந்த நெலத்துல ஆரசுவதி மரங்களை வச்சி விட்டுட்டாரு. கவிதாவை கட்டிக் கொடுத்துட்டாரு. மோகனுக்குத் தங்கச்சி மகளை பரிசம் போடலாமுன்னு மனசுக்குள்ள எண்ணமிருக்கு. சின்னது ரெண்டுக்கும் கொஞ்ச நாள் போகட்டுமின்னு நினைச்சிருந்தாரு.
கயித்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு மோட்டு வளையை வெறிச்சுக்கிட்டு இருந்தவரை மூத்தவனின் குரல் எழ வைத்தது. அவனுடன் மாட்டு வியாபாரி மனோகரன் நின்னுக்கிட்டிருந்தாரு.
‘வாப்பா மனோகரா… நல்லாயிருக்கியா..?’ என்றார் கண்களை துடைத்தபடி.
‘அப்பா நம்ம கருப்பாயிய கொடுத்துடலாமுன்னுதான் மனோகர் மாமாவ வரச்சொன்னேன்’.
‘இப்ப என்னப்பா அதுக்கு அவசரம்..?’ அப்படின்னு மகனைப் பாத்து கேக்க, ‘அம்மாவாலயும் பாக்க முடியலை, சின்னக் கருப்பி வேற கன்னு போடுறமாரி இருக்கு. இதுக்கும் வயசாயிக்கிட்டே போகுது… இப்ப செனையா இருக்கிறப்போ கொடுத்தா நல்ல வெல கிடைக்கிமுன்னு மாமா சொன்னாங்க. அம்மாகிட்ட கேட்டேன் கொடுத்துடலாமுன்னு சொன்னுச்சி’ன்னு அவன் சொல்ல திரும்பி மதுரவல்லிய பாத்தாரு, அவளோ ஒண்ணும் பேசாம நிக்க, ‘நீயும் கொடுக்கனுமின்னு முடிவு பண்ணிட்டியா?’ மனைவியிடம் கேட்டபோது நெஞ்சுக்குள் ஏதோ அழுத்த வார்த்தை வர சிரமப்பட்டது.
‘ஆமா… அதுக்கும் வயசாச்சு… கன்னு போட்ட பின்னால கொடுத்தா வெல கிடைக்காது… அதான் கொடுத்துடலாம்ன்னு…’ மெல்ல இழுத்தாள்.
மதுரவல்லியைப் பார்த்த பார்வையைத் தரைக்கு திருப்பினார். எங்கே கலங்கும் கண்கள் அவரை காட்டிக் கொடுத்துவிடுமோ என்பதால் தரையை விட்டு பார்வையை விலக்காமல் ‘சரி… முடிவு பண்ணிட்டீங்க, கொடுத்திடுங்க…’ என்றார் கமறிய குரலில்.
‘நா ஒரு வெல வச்சிருக்கேன்… நீங்க உங்க வெலய சொன்னிங்கன்னா தெகையுதான்னு பாக்கலாம்’ என்ற மனோகரிடம், ‘வெல என்னய்யா வெல… என் கருப்பாயிக்கு வெல இல்லய்யா… ஒ அக்காகிட்ட பேசிக்க… நான் அவளுக்கு வெல வக்க முடியுமா… இல்ல அவ பாசத்துக்குதான் வெல வக்க முடியுமா…’ என்றவர். ‘ம்ம்ம்ம்ம்ம்’ என்று பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு கலங்கிய கண்களுடன் மீண்டும் விட்டத்தை வெறிக்கலானார்.
விலை பேசி நாளைக்குப் புடிச்சிக்கிறது என்று முடிவானவான பின் வெளியில் கிளம்ப தயாரானார்.
‘எங்க போறீங்க..?’ என்ற மனைவியிடம், ‘கருப்பாயிய அவங்க பிடிச்சிக்கிட்டு போறப்போ அவ என்னயப் பாத்து கத்துனா என்னால தாங்க முடியாது. ரெண்டு நாளக்கி நம்ம கவிதா வூட்ல இருந்துட்டு வாறேன்’ என்று அவர் சொன்னபோது மதுரவல்லிக்கு கண்ணீர் வந்தது.
படிகளில் இறங்கியவர் வாசலில் கட்டியிருந்த கருப்பாயியை பார்த்ததும் கண்கள் கலங்க அருகில் சென்று ஆதரவாய் தடவ, அவரது கைகள் நடுங்க, உதடு துடித்தது.
‘இன்னக்கிதான் நம்ம பாசத்தோட கடேசி நாளு. நாளக்கி நீ எங்க இருப்பியோ தெரியாது… ஆனா கடேசி வரக்கிம் எம்மனசுக்குள்ள இருப்பே’ன்னு அதுக்கிட்ட சொன்னபோது அவரது கண்ணீர்துளி அதன் முகத்தில் வழிந்தது.
தோளில் கிடந்த துண்டால் அதை துடைக்கப் போனவர் முதல் முறையாக கருப்பாயியின் கண்களில் கண்ணீர் வருவதைப் பார்த்தார்.
(வம்சி நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று ‘காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்’ என்னும் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை)
Leave a reply
You must be logged in to post a comment.