ஜெஸிலா பானு
இதுதான் நடக்கப் போகிறது என்றோ இது நடந்துவிடும் என்றோ என்றாவது உங்களுக்குத் தோன்றியது அப்படியே நடந்துள்ளதா? ’நான் அப்பவே நினைத்தேன், என் மனசுல பட்டது’ என்று என்றாவது புலம்பியிருக்கிறீர்களா? உங்களுக்கு அப்படி நடந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு நிறையவே அப்படியான நிகழ்வுகள் நடந்துள்ளன.
நான், கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்ததும் அவர்கள் யாரென்றே தெரியாதவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு ‘இந்தக் குழந்தைதான்’ அதாவது ஆண்/ பெண் குழந்தை என்று என்னால் சரியாகக் கணிக்க முடியும். எனது இந்த ஆற்றலை தெரிந்தவர்கள் கேட்கவும் சோதிக்கவும் தொடங்கும்போது என்னால் சரியாகச் சொல்ல இயலாது. காரணம், உள்ளுணர்வு என்பது காரண காரியமில்லாமல் ஆதாரமில்லாமல் தன்னால் உதிப்பதே தவிர யோசித்து ஆராய்ந்து வருவதில்லை.
அதேபோல் சில பெண்களுக்குத் தான் கருத்தரித்த கணமே அவர்களின் உள்ளுணர்வு உணர்த்திவிடுகிறதாம். காரணம், கர்ப்பம் தரிக்க முயற்சி செய்யும் போது, பெண்கள் எப்போதும் இல்லாத வகையில் தங்கள் உடலில் கவனம் செலுத்துகிறார்கள். எனவே, ஆரம்பகாலக் கர்ப்ப அறிகுறிகள் தோன்றத் தொடங்கும் போதே அவர்களுக்கு வெற்றிகரமாகக் கருத்தரித்துவிட்ட உணர்வு உடனே தெரிந்துவிடுகிறதாம். இருப்பினும் சில நாட்கள் காத்திருந்து அதனைச் சோதனை செய்துவிட்டே உறுதிப்படுத்திக் கொள்கின்றனராம். அதன் பிறகுதான் அதற்கான அறிகுறிகளே தொடங்குகிறதாம். ஆனால் அதற்கெல்லாம் முன்பே பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருப்பதை உள்ளுணர்வாக அறிந்து கொண்டுவிடுகிறார்கள். இந்த ஆற்றலை மாயாஜாலமாகப் பார்க்க வேண்டாம் இதெல்லாம் அறிவியல்தான்.
டாக்டர். ஜூடித் ஓர்லோஃப், யு.சி.எல்.ஏ.வில் உள்ள உளவியல் மருத்துவத்தின் உதவி மருத்துவப் பேராசிரியர் மற்றும் ‘தி எம்பத்ஸ் சர்வைவல் கைடு (The Empath’s Survival Guide)’ என்ற உள்ளுணர்வு பற்றிய நூல் ஆசிரியரின் கருத்துப்படி, உள்ளுணர்வு நமது மூளையின் முழு வலது பக்கத்திலும், மூளையின் ஹிப்போகாம்பஸ் வழியாகவும், நமது குடல் வழியாகவும் இயங்குகிறது என்று விஞ்ஞானிகள் நம்புவதாகச் சொல்கிறார். செரிமான அமைப்பிலும் நியூரான்கள் உள்ளன என்பது உண்மைதான். அதனால்தான் அதனை gut feeling என்று சொல்கிறார்கள். ஆனால் ஆண்களைவிடப் பெண்களுக்கு உள்ளுணர்வு அதிகம் என்கிறார். காரணம், பெண்களின் கார்பஸ் கொலோசம், நமது இடது மற்றும் வலது மூளை அரைக்கோளங்களை ஒன்றாக இணைக்கும் அந்த வெள்ளைத் தன்மை இணைப்பு, ஆண்களை விடப் பெண்களுக்குத் தடிமனாக உள்ளது. ஆகையால், ஒவ்வொரு அரைக்கோளத்தையும் வேகமாக அணுக முடிவதாலும் முடிவெடுக்கும் செயல்முறையில் அதிகத் தர்க்கரீதியான இடது அரைக்கோளத்துடன் நமது உணர்ச்சி மற்றும் குடல் உணர்வுகளை மேலும் ஒருங்கிணைக்கிறதாலும் பெண்களுக்கு விரைவான உள்ளுணர்வு முடிவெடுப்பதற்கு உகந்ததாக உள்ளதாகத் தனது ஆராய்ச்சியில் முடித்திருக்கிறார்.
வண்டி ஓட்டும்போது இந்தப் பக்கம் போக்குவரத்து இருக்கும், வேறு பக்கமாகப் போகலாமென்று உள்ளுணர்வு தானாகவே வழிகாட்டும் அனுபவம் உங்களுக்கு உண்டா?
இன்று மேலாளர் சீக்கிரம் வரக்கூடும் என்று அகத்தே தோன்றியதால், விரைவாகச் சென்று நல்லபெயர் வாங்கியதுண்டா?
இன்று விருந்தாளி வருவார்கள் அதனால் கொஞ்சம் அதிகமாகவே சமைப்போம் என்று எதிர்பார்ப்பின் பேரில் எதையாவது செய்ததுண்டா?
இன்று டீச்சர் வர மாட்டார்கள் ஒரு வகுப்பு ‘சும்மா’ இருக்கலாம் என்று தோன்றியது நிறைவேறியுள்ளதா?
உள்ளிலிருந்து ஒரு குரல் உங்களை வழிநடத்துவதுதான் உங்களுடைய உள்ளுணர்வு. எந்த முன் அனுபவமும் அல்லது ஆழ்மன நம்பிக்கையையும் பற்றி யோசிக்காமல் அந்த நிமிடத்திற்கு உடல் வரம்புகளுக்குக் கட்டுப்படாமல் மேலெழும் ஆற்றலைதான் உள்ளுணர்வு என்கிறேன். உள்ளுணர்வு என்பது இயற்கையான திறன் அல்லது சக்தி, இன்ன காரணத்தினால்தான் இப்படித் தோன்றியது என்று முறையான எந்தக் காரணமும் ஆதாரமும் விளக்கமும் இல்லாமலே எதையாவது செய்வதற்கும் அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது. உள்ளுணர்வை பகுத்தறியும் எண்ணமின்றி நம்முள் கடத்தப்படும் எண்ண ஓட்டங்கள் என வைத்துக் கொள்ளலாம்.
ஏதாவது முடிவு எடுக்கும்போது தானாகவே இதுதான் சரி என்று அழுத்தமாக மனதில் உதிப்பது உள்ளுணர்வு. இதுவொரு மகத்தான சக்தி வாய்ந்த கருவி. வாழ்க்கையில் மனம் தெளிந்த நிலையில் இருக்கும்போது மட்டுமே இந்த உள்ளுணர்வினை நாம் கவனிக்கிறோம். அதுமட்டுமல்லாது நாம் ஆசுவாசமான அமைதியான நிலையில் (relaxed state) இருக்கும்போதுதான் நமக்கு இந்த உள்ளுணர்வே ஏற்படுகிறது. இந்தத் திறன் இயல்பாகவே எல்லோருக்கும் உண்டு. எனக்கில்லையே என்று சிலர் சொல்லலாம். காரணம் உள்ளுணர்வின் குரலைக் கண்டு கொள்ளாமல் கேளாமல் இருக்கும்போது அது இல்லாமலே ஆகிவிடுகிறது. அந்தச் சக்தியை நாம் உருவாக்கி கொள்ளவும் இயலும்.
ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் உளவியல் இணைப் பேராசிரியர் ஜோயல் பியர்சன் உள்ளுணர்வின் காரணம் ஆழ்மனதின் தகவல் என்று தன் ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் மட்டுமல்ல பெரும்பாலான உளவியல் நிபுணர்கள் ஆழ்மனதின் தகவல்களின் வெளிப்பாடாகவே உள்ளுணர்வை விவரிக்கின்றனர்.
ஆழ்’மனது’ அதில் அந்த மனது என்று நாம் குறிப்பிடுவது இதயத்தையா மூளையையா என்ற கேள்விக்கு முதலில் இதயம்தான் துடிக்கத் தொடங்குகிறது, அதன் பிறகுதான் நம் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது, அதனால் மனது என்பது இதயம்தான் என்று சமீபத்திய ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் தெரிவித்துள்ளன. ஹார்ட்மேத் நிறுவனத்தின் ஆராய்ச்சியில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ஆர்மர் இதயத்தைச் ’சிறிய மூளை’ என்று சொல்வதுடன் இதய நரம்பு மண்டலம் சுமார் 40,000 நியூரான்களால் ஆனது என்கிறார். உடலையும் மூளையையும் உருவாக்கியது இதயம்தான் என்கின்றனர். இதயம் மூளையுடன் நரம்பியல், உயிர்வேதியியல், உயிரியல் மற்றும் ஆற்றல் என்று பலவிதமான முறைகளில் தொடர்பு கொள்கிறது. மூளையைவிட இதயத்திற்கு 60 சதவீதம் கூடுதல் சக்தி இருக்கிறதாக அறிவியல் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. அதனால்தான் நம் மூளை சிந்திப்பதற்கு முன்பே நம் இதயத்திற்கு அதைப் பற்றிய தகவல்கள் கிடைத்துவிடுகிறது. இந்த ஆராய்ச்சிகளுக்கெல்லாம் முன்பே நாம் இதயத்தில் கை வைத்துதான் ‘மனசு போல் வாழ்’, ‘உன் மனசு என்ன சொல்லுதோ அதைச் செய்’ என்று குறிப்பிடுவோம். நம் மூளை எல்லாவித உடல் வலிகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்க துரிதமாக இயங்குகிறது. இதயமோ, உணர்வுகளோடே பயணிக்கிறது, மூளைக்கு விளங்குவதற்கு முன்பே நமக்கு உணர்த்திவிடுகிறது.
அதனால்தான் நம் எல்லா உறுப்புகளுக்கும் அதன் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கிறது. மூளையின் பாதிப்பால் திடீரென்று கண் தெரியாமல் பார்வையற்றுப் போனவருக்கும் தன் முன்னால் இருக்கும் உணர்வுகளை உள்ளுணர்வின் மூலம் உணர்ந்து கொள்ள முடியுமாம். அதனால்தான் நம்மை யாராவது பின்னாலிருந்து கவனிக்கிறார்கள் என்பதையும் உடனே தெரிந்து கொண்டு திரும்பி பார்க்கிறோம்.
உள்ளுணர்வையும் நம் எண்ணங்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
கணவன் – மனைவி காரசாரமாகச் சண்டைப் போடும்போது, ‘இவனோடு வாழ்ந்தது போதும்’ என்று கேட்கும் குரலை உள்ளுணர்வு ’இல்லை’ என்று நம்புங்கள். ஏனெனில் மனம் ஆசுவாசமாகத் தெளிநிலையில் இருக்கும்போது கேட்கும் குரல் மட்டும்தான் உள்ளுணர்வு. கோபத்தில், குழப்பத்தில் மேலெழும் எதிர்மறை எண்ணங்கள் உள்ளுணர்வு அல்ல. இதனால்தான் பொருளாதார நோபல் பரிசு பெற்ற டேனியல் கான்மேன், உள்ளுணர்வு சிந்தனை நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டையும் கொண்டுள்ளது. இது ஒரு பகுத்தறிவு அணுகுமுறையை விட வேகமானது ஆனால் தவறாக முடியவும் அதிக வாய்ப்புள்ளது என்ற கருத்தை முன் வைக்கிறார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ ‘உண்மையான மதிப்புமிக்க விஷயம் உள்ளுணர்வு மட்டுமே’ என்கிறார்.
1980 களில், கலிபோர்னியாவில் உள்ள கெட்டி அருங்காட்சியகம் ஒரு அரிய கிரேக்க சிலையை சுமார் $10 மில்லியன் விலையில் வாங்கியது. அந்தச் சிலையின் பழமையை உணர்த்தும் ஆதாரமாக, அதன் பளிங்கு ஒரு பண்டைய கிரேக்க குவாரியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மேற்பரப்பு பல நூற்றாண்டுகளாக உருவாகும் கால்சைட் என்னும் தனிமத்தால் மூடப்பட்டிருந்தது. ஆதலால் அதன் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால் அனுபவம் வாய்ந்த கலை வரலாற்றாசிரியர்கள் சிலையைப் பார்த்தபோது, அவர்கள் உடனடியாக அது போலியானது என்று தங்கள் உள்ளுணர்வு உணர்த்தியதாகச் சொல்லி நிராகரித்தனர். அதன்பின் அவர்கள் சொல்வது உண்மையென்று உறுதியானது.
பல அறிவிற்சிறந்த விஞ்ஞானிகள் உள்ளுணர்வு மற்றும் பகுப்பாய்வுச் சிந்தனை என்ற இரண்டு உத்திகளையும் ஒருங்கிணைக்கும்போது நமது முடிவுகள் பெரும்பாலும் சிறப்பாக அமையும் என்கின்றனர். உங்கள் மனம் சொல்வதைக் கேட்டு நிறைவான வாழ்வை நலமோடு வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
Leave a reply
You must be logged in to post a comment.