ஹேமா
நாயகப் பிம்பம் என்பது நம் சினிமாக்களின் வழியாக இயல்பாக நாம் பார்க்கும் ஒன்று. திரைப்பட நாயகர்களின் மீதுள்ள அன்பு என்பது பித்து நிலைக்கு மாறும் அபாயத்தையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். திரைப்பட ஹீரோக்களின் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம், தலைவா தலைவா என்று அவர்களின் வீட்டு வாசல்களில் முன்பு கோஷமிடும் மக்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த சினிமா நாயகர்களில் பெரும்பாலோர் இச்சமூகத்திற்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
த ரியல் ஹீரோஸ் உண்மையான நிகழ் வாழ்வில் நாயகர்கள் யார்? எளிய மக்களின் வலியும் தேவையுமறிந்து சாமானிய மக்களுக்கு உதவுபவர்கள்தான் என்னளவில் நிஜ நாயகர்கள். அங்ஙனம் சாமானிய மக்களின் உயிர்காக்கும், உணர்வுகளைக் காக்கும் நிஜவாழ்வின் நாயகர்களைக் குறித்த உரையாடல்களுடனும் உண்மைச் சம்பவங்களுடனும் விரிவாகப் பார்ப்போம்.
நம் உடல்நிலைக்கு ஏதாவது பாதிப்பு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் படாத வரை இவ்வாழ்வு மகிழ்ச்சியானது என்பேன். ஏதாவது ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசரப் பிரிவில் சேர்ந்து நலமாக வீடு திரும்பியவர்களை கேட்டுப் பாருங்கள் நோயற்ற வாழ்வென்பது எவ்வளவு மகத்துவமானது என்பதைக் கூறுவார்கள்.
கொரோனா காலகட்டம் என்பது நம் அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத காலகட்டம். பல உயிர்கள் பலி என்ற செய்தி பீதியாக மாறி மக்களிடையே அச்சவுணர்வை மிகுதியாக்கியிருந்த நேரம். ஒருபக்கம் நாமெல்லாம் அச்சத்தில் இருந்தோமென்றாலும் மற்றொரு பக்கம் வீட்டில் விதவிதமாக சமைத்து கொண்டு வீட்டிலிருந்தே அலுவலக வேலை, வீட்டிலிருந்தே கணினி வழியாகப் பள்ளி, தினம் தினம் புதிது புதிதாக கேக் செய்வது, பலகாரம் செய்வது என்று சிலர் இருந்ததையும் மறந்து விட இயலாது. இதைத் தவறு என்றும் சொல்வதற்கும் ஒன்றுமில்லை.
ஆனால் அதே நேரம் இரவு பகல் பாராமல் சிலர் நமக்காக உழைத்துக் கொண்டிருந்தனர். தனக்கு கொரோனா வந்தால் என்ன செய்வது என்ற எண்ணமின்றி இரவு தூக்கத்தையும் சுயநலத்தையும் ஒருசேரத் தவிர்த்து கொரோனா காலங்களில் தவித்த மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் பலரும் செய்திருக்கின்றனர்.
கொரோனா காலம் மட்டுமல்லாது கடந்த பத்து வருடங்களாக உயிர்காக்கும் உதவிகளைச் செய்துவரும் சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட திரு முகமது மொஹிதீன் அலாமா அவர்களுடன் உரையாடினேன். நோய்தொற்று காலத்தில் வார் ரூம் என்கிற போர்க்கால உதவி முகாம்களை வெர்ச்சுவலாக அமைத்து உலகமெங்கிலுமுள்ள பல்வேறு நாடுகளில் உள்ள தன்னார்வலர்களையும் இணைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில குழுக்களின் மூலமாக உதவி செய்துள்ளனர்.
தன் சொந்த பாதிப்பைக் குறித்த பயம் முதலில் இருந்தாலும், இத்தனைப் பேர் தன் கண் முன்னால் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மாயிருக்கவியலாது என்று தோன்றியதால் இந்த பணியைத் தொடர்ந்து செய்தேன் என்கிறார் முகமது மொஹிதீன் அலாமா.

ஒரு நாளைக்கு 18 முதல் 20 மணிநேரங்கள் வரை வேலை செய்ததாக கூறுகிறார். கொரோனா காலகட்டத்தில் மருத்துவப் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காதவர்களுக்கு உடனடியாக அவை கிடைப்பதற்கான வழி வகைகளை செய்துள்ளனர். நான்கு வெவ்வேறு குழுக்களில் பணியாற்றியுள்ளனர். ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டை தேவையான கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைக்கு வழங்குதல், மருத்துவ கிட் இலவசமாக அளித்தல், வீடு வீடாகச் சென்று நோயாளிகளில் உடல்நிலையை பரிசோதித்தல் போன்ற பல வேலைகளையும் தொடர்ந்து செய்துள்ளனர்.
மருத்துவ அறியாமை என்பதே அச்சமயங்களில் எல்லா இடங்களிலும் அதிகமாக உயிரைப் போக்க காரணமாக இருந்த ஒன்று. அறியாமையைப் போக்கும் அவசியமான உதவியையும் செய்திருக்கிறது இக்குழு.
ஒரு நாளைக்கு தோராயமாக பதினைந்து பேர் வரை அவசர உதவி வேண்டி வருவார்கள். அவசர உதவிக்கு பிறகு சில நாட்கள் கழித்து அவர்கள் நலன் குறித்து விசாரிக்கும்போதே தெரியவரும் நான்கைந்து பேர் அதில் இறந்துவிட்டனர் என்று. இருபது வயது இருபத்திரெண்டு வயது இளைஞர்களின் இறப்பையெல்லாம் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நான் கை பிடித்து மருத்துவமனையில் அழைத்துச் சென்றவர்களின் இறப்பு மனதை நிலை குலைய வைத்தது என்கிறார் அவர்.
மேலும் லாக்டவுன் காலகட்டத்தில் உலகமெங்கிலும் உள்ள பல பெண்களும் இதுபோன்ற வெர்ச்சுவல் வார் ரூம் மூலம் தொடர்ந்து வேலை செய்தது மிகவும் பாராட்டுக்குரியது என்கிறார் முகமது மொஹிதீன் அலாமா.
பொதுவாக பெயர் மாற்றம் செய்தே பெரும்பாலும் கட்டுரைகளை எழுதும் நான் நிஜவாழ்வில் நாயகர்களை உண்மையான பெயர்களையே குறிப்பிட்டிருக்கிறேன். தன்னலம் பாராது இக்கட்டான காலகட்டங்களில் உதவிய இவர்களின் பெயர்கள் நம் நாவால் உச்சரிக்கப் படவேண்டியது அவசியம் என்றே நினைக்கிறேன்.
அடுத்ததாக, முக்கியமான பல உதவிகளை பெரிய ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி பல வருடங்களாக உறவுகள் இயக்கம் என்ற பெயரில் செய்து வரும் திரு ஹாலித் அவர்களுடன் உரையாடினேன். மிக நெகிழ்ச்சியாக அமைந்த உரையாடல் எனலாம். இந்த உதவிகள் இயக்கத்தின் பணி என்ன? அதில் ஹாலித் அவர்களின் பங்கு என்ன என்று உற்று நோக்கினால் பிரம்மிப்பூட்டும் பல உன்னதமான பணிகளை இவர்கள் செய்து வருவது நமக்குப் புலப்படும்.

2017 ஆம் ஆண்டு பத்து நண்பர்களை இணைத்து சென்னையில் தொடங்கப்பட்ட இயக்கம்தான் இந்த உறவுகள் இயக்கம். ஆதரவற்ற நிலையில் இறந்த மனிதர்களின் சடலத்தை நல்லடக்கம் செய்வதற்காக தொடங்கப்பட்டதுதான் இக்குழு. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களின் திடீர் மரணம், அதனால் கடைசி காரியங்களைச் செய்ய இயலாதவர்களுக்கும் இறந்தவர்களின் குடும்ப நம்பிக்கைகளின் அடிப்படையில் ஈமக் காரியங்களைச் செய்கிறார்கள் இக்குழுவின் உறுப்பினர்கள் . வெளியூர்களிலிருந்து பிரசவத்திற்காக வந்து துரதிர்ஷ்டவசமாக இறந்து போகும் குழந்தைகளை அடக்கம் செய்ய உரிய மருத்துவமனைச் சான்றோடு அருகில் உள்ள மயானத்தில் இறுதிக் காரியங்களை இவர்களே முன்நின்று செய்கிறார்கள். 260 பெண்களும் 240 ஆண்களும் இவ்வியக்கத்தின் தன்னார்வலர்களாகச் செயல்படுகின்றனர்.
2017ஆம் ஆண்டிலிருந்து ஆதரவற்ற ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளனர். தினந்தோறும் 5 லிருந்து 10 வரை ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வதாக கூறுகிறார் ஹாலித் அவர்கள். வீட்டிலேயே இறந்து அழுகிப்போன உடல்கள், ரயிலில் அடிபட்டு துண்டுதுண்டாகி அகால மரணமடைந்த உடல்கள் போன்றவற்றையும் நல்லடக்கம் செய்கிறார்கள் இக்குழுவினர்.

பொதுவாக உடலை அடக்கம் செய்ய ஆறடி குழி தோண்ட வேண்டுமென்றால் கொரோனா மரணங்களுக்கு பனிரெண்டடி குழிகளைத் தோண்ட வேண்டும். எந்த தயக்கமும் காட்டாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த பலரின் உடல்களையும் அடக்கம் செய்துள்ளனர்.
இந்த சமூகம் எதை ஒதுக்குகிறதோ எதைத் தீட்டு என்று சொல்கிறதோ எதைக் கண்டு பயப்படுகிறதோ அதை முன்னெடுத்து செய்ய வேண்டும் என்பதே இந்த இயக்கத்தை முன்னெடுக்கும் போது நாங்கள் பூண்ட உறுதிமொழி என்கிறார் ஹாலித்.
கொரோனா காலத்தில் மட்டும் 1655 உடல்களை நல்லடக்கம் செய்திருக்கிறார்கள் இவர்கள் இயக்கம். ஆறடி குழியும் ஐந்தடி துணியும்தான் இவ்வாழ்வில் நிரந்தரமென்று ஒவ்வொரு மரணமும் தனக்கு கற்றுத் தருவதாக மனம் நெகிழ்ந்து கூறுகிறார் இவர். முழுநேர சேவையும் பகுதிநேர ஆயில் மில் வேலையும் செய்து வருகிறார் இவர். காவல் துறையின் உதவியும் அரசு அதிகாரிகளின் உதவியும் இது போன்ற உடல் அடக்கங்களை எளிதாகச் செய்ய ஏதுவாகிறது.

வீட்டில் யாராவது காணாமல் போய்விட்டால் தயவு செய்து உடனடியாக போலீசில் புகார் கொடுங்கள் என்கிறார் ஹாலித். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு முதியவர் சாலையில் நடந்து செல்லும் போது மயங்கி வீழ்ந்தார். சாலையில் இருந்தவர்கள் அவரை கே எம் சி மருத்துவமனையில் அனுமதித்தனர். அனுமதித்த சில மணி நேரங்களில் அவர் இறந்துவிட்டார். காவல்துறை நாளிதழில்களில் செய்தி வெளியிட்டும் அவர்கள் குடும்பத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு மாதமாக காத்திருந்தும் பல காவல் நிலையங்களுக்கு செய்தி தெரிவித்தும் அவர் குடும்பத்தினர் யாரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அவரின் இறுதிக் காரியங்களை உறவுகள் இயக்கம் செய்திருக்கிறது. இறுதி சடங்கு முடிந்த மறுநாள்தான் அம்முதியவரின் மகன் செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வருந்தியிருக்கிறார். அப்பாவை அடக்கம் செய்த இடத்தைக் கூறுங்கள் நான் சென்று பார்த்து வருகிறேன். கடைசியாக அவர் முகத்தைக்கூட பார்க்க இயலவில்லையே என்று கண்ணீர்மல்க வருந்தியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை முன்னிறுத்திதான் ஹாலித் கூறுகிறார். ‘தயவுசெய்து வீட்டில் யாராவது காணாமல் போனால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனே புகார் கொடுங்கள்’
அடுத்து ஒரு முக்கியமான நபருடன் உரையாடுவதற்கு முன்பு அவர் செய்யும் உதவிகள் குறித்த செய்திகளையும் அறிவியல் உண்மைகளையும் பார்ப்போம். ரத்ததானம் என்பதை நாம் கேள்வியுற்றிருப்போம். ரத்த தானம் பெற்று அதிலிருந்து தட்டணுக்கள் அதாவது பிளேட்லட், வெள்ளை அணுக்கள் போன்றவற்றை பிரித்தெடுத்து அதை நோயாளிகளுக்கு செலுத்தும் முறையை கேள்விபட்டுள்ளீர்களா? குறிப்பாக புற்றுநோய், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தட்டணு குறைபாடு உள்ளவர்கள், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் போன்றோருக்கு இந்த பிளேட்லட்டை செலுத்துவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் விளைகின்றன.
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் ஆற்றல் பிளேட்லட்க்கு உண்டு. இரத்த வெள்ளை அணுக்கள் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போரிடுபவை. அதனால்தான் ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கிறோம்.
அதைப்போலவே பம்பாய் வகை ரத்தம் குறித்து கேள்வியுற்றிருப்பீர்கள். இது ஒரு அரிய வகை ரத்தம். இந்த வகை ரத்தத்தின் வாழ்நாள் அளவு வெறும் 45 நாட்கள் மட்டுமே. அதனால் ரத்ததான முகாமில் இவ்வகை ரத்தத்தை தானம் கொடுக்காமல் நோயாளிகளுக்கு தேவைப்படும்போது மட்டுமே கொடுப்பது நல்லது.
பிளேட்லட் மற்றும் வெள்ளை அணுக்கள் தானத்தையும் பம்பாய் வகை ரத்த தானத்தையும் முன்னெடுக்கும் இளைஞரான ஃபிரீ பேர்டு என்ற பெயரில் சேவை செய்யும் விக்னேஷ் அவர்களுடன் நடந்த உரையாடலை இனி பார்க்கலாம்.

எத்தனை வருடங்களாக இந்த சேவையில் ஈடுபட்டு இருக்கீங்க?
நான் கடந்த ஏழு வருடங்களாக இந்த சேவையில் இருக்கிறேன்.
ரத்த தானத்தில் குறிப்பா எந்த வகையான மாறுதல்களை செய்றீங்க?
கடந்த ஆறு வருஷங்களா ஹோல் பிளட் என்ற ரத்ததான உதவிகளை செஞ்சிட்டு இருந்தேன். கடந்த ஒரு வருஷமா பிளேட்லட்டுகள், ரத்த வெள்ளை அணுக்கள் போன்றவற்றை ரத்தத்திலிருந்து பிரித்து தானம் செய்வதற்கான உதவிகளை செய்து வருகிறேன். தமிழ்நாட்டுல சிலர் மட்டும்தான் இந்த சேவையைச் செய்றாங்க. நிறைய பொண்ணுங்க இதுபோல ரத்ததானம் கொடுக்க முன் வராங்க. கண்ணு தெரியாதவங்க கூட இந்த சேவையை பண்றாங்க.
நீங்கள் செய்யும் சேவையைக் குறித்து விரிவான விளக்கத்தை சொல்லுங்களேன்?
எல்லாருக்கும் பொதுவா தெரிந்தது ரத்ததானம் மட்டுந்தான். ஆனால் பலருக்கும் தெரியாத செய்தி தட்டணுக்கள் தானம். இந்த தட்டணுக்கள் நம் உடலில் எட்டு நாட்கள் மட்டுமே உயிரோடு இருக்கும். ஆனால் மீண்டும் மீண்டும் உற்பத்தியாகும் வல்லமை இதற்கு உண்டு. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டணுக்கள் தானம் ஒரு மிகப் பெரிய கொடை.

இந்த பிளேட்லட்ஸ் தானத்தை வருடத்திற்கு எத்தனை முறை செய்யலாம் ?
சாதாரணமா ரத்ததானம் வருஷத்துக்கு நாலு முறை மட்டும்தான் செய்யலாம். இவ்வகை பிளேட்லட்ஸ் தானம் வருடத்திற்கு இருபத்தி நான்கு முறைகள் வரை செய்யலாம். இது சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை போன்ற மாவட்டங்களில் ரொம்ப தேவையா இருக்கு.
தாய்ப்பால் தானம்னு ஓன்று இருக்கா? அதைக் குறித்தும் சொல்லுங்க?
ஆமாம். தாய்ப்பால் தானம் என்ற சேவை இப்போது பல இடங்களிலும் நடைபெறுகிறது. கோயம்புத்தூரில் ரூபா என்கிற சகோதரி தாய்ப்பால் தானம் குறித்த சேவையை செய்கிறார். அதாவது தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பிற தாய்மார்களிடமிருந்து தாய்ப்பாலை வாங்கி விநியோகிப்பது. மருத்துவமனையில் தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு தேவையான இடத்திலிருந்து தாய்ப்பாலை பெற்று பயணம் செஞ்சு தேவையான குழந்தைகளுக்கு விநியோகிப்பது போன்ற உதவிகளை நானும் என்னைப் போன்ற பல இளைஞர்களும் செய்கின்றோம். சென்னையில் ஸ்ரீவட்ஷா என்பவர் இது போன்ற பிளேட்லட் சேவைகளை தொடர்ந்து செய்து வருபவர். பல கேன்சர் நோயாளிகளுக்கு பல வருடங்களாக செய்யறாங்க. அவங்ககிட்டயிருந்து இதை நான் கத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன்.

பம்பாய் பிளட் குரூப் தானமும் செய்றீங்களா?
சென்னையில் ஸ்ரீவட்சா என்பவர், சேலத்தில் மணிபிரகாஷ் என்பவரோடு நானும் இச்சேவையில் ஈடுபட்டுள்ளேன். இது ரேர் பிளட் குரூப். இந்த சேவை ரொம்ப அவசியமானதும் கூட.
இதைப் பற்றிய விழிப்புணர்வு எப்படி இருக்கு?
கல்லூரி பசங்கள விட கல்லூரிப்பெண்கள்தான் இந்த சேவையில அதிகம் ஈடுபட்றாங்க. குறிப்பாக பெண்கள் இந்த சேவையில் ஈடுபடும் போது அது பலரையும் சென்று சேருது.
ஆத்மார்த்தமான நன்றியுடன் விக்னேஷ் அவர்களுடனான உரையாடலை முடித்துக் கொண்டேன். இன்னும் பெயர் கூட வெளியில் தெரியாமல் பல சேவைகளைச் செய்யும் தொண்டுள்ளம் கொண்ட அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
எளிய மனிதர்களுக்கு ரத்ததானம், அவசரகால உதவிகள், ஆதரவற்ற இறந்து போனவர்களின் உடலை அடக்கம் செய்தல் என்று தன்னலம் பாராமல் சேவை புரியும் இவர்களைப் பற்றி பேசுவதில் உள்ளபடியே என் மனம் உவப்பும் பெருமையும் கொள்கிறது.
எளிய மனிதர்களுக்கு எவ்வித தன்னலமும் பாராமல் மனிதநேயத்தோடு உதவும் இவர்களைப் போன்றவர்களே என்னளவில் நிஜ நாயகர்கள். த ரியல் ஹீரோஸ். எளிய மனிதர்களின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரும்.
ஹேமா
7 comments on “கதையல்ல வாழ்வு – 3 “நிஜவாழ்வின் நாயகர்கள்””
Rajaram
நெகிழ்வான கட்டுரை, சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமை.
kumar
சிறப்பு. அனைவருக்கும் வாழ்த்துகள்.
JAZEELA BANU
சிறப்பு. அருமையான கட்டுரை. இவர்களைப் பற்றி நாம் அனைவரும் அறிந்து கொண்டே ஆக வேண்டும். இதில் விக்னேஷ் மற்றும் ஹாலித் பற்றி நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். உண்மையான நாயகர்கள் பலர் சூழ வாழ்வதால்தான் இந்த உலகம் இன்னும் சுழன்று கொண்டிருக்கிறது.
இயலிசம்
ஊர் உறங்கிக்கொண்டிருக்கும் போது...கொசுக்களை விரட்ட போராடி ஓய்ந்து இருக்கும்.. கொசுவர்த்தி... நாம் நலமாக வாழ...நாம் வாழ்வது அல்ல வாழ்க்கை.. பிறரும் நலமோடு வாழ வழிசெய்வது தான் வாழ்க்கை...என்கிற வகையில்... நான் புரிந்துகொண்டேன்... வாழ்த்துகள்..
Akila
எந்த ஒரு சுயநல நோக்கமும் இல்லாமல் மக்களுக்கு தொண்டாற்றும் நிஜ வாழ்வின் நாயகர்கள் போற்றுதலுக்குரியவர்கள். உண்மையில், இது போன்ற சேவை மிகவும் சவாலான விஷயங்களில் ஒன்றாகும். அருமை.
நவரத்தினம்.வை
மகள் உங்கள் பதிவுகளின் தொடர் வாசகன் நான், காலத்தின் தேவையறிந்து நீங்கள் வெளியிடும் பதிவுகள் சிறப்பானவை. மனிதநேயம்மிக்க இவர்களைப்போன்வர்களைத் தேடிக்கண்டு எழுதிவரும் உங்கள் பணி எல்லோருக்கும் சென்றடைந்து ஏனையோருக்கும் விழிப்புணர்வூட்டட்டும்.
ஷேக் முஹம்மது
Platelet தானம் செய்ய கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் தேவைப்படும்.15 நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம். ஒவ்வொரு முறையும் hb 13 இருப்பது அவசியம்.