ஜெஸிலா பானு
எங்கள் நிறுவனத்தில் ஒரு புதிய மென்பொருளை அமலுக்கு கொண்டு வந்திருந்தார்கள். இன்றிலிருந்து இதைத்தான் பயன்படுத்த வேண்டும், அதற்கான பயிற்சி இன்னும் ஒரு மணி நேரத்தில் இருக்கிறது. எல்லாருமே கலந்து கொள்ள வேண்டும், சந்தேகமிருந்தால் அங்கேயே கேட்க வேண்டும், பயிற்சி முடிந்தவுடன் செயல்படுத்த வேண்டும் என்று கட்டளையிட்டனர். நாங்களும் தயார் ஆனோம்.
பயிற்சி முடிந்தவுடன் பெரும்பாலானவர்கள் புதிய மென்பொருள் சரியில்லை, பயனில்லை, கடினமானது, இருக்கும் மென்பொருளே அருமையானது என்று தங்களது அதிருப்தியை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்தினர். நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். ‘இப்போது பயன்படுத்தும் மென்பொருளுக்கு நம்மை முதல் முதலில் அறிமுகப்படுத்தும்போதும் இதையேதானே சொன்னீர்கள். அதையே சமாளித்தோம், இது அதனுடைய மேம்படுத்தப்பட்ட வடிவமாகத்தானே தெரிகிறது – நம்மால் இதை சமாளிக்க முடியாதா என்ன?’ என்றதும் அமைதியானர்கள்.
புதிய செயலி என்றில்லை, புதியவர் அறிமுகமாகும் முன்பே இப்படிதான் ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலை, முன் முடிவுகள், யாரை சந்திக்கப் போகிறோமென்று தெரியாமலேயே அவரைப் பற்றிய அபிப்ராயங்கள் என்று நம் அனுபவத்தையும் அனுமானத்தையும் வைத்தே முடிவெடுக்கிறோம். அப்படியில்லாமல், திறந்த மனதாக வருவது வரட்டும் என்று எதற்கும் தயங்காமல் எதிர்கொள்ளும் பண்பு வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
அறிவு மற்றும் திறன் மட்டும் வெற்றியை நிர்ணயிக்காது. அணுகுமுறை எல்லா கட்டமைப்புகளுக்கும் முக்கியமானது. ஒரு சூழலில் தனிநபர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் எவ்வாறு அதனை கையாளுகிறார்கள் என்பதைதான் நான் அணுகுமுறை அல்லது மனப்பாங்கு என்கிறேன்.
‘நீங்க யார், உங்களைப் பற்றி சொல்ல முடியுமா?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால் கொஞ்சம் திணறித்தான் போகிறோம். இதையே வேறொருவரைப் பற்றி கேட்டால் அதுவும் உங்களுக்குப் பிடிக்காதவரைப் பற்றி கேட்டால், ஏன் பிடிக்காது, அவர் எப்படிப்பட்டவர் என்றெல்லாம் ஒரு நூல் எழுதும் அளவிற்கு உங்களுக்குள் தகவல்கள் இருக்கும். ஏன் அப்படி? நாம் நம்மைப் பற்றிய சுய ஆய்வு செய்வதில்லை. நம் அனுபவங்கள், நமக்கு பிடிக்காமல் போனவை, நம் பிடிவாதங்கள், எதிர்கொண்ட நிகழ்ச்சிகள் அதில் ஏற்பட்ட கற்றல் என்று நம் சாராம்சத்தைப் பற்றி சுய ஆய்வு செய்வது, நம்மை நாமே சரி செய்வதற்கு உதவும். இதைத்தான் சிலர் தியானம் என்கிறார்கள். தியானம் என்பது நமக்காக நாம் செலவழிக்கும் நேரம். உங்களுடனே நேரம் செலவிடுங்கள், நீங்கள் யார் என்று உணருங்கள்.
இந்தச் சுய ஆய்வின் மூலம், நம் திறனை நாம் முன்னேற்றிக்கொள்ள இயலும், மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள முடியும். நமக்கெல்லாம் மகிழ்ச்சி என்பது நம்மைப் பற்றியது மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றியதும்தான். சரிதானே?
கணவன் – மனைவி இருவருக்கிடையில் நடக்கும் வாக்குவாதம் வலுக்கும்போது ஒருவர் நிதானமான அணுகுமுறையைக் கையாண்டால் அந்தச் சூழல் சண்டையில் முடியாது. இந்த நிதானத்தையும் கொஞ்சம் யோசித்துத்தான் செய்யவேண்டும். திரையரங்குக்கு அழைத்துச் சென்றால் படம் பார்க்காமல், படம் முடிய காத்திருந்து அதே விவாதம் மீண்டும் தொடர வாய்ப்புள்ளது, ஏனெனில் கண்கள் படத்தைப் பார்த்தாலும் எண்ணமெல்லாம் பிளவில் கூடி நிற்கும். ஆனால் கூட்டம் நிறைந்த உணவகத்திற்கு அழைத்துச் சென்றால், தேவையானவற்றை வாங்கி சாப்பிட்டு வயிறும் மனமும் நிறைத்து, அமைதியாக சாப்பிட்டு எழ இயலுமே தவிர அந்த இடத்தில் பேச இயலாது. வயிறு நிறையும்போதும் விவாதத்தை தள்ளிப்போடும்போதும் அதன் வீரியம் குறைந்து சமாதானத்தில் முடிய அதிக வாய்ப்புள்ளது.
நான் எங்கேயோ எப்போதோ யாரோ ஒருவர் எழுதிய ஆங்கிலக் கவிதையில் – உறவு என்பது இரு தனி நபர்கள் ஒன்று சேர்வது ஒரு வீட்டைக் கட்டுவது போன்றது – என்று வாசித்திருக்கிறேன். அவர்கள் வாழ்ந்த சூழல்கள், நெறிமுறைகள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள், செங்கற்களாலான இரண்டு வெவ்வேறு வீடுகள் போன்றவை. ஒருவர் மற்றவரை தனது சூழலுக்குள் இழுக்க முற்படாமல், தன் வீட்டுக்குள் வர வேண்டுமென்று கட்டாயப்படுத்தாமல், இருவரும் தங்களுக்குப் பிடித்த விஷயங்களை தங்களுக்குப் பிடித்த செங்கற்களை எடுத்துக் கொண்டு புதிதாக கட்டப்படும் வீடான உறவே உறுதியானதாக விளங்கும் என்பதாக முடியும். மனதில் இது எங்கோ ஆழமாக பதிந்துவிட்டதால் எனக்கு பரிச்சயமில்லாத ஒரு செயல்பாட்டை யாராவது என் மேல் திணிக்க நினைத்தால், உன் கற்களை நீயே வைத்துக் கொள் என்பதாக என் மனம் சொல்லும். இதன் சாராம்சம் உங்களுக்கு விளங்கிவிட்டால் நம் கற்களை சுமந்து கொண்டு யாரிடமும் நிற்க மாட்டோம்.
ஒருவரின் அன்பை பெற வேண்டுமென்றால் மற்றவர் பேசுவதை காது கொடுத்து கேட்கும் மனப்பாங்கு, செல்பேசியைப் பார்த்துக் கொண்டே பேசாமல் எல்லாவற்றையும்விட நீ தான் எனக்கு முக்கியம் என்ற நம்பிக்கையை மற்றவருக்கு அளித்து அவர் பேசுவதை ஆமோதிக்கும் வண்ணம் பதிலளித்துத் தலையாட்டினால் மற்றவருக்கு உங்கள் மீதான நம்பிக்கையும் ஈர்ப்பும் அதிகரிக்கும். அதே போல் அவர் அபிப்ராயம் கேட்கும்போது பளிச்சென்ற ஆக்கப்பூர்வமான உள்ளீட்டைத் தந்தால் இன்னும் நெருக்கம் அதிகரிக்கும். அதுவே ‘எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை, அப்படி நினைக்கிறேன், தெரியாது’ என்பது போன்ற பதில்களால் இடைவெளி அதிகரிக்கவே வாய்ப்புள்ளது.
அதேபோல் இருவருக்கிடையிலுள்ள உறவை மேம்படுத்த, இருவரும் சேர்ந்து விளையாடும் விளையாட்டை தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடினால் அவர்களுக்கும் உங்களுக்குமான உறவு பலம் பெறும். மற்றவருக்கு என்ன விளையாட்டு பிடிக்கிறது, என்ன விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனித்து அதில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டால் நம் உடலில் உள்ள எண்டார்பின் சுரந்து மகிழ்ச்சி உண்டாவதால் மன அழுத்தம், வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெறலாம்.
எந்தவொரு விஷயமும் நமக்கு அறிமுகமாகும் முன் அதைப் பற்றிய சிந்தனை நமக்குள் இருக்கும், அந்த சிந்தனையே நம் செயலை நிர்ணயிக்கும். நாம் பார்த்த, கேட்ட, வாசித்த அல்லது அனுபவித்த விஷயங்களின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவல்களே சரியென்று பெரும்பாலான நேரங்களில் நியாயப்படுத்துகிறோம். அதனாலேயே மற்றவருக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களை நம்முடைய கசப்பான அனுபவமாக எண்ணி இன்னும் வெறுக்கத் தொடங்கிவிடுகிறோம். எடுத்துக்காட்டாக நடிகர்களுக்காகவும் அரசியல்வாதிகளுக்காகவும் அவர்களின் அபிமானிகள் வரிந்து கட்டிக்கொண்டு வருவதற்கும் இதுபோன்ற அணுகுமுறையும் மனப்பாங்குமே காரணங்களாகின்றன. அதே மனம் சில காலங்களுக்கு பிறகு கிடைக்கும் மாற்றுக் கருத்தைப் பார்க்கும்போதும் ஏற்றுக் கொள்ளாமல் தடுமாறுகிறது, ஏனென்றால் காலம்காலமாக நம்பி வந்த ஒரு விஷயம் இல்லாமல் போனதை ஆழ்மனம் ஏற்காமல் அகங்கார தன்முனைப்பு தடையாகிவிடுவதற்கும் அதே மனப்பாங்குதான் காரணம்.
நம் அணுகுமுறைகள் சமயங்களில் நம் பிரச்சனைகளை கையாள வல்லவை. எப்படியென்றால், எந்த ஒரு பிரச்சனையானாலும் அதனை நாம் எப்படி அணுக போகிறோம் என்று முன்கூட்டியே சிந்தித்து வைத்து இருப்போம். ஆகையால் பிரச்சினை பற்றிச் சிந்திக்கும் போதெல்லாம் சவால்களை எப்படி சமாளிக்க முடியும் என்ற சிந்தனையை, சரியான அணுகுமுறையின் மூலம் சரி செய்ய இயலும். பிரச்சனையை கண் அருகே வைத்துப் பார்க்கும்போது பெரியதாகத்தான் தெரியும், அதையே கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்த்தால், ‘இவ்வளவுதானா’ என்றாகிவிடும்.
“இந்த மாதிரி நேரத்துல வீரர்களெல்லாம் அடிக்கடி சொல்ற வார்த்த என்ன தெரியுமா? ‘பார்த்துக்கலாம்” என்கிற இந்த அணுகுமுறை இருந்துவிட்டால் எதையுமே சமாளித்துவிடலாம்.
அதுமட்டுமல்லாது ஏதேனும் சிக்கல் வரும்போதெல்லாம் இதற்கு முன்பு உங்களால் தீர்க்க முடிந்த பிரச்சினைகஈப் பற்றி சிந்தித்து, அதையே சமாளித்துவிட்டோம், இதை சமாளிக்க முடியாதா ‘பார்த்துக்கலாம்’ என்ற மனப்பாங்கை வளர்த்து கொண்டால் வாழ்வில் மகிழ்ச்சியே நிலைத்திருக்கும்.
பள்ளி / கல்லூரி காலங்களில் பல சிக்கல்களைச் சந்தித்திருப்போம். ‘அவ்வளவுதான் எல்லாம் முடிந்துவிட்டது’ என்ற எண்ணம் கூட அப்போது தோன்றியிருக்கலாம். இப்போது அதனைப் பற்றி யோசிக்கும்போது ‘அதற்கு’ போய் ஏன் இவ்வளவு கவலைப்பட்டோம் என்ற எண்ணமே மேலெழும். அப்படியானதுதான் உங்களின் தற்போதைய பிரச்சனையும். ஆறப்போட்டால், சரியாகிவிடும், சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு அணுகினால் பிரச்சினையே பிரச்சினை இல்லாமல் காணாமல் போய்விடும்.
பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்க போதெல்லாம் ஷான் ஸ்டீபன்சனை நினைவில் வைத்து கொள்வோம். அவர் ஆஸ்டியோஜெனெசிஸ் இம்பர்ஃபெக்டா என்ற குறைபாடுடன் பிறந்தவர். ஸ்டீபன்சன் மூன்றடி உயரத்தில் இருப்பவர், நொறுங்கிய எலும்புகளைக் கொண்டிருப்பவர், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர். இருந்தாலும் முகத்தில் புன்னகையை மறக்காதவர். மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே தன்னை பேச்சாளராக்கி கொண்டவர்.
நம் அணுகுமுறையை வைத்துதான் துன்பத்தோடு இருக்க வேண்டுமா அல்லது மகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமா என்று உங்கள் மனம் முடிவு செய்யும், தேர்வு உங்களுடையதுதான்.
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
5 comments on “நலம் வாழ: கட்டுரைத் தொடர் 10 – அணுகுமுறை”
Rajaram
சிறப்பான கட்டுரை, மூன்று மாதத்திற்கு முன் எங்கள் அலுவலகத்திற்கு வந்த புதிய மேலாளர் பற்றிய ஒவ்வொருவரின் கருத்தும், எண்ணமும் அப்படித்தான் இருந்தது. அவர்களின் எண்ணத்தில் தோன்றியதை வைத்து நான் அணுகியிருந்தால் சிரமம்தான். என் வழி தனி வழி
மஞ்சுளா யுகேஷ்
மிகவும் பயனுள்ள தகவல்கள் சிறப்பாக உள்ளது. இன்றைய சூழலில் ஏற்ற கருத்துக்களை படித்ததில் மகிழ்ச்சி வாழ்த்துகள் சகோதரி
JAZEELA BANU
Rajaram: தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிடும் அணுகுமுறை சிறப்பு. மஞ்சுளா யுகேஷ்: உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி
kumar
நல்லதொரு கட்டுரை. நம்மைப் பற்றி யோசிப்பதைவிட நாம் பிறரைப் பற்றி, அவரின் வளர்ச்சி் பற்றிய பொறாமையுடன் கூடிய யோசனைக்குத்தானே அதிக நேரம் செலவிடுகிறோம். சிறப்பு. வாழ்த்துகள்.
Kumaran Tamilselvi
தெளிவான கருத்து ,வாசிக்க தூண்டும் வாக்கியங்கள்,எளிமையான எழுத்து.பாராட்டுக்கள். எனது சிரிய கருத்தாக அபிப்பிராயம் பதிலாக நிலைப்பாடு பயன்படுத்தினால் இன்னும் சிறிது இலகுவாக இருக்கலாம்.