ஹேமா

உயிர் காக்கும் ஊழியர்கள்
சம்பவம் : 1
ஆம்புலன்ஸின் சைரன் நிறுத்தப்பட்டிருந்தது. நோயாளியைச் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட்டு தன் ஆம்புலன்ஸ் வண்டியை நோக்கி விரைந்தார் டிரைவர் ரவி. கைகழுவிவிட்டு களைப்பாக தன் டிரைவர் சீட்டில் உட்கார்ந்தார்.
மணி நண்பகல் பன்னிரெண்டு ஆகியிருந்தது. காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்ற நினைப்பே அப்போதுதான் வந்தது. வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த சாப்பாட்டுப் பொட்டலத்திலிருந்து இட்லியை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். அரை இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஃபோன் மணி அடித்தது. வில்லிவாக்கத்தில் நாற்பத்தைந்து வயது ஆண் ஒருவர் இருதயக் கோளாறால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது. உடனே இட்லிப் பொட்டலத்தை மூடி வைத்து விட்டு வண்டியில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து ஜன்னலோரமாக கைகழுவிவிட்டு உடனே அட்டென்டர் இர்ஃபானுக்கு ஃபோனில் அழைத்தர். உடனே இர்ஃபான் ஓடிவரவும், நிதானமாகத் தண்ணீர் குடிக்கக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக வண்டியை கிளப்பினார். சைரனை இயக்கிக்கொண்டே பறக்க ஆரம்பித்தது ஆம்புலன்ஸ்.
காலையிலிருந்து சாப்பிடாத களைப்போ அலுப்போ ரவியிடம் எதுவுமில்லை. எங்கோ ஒரு இதயம் உதவி வேண்டி துடித்துக் கொண்டிருக்கிறது அதை காப்பாற்ற போவதை விடவும் பசி ஒன்றும் முக்கியமில்லை என்று அவருக்குத் தோன்றியது. வண்டி விரைந்தது. வண்டியை விட கூடுதலாக ஓட்டுநர் மற்றும் உதவியாளரின் மனங்கள் விரைந்தன.
சென்னை போக்குவரத்து நெரிசலில், முடிந்த அளவிற்கு வேகமாக ஆம்புலன்ஸை ஓட்டினார் ரவி. நாற்பது நிமிடங்களில் வில்லிவாக்கத்திலுள்ள நோயாளியின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இடையிடையில் நோயாளியின் வீட்டாரோடு கைபேசியில் வீட்டு முகவரி குறித்தும் நோயாளியின் நிலை குறித்தும் பேசினார். வீட்டினருகே சென்றவுடன் உரிய நபர்களை ஃபோனில் அழைத்து ஆம்புலன்ஸ் வந்துவிட்டது எனக் கூறுகிறார். ஓடிப்போய் நோயாளியை டிரைவரும் அட்டெண்டரும் உறவினர்களின் உதவியோடு ஸ்ட்ரெச்சரில் ஏற்றுகிறார்கள். நோயாளியுடன் இருந்த உறவினர் ஒருவர் குடித்திருக்கிறார். என்னடா xxx இவ்வளவு லேட்டா வர்றீங்க xxx என்று ஏக வசனம் பேசுகிறார். குடித்திருக்கிறார் என்று தெரிந்து அவரிடம் வம்பு வளர்ப்பதில் அர்த்தமில்லை என்று புரிந்து கொண்டு அவரிடம் எதுவும் பேசாமல் அவரை முறைத்தபடி வேலையைத் தொடர்கிறார்கள் இருவரும். நோயாளியை வண்டியில் ஏற்றிக்கொண்டு உரிய நேரத்தில் உரிய மருத்துவ மனையில் சேர்க்கின்றனர்.
அழைத்து வரும்போது நோயாளியின் உறவினர் ஒவ்வாமை காரணமாக ஆம்புலன்ஸில் வாந்தி எடுத்து விடுகிறார். அட்டெண்டர் அதை சுத்தம் செய்து முடிப்பதற்குள் அடுத்த எமர்ஜன்சி அழைப்பு. பிரசவ வலியில் ஒரு பெண் துடிப்பதாக ஃபோன் வருகிறது. அவசரமாக வண்டியை சுத்தம் செய்துவிட்டு இருவரும் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டிற்குப் போகத் தயாராகிறார்கள். மீண்டும் வாகனமும் வாகனத்தில் உயிர்காக்கும் ஊழியர்களும் விரைகிறார்கள்.
சம்பவம் 2:
வாழ்க்கையில் பயம் என்ற உணர்வு யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி பயந்த சுபாவம் கொண்டவர்தான் ஷாஜி. ஆம்புலன்ஸ் வண்டி ஓட்ட ஆரம்பித்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தாலும் ரத்தத்தைப் பார்த்தாலோ, இறந்து போனவர்களைப் பார்த்தாலோ பயம் வாட்டியெடுக்கும் ஷாஜிக்கு.
காலையில் முதல் ஃபோனே ஒரு சாலை விபத்து குறித்துதான் வந்திருந்தது. கேரளத்தின் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையிலிருந்து வேகமாக ஆம்புலன்ஸ் வண்டியோடு விரைந்தார்கள் ஷாஜியும் உதவியாளர் ரஃபீக்கும். கொச்சியின் கலமஷேரியில் சாலை விபத்து. ஒருவரின் தலையின் பெரும்பான்மை லாரியின் சக்கரத்தில் நசுங்கியிருந்தது. நாடித்துடிப்பைச் சோதித்ததில் உயிர் இன்னுமிருந்தது. ஆனால் பிழைப்பது கடினம் என்றே ஷாஜிக்குத் தோன்றியது. உயிரிருக்கிறது, எப்படியாவது காப்பாற்றி விடமாட்டோமா என்று எண்ணத்தில் அவரை அவசர அவசரமாக வண்டியில் ஏற்றினார்கள்.
எர்ணாகுளம் மருத்துவமனையை நோக்கி விரைந்தனர். தலை நசுங்கி ரத்தம் சொட்டச் சொட்ட சாலையில் கிடந்த அந்த மனிதனே வழியெங்கும் தன் மனக்கண்ணில் காட்சியாக வந்து கொண்டிருந்தார். வாந்தி வருவது போல இருந்தது ஷாஜிக்கு. கண்கள் இருட்டியது. எப்படியோ மருத்துமனையை அடைந்து விபத்துக்குள்ளானவரை ஒப்படைத்துவிட்டார்கள். ஆனால் விபத்துக்குள்ளானவர் வழியிலேயே இறந்திருந்தார். காலம் ஆடும் கண்ணாமூச்சிக்கு யாரிடமும் பதிலில்லை என்றே தோன்றியது ஷாஜிக்கு.
இந்த விபத்தும் மரணமும் தந்த பய உணர்வும், இறந்து போனவரின் மனைவி குழந்தைகள் கதறிய கதறலும் மனதை நிலைகுலைய வைத்தன. அன்றைய நாள் வேலையைத் தொடர முடியாமல் வீட்டிற்குப் போனார் ஷாஜி.
வீட்டில் மனைவி குழந்தைகளோடு கூட சரியாகப் பேச இயலவில்லை. உடல் காய்ச்சல் கண்டது. நான்கு நாட்கள் விடுப்புக்குப் பின் மீண்டும் ஆம்புலனஸ் ஓட்டச் சென்றார் ஷாஜி. ”முதல் கேஸே ஆக்ஸிடண்ட் கேஸா வந்துவிடக்கூடாது ஆண்டவா” என்று வேண்டிக் கொண்டிருந்தார் ஷாஜி.
சம்பவம் : 3
ஆம்புலன்ஸில் சில வகைகள் உண்டு. சாதாரணமாக நடந்து செல்லக்கூடிய நோயாளிகள் அல்லது அவசரப் பிரிவைச் சேராத நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ், அவசரப் பிரிவு அதாவது ஐசியு நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ். இறந்து போனவர்களை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் போன்றவைகள். இந்த முன்றாவது பிரிவில் மட்டும் நான் சேர மாட்டேன் என்று அடம்பிடித்து அவசர சிகிச்சை ஆம்புலன்ஸில் சேர்ந்திருநதார் வினு.
தற்கொலை செய்ய முயற்சி செய்து மிக மோசமான காயங்களுடன் ஒரு நபரை வண்டியில் ஏற்றிக் கொண்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு விரைந்தார் ஆம்புலனஸ் டிரைவர் வினு. தற்கொலை செய்ய முயன்றவரின் மகளும் வண்டியில் ஏறிக்கொண்டார். திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு அந்த நபர் ஆம்புலன்ஸில் செல்லும் வழியிலேயே இறந்து போனார்.
மருத்துவமனை வாசலில், இறந்து போனவரின் மகள் ஆம்புலன்ஸ் டிரைவர் வினுவின் சட்டையைப் பிடித்துக் கொண்டு ”நீதான் என் அப்பாவை கொன்னுட்ட பாவி? இன்னும் கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருந்தா எங்க அப்பாவ காப்பாத்தி இருக்கலாம். கொன்னுட்டீங்களேடா பாவிகளா” என்று அழுது கூப்பாடு போட்டார். வினு தனக்கு ஃபோன் வந்த உடனே விபத்துக்குள்ளானவரின் வீட்டிற்குப் புறப்பட்டுவிட்டார். தான் தாமதமாகச் செல்லவில்லை. அதனால் அவர் உயிர் போகவில்லை. அவர் கழுத்து நெறிபட்டு மோசமான நிலையிலேயே ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டிருந்தார். இதெல்லாம் தெரிந்திருந்தும் செய்யாத தவறுக்காக ஏதோ குற்ற உணர்வோடே வீடு திரும்பினார் வினு.
இது அவசர ஊர்தி ஓட்டுநர்களின் வேலைகளில் சில சம்பவங்கள் மட்டுமே. இப்படி தினம்தினம் எத்தனையோ சம்பவங்களை கடந்து வருகிறார்கள் இவர்கள்.
இவ்வுலகில் உயிரை விட மதிப்பு மிக்க ஒன்று என்று ஏதேனும் இருக்கிறதா என்றால் என்னளவில் இல்லை என்பேன். உயிரே பிரதானம். உயிரைக் காப்பதால்தான் மருத்துவர்களை கடவுளர்களுக்கு நிகராக்குகிறோம். உண்மையில் மருத்துவர்கள் மட்டுமல்ல உயிர்காக்கும் ஒவ்வொருவரும் கடவுளர்கள்தானே.
நாம் சாலைகளில் ஒரு நாளைக்கு எத்தனை அவசர ஊர்தி வாகனங்களை கடந்து சென்றிருப்போம். பல நேரங்களில் அந்த உயிர் நல்லபடியாக பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று நாம் அறிந்திராத அந்த மனிதருக்காக வேண்டுதல் கூட செய்திருப்போம். இந்த அவசர ஊர்தியை ஓட்டிச் செல்பவர் யார் என்று ஒரு கணம் நிதானித்து பார்த்திருப்போமா? அந்த ஓட்டுநர்களின் முகமோ அகமோ அவர்கள் வாழ்வோ எதைக் குறித்தாவது நாம் சிந்தித்திருக்கிறோமா? எல்லா வாகனங்களை விடவும் அதி வேகமாக செல்லக்கூடிய இந்த அவசர ஊர்தி வாகனங்களுக்கு எதுவும் விபத்துகள் நடந்து விடக்கூடாது என்று யோசித்திருக்கிறோமா? ஏதாவது ஒரு அவசர ஊர்தி ஓட்டுநரைச் சந்தித்து இதுவரை நன்றி கூறியிருக்கிறோமா?
அவசர ஊர்தி ஓட்டுநர் மட்டுமல்ல நம் துணிகளை இஸ்திரி போட்டுத் தரும் இஸ்திரிகாரர்களுக்கு, சாலைகளைத் தூய்மைப்படுத்தும் துப்புரவு பணியாளர்களுக்கு வீட்டு வேலை செய்யும் அக்காக்களுக்கு இதுபோல பல உதவிகளையும் செய்யும் எளிய மனிதர்களுக்கு நம் நன்றியை எல்லா நேரங்களிலும் உரித்தாக்கியிருக்கிறோமா? எத்தனை சொல்லப்படாத நன்றிகள் இந்த உலகில் இன்னும் மிச்சம் இருக்கிறது.
நிற்க, அவசர ஊர்திகளின் வரலாற்றை சற்று பார்ப்போம். முதன்முதலில் இந்த அவசர ஊர்தி நோயாளர் ஊர்தியாகவே செயல்பட்டது.
நோய்வாய்ப்பட்டவர்களை, மரணப்படுக்கையில் இருப்பவர்களை ஏற்றிச் செல்வதற்காகவே இந்த வாகனம் பயன்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் 1487 இல் தொடங்கிய இப்பணி 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக பயன்பாட்டுக்கு வந்தன. ராணுவத்துக்காக மட்டும்தான் ஆரம்பகாலத்தில் அவசர ஊர்திகள் பயன்படுத்தப்பட்டன. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி ”இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்” என்ற நிறுவனத்தை தொடங்கியதோடு படுக்கை (ஸ்ட்ரெச்சர்) தூக்கும் பணியாளராகவும் பணி செய்தார் என்பது நாம் பலரும் அறிந்த ஒன்றே.
அவசர ஊர்தி சேவை என்பது வெறும் நிலவழி ஊர்திகளாக மட்டுமல்லாமல் அசாம் போன்ற நீர்நிலைகள் அதிகமாக உள்ள இடங்களில் படகுகள் அவசர ஊர்திகளாக பயன்படுத்தப்படுகின்றன.
உலகமெங்கிலும் ஆம்புலன்ஸ் சேவை இருந்தாலும் 1914 இல் தான் இந்தியாவில் மும்பையில் முதன்முதலில் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் அச்சமயம் அது சேவையாகவே இல்லை. கட்டணம் வசூலித்து அழைத்து செல்லும் வாகனமாகவே இருந்தது. காலம் செல்லச் செல்ல அது அவசரச் சேவையாக உருமாறியது. அரசு ஆம்புலன்ஸ் சேவை 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச ஆம்புலன்ஸ் திட்டம் என்ற பெயரில் ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களிலும் இச்சேவை அறிமுகமானது. பறக்கும் ஆம்புலன்ஸ், படகு ஆம்புலன்ஸ், ஆட்டோ ஆம்புலன்ஸ் என பல்வேறு வழிகளிலும் இவ்வுயிர்காக்கும் சேவை நடைபெற்று வருகிறது.
இந்த அவசர உதவிக்கு 108 என்ற எண்ணைத் தந்தவர் நம் கலைஞர் கருணாநிதி அவர்கள் என்பது நினைவு கூறப்பட வேண்டிய ஒன்று. ஆம்புலன்ஸிற்கு எதற்காக எண் வேண்டும்? அதை செய்ததில் என்ன பெருமை என்று சிலர் நினைக்கலாம். போலீஸை அழைக்க வேண்டுமென்றால் எண் 100 ல் அழைக்க வேண்டும் என்பது நம் மனங்களில் பதிந்துவிட்டது. அதைப்போல ஒரு எளிமையான எண் பொது மக்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும். அவசர காலகட்டங்களில் படித்தவர்கள் படிக்காதவர்களென்று யாராக இருந்தாலும் அந்த எண் நினைவில் வரவேண்டும். அப்படியொரு எண்ணாக மாறிப்போனது 108 என்றால் அது மிகையல்ல. அதை உருவாக்கியவரை நினைவு கூர்வது நம் கடமையாகவே நான் பார்க்கிறேன்.
இவ்வளவு முக்கியமான வேலையைச் செய்யும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களின் நிலைப்பாடு, சம்பளம், வாழ்க்கை, வேலை, ஓய்வு, சிரமங்கள் என்று ஏதாவது நமக்குத் தெரியுமா ?
சமீபத்தில் நான் பேசிய அவசர ஊர்தி ஓட்டுநர் இவ்வாறு கூறுகிறார். ‘எங்களுக்கு எங்கள் வேலைக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படுவதில்லை. பன்னிரெண்டு மணி நேர வேலை என்பது சற்று கூடுதலானது. அதை 8 மணி நேரமாக குறைத்தால் நன்றாக இருக்கும். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை நேரம். ஒருவேளை இரவு ஏழு நாற்பத்தைந்துக்கு ஃபோன் வந்தாலும் அந்த நோயாளியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று மீண்டும் திரும்ப இரண்டு மணி நேரம் வரை ஆகலாம் அதாவது இரவு10 மணி வரை கூட ஆகலாம். ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு நாங்கள் மீண்டும் வேலையில் இருக்க வேண்டும். அதற்கான அதிகப்படியான சம்பளமோ வேறு பயன்களோ எங்களுக்கு கிடைப்பதில்லை’
தன் மனைவியின் பிரசவத்தின் போதும் தன் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதும் கூட மற்ற உயிரைக் காப்பாற்ற தன் பணியை மேற்கொண்டிருக்கிறேன் என்கிறார் மற்றொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.
ஆம்புலனஸ் எவ்வளவு ஹாரன் அடித்தாலும் வழிவிடாத வாகன ஓட்டிகள் சிலர் இருக்கிறார்கள். அல்லது அவர்களே வழிவிட நினைத்தாலும் விரைந்து செல்ல முடிவதில்லை. காரணம் நம் சாலைகளும் சாலை விதிகளை மதிக்காத சிலரும். ஆம்பலன்ஸில் சத்தமிடுவது வெறும் சைரன் ஒலி மட்டுமில்லை. அங்கு ஓர் உயிரும் கதறிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினார் வேறொரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.
எத்தனை வருடங்களாக இவ்வேலையில் பணிபுரிந்தாலும் நிரந்தர பணியாளர்களாக அவர்களால் மாற இயலவில்லை என்ற வருத்தத்தையும் ஒரு ஓட்டுநர் பதிவு செய்தார். வேகத்தடை காரணமாக ஒரு குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் ஆம்புலன்ஸை ஓட்ட இயலவில்லை அதனால் சரியான நேரத்தில் நோயாளிகளைச் சென்றடைய இயலவில்லை என்ற கூற்றையும் தெரிவித்தார். ஆம்புலன்ஸ்கள் விபத்துக்குள்ளானதில் பல ஓட்டுநர்கள் இதுவரை இறந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த விபத்து எதனால் ஏற்பட்டது? இனி விபத்துகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற விஷயங்களில் அரசும் தனியார் நிறுவனங்களும் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை என்கிற மனவேதனையும் தெரிவித்தார்.
இதுபோன்ற புகார்கள் எல்லாத் துறைகளில் பணியாற்றுபவர்களிடமும் இருக்கிறதுதான் என்றாலும் உயிர் காக்கும் பணிகளைச் செய்யும் இவர்களது புகார்களை தனியார் நிறுவனங்களும் அரசும் செவிசாய்க்க வேண்டியது அவசியமாகும்.
ஒரு நோயாளியை சரியான நேரத்தில் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்ததால் அவர் பிழைத்துவிட்டார் என்று யாரேனும் சொல்லும்போது அந்த உணர்வு எப்படி இருந்தது என்று கேட்டதற்கு பல ஓட்டுநர்களும் நெகழ்ச்சியாக சொன்ன பதில், ‘இந்த வாழ்க்கையே அர்த்தமாகிவிட்டது போல இருக்கு. எதையோ சாதிச்ச உணர்வு. உயிர டாக்டருங்கதான் காப்பதுறாங்க. ஆனால் நாமும் அதுல பங்களிச்சிருக்கோம்னு நினைக்கும் போது அவ்ளோ சந்தோசம். அந்த ஒரு சந்தோஷத்துக்காகத்தான் இவ்வளவு சிக்கல்கள் இருக்கும் போதிலும்கூட இந்த வேலையைத் தொடர்ந்து செய்கிறோம் என்று கூறுகிறார்கள் அவசர ஊர்தி ஓட்டுநர்கள்.
ஆம்புலன்ஸ் ஒலியில் நான்கு வகைகள் உண்டு. நோயாளிகள் இல்லாதபோதோ நோயாளிகளுக்கு எந்த அவசர சிகிச்சையும் தேவைப்படாத போதோ இவ்வொலியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இயக்குவதில்லை. அவசர சிகிச்சை, தீவிர அவசர சிகிச்சை, அதிதீவிர அவசர சிகிச்சை, உயிரை உடனடியாக காப்பாற்ற வேண்டிய அவசர சிகிச்சை என்று அந்த ஒலிகளில் வெவ்வேறு ஒலிகள் உண்டு. பொதுமக்களாகிய நாம்தான் அந்த ஒலிகளின் வேறுபாட்டை அறிந்து கொண்டு அவ்வாகனங்களுக்கு வழிவிடவேண்டும். யூடியூபில் தேடினால் அந்தந்த ஒலிகளின் வேறுபாடுகளைப் பற்றிய காணொளிகள் நிறைய கிடைக்கின்றன. வெளிநாடுகள் போல அவசர ஊர்திகளுக்கு என்று பிரத்தியேகமான சாலைகள் இல்லாத நம் நாட்டில் பொது மக்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு என்பது மிகவும் அவசியமானது.
அதைப்போலவே நோய்வாய்ப்பட்டவர்களுக்கு எந்த மாதிரியான முதலுதவி தர வேண்டும் என்பதையும் பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களின் வீட்டை ஆம்புலன்ஸ் சென்றடைவதற்குள் முதலுதவி செய்யத் தவறியதால் நடந்த இழப்புகளைப் பற்றி வருந்திக் கூறினார் ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுநர். நம் தமிழ்ச் சினிமா முதலுதவி குறித்து பல தவறான கருத்துகளை நம் மூளையில் ஏற்றியிருக்கிறது. பொறை ஏறிட்டா தலையைத் தட்டுவது, யாராவது விபத்துக்குள்ளானா உடனே தண்ணீரைக் குடிக்கக் கொடுப்பது போன்ற பல தவறான கருத்துகளை தவறாமல் காண்பிக்கிறது பல தமிழ் சினிமாக்கள். இருதய நோயாளிக்கு, தீக்காயம் பட்டவர்களுக்கு, மின்சாரம் தாக்கியவர்களுக்கு, எந்த மாதிரியான முதலுதவியைச் செய்ய வேண்டும் என்று பொது மக்களுக்கு வலியுறுத்த வேண்டியது எவ்வளவு அவசியம்?
சிபிஆர் (Cardiopulmonary resuscitation (CPR)) என்னும் உயிர் காக்கும் முறையை எபபடிச் செய்ய வேண்டும்? எத்தனை முறை செய்ய வேண்டும்? யாரெல்லாம் செய்யலாம்? என்ன விதிமுறைகள்? போன்றவற்றை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மதம் சார்ந்த, அரசியல் சார்ந்த பதிவுகளைத் தவறாமல் பேசும் சில ஊடகங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் இது போன்ற செய்திகளிலும் கவனம் செலுத்த வேண்டும். நம் ஊரில்தான் உயிரைக் குறித்த, பாதுகாப்பு குறித்த எந்த பயமும் இல்லாமல் பலரும் பல துறைகளிலும் வேலை செய்கின்றனர். பாதுகாப்பு உணர்வும் முதலுதவி குறித்த தெளிவும் பல உயிர்களையும் காப்பாற்றும்.

இது இப்படியிருக்க, சில வெளிநாடுகளில் சிபிஆர் செய்யும்போது உடனிருக்கும் மனிதரின் ஒப்புதல் கண்டிப்பாக பெற வேண்டும். அப்படிப் பெறாமல் மூர்ச்சையான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உதவி செய்வதற்காக அவர் மேல்சட்டையை விலக்கி சிபிஆர் அளித்த ஒரு பெண்பத்திரைக்கையாளரை அடித்தே கொன்ற செய்தியையும் நாம் மறந்து விட இயலாது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் போது அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கேற்ப நம் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்வது கூட அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

இவ்வளவு சிக்கல்கள் இருந்த போதிலும் இவ்வுயிர் காக்கும் பணியில் கடந்த சில வருடங்களாக பெண்களும் பங்கேற்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. 2018 இல் கயல்விழி தமிழ்நாட்டின் முதல் அவசர ஊர்தி ஓட்டுநராக பணிபுரிந்தார். 2020இல் வீரலட்சுமி தமிழ் நாட்டின் இரண்டாவது ஓட்டுநர் ஆனால் 108 அவசர ஊர்தியை ஓட்டும் முதல் பெண் இவரே. நெல்லை மாவட்டத்தில் ஜெனோவா புஷ்பம், பஞ்சாபில் முதல் பெண் அவசர ஊர்தி ஓட்டுநர் மன்ஜீத் கவுர், கோழிக்கோட்டில் ஆயிஷா முஹம்மது, ஹிமாச்சலில் ஹமீர்பூரைச் சேர்ந்த பெண் ஜான்சி கட்னோலியா, தற்போது 2022-ல் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தீபாமோள் என்று பல பெண்களும் அவசர ஊர்தி ஓட்டுநர்களாக தற்போது பணியாற்றுகிறார்கள்.
சுகாதாரமான பொதுக் கழிப்பிடங்கள் இல்லாத நம் மாநிலங்களில் ஆண்களைவிட பெண்களுக்கு அதிலும் ஆம்புலன்ஸ் டிரைவர் போல பொது வெளியில் பணிபுரியும் பெண்களுக்கு வெளியில் செல்லும்போது எவ்வளவு சவால்கள் இருக்கும் என்பதை நான் செல்லாமலேயே உங்களால் புரிந்து கொள்ள இயலும். அதையும் தனியார் நிறுவனங்களும் அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு ஆண்டிற்கு சுமார் நாற்பத்தியொரு லட்சம் கிலோமீட்டர் வண்டி ஓட்டும் அவசர ஊர்தி ஓட்டுநர்கள் பூமியிலிருந்து நிலவுக்கு பன்னிரண்டு முறை போய்விட்டு வரக்கூடிய தொலைவைக் கடக்கிறார்கள் என்கிற புள்ளிவிவரம் திடுக்கிட வைக்கிறது.
இப்போது ஒரு முக்கியமான மனிதரோடு நம் உரையாடலை தொடங்கவிருக்கிறோம். திருமிகு வீரலட்சுமி. யார் இந்த வீரலட்சுமி? சமீப காலங்களில் இந்தப் பெயர் உங்கள் பலரின் காதுகளையும் எட்டியிருக்கக்கூடும். கட்டுரையில் முற்பகுதியில் நான் அவர்களைக் குறிப்பிட்டிருந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆம்.. முதல் பெண் 108 ஆம்புலன்ஸ் பைலட் வீரலட்சுமி அவர்களைதான் குறிப்பிடுகிறேன்.

தமிழக முதல்வர், திரைப்பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவிக்காத மனிதர்களே இல்லை எனலாம். அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்புடன் அவருடன் நடந்த உரையாடலையும் பார்க்கலாம்.
மதுரையில் உள்ள அண்ணாநகர் டிரைவிங் பயிற்சி பள்ளியில் தன் ஓட்டுநர் பயிற்சியை ஆரம்பித்த இவர் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் கடற்படை ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கனரக வாகனங்கள் ஓட்டும் உரிமம் பெற்றவர். இதுவரை 108 ல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்களே இல்லாத நிலையில் ஒரு பெண் ஆம்புலன்ஸ் டிரைவரை வேலைக்கு அமர்த்துவது சரியாக வருமா என்று சிந்தித்த பணி தேர்வாளர்கள் மத்தியில் தன் அசாத்திய திறமையால் இந்த பணியில் சேர்ந்தவர். பெண்களின் கைகளிலிருந்து கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகங்களை கொடுக்கச் சொன்னார் பெரியார். அதன் பலன்தான் இன்று எல்லா துறைகளிலும் பெண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனலாம்.
பொதுவாகவே மனிதர்களின் குண நலன்களை அவர்களின் பெயரோடு ஒப்பிட்டுக் கூறுவது மூடத்தனம் என்றே எனக்குத் தோன்றும். ஆனால் வீரலட்சுமி அவர் பெயருக்கேற்ற துணிவும் கூடவே நிதானமும் கொண்ட மனுஷி. அவரோடு எனக்கு உரையாட கிடைத்த நேரம் மிக நெகிழ்வான தருணம் என்று கூறுவேன்.
உங்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகணும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது ?
அண்ணாநகர் டிரைவிங் ஸ்கூலில் முதன்முதலில் டிரைவிங் கத்துக்க போனேன். அங்கு கிடைச்ச தைரியம்தான் பின்னர் ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்கு வழிவகுத்தது. வேலைக்கு இன்டர்வியூ போகும் போது பெண் ஆம்புலன்ஸ் டிரைவரானு யோசிச்சாங்க. ஆனா எனக்கு தைரியம் இருந்தது. தைரியமா டெமோ டிரைவ் ஓட்டிக் காமிச்சேன். நல்ல ஓட்டுனதுனால வேலைக்கு சேத்துகிட்டாங்க.
ஒரு பெண் வண்டி ஓட்டும் போது பொதுவாக எந்த வண்டி ஓட்டினாலும் நமது சமூகத்தில் ஒரு அலட்சியப் பார்வை இருக்கும் அதை எப்படி கையாண்டீங்க?
அந்த அலட்சியங்களையெல்லாம் நாம் வேலையில் காட்டும் ஈடுபாட்டைக் கொண்டுதான் மீண்டு வரவேண்டும். செய்யும் தொழிலை ஆழமாகக் கற்க வேண்டும். போக்குவரத்தில் வேகமாக போறத விட முக்கியமானது சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாகச் செல்வது. நாம் சரியான பாதையில் போகும் போது இந்த அலட்சிய பார்வைகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

உங்கள் வேலையில் நீங்கள் சந்தித்த மிகப்பெரிய சவால் என்ன?
சவால்னு சொல்லணும்னா வேகமா வண்டி ஓட்டுவது மட்டுமில்ல சவால். நோயாளிகளை அவங்க வீட்டிலிருந்து கூட்டிட்டு வரும்போது சில சமயங்களில் தூக்கி ஸ்டெச்சரில் படுக்க வைக்கணும். அது எளிதல்ல. ஆனா ஆம்பள டிரைவரா இருந்த ஈஸியா செஞ்சிருவாரு. இந்தப் பெண் எப்படி செய்யும்னு யாரும் நினைச்சிடக்கூடாது என்பதற்காகவே மிகச்சரியாக அதை செய்தேன். அதைப்போலவே நோயாளி என்று வந்த பிறகு ஆண் பெண் என்கிற எந்தவித பேதமும் எனக்குத் தெரிவதில்லை. அவர்களைத் தூக்கி ஸ்ட்ரெச்சரில் கிடத்துவதில் எந்த தயக்கமும் எனக்கு இருந்ததில்லை.
ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் சமூகப் பணி சார்ந்து இயங்குவதிலும் உங்களுக்கு கிடைக்கிற உணர்வு அல்லது மகிழ்ச்சி எப்படிப்பட்டதா இருக்கு?
இந்த ஆம்புலன்ஸ் டிரைவர் வேலை எனக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாகவே நான் பார்க்கிறேன். இதுல கிடைக்கிற மனநிறைவு வேறு எந்த வேலையிலும் கிடைக்காது.
அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு உங்கள் மெசேஜ் என்ன?’
இந்த சமூகம் நாம் என்ன செய்தாலும் கேள்வி கேட்டுகிட்டேதான் இருக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டு நம்முடைய தேவைகளுக்கேற்ப ஆசைகளுக்கேற்ப நம் வாழ்க்கையை நாம் சரியாக அமைச்சுக்கணும். தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருங்க. பாதுகாப்போடு இந்த வாழ்க்கையை அமைச்சுக்கோங்க.
பொதுமக்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கிற ஆதரவு எப்படி இருக்கு?
ரொம்ப வியப்பா பாத்தாங்க. கமெண்ட் பண்ணாங்க. பொம்பள புள்ள என்னமா ஓட்டுது பார் அப்படின்னு வியந்து பேசினாங்க. மொத்தத்துல மகிழ்ச்சியையே தெரிவிக்கிறாங்க.
முதலுதவி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு எப்படி இருக்கு?
முன்பை விட இப்ப விழிப்புணர்வு அதிகரிச்சிருக்கு. ஆனா அது போதாது. முதலுதவி குறித்த விழிப்பை இன்னும் பரவலாக்கணும். நிறைய அவேர்னஸ் டெமோ பொதுமக்களுக்கு கொடுக்கணும். யாருக்காவது விபத்து ஏற்பட்டால் உடனே கூட்டமாகக் கூடி அவங்களை மூச்சுத்திணற வைக்கக் கூடாது. அவசர நிலையில் தாமதிக்காமல் உடனே 108 க்கு கூப்பிடணும்.
உங்க குடும்பம் உங்கள் வேலையைக் குறித்து என்ன நினைக்கிறாங்க?
வேகமாக வண்டி ஓட்டனும்னு முதல்ல கொஞ்சம் பயந்தாங்க. இப்ப சரியாயிடுச்சு. முழுமையான சப்போர்ட் இருக்கு. புரிஞ்சிக்கிறாங்க. எல்லா வேலைக்கு போகும் அம்மாக்களைப் போல புள்ளைங்க கூட இருக்க முடியல என்ற உணர்வு எப்போதாவது வரும். அதையெல்லாம் தாண்டி இந்த வாழ்க்கையில் யாருக்கோ உதவி செய்யிற மாதிரியான வேலை கிடைச்சிருக்கு என்பதே மிகப் பெரிய ஆசீர்வாதம்தான்.
இதுவரை உதவி பெற்ற எல்லோர் சார்பாகவும் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு உரையாடலை முடித்துக் கொண்டேன்.
எளிய மனிதர்களில் பெண்களுக்கு எப்போதும் ஓர் இடமுண்டு. ஏனென்றால் பெரும்பாலும் சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படும் ஓரினம் பெண்ணினம். எளிய மனிதர்களின், பெண்களின் ஒவ்வொரு உயர்வும் நம் சமூகத்தின் உயர்வே.
பிறர் உயிரைக் காப்பாற்றும் எளிய மனிதர்களும் போற்றுதலுற்குரியவர்களே. எளிய மனிதர்களின் வாக்குமூலங்களோடு குரலற்றவர்களின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரும்…
ஹேமா
Leave a reply
You must be logged in to post a comment.