தசரதன்
“சரோ, அப்பா காபி கேட்டுக்கிட்டிருக்காரு பாரு…. கொஞ்சம் போட்டு கொடுத்திட்டு வாம்மா….” படுக்கையில் சுருண்டுப் படுத்துக் கொண்டிருந்த விக்னேஷ் தன் மனைவி சரோஜாவுக்கு குரல் கொடுத்தான்.
”ஏங்க….. உங்கப்பாவுக்கு உங்கம்மா காபி போட்டுக் கொடுக்க கூடாதா? இல்ல உங்க தங்கச்சி தான் காபி போட்டு கொடுக்க கூடாதா? எல்லாத்துக்கும். நா ஒருத்தி மட்டும்தான் இங்க இருக்கேனா? நா ஒன்னும் மிஷின் இல்லங்க… நானும் மனுஷிதான்” எரிச்சலுடன் ஈரத் தலையைத் துவட்டிக் கொண்டு சொன்னாள் சரோஜா.
“சரோ- கோவிச்சுக்காதேம்மா.. அம்மா போடுற காபி… தங்கச்சி வசந்தி போடுற காபி எதுவும் அப்பாவுக்கு சரியில்லையாம். நீ போட்டுக் கொடுக்கிற காபி தான் அப்பாவுக்குத் திருப்தியா, குடிச்ச மாதிரி இருக்காம்..” என்று சொல்லி விட்டு போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டான் விக்னேஷ்.
‘இதோ பாருங்க. நா இந்த வீட்டுக்கு வந்த மருமகளாத் தெரியில. ஒரு வேலைக்காரியாத்தான் என்னை நடத்துறீங்க…’ என்று புலம்பிக் கொண்டு சரோஜா சமையலறைக்குள் நுழைத்த, சற்று நேரத்திற்கெல்லாம் காபியைப் போட்டுக் கொண்டு போய் கணவனை எழுப்பினாள் சரோஜா.
“சரோ… அடுப்படியில இருந்து இங்க வர்றதுக்கு அப்படியே அப்பாக்கிட்ட கொடுத்திருக்கலாமுல்ல. ப்ளீஸ் நீயே போய் அப்பாவுக்குக் கொடுத்திட்டு வாயேன். அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாரு.. நானும் கொஞ்ச நேரம் தூங்குவேன்.” என்று விக்னேஷ் சொல்ல,
“ச்சே.. எல்லாம் எந்தலையெழுத்து நா என்ன ஒன்னுமேயில்லாத குடும்பத்திலிருந்தா வந்தேன். எல்லா வசதியோடவும் ராணி மாதிரி இருந்தவ…. இங்கு வந்து தான் வேலைக்காரியா போயிட்டேன். எங்கப்பாவச் சொல்லணும், நல்ல குடும்பம்ன்னு கட்டுனாரே ஒழிய, அவங்க வேலைக்காரி தேடுறாங்கன்னு புரிஞ்சிக்கல. இதோ பாருங்கா.. நா இப்படியே இருந்திருவேன்னு மட்டும் நெனைக்காதீங்க. .. கூடிய சீக்கிரத்தில் இதுக்கொரு வழியைப் பண்றேன்… அதுவரைக்கும் நல்லா இழுத்துப் போர்த்திக்கிட்டுத் தூங்குங்க… விடியிறப்போ எப்படி விடியுதுன்னு பாருங்க” கோபத்துடன சொல்லிக்கொண்டே கதவைத் திறந்துக் கொண்டு காபியுடன் வராண்டாவுக்கு நடந்தாள் சரோஜா.
எழுபது வயதான நம்பிராஜன், காலைத் தினசரியை புரட்டிக் கொண்டு வராண்டா ஷோபாவில் உட்கார்ந்திருந்தார்.
சரோஜா வேக, வேகமாக வந்து அருகில் இருந்த மேஜை மீது காபி டம்பளரை டபக்கென்று அவசரத்துடன் வைத்தாள். காபி அலம்பி கொஞ்சம் சிதறியும் விட்டது.
மருமகள் கோபமாக காபியை கொண்டு வந்ததை கண்டுக் கொண்டு விட்டார் நம்பிராஜன். அமைதியாக அவர் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தார். சரோஜா வந்த வேகத்துடன் திரும்பி விட்டாள். காபியை குடிக்க நம்பிராஜனுக்கு மனம் வரவில்லை.
அவர் தினசரியை மடித்து வைத்துவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். சிந்தனையில் இளைய மகன் சரவணனின் நினைவுகள் அலையடித்தன. காபியின் மேல் ஆடை படர ஆரம்பித்தது.
நம்பிராஜனின் பெரிய மகன் விக்னேஷ் படித்து பட்டம் பெற்று ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி கை நிறைய சம்பாதிக்கிறான். இளைய மகன் சரவணன் படிக்கவில்லை. அவனுக்கு கைத்தொழில் மீது நம்பிக்கையிருந்தது. சின்ன வயதினிலே எலக்ட்ரீஷியன் வேலையை கற்றுக் கொண்டு இப்போது ஒரு தனியார் கம்பெனியில் பணிப்புரிந்து வருகிறான்.
விக்னேஷிக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்தது. பெரிய வசதி வீட்டுப் பெண்ணான சரோஜா மனைவியாக அமைந்துவிட்டாள்.
சரோஜாவின் அப்பா ராமலிங்கம், அண்ணா நகரில் பெரிய ஜவுளிக் கடை வைத்திருக்கிறார். ஐந்து ட்ராவல்ஸ் பஸ்களும், லாரிகளும் ஓடுகிறது. நம்பிராஜன் குடும்பத்தை விட பலமடங்கு வசதி நிறைந்தவர் ராமலிங்கம். விக்னேஷ் நன்றாக படித்திருந்தான். ஐ.டி. கம்பெனியில் பணிபுரிகிறான், கை நிறைய சம்பாதிக்கிறான் என்பதனாலே தன் மகளை, விக்னேஷ்க்கு மனம் முடித்து வைத்தார் ராமலிங்கம்.
கல்யாணமான சில மாதங்கள் வரை சரோஜா நல்ல மருமகளாகத் தான் மாமனார், மாமியாருக்கு மதிப்பு கொடுத்து இருந்து வந்தாள். போகப்போக அவளின் மனநிலை மாறிவிட்டது. ஏனெனில் புகுந்த வீடு தன்னுடைய கணவன் வருமானத்தைத்தான் நம்பியிருக்கிறது என்பதும், இனி காலம் முழுக்க குடும்பத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பும் அவர் தலையில் தான் விழும் என்று நினைத்துவிட்டாள்.
நம்பிராஜனின் கடைசி மகள் வசந்தி கல்யாண வயதில் இருந்தாள். அவருக்குக் கல்யாணம் செய்ய வேண்டுமானால் தன்னுடைய கணவன் தயவில் தான் நடக்கும் என்பதையும் புரிந்துக் கொண்டு விட்டாள். நம்பிராஜன் ரயில்வேயில் வேலை செய்து ரிட்டெர்மெண்ட் ஆனவர். பென்ஷன் பணம் மாதம் இருபதாயிரம் ரூபாய் தான் வருகிறது. அதை வைத்துக் கொண்டு குடும்பத்தையும் நடத்திக் கொண்டு ஒரு பொண்ணுக்கு திருமணம் செய்து விட முடியுமா என்ன?
அதுவுமில்லாமல் கட்டிய இந்தப் புது வீட்டுக்கு கொஞ்சம் கடனும் இருக்கிறது. அதையும் தன்னுடைய கணவன்தான் அடைத்து வருகிறார் என்பதையும் வாழ வந்த ஒரு வருடத்தில் புகுந்த வீட்டின் மொத்த நிலவரங்களையும் புரிந்துக் கொண்டிருந்தாள் சரோஜா.
தனது கணவனைத் தனிக்குடித்தனம் அழைத்துப் போக அவள் முடிவை எடுத்துக் கொண்டு குடும்பத்தில் இருப்பவர்கள் மீது எரிந்து எரிந்து விழுகிறவளாகவும், எந்தவொரு வேலை செய்தாலும் புலம்பிக் கொண்டே செய்கிறவளாகவும் மாறி வந்தாள் சரோஜா. அவளின் மாற்றம் எதற்கான என விக்னேஷ் அறிந்திருந்தாலும் தற்போதைய சூழலில் குடும்பத்தை விட்டுத் தனியே போவது அவ்வளவு சரியானதல்ல என்பதால் பிடிகொடுக்காமல் ஓடிக் கொண்டிருந்தான்.
இளையவன் சரவணன் கம்பெனி பக்கத்தில் இருந்த ஒரு டீக்கடைக்காரரின் பெண்ணான வனிதாவை உயிருக்கு உயிராக காதலித்து வருவதை அரசல்புரசலாக நம்பிராஜன் அறிந்து வைத்திருந்தாலும் அது குறித்து எதுவும் பேசாமல் தெரியாதது போலவே இருந்தார். மனசுக்குள் மட்டும் அவனைப் பார்க்கும் போதெல்லாம் ‘தறுதலை’ எனச் சொல்லத் தவறுவதில்லை.
அண்ணன் விக்னேஷ் திருமணம் முடிந்த மறுவருடம் தன்னுடைய காதல் விவகாரத்தைப் பற்றி வீட்டில் சொல்லிவிட்டான் சரவணன். ஒரு டீக்கடைக்காரனின் மகளை தன் மகன் திருமணம் செய்துக் கொள்ள நினைப்பதை நம்பிராஜனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எப்படியும் தன்னிடம் அவன் செய்தியை சொல்லும் போது தனது எதிர்ப்பைக் கட்டலாம் என நினைத்தவர், அவன் சொன்னதும் வசதியைக் காரணம் காட்டி, சாதியைக் காரணமாய் வைத்து வானத்துக்கும் பூமிக்குமாய் எகிறிக் குதித்து எதிர்ப்புத் தெரிவித்தார். அம்மா கனகவள்ளியும் தனது மகனுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்லி அவனின் மனதை மாற்ற முயற்சித்தாள்.
பெற்றோர்களின் பிடிவாதத்தை சரவணின் உண்மையான, உறுதியான காதல் ஏற்கவில்லை, அடங்கவுமில்லை. இறுதியாக நம்பிராஜன் தீர்மானமாக சரவணனிடம் தெரிவித்தார்.
“தாராதரமில்லாத நீ கண்மூடித்தனமாக விரும்புகிற பெண்ணை என்னால ஏத்துக்க முடியாது. நம்ம வீட்டுக்குன்னு ஒரு கெளரவமும் மரியாதையும் இருக்கு. அதை மதிச்சு இருக்கிறதா இருந்தா வீட்ல இரு. இல்ல எங்க பேச்செல்லாம் முக்கியமில்ல. அந்த பொண்ணு தான் உனக்கு முக்கியம்னா இப்பவே வீட்டை விட்டு போயிடு…” என உறுதியாகச் சொல்லிவிட்டார்.
அன்றே சரவணன் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். சில வாரம் யாரோ ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்து, ஒருநாள் அண்ணா நகரில் இருந்த ஒரு முருகன் கோயிலில் வைத்து வனிதாவுக்குத் தாலி கட்டி, ஒரு வாடகை வீட்டில் மகிழ்வான வாழ்க்கையைத் தொடங்கினான்.
கல்யாணமான புதிதில் தன் பெற்றோர்களிடம் ஆசி பெற, காதல் மனைவியான வனிதாவை அழைத்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனான் சரவணன்.
நம்பிராஜன் அவர்களுக்கு ஆசி வழங்க மறுத்து விட்டார்.
கடும் கோபத்தில், “இனி என் கண்ணு முன்னாலே வராதே. என் சாவுக்கு கூட நீ வர வேணாம்… நீ வெளங்கமாட்டே” எனக் கோபத்தில் சரவணனைத் திட்டி அனுப்பிவிட்டார்.
என்னைக்கு வெளங்கமாட்டேன்னு சொன்னாங்களோ அன்னைக்கு இந்த வீட்டுப் படிவாசல் மிதிச்சவன்தான் சரவணன், அதன்பின் இங்கு வரவேயில்லை. கெளரவமாக யாரையும் எந்தவொரு தயவுக்கும் அணுகாமல் வாழ்ந்துக் கொண்டிருந்தான் சரவணன்.
இதற்கிடையே விக்னேஷ்க்கும், சரோஜாவுக்கும் இடையிலான மனஸ்தாபம் கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிரமடைய ஆரம்பித்தது.
நினைவுகளில் மூழ்கி வெளிவந்த போது காபி ஆறி, வெள்ளை ஆடையை உடல் முழுவதும் போர்த்தியிருந்தது.
இரண்டு கைகளையும் கோர்த்து சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தவண்ணமாக யாரிடமோ மன்னிப்பு கோருவதைப் போல் செய்தார்.
மனசு முழுவதும் வேதனை நிரம்பியிருந்தது. எழுந்து உள்ளே போனார்.
திருமணம் நடந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் சரோஜாவுக்கு குழந்தை தங்கவில்லை. குழந்தைக்காக சரோஜா மிகவும் ஏங்கினாள்.
யாரோ எதுவோ சொன்னதை மனதில் வைத்துக் கொண்டு புகுந்த வீட்டில் வாஸ்து சரியில்லை அதனால்தான் குழந்தை வயிற்றில் தங்கவில்லை. வேறு இடம் போனால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று யாரோ சொன்னதை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு சரோஜா இரண்டு மாதகாலமாக கணவனை தனிக்குடித்தனம் போக வேண்டுமென்று வற்புறுத்தி வந்தாள்.
அவளின் வற்புறுத்தலை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் விக்னேஷ் தன் போக்கில் இருந்து வந்ததால் கணவன் மீது உள்ளுக்குள் கடும் கோபம் கொண்டு அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யாமல் எந்த நேரமும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு வீட்டில் யாரிடமும் பேசாமல் நடமாட ஆரம்பித்தாள் சரோஜா.
நாளுக்கு நாள் அவளின் மிடுக்கும், போக்கும் அதிகரித்துக் கொண்டே செல்ல, ஒருநாள் விக்னேஷ் மிக பொறுமையாக தன் மனைவிடம் பேசினான்.
“சரோ…. உனக்கு இங்க என்னதான் பிரச்சினை. இது நாள் வரை வீட்ல யாராவது உன்னை வற்புறுத்தி வேலை வாங்கியிருப்பாங்களா? அம்மாவுக்கு இரண்டு மாசமா மூட்டு வலி அதிகமனாதாலதான் சமையல் வேலையை அவங்களால சரியா செய்ய முடியல. என் தங்கச்சியும் உனக்கு கூடமாட இருந்து வேலை செய்யிறாளே… அப்பறம் எதுக்கு முகத்தைத் தூக்கி வச்சிக்கிட்டுத் திரியிறே” என்று விக்னேஷ் கேட்க,
“இதோ பாருங்க.. உங்க படிப்புக்கும், நீங்க பார்க்கிற கெளரவமான வேலையையும் பார்த்துதான் என் வீட்ல உங்களுக்கு பொண்ணு கொடுத்தாங்க. இப்படி காலமெல்லாம் கூட்டுக் குடும்பத்தில மாட்டிக்கிட்டு என்னால அவஸ்தை படமுடியாது. நாம வர்ற மாசம் தனிக்குடித்தனம் போறோம். நான் சொன்னது சொல்லிட்டேன். வேற இடத்தில போய் வாழ்ந்தாத்தான் குழந்தை பாக்கியமும் கிடைக்கும் …” என்று சரோஜா மன ஆதங்கத்துடன் பொரிந்துத் தள்ளினாள்.
“சரோ, எங்கப்பா என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வெச்சிருக்காரு. இப்போ நான் கெளரவமா இருக்கிறதுக்கு முக்கியக் காரணமே என்னோட பெற்றோர்கள் தான். இந்த வயசில பெத்தவங்கள பார்த்துக்கிற பொறுப்பும் எனக்கிருக்குது. அவங்கள விட்டுட்டு என்னால உன் பின்னாடி வர முடியாது. கொஞ்சம் பொறுமையா இரு. அவசரப்படாத… நேரம் அமையும் போது நிச்சயமா நமக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்… எனக்கு நம்பிக்கை இருக்கு….”
“சரிங்க. இனி உங்ககிட்ட என்னால பேச முடியாது. நீங்க இந்த வீட்டைக் கட்டிக்கிட்டு அழுங்க. நா எங்க வீட்டுக்கு போறேன். நான் சொன்னது எப்போ உங்களுக்கு சரின்னு படுதோ அப்போ ஒரு வீட்டைப் பிடிச்சிட்டு என்ன வந்து கூட்டிட்டு வாங்க. ” என்று கண்ணீரோடு சொல்லி விட்டு அறைக்குள் புயலாய் நுழைந்தாள்.
‘சரோ… சரோ… ப்ளீஸ்… எதுக்குச் சொல்றேன்னு புரிஞ்சிக்கோ’வென விக்னேஷ் கெஞ்சும் போதே அந்த அறையில் லைட் சட்டென்று அணைந்து விட்டது. விக்னேஷ் பெருமூச்சு விட்டுக் கொண்டே கட்டில் மீது உட்கார்ந்தான்.
சூரியன் உதயமாவதற்க்குள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தன்னுடைய மனஸ்தாபத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் விதமாக சரோஜா, மடிப்பாக்கத்தில் இருந்த தன் வீட்டுக்குப் போய்விட்டாள்.
இந்த நாட்களில் நம்பிராஜன் ரொம்பவே மனம் இடிந்துப் போனார்.
தன் குடும்பத்திற்கு மேலான ஒரு பெண்ணை தன் மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்து எத்தனைப் பெரிய தவறு என்பதை இப்போது தான் உணர ஆரம்பித்தார்.
நல்ல வசதியான வீட்டுப் பெண் தன் மகனுக்குக் கிடைத்து விட்டது என்று சந்தோஷம் கொண்டிருந்த மனநிலைக்குக்கெல்லாம் இப்போது கேடு விளைந்துவிட்டது.
தனது மகளின் கல்யாணத்தை இந்தப் பிரச்சனைக்களுக்கு நடுவே எப்படி நடத்தி முடிக்கப் போகிறோம்? என்ற கவலையும் மகனின் வாழ்க்கை பற்றிய கவலையும் அவரைப் போர்த்திக் கொண்டன.
போன வாரத்தில் இரண்டு வரன்கள் வந்து நம்பிராஜனின் மகள் வசந்தியைப் பெண் பார்த்து விட்டு போனார்கள்.
“திருமணம் என்பது இந்தக் காலத்தில் வாழ்க்கைக்குரியது மட்டுமல்ல, பொருளாதரத்திற்குரிய விஷயம்…” என்பதை வந்த வரன்கள் வரதட்சனை என்ற பெயரில் நம்பிராஜனுக்கு உணர்த்திவிட்டு போய் விட்டனர். அப்போது தான் அவரின் மனம் கூனிக் குறுகிப் போனது. இளைய மகன் சரவணன் ஒரு ஏழைப்பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு விட்டான் என்பதற்காக அவனை அவன் மனைவியின் முன்னால் அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியில் அனுப்பியதை நினைத்து, நினைத்து கலங்கிப் போனார் நம்பிராஜன்.
வீட்டை விட்டுப் போன மூத்த மருமகள் வீடு வந்து சேர வேண்டும். அவளின் விருப்பம் எதுவோ அதன்படி விட்டுவிட வேண்டும். அதற்குத் தன் மகன் சம்மதிக்கவில்லை என்றாலும் அவனின் மனதை மாற்ற முயற்சிக்க வேண்டும். இந்த பிரச்சினை முடிந்து விட்டப் பிறகு ஒரு நல்ல நாளாகப் பார்த்து இளையமகன் வீட்டுக்குப் போய் அவனிடம் மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு அழைத்து வந்துவிட வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டார் நம்பிராஜன்.
இரவு விக்னேஷ் ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வந்தப் போது அவனுக்காக தூங்காமல் வரண்டாவில் காத்துக் கொண்டிருந்தார்.
“என்னப்பா… இன்னும் நீங்க தூங்கலையா?” கேட்டுக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தான் விக்னேஷ். சற்று நேரத்திற்கெல்லாம் முகத்தைக் கழுவிக் கொண்டு வராண்டாவுக்கு வந்தான். தங்கை வசந்தி சாப்பாடு கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து விட்டுப் போனாள்.
“விக்னேஷ்… நாளைக்கு ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வாப்பா….” என்று நம்பிராஜன் சொல்ல,
“இல்லப்பா, நம்மள மதிக்காம வீட்டை விட்டுப் போனவள நான் போய் கூட்டிட்டு வரமாட்டேன். எவ்வளவு காலம் அவ அவங்க அப்பா வீட்ல இருக்காளோ இருக்கட்டும்… அவங்க வீட்டுல இருக்க பெரியவங்க புத்திமதி சொல்லிக் கொண்டாந்து விடட்டும்”
“அப்படி சொல்லாதாடா. இந்த காலத்து பொண்ணுங்க அப்படித்தான் இருப்பாங்க. அதுவுமில்லாம சரோஜா வசதியான வீட்டுப் பொண்ணு. நாம தான் கொஞ்சம் அனுசரிச்சுப் போகனும். எப்படியோ இந்த வீட்ல இருந்தா குழந்தைப் பாக்கியம் கிடைக்கலன்னு அவ மனசில அழுத்தமா ஒரு எண்ணம் வந்துடுச்சி. அவ விருப்பப்படி தனிக்குடித்தனம் போய்ப் பாருங்களேன். மாற்றம் நடந்தா நல்லதுதானே. நாங்களும் பேரப்பிள்ளையைக் கொஞ்ச ஆசையா இருக்கும். நீ இன்னமும் ஒத்துக்கலைன்னா அவ காலமெல்லாம் நம்மளைத்தான் குறை சொல்லிட்டுருப்பா. அதுக்கு நாம இடம் கொடுக்கக் கூடாதுப்பா. நீயும் உன் மனைவி விருப்பம் போல நடந்துக்க… தங்கச்சி கல்யாணத்தை நீயும் மருமகளுமா நின்னு சிறப்பாப் பண்ணிட்டியன்னா போதும்.எங்களைப் பத்தி கவலைப்படாதே… ஏதோ பென்சன் பணம் வருது. அத வச்சி நாங்க நிம்மதியா வாழ்ந்துக்கிறோம்….. ” என்று நம்பிராஜன் சொல்ல விக்னேஷ் மெளனமாக உட்கார்ந்திருந்தான்.
கனகவள்ளி தூக்கக் கலக்கத்துடன் வராண்டாவுக்கு வந்தவள், “ஏங்க புள்ள சாப்பிடட்டும். அவன் பசியா வந்திருப்பான். பேச வேண்டிய விசயத்தை காலைல பேசிப்போம்…” என்றாள்.
“அம்மா, சரோஜாவைப் போய் நான் கூட்டிட்டு வரணும்னு அப்பா சொல்றாரும்மா…. உங்ககிட்ட கூட சொல்லிக்காம அவ இஷ்டத்துக்குப் போனவள நா எதுக்கு கூட்டிட்டு வரணும். அவளே மனம் மாறி வந்தா வரட்டும்… இல்லன்னா எப்படியாவது போகட்டும்…..” விக்னேஷ் கோபத்துடன் சொன்னான்
நம்பிராஜன் தொடர்ந்தார். “விக்னேஷ், சரோஜாவுக்கு ஒரு குழந்தை நின்னுச்சுனா எல்லாம் சரியாயிடும். அண்ணாநகர்ல அவங்க அப்பா வீடு பார்த்து வெச்சிருக்காராம். நா போன் பண்ணிப்போ சொன்னார். அவருக்கும் விருப்பமில்லைதான் என்றாலும் விட்டுப் பிடிப்போம் சம்பந்திங்கிறார். அதுவும் சரிதானே. தனியாப் போனா சரோஜா மனசு ஆறும். இங்கே இருக்கிற வரைக்கும் ஏதேனும் சண்டை, சச்சரவு உங்களுக்குள்ளே வந்துட்டே இருக்கும். இது குடும்பத்துக்கு நல்லதில்ல”
அவர் பேச்சை நிறுத்த விக்னேஷ் அவரை ஏறிட்டுப் பார்த்தான்.
“உந்தம்பி எங்கோ வாடகை வீட்ல இருக்கான். நானும் அவன் மனம் நோகப் பேசிட்டேன். நான் போய் அவனைப் பார்த்து பேசினா நம்ம வீட்டுக்கு அவன் பொண்டாட்டியோட வந்திருவான். நீ போய் உன் மனைவி மனம் நோகாம கொஞ்சம் காலம் அவளோட விருப்பப்படி அண்ணாநகர் வீட்ல போய் இரு. கல்யாணமான கொஞ்சக் காலத்திலேயே நீ மனைவியைப் பிரிஞ்சிருக்கிறது மனசுக்கு கஷ்டமாயிருக்கு. நாலு பேரு எங்களையும் நாளைக்கு குத்தம் சொல்லிப் பேசுவாங்க. இதெல்லாம் வேணா .. எனக்காக தயவுசெய்து நாளைக்குப் போய் உன் மனைவியை அழைச்சிட்டு வா. அடுத்த வாரம் ஒரு நல்ல நாளா பார்த்து புது வீட்டுக்குப் போயிடுங்க. உன் சந்தோசம் தான் எங்க எல்லாருக்கும் முக்கியம்….” என்றார் நம்பிராஜன்.
“ஆமா விக்னேஷ், அப்பா சொல்றபடி கேளு.. நாளைக்குப் போ… ” கனகவல்லி கண்கள் கசிந்தப்படியே சொன்னாள்.
சாப்பிட்டு எழுந்தவன், “சரிப்பா… நான் நாளைக்குப் போய் அவள அழைச்சிட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு அறையை நோக்கி நடந்தான்.
“கோவப்படாத விக்னேஷ், எதையும் மனசுல வெச்சுக்காம அன்போடு பேசி கூட்டிட்டு வா…” என்றார் நம்பிராஜன்.
“சரிப்பா..” என்றான் வேண்டாவெறுப்பாய். அவனின் அறைக்கதவு அடைபட்டதில் அவனின் கோபம் தெரிந்தது.
நம்பிராஜன் வருத்தப் பெருமூச்சை விட்டார்.
மறுநாள் காலையில் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு மடிப்பாகத்தில் இருந்த தன் மனைவி வீட்டுக்குக் கிளம்பி விட்டான் விக்னேஷ். நம்பிராஜன் மனம் சாந்தமடைந்தார். அவர் தன் மனைவியையும், மகளையும் அழைத்துக் கொண்டு அண்ணாநகரில் பிரசித்திப் பெற்ற பெருமாள் கோயிலுக்குப் போனார்.
சாமி தரிசனம் முடித்துக் கொண்டு காலை பத்து மணிவாக்கில் கோயிலை விட்டு நம்பிராஜன் தன் குடும்பத்தினருடன் வெளியில் வந்து ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தப் போது கையில் பிராசாதக் கூடையுடன் சரவணின் மனைவி வனிதா கோயிலுக்கு வந்துக் கொண்டிருந்தாள்.
தன்னுடைய மாமனார், மாமியாரைப் பார்த்ததும் முகம் மலர்ந்து அவர்கள் அருகில் சென்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
“வாம்மா வனிதா… நல்லாயிருக்கியா?” என்று கேட்டபடியே அவளின் வயிற்றைப் பார்த்தாள் கனகவள்ளி. ஆறுமாதக் கர்ப்பிணியாக இருந்தாள் வனிதா.
“நல்லாயிருக்கேன் அத்த, பக்கத்து தெருவுல தான் வாடகைக்கு இருக்கோம். அவரும் வீட்ல தான் இருக்காரு. வாங்க வீட்டுக்குப் போகலாம்…. ” என்று பூரிப்போடு அழைத்தாள் வனிதா.
கனகவள்ளி, நம்பிராஜனைப் பார்த்தாள்.
“அப்பா அண்ணனைப் பார்த்து ரொம்ப நாளாகுது.. போலாமாப்பா..” என்று கெஞ்சினாள் வசந்தி.
“நடங்க போகலாம்…” தன் மனைவியையும், மகளையும் பார்த்து சொல்லிவிட்டு வனிதாவுடன் நடந்தார் நம்பிராஜன்.
வனிதா தன் பர்ஸில் இருந்த செல்போனை எடுத்து சரவணனுக்குப் போன் செய்தாள்.
“ஏங்க…. மாமாவும் அத்தையும் வசந்தியோட கோயிலுக்கு வந்திருந்தாங்க. நான் பார்த்துப் பேசினேன். வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றேன்… ” என்றாள் பூரிப்பாய்.
“அப்பாவும் வர்றாரா…? “
“ஆமாங்க….”
அதைக்கேட்டு சரவணனால் நம்பவே முடியவில்லை. “சரி வனிதா… வீட்டுக்கு சீக்கிரம் வாங்க… நா மார்க்கெட் போயிட்டு வந்துடுறேன்” என்று சொல்லிவிட்டு மீன் வாங்க மார்க்கெட்டுக்கு பறந்தான்.
“வனிதா… சரவணனையும் கோயிலுக்கு அழைச்சிட்டு வர்றது தானே… புள்ளதாச்சியா இருந்துக்கிட்டு இப்படி தனியா வந்திட்டிருக்கியே…” என்றாள் கனகவள்ளி.
“அவரை மதியம் டூட்டிக்குப் போகனும் அத்த. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டிருந்தாரு..” என்றாள் வனிதா.
கொஞ்ச நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள்.
வனிதா படபடப்பானாள். தன் மாமனாரை ஷோபாவில் உட்கார வைத்து விட்டு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
அரிசியை உலையில் வைத்துவிட்டு ப்ரிஜ்ஜில் இருந்த சாத்துக்குடி, ஆப்பிள் பழங்களை எடுத்து ஜூஸ் போட்டாள். உடன் வசந்தியும் உதவினாள்.
“வாடகை வீட்டுக்கு எவ்வளவும்மா வனிதா?” என்றாள் கனகவள்ளி.
“மாசம் எட்டாயிரம் வாடகை அத்த..”
“அண்ணி வீடு சூப்பரா இருக்கு… அழகா வச்சிருக்கீங்க” என்றாள் வசந்தி
வனிதா, அறையில் இருந்த டி.வி.யை ஆன் செய்து மாமனார் பார்க்கட்டுமென்று செய்தி சேனலை வைத்தாள். பரபரப்போடு வீட்டுக்குள் நுழைந்த சரவணன் கையில் காய்கறி, மீன் பைகளுடன் ஒரு மஞ்சப் பையும் இருந்தது.
தனது பெற்றோர்களை பார்த்த மகிழ்ச்சி சரவணனுக்கு…
வனிதா காய்கறி, மீன் பையை வாங்கிக் கொண்டாள்.
கனகவள்ளி தான் கண் கலங்கினாள். வசந்தி ஓடிப்போய் அண்ணனை கட்டிக் கொண்டாள்.
கொஞ்ச நேரம் கண் கலங்க அமைதியாக இருந்தவன் மஞ்சள் பையை அறைக்குள் கொண்டு போய் வைத்துவிட்டு வந்தான்.
நம்பிராஜன் பரிவோடு தன் மகனைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தார்.
“நீ, வீட்டை விட்டு போனதிலிருந்து உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. எப்போதும் உன்னோட கவலை தான்.” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
பிறகு தனியாக அழைத்துப் பேசினார்.
பெரிய மருமகளோடு பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.
அடுத்த வாரம் வீட்டை காலி பண்ணிட்டு நம்ம வீட்டுக்கு வந்திடு என்றார்.
சரவணன் மெளனமாக இருந்தான்.
அப்போது கனகவள்ளியும் வந்து சரவணனிடம் பேசினாள்.
“புள்ளதாச்சிப் பெண்ண தனியா வச்சிக்கிட்டு கஷ்டப்படாதே சரவணா… வீட்டுக்கு வா. குழந்தை நம்ம வீட்ல தான் பிறக்கனும்… “
சமையல் முடிந்ததாக வனிதா அழைத்தாள்.
எல்லாரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.
நம்பிராஜன் எப்போதும் காணாத ஒரு நிம்மதியை அப்போது அடைந்தார்.
கிளம்பும் போது “சரவணா… எதையும் மனசுல வச்சுக்காதேடா… அப்பா அப்போ கோபத்தில பேசிட்டேன். இப்போ என் தவறை உணர்ந்திடேன். என்னை மன்னிச்சிடு. வீடு வந்து சேரு… ” என்றார் நம்பிராஜன் வருத்ததுடன்.
“அப்பா.. நான் உன் மகன். என்னை நீங்க திட்டுறதுக்கு உரிமை உண்டு. நான் பொறுமையா இல்லாம உங்க பேச்சையும் கேட்காம அவசரப்பட்டதும் தப்புதானே…. அதான் உங்க கோபத்தை நான் பெருசா நினைக்கல. நீங்க தான் என்னை மன்னிக்கனும்…” என்று சொல்லி விட்டு தன் அறைக்குச் சென்ற சரவணன் ஒரு மஞ்சள் பையை எடுத்து வந்து நம்பிராஜனிடம் நீட்டினான்.
“அப்பா வசந்திக்கு மாப்பிள்ளை பார்த்துட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன். என் தங்கச்சியோட கல்யாணத்துக்கு நான் சேமிச்சி வச்சிருக்கிற பணம், நீங்க வர்றீங்கன்னு சொன்னதும் மார்க்கெட் போனவன் அப்படியே பேங்க் போய் அதையும் எடுத்துக்கிட்டு வந்துட்டேன்.இதுல இரண்டு லட்சம் இருக்கு. பேங்க்ல போட்டு வையுங்க. ” என்றான்.
நம்பிராஜனால் பேச முடியவில்லை. அவரின் கண்கள் கலங்கிப் போய் விட்டன. பணப்பையை வாங்காமல் தன் மகனின் கையை பாசத்தோடு பிடித்துக் கொண்டு நின்றார்.
“சரவணா… வர்ற ஞாயித்துக்கிழம நம்ம வீட்டுக்கு வந்திடு. வனிதா… அவனை நீ தான் அழைச்சிட்டு வரணும்.” கனகவள்ளி வனிதாவின் கைகளை பிடித்துக் கொண்டு பரிவோடு கூறினாள்.
“சரி சரவணா… நாங்க கிளம்புறோம்… ” என்றார் நம்பிராஜன்.
“சரிப்பா….”
“மறுபடியும் நாங்க வந்து கூப்பிடுற மாதிரி வச்சிக்காத. நல்ல நாளா அடுத்த வாரமே பார்த்து வீட்டுக்கு வந்திடு. வனிதா வரட்டுமா…” என்று நம்பிராஜன் பேசிக் கொண்டே நடந்தார்.
சரவணன் ஏனோ வர்றேன் என இறுதிவரை சொல்லவில்லை.
வெயில் தாழ்ந்திருந்தது என்றாலும் சூடு குறையவில்லை.
நன்றி : படம் இணையத்திலிருந்து
Leave a reply
You must be logged in to post a comment.