ஹேமா
வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல்
நிகழ்வு 1 :
அக்கா, ரெண்டு நாள் லீவ் வேணும். குழந்தைக்கு ரொம்ப உடம்பு சரியில்ல.
வேலைக்கு சேரும்போதே சொல்லித்தானே சேத்தேன். இடையில லீவு கேட்க கூடாதுன்னு. இப்ப வந்து லீவுன்னா எப்படி?
இல்லக்கா குழந்தைக்கு ரொம்ப ஜுரம். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போணும். அதான் லீவு வேணும்.
எனக்கு ஆஃபிஸ் வேல தலைக்கு மேல இருக்கு. வேலைக்கு வீட்ல ஆளில்லாம என்னால ஒன்னும் செய்ய முடியாது. லீவெல்லாம் தர முடியாது. வேணும்னா குழந்தைய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்து உடனே வேலைக்கு வந்துடு. இல்லனா இப்பவே வேலய விட்டு நின்னுக்கோ. மிச்ச சம்பளக்காச சாயந்தரமா தரேன். வந்து வாங்கிட்டு போ.
என்னக்கா இதுக்கு போய் வேலய விட்டு போன்னு சொல்றீங்க. திடீருனு வேல இல்லனா நான் என்ன செய்வேன்?
நிகழ்வு 2:
வாரத்துல ஏழு நாளும் வேல. இஷ்டம் இருந்தா வேலைக்கு சேர்ந்துக்கோங்க. இல்லனா நான் வேற ஆளப் பாத்துக்கிறேன்.
ஞாயித்துக் கிழமை மட்டும் அரை நாள் லீவு குடுப்பீங்களா? பிள்ளைங்களோட இருக்கணும்.
ஏழு நாளும் வேலைக்கு வரீங்கன்னா வாங்க. இல்லனா நான் வேற ஆளப் பாத்துக்கிறேன்.
நிகழ்வு 3 :
அம்மா, வேலையெல்லாம் முடிச்சிட்டேன். நான் கிளம்புறேன்.
வெயிட் பண்ணு. நாங்க சாப்ட்டு முடிச்ச உடனே சாப்பிட்டு போ. பின்னாடிப் பக்கம் தட்டு தனியா வெச்சிருக்கேன் பாரு. அந்த தட்ட எடுத்துட்டு வா. போட்டுத் தரேன்.
இந்தக் காட்சிகளெல்லாம் நடுத்தர வர்க்கத்தில் மிகச் சாதாரணமாக நாம் கேட்கக் கூடிய ஒன்று. வீட்டு வேலை செய்பவர்களை கண்ணியமாக நடத்துபவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள். அவர்களை ஏதோ அடிமைகள் போல நடத்துபவர்களே பெருமளவில் இருக்கிறார்கள். நான் ஏதோ மிகைப்படுத்திக் கூறுவதைப் போலத் தோன்றலாம். ஆனால் உண்மை இதுதான். நான் பார்த்த, அவர்களிடம் பேசிய உரையாடல்களின் தொகுப்பே இக்கட்டுரை.
ஆண் பெண் இருவரும் அலுவலகம் போகும் வீடுகளில் பெரும்பாலும் வீட்டு வேலைக்கென்று ஆட்களை வேலைக்கு வைக்கிறார்கள். எப்படி பெண் அலுவலகம் போவது ஒரு வேலையோ அதைப்போலவே வீட்டு வேலைக்குச் செல்வது அப்பெண்ணுக்கும் ஒரு வேலைதான் என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். உழைத்து பணமீட்டும் எந்த வேலையும் தரக் குறைவானது அல்ல.
எப்படி சாதி இல்லை என்பதை வெறும் வாயளவில் சொல்லிக் கொண்டு சாதி பார்த்து திருமணம், சாதி பார்த்து நட்பு என்று செயல்படுகிறார்களோ அதைப் போலவே எல்லோரையும் சமமாக நடத்துகிறோம் என்று சொல்லிக் கொண்டு வீட்டு வேலை செய்பவர்களுக்கு தனித்தட்டு, தனி டம்ளர் என நவீனத் தீண்டாமையைச் சத்தமின்றி செய்து வருகிறார்கள்.
பெரும்பாலும் படிப்பறிவில்லாத பெண்கள் குடும்பச் சூழலின் காரணமாக இது போன்ற வீட்டு வேலைகளுக்கு வருகிறார்கள். அவர்களுடைய ஏழ்மையை, இயலாமையை கேலி செய்வது அறிவீனம். நம் வீட்டில் ஒருவராக அவர்களைப் பார்க்கா விட்டாலும் சக மனிதர்களாகவாவது அவர்களை நடத்த வேண்டும்.
சில வீடுகளில் பேசியதைவிட அதிகப்படியான வேலைகளைக் கொடுக்கிறார்கள். இப்போது அரசு கையெழுத்திட்டுள்ள 12 மணி நேர வேலை மசோதாவை எதிர்க்கும் மனிதர்கள் சிலர்தான் வீட்டு வேலை செய்பவர்களை வாரத்தில் ஏழு நாட்களும் வேலைக்கு வரவேண்டும் என்று அழைக்கிறார்கள். சில வீடுகளில் பெண்கள் நேப்கின் பேட் குப்பைகளைக்கூட வெளியேற்ற இவர்கள் பணிக்கப்படுகிறார்கள். வீட்டு வேலை செய்பவர்களுக்கும் வீட்டு எஜமானர்களுக்கும் பெரும்பாலும் எவ்வித எழுத்துவழி ஒப்பந்தங்களும் இருப்பதில்லை என்பதால் அவர்களை நினைத்த நேரத்தில் வேலையை விட்டு நீக்குபவர்களுமுண்டு. முழு சம்பளப் பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பவர்களும் உண்டு. சிலர் மோசமான வசைச் சொற்களையும் அவர்கள் மீது பயன்படுத்துவதுண்டு. ‘இஷ்டமிருந்தா வேல செய் இல்லையென்றால் கிளம்பு, வேற ஆள் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதே பெரும்பாலான வீட்டு எஜமானர்களின் தொனியாக இருக்கிறது.
மற்றொருபுரம் வீட்டு வேலை செய்பவர்களை தன் வீட்டில் ஒருவராக கவனித்துக் கொள்ளும் எஜமானர்களும் உண்டு. அவர்கள் பிள்ளைகளுக்குத் தேவையான கல்வித் தொகையை வழங்குவது, திருமண உதவியை செய்வது போன்ற பலவற்றிலும் துணை நிற்கும் நல்ல மனிதர்களும் உண்டு.
வீட்டு வேலை செய்பவர்கள் எந்த சங்கத்திலோ அமைப்பிலோ சாராத பட்சத்தில் அவர்களுக்கான பிரச்சனைகளைக் குறித்து யார் பேசுவது என்ற கேள்வி முக்கியமானது. சமீபத்தில் விஜய் டிவி நீயா நானாவில் வீட்டு வேலை செய்பவர்களைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அவர்களின் முக்கியமான பிரச்சனைகளைக் குறித்து அலசிய முக்கிய நிகழ்ச்சியாகவே நான் அதைப் பார்க்கிறேன்.
நம்மைப் போன்ற ஒருவர், கல்வி அறிவு கிடைக்காத அல்லது இல்லாத காரணத்தினாலும் வீட்டின் ஏழ்மை நிலையின் காரணமாகவும் வீட்டு வேலைக்கு வருகிறார்களென்றால் கொஞ்சம் படிப்பறிவும் பணமும் வாய்க்கப்பெற்றவர்கள் அவர்களை ஏதோ அடிமைகளைப் போல நடத்துவதென்பது நவீன முதலாளித்துவமல்லாமல் வேறென்ன?
எனக்குத் தெரிந்த வீட்டு வேலை செய்யும் சகோதரிகளின் பிரச்சனைகளை அவர்கள் உள்ளக் குமுறல்களை பெயர் மாற்றத்தோடு இங்கே குறிப்பிடுகிறேன்.
சாரதா அக்கா கடந்த இருபது வருடங்களாக வீட்டு வேலை செய்பவர். கணவர் இறந்துவிட்டார். ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். இவர்கள் ஈட்டும் பணத்தில்தான் அந்த குடும்பமே வாழ்கிறது. கணவன் இறந்தபோது கைக்குழந்தைகளோடு என்ன செய்வது என்று அறியாமல் கலங்கி நின்றவர், பின்பு வீட்டு வேலை செய்து தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்துவிட்டார். எத்தனையோ சவால்களை வாழ்வில் சந்தித்திருக்கிறார். பல நேரங்களில் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் பசியோடு உறங்கியிருக்கிறார். பொருள் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் தன் வலி பிள்ளைகளுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதிலும் முனைப்பாக இருந்திருக்கிறார்.
பிள்ளைங்களோட படிப்ப நிறுத்திட்டு வேலைக்கு அனுப்பு. உன் கஷ்டமெல்லாம் தீரும்னு எவ்வளவோ பேர் சொல்லியிருக்காங்க. ஆனா நான் கேக்கல. என் கஷ்டம் தெரிஞ்சிட்டா பிள்ளைகளும் படிக்காம வேலைக்கு போகனும்னு சொல்லிடுவாங்கன்னு அவங்ககிட்ட கஷ்டத்த காமிக்காமயே வளத்துட்டேன் என்கிறார் சாரதா அக்கா.
இந்த சமூகத்துல புருஷன் இல்லாம ஒரு பொம்பள, ரெண்டு புள்ளைங்கள வெச்சிக்கிட்டு வாழ்றது அவ்ளோ லேசில்லை. படிப்பு இருந்தாலும் ஆபீஸ் உத்தியோகம் எதுனாது போயிருப்பேன். அதுவும் இல்லாம நாம்பட்ட பாடு பெருசு என்று பெருமூச்சு விடுகிறார்.
என் கஷ்டம் நாளைக்கு என் பிள்ளைக்களுக்கு வந்துடக் கூடாது. எப்பாடு பட்டாவது படிக்க வெச்சிரனும்னு வைராக்கியத்தோட படிக்க வெச்சேன். பொம்பள இல்லாம ஆம்பள சுலுவா வாழ்ந்துட்றாங்க. பொம்பளங்க பாடுதான் திண்டாட்டம்.
வீட்டு வேலைக்கு போனா சில வீடுங்கள்ல மொறச்சி வெறிச்சு பாப்பானுங்க. குனிஞ்சி நிமுந்து வேல செய்யவே கூச்சமா இருக்கும். எதுவும் சொல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம சில வீடுங்கல்ல வேலைய விட்டே நின்னுருக்கேன்.
எச்சி தட்டு கழுவியாவது என் புள்ளைங்கள ஆளாக்கிட்டேன். அது போதும் எனக்கு என்று கண் கலங்குகிறார் சாரதா அக்கா.
அடுத்தது கொச்சியில் உள்ள ஹஸ்னா அம்மா. நல்லா வாழ்ந்த குடும்பம். கணவர் திடீரென்று குடிக்கு அடிமையாகி வீடு வண்டி எல்லாம் இழந்து கடனாளி ஆயிட்டாங்க. வரிசையா அண்ணன் தம்பிங்க வீடு. அவர்கள் எல்லாம் வசதியாக இருக்கிறார்கள். இவர்கள் மட்டும் வாழ்ந்து கெட்ட குடும்பமாகி சில வருடங்களாக வீட்டு வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு மூன்று வீட்டிற்கு வேலைக்கு செல்வார்கள். இரண்டு ஆண் பிள்ளைகள். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டார்களே தவிர இவர்களுக்கு ஏதொரு உதவியும் இல்லை.
காலை ஆறு மணிக்கு தொடங்கும் வேலை மாலை ஐந்து மணி வரைக்கும் இருக்கும். இடையில் அரை மணிநேரம் சாப்பாட்டுக்கு நேரம் கிடைக்கும் அவ்வளவே. வீட்டு வேலை செய்வதைக் குறித்த புகார்களைவிட அவர்களுக்கு இருக்கும் ஆஸ்துமா பிரச்சனைதான் அவர்கள் உடல்நிலையை ஆட்டிவைக்கிறது. போதாதக்குறைக்கு கணவனின் குடி, சில நேரங்களில் அடிதடி, சண்டை, மோசமான வசைச் சொற்கள் இப்படி எல்லாமும் அவர்களின் வாழ்வை நிர்மூலமாக்கியிருக்கிறது.
நானெல்லாம் எதற்காக வாழ வேண்டும். அம்மா, அப்பா இருவருமே இல்லை. போக்கிடமும் இல்லை. வாழ்வாதாரத்திற்கு உழைத்தாக வேண்டும். எங்கள் சமுகத்தில் , ஏன் எந்தச் சமூகத்திலும் பெண் அப்படி எளிதாக தனியாக வாழ்ந்துவிட முடியாது. அதனால்தான் இந்த குடும்ப வாழ்வோடு பொருந்தியிருக்கிறேன் என்கிறார் ஹஸ்னா அம்மா.
வேலை செய்யும் வீடுகளில் சாப்பாடு தருவாங்க. பெரும்பாலும் மீதியாகும் சாப்பாடு மட்டும்தான் தருவாங்க. சாப்பாடு மீதியாகவில்லையென்றால் அந்த வேலை பட்டினிதான். ஒன்னும் கேட்கமுடியாது. சில வீடுகளில் சரியா சம்பளம் கொடுத்துடுவாங்க. மாசக் கணக்கில் இழுத்துக் கொடுக்கும் வீடுகளும் உண்டு.
எல்லா வீடுகள்லயும் பாத்ருமும் நான்தான் சுத்தம் பண்றேன். சில வீடுகள்ல நாப்கின் பேடக்கூட சரியா எடுக்க மாட்டாங்க. நான் ஒன்னும் சொன்னதில்ல. வேலைக்குனு வந்த பிறகு எல்லாமேதானே செய்யனும்.
ரம்ஜான் நோன்பு நேரத்துல ரொம்ப கஷ்டமா இருக்கும். எச்சி கூட முழுங்காம காலையிலிருந்து சாயந்தரம் வரைக்கும் வேல செய்யனும். ஒரு வீட்ல மட்டும் அந்தம்மா இந்த மாசத்துல கம்மியா வேல குடுக்கும். மத்த வீடுங்கள்ல எல்லாம் எப்பவும்போல வேல இருக்கும். ரொம்ப களைப்பா ஆயிடுவேன். வீடடுக்காரங்களுக்கு அதப்பத்தியெல்லாம் கவலையில்ல. அவங்க வேல ஆனா போதும். என்ன சொல்றதுக்கு. எதுக்கு இந்த பொழப்புன்னு நினைக்காத நாளில்லை.
நம்ம கஷ்டத்துக்கு போறோம். எதுனாலும் சகிச்சக்கனும். சில வீடுகள்ல சாப்பிட்டு மீதியை குப்பையில கொட்டாம சமையல் சிங்க் லயே போட்ருவாங்க. குப்பையெல்லாம் அடைச்சி பயங்கர நாத்தமா இருக்கும. மத்த நேரங்கள்ல செஞ்சிருவேன். நோன்பு நேரத்துல கொஞ்சம் அருவருப்பா இருக்கும். இப்படி சிங்க்ல குப்பையப் போடாதீங்கன்னு சொல்லியும் இருக்கேன். கேட்க மாட்டாங்க.
ஆஸ்துமாக்கு மாத்திரை வாங்கவும் வீட்டு செலவுக்கும்தான் காசு சரியாயிருக்கும். இரண்டு ஆம்பள புள்ளைங்க இருந்தும் ஒருத்தனும் பாக்கல. யாரையும் நம்பாம என் கைய நம்பிதான் பொழப்பு ஒடுது என்று தன் இயலாமையை வருத்தத்துடன் தெரிவித்தார் ஹஸ்னா அம்மா.
இத்தகைய பிரச்சனைகளுக்கு உள்ளாகும் வேலையாட்கள் ஒருபுறமென்றால் மறுபுறம் நல்ல வேலையாட்கள் கிடைக்காத மனிதர்களும் உண்டு. புறம் பேசும் வேலையாட்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடுபவர்கள், சரியாக வேலை செய்யாதவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைக்கு வராதவர்கள் போன்று வேலையாட்களிலும் பிரச்சனைக்குரியவர்கள் உண்டு என்பதையும் மறுத்துவிட முடியாது. ஆனால் இந்த சதவிகிதம் மிகக் குறைவுதான். வீட்டுப் பணியாளர்கள் என்றாலே பெண்கள்தான் என்று சொல்லிவிட முடியாது. சில இடங்களில் குறிப்பாக வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்யும் ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
வீட்டுப் பணி என்பதன் பின்னணியையும் வரலாற்றையும் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். வீட்டு வேலை என்பது பொதுவாக வீட்டைச் சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல், சமைத்தல், சமையல் அறையை சுத்தம் செய்தல், துணி துவைத்தல் போன்ற வேலைகளை உள்ளடக்கியதாகும். ஃபுட்மேன் என்பது ஆண் வேலையாட்களை குறிக்கும் பெயராக இருந்திருக்கிறது. பெண் பணியாளர்களைவிட ஆண் பணியாளர்களுக்கே அதிக சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
குழந்தைகளைப் பராமரிப்பவர்கள் ஆயா என்று அழைக்கப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆயா செவிலியர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார். குழந்தைகளுக்கு பாலூட்டுவதால் ஈரமான செவிலியர் என்ற பெயரும் இருந்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பணிப் பெண்கள் என்ற வார்த்தை இன ரீதியாக அவர்களை இழிவு படுத்தும் வார்த்தையாக கருதப்பட்டதால் அவ்வார்த்தை தவிர்க்கப்பட்டுள்ளது. வீட்டுப் பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் என்பது பல நாடுகளிலும் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் எல்லா நாடுகளிலும் அது நடைமுறையிலில்லை என்பதே உண்மை.
அடிமை முறையின் வேறொரு உருவமாகவே பணியாட்களை நியமிப்பது என்பது இருந்திருக்கிறது. அடிமைகளை ‘பேசும் கருவி’ என்று கூறியிருக்கிறார் அரிஸ்டாட்டில். ‘நாமும் நம் நாட்டின் அடிமைகள். கொத்தடிமைகள் இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம்’ ஜார் மன்னரின் ரஷ்யாவைப் பற்றி கூறும் போது லியோ டால்ஸ்டாய் கூறியதை இந்நேரத்தில் நினைவு கூர்கிறேன்.
தமிழகத்தில் முதல்முறையாக வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஊதியம் தரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது என்பது உள்ளபடியே மகிழ்ச்சியான ஒரு செய்தி.
வீட்டு வேலை என்பது ஏன் பெரும்பாலும் பெண்களுக்காகவே வழங்கப்பட்டிருக்கிறது என்று யோசித்தால் இந்த ஆண் ஆதிக்க சமூகத்தில் பெண்ணே வீட்டை பராமரிக்க வேண்டும் ஆண் பொருளீட்ட வேண்டும் என்ற பாகுபாடான எழுதப்படாத விதியும் ஒரு காரணம் எனலாம். இதையெல்லாம் நவீன காலத்தில் அறிவின் துணை கொண்டு தகர்க்க முற்படுகிறோம் என்பது ஆரோக்கியமான செயல்.
கொச்சியின் ஆலுவாவைச் சேர்ந்த வீட்டு வேலை செய்யும் ஷாலினி அக்காவோடு நடந்த உரையாடலின் சிறு தொகுப்பு.
வணக்கம் அக்கா. எத்தன வருஷமா வீட்டு வேல செய்றீங்க? எதுக்காக இந்த வேலைக்கு வந்தீங்க?
வணக்கம். நான் பத்து வருஷத்துக்கு மேல இந்த வேல செய்றேன். புருஷன் விட்டுட்டுப் போயிட்டார். வேற கல்யாணம் பண்ணிக்கிட்டார். எனக்கு ஒரு பையன் இருக்கான். அவனுக்காகத்தான் இந்த வேலைக்கு வந்தேன். நிறைய வீடுகள்ல வேல செஞ்சிருக்கேன். இப்ப ரெண்டு வீட்ல செய்றேன். அவ்ளதான் செய்ய முடியுது. வயசாயிடுச்சின்னு நினைக்கிறேன்.
இந்த வேலயிலிருக்கிற நல்லது கெட்டது பத்தி சொல்லுங்க?
என் பையனை பிரைவேட் ஸ்கூல்லதான் படிக்க வைக்கிறேன். நான் வேல செய்யற வீட்டில்தான் ஹெல்ப் பண்றாங்க. கஷ்டம்னு பாத்தா, ஸ்கூல்ல எல்லாரும் அப்பாவைக் கூட்டிட்டு வரூம்போது என் பையன் மட்டும் தனியா என்கூட வருவான். இப்ப வேல செய்ற எடத்துல எந்த பிரச்சனையுமில்ல. ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு வீட்டில வேல செஞ்சேன். அந்த ஆளு சரியில்ல. காசு கொடுக்கிறேன். வரியானு கேட்டான். அந்த வீட்டம்மாகிட்ட போய் சொல்லிட்டேன். அந்த அம்மா பெரிசா கண்டுக்கல. நாளையிலிருந்து நீ வேலைக்கு வர வேணாம்னு மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க. என்ன மாதிரி தனியா இருக்கற பொம்பளைக்கு பிரச்சனைனா யார் வருவாங்கன்னு தோணும். மகனுக்காக எல்லாத்தையும் தாண்டி வந்துட்டேன். அடுத்த தெருவுலதான் அந்த ஆளு வேற பொம்பளயோட வாழ்றாரு. அவரு முன்னாடி நல்லா வாழ்ந்துரணும்னு ஒரு வைராக்கியம் அவ்ளோதான். சில வீடுகள்ல நாய்க்கு வெக்கிற மாதிரி தனியா பிளாஸ்டிக் தட்டும் டம்ளரும்தான் சாப்பாட்டுக்கு கொடுப்பாங்க. முதல்ல அதெல்லாம் கஷ்டமா இருந்துச்சி. இப்ப பழகிருச்சி.
உங்க மகன என்னவாக்கனும்னு நினைக்கிறீங்க?
அவன் படிச்சி பெரிய ஆபிசராவனும். அதான் என் கனவு.
உங்க கனவு நிச்சயம் நனவாகும் அக்கா என்று வார்த்தைகளோடு நிறைவுற்றது எங்கள் உரையாடல். வீட்டின் சமையலறையை முழுமையாக சுத்தம் செய்யும் ஒருவருக்கு அந்த வீட்டில் பயன்படுத்தும் தட்டையும் டம்ளரையும் கொடுப்பது அவ்வளவு பெரிய பிரச்சனையா? அடுக்கதிகார முறையை வாழ்வில் பயன்படுத்துவர்கள் கல்வி கற்றிருந்துதான் என்ன பயன்?
குரலற்றவர்களின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரும்…
ஹேமா
8 comments on “கதையல்ல வாழ்வு – 5 “வீட்டுப் பணியாளர்களுடன் ஓர் உரையாடல்””
JAZEELA BANU
நல்ல அலசி ஆராய்ந்து எல்லா தரப்புக்காகவும் பேசியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
kumar
வணக்கம். சிறப்பானதொரு கட்டுரை. நீங்கள் சொல்லியிருப்பது பெரும் நகரங்களில் நடக்கும் நிகழ்வுகளாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் பகுதிகளில் எல்லாம் வேலைக்கு ஆள் கிடைப்பதென்பது சாதாரண விசயம் இல்லை. இத்தனை மணிக்கு வரமுடியும், இவ்வளவு நேரம்தான் வேலை
rajaram
எளிய மனிதர்களின் வாழ்வில் நடக்கும் இன்னல்களும், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்களையும் பதிந்து வரும் தங்களது கட்டுரைகளில் வீட்டுப் பணியாளர்களின் குரல் எங்குமே கேட்பதில்லை. அதனை சமூகத்திற்கு முன் எடுத்துக்கூறிய உங்களின் எழுத்து அருமை.
Akila
வீட்டு பெண் பணியாளர்களின் வாழ்வாதாரம் மீளாத துயரத்தில் உள்ளது வேதனையளிக்கிறது.குரலற்றவரகளின் குரலாக கதையல்ல வாழ்வு தொடரட்டும்... வாழ்த்துகள்.
Hema
தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவிக்கிறீர்கள். அன்பும் நன்றியும் @jazeela
Hema
மிக்க நன்றி. ஒவ்வொரு வாரமும் தவறாமல் கருத்துக்களைத் தரும் உங்களுக்கு எனதன்பு @Akila
Hema
உண்மைதான் குமார். நகர்ப்புறங்களின் நிலை இது. நான் பார்த்த, உரையாடிய மனிதர்களின் நிலையை மட்டும்தான் பதிவு செய்துள்ளேன்.
Hema
அன்பும் நன்றியும் ராஜாராம். முதல் ஆளாக கட்டுரையை முகநூலில் பதியும் உங்களுக்கு எனதன்பு @Rajaram