ஜெஸிலா பானு
உங்களுக்கு ஒரு வரம் கிடைக்குமென்றால் என்ன கேட்பீர்கள்? சட்டென்று ஒன்றை சொல்லிவிட முடியுமா? சில அதிபுத்திசாலிகள் ‘நான் கேட்பதெல்லாம் நிறைவேற வேண்டும்’ என்ற வரத்தை கேட்பார்கள். அது ஒட்டுமொத்தமாக தனக்கு வேண்டிய அத்தனையும் கிடைக்க வேண்டும் என்பதற்கான உக்தியே தவிர, குறிப்பாக ஒன்றே ஒன்று வேண்டும் என்றோ, இது மட்டும் போதும் என்றோ திருப்தியடையாத மனதை பிரதிபலிக்கிறது. இதனை முடிவெடுக்க முடியாத மனம் என்று சொல்லலாமா?
வாழ்க்கையில் இழந்துவிடவே கூடாது என்று ஏதாவது ஒன்றே ஒன்றை சொல்லிவிட முடியுமா? இழக்கக் கூடாத ஒன்றை இழந்த பிறகுதான் இது நம்மிடம் இருந்தது, அதனை வேண்டாத ஒன்றுக்காக இழந்துவிட்டோம் என்று வருத்தப்பட்டதுண்டா? வாழ்வில் அனுபவிக்காத ஒன்றைதான் நம் மனம் நாடும். நாம் ஒன்றை நாடும்போது அதில் மற்றொன்றை இழப்பது நியதி. உண்மையில் நம் தேவைகள் அறியாமல் தேடிக் கொண்டே இருக்கிறோம். ஒன்றை தேடும்போது, நாம் அலட்சியப்படுத்தும், மற்றொன்றை இழக்கப் போகிறோம் என்றோ, நம்மிடம் இருக்கும் ஒன்று இல்லாமல் போய் விடுமென்றோ, அதை இழக்கத் தயாராக இருக்கிறோமா என்பது பற்றியோ, அதன் விளைவுகள் குறித்தோ சிந்தித்தால், எது உண்மையான தேவை என்று நம் கண்களுக்குப் புலப்படும். நம் முடிவுகளும் சரியானதாக அமையும்.
நான் ஏன் முடிவு எடுப்பதைப் பற்றி நிறைவு கட்டுரையில் எழுதுகிறேன் என்றால், முடிவு எடுப்பது என்பது ஒரு முக்கியமான அம்சம். நல்ல முடிவுகள் எடுக்கக் கூடியவர்களே சிறந்த வெற்றியாளர்களாக வரக்கூடும். சிறந்த முடிவு எடுக்கும் தன்மையென்பது நம் பிறப்பிலேயே வரக்கூடியதல்ல மாறாக அது ஒரு கலை. அதனைச் சரியாக வளர்த்துக் கொண்டால் வாழ்வு நிம்மதியானதாகும்.
சின்ன விஷயத்திற்கான முடிவுகளுக்குப் பெரிய அளவில் மனதைக் குழப்பிக் கொள்ள மாட்டோம். ஆனால் பெரிய தீர்மானங்களென்றால் பலவற்றைச் சிந்திப்போம். தீர்மானமாக இல்லாமல் வெறும் ஆசையாக இருந்தால் சிந்திக்கவே மாட்டோம் அந்த நொடிக்கான மகிழ்ச்சிக்கான முடிவாக அமைந்துவிடும். தேவைகள் வேறு ஆசைகள் வேறு. ஆழ்ந்து சிந்திப்பவர்கள் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றிக் கொள்வதற்குமே, ’இது தேவைதானா’ என்று யோசித்தே முடிவெடுப்பர். ஆனால் எதன் அடிப்படையில் முடிவெடுப்பர்? நம் அனுபவங்கள், நம் உணர்வுகளை, நம் எண்ண ஓட்டங்கள், நம் அணுமானங்கள், நம் ஆழ்மன நம்பிக்கைகள். இதோடு சமயங்களில் உள்ளுணர்வுகள் என்று எல்லாமும் சேர்ந்து எடுப்பதுதான் முடிவு.
‘இட்லி வேண்டுமா? தோசை வேண்டுமா?’ என்று கேட்டால் நம் தேவையைச் சட்டென்று சொல்லிவிட முடியும். அந்த ‘சட்டென்ற’ பதில் சொல்வதற்கும் மனதினுள் ‘நேற்றுதான் இட்லி சாப்பிட்டோம், இன்று தோசை சாப்பிடலாம் என்றோ, வயிறு சரியில்லை தோசையில் எண்ணெய் இருக்கும், லேசானதான இட்லி சாப்பிடுவோம்’ இப்படியாகக் காரணக் காரியத்தை அலசிதான் நம் முடிவுகள் வெளிவருகின்றன.
மதிய உணவிற்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்போது, நமது பசியின் அளவு, சுவை விருப்பத்தேர்வுகள், உணவு கட்டுப்பாடுகள் மற்றும் வசதி போன்ற பல காரணிகளைக் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம். அதுவே நாம் மன அழுத்தத்தில் இருந்தால் நம் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து நம்மை மகிழ்விக்கும் அல்லது ஆறுதல் தரும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், நம் உணர்ச்சிகள் நாம் முடிவெடுப்பதில் பங்கு வகிக்கிறது.
உடற்பயிற்சி செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கும்போது, உடல் செயல்பாடுகளின் நன்மைகளை அதாவது உடல்நலம் மற்றும் மனநிலை, செலவுகள், அதற்கான நேரம், முயற்சியின் பலன், முந்தைய பயிற்சியின் விளைவுகளின் அடிப்படையில் செயல்படுவதற்கான உந்துதல் பெறுவதால், உடற்பயிற்சி செய்யலாமா வேண்டாமா என்பதை நமது கடந்தகால அனுபவங்கள் மூலம் நமது முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கும்போது, நமது மதிப்புகள், ஆர்வங்கள், திறன்கள் மற்றும் எதிர்கால இலக்குகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வாழ்க்கையில் எது முக்கியம், எதைச் சாதிக்க முடியும் என்பது பற்றிய நமது நம்பிக்கைகளை வைத்து நம் முடிவு உருப்பெருகிறது.
இந்த எடுத்துக்காட்டுகளின் மூலம் நமது முடிவெடுப்பது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், நாம் செய்யும் தேர்வுகள் நம் வாழ்வில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதைப் பற்றியும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
”நம் அன்றாட வாழ்க்கையில் வழியைக் கண்டறிய Waze அல்லது Google Mapsஸைப் பயன்படுத்தலாம். ஒரு முக்கியமான தொழில்முறை சந்திப்புக்கு என்ன ஆடை அணிவது என்று சக ஊழியரிடம் கேட்கலாம். ஒரு தயாரிப்பு அல்லது சேவையை வாங்குவதற்கு முன் நீங்கள் ஒப்பீட்டு இணையதளத்தைப் பார்க்கலாம். எல்லாக் காரியங்களுக்கும் நம்மிடம் பதில்கள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு, இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு பலரிடம், அனுபவஸ்தர்களிடம் கருத்துக்களைப் பெறுவது தவறில்லை” என்று முடிவுகளின் இரகசியங்களைப் பகிரங்கப்படுத்தினார் ஃபேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரியும், “லீன் இன்” நூலின் ஆசிரியருமான ஷெரில் சாண்ட்பெர்க்.
முடிவெடுப்பதற்கு அதைப் பற்றிய தகவல்கள் தேவை. முடிவெடுக்கும் முன், அந்த முடிவின் விளைவுகளை ஆராய்ந்து அறிய வேண்டும். நம் இலக்கை சார்ந்ததாக முடிவுகள் அமைவதால் நம் இலக்கை முதலில் தெளிவானதாக அமைத்து கொள்ள வேண்டும். முடிவு எடுப்பதில் நன்மைகளும் தீமைகளும் இருக்கும் ஆனால் நம் நீண்ட கால இலக்கை கருத்தில் கொண்டு அதைச் சார்ந்த முடிவுகள் எடுப்பது சிறப்பு. நாம் முன்னனுபவம் இல்லாத விஷயத்திற்கு முடிவுகள் எடுக்கும்போது, அதில் அனுபவம் இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தயக்கம் இருக்கக் கூடாது. நாம் எடுத்த முடிவுகளை நியாயப்படுத்தும் அளவிற்கான அதன் பின்னணி தெரிந்திருக்க வேண்டும். ஏன் அந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் அந்தச் சூழலைச் சரியாகப் புரிந்து கொண்டுதான் முடிவை எடுக்கிறோமா என்றும் தெரிந்துதான் முடிவு எடுத்தல் வேண்டும். கவனக் குவிப்பை அதில் செலுத்தி முடிவு எடுத்தல் அவசியம். அவசர முடிவுகளாக முடியாமல் ஆறப்போட்டு நன்றாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும். எடுத்த முடிவு தவறு என்று எப்போதும் பிற்காலத்தில் யோசிக்காத முடிவுகளாக விளங்க வேண்டும். தவறு நடந்தாலும் தவறிலிருந்து புதிய விஷயத்தை கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும். இப்படி முடிவுகளைச் சுற்றிதான் நம் வாழ்க்கையே அமைந்துள்ளது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா?
ஆசைகள் நிறைவேற வேண்டுமென்றால் அதனை முடிவுகளாக்க வேண்டும். முடிவாகும் பட்சத்தில் அது உடனே நிறைவேறும். ஒரு குறிப்பிட்ட வண்டி வாங்க வேண்டுமென்று ஆசைப்படுவது வெறும் கனவாகிவிடும். அதுவே அதனை முடிவாக எடுத்தால், வண்டி வீடு தேடி வந்துவிடும். ஆனால் அந்த முடிவில் நிதானம் இருக்க வேண்டும், குழப்பம் இருக்கக் கூடாது, சந்தேகம் இருக்கக் கூடாது, அழுத்தம் இருக்கக் கூடாது, எதிர்பார்ப்பு இருக்கவே கூடாது. எளிதாகப் புரிய வேண்டுமென்றால் ஆசைகள் தேவைகளாக மாறும்போது அது நிறைவேறும்.
போகிற போக்கில் ஆசைப்படுவதற்கும், ஆசைகளைக் கண்டறிந்து தெளிவுபடுத்துவதற்கும் வேறுபாடு உள்ளதல்லவா? சில ஆசைகள் எப்படி நிறைவேறுகிறது என்று ஆராய்ச்சிகள் நடத்தியபோது, உங்கள் ஆசைகளைப் பற்றிய தெளிவான புரிதல் கொண்டு அதனை இலக்குகளுடன் ஒத்துப்போகும் முடிவுகளாக்கினால் ஆசையைக் கண்டடையும் தெளிவான பார்வை உருவாகும் என்ற முடிவை ஆராய்ச்சி கண்டடைந்தது (Koo & Fishbach, 2012). இதையே The Adaptive Decision Maker (Payne, Bettman, & Johnson, 1993) என்ற நூலில் நம் விருப்பங்களை நாம் கண்டறிந்ததும், அதனை முறையான மற்றும் முழுமையான மதிப்பீடுகளில் ஈடுபடுத்தி நம் இலக்குகளுடன் ஒத்துப்போகும் முடிவுகளை அதைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, ஒவ்வொன்றின் நன்மை தீமைகளையும் எடைபோட்டு நம் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சாத்தியங்களுக்கு நாமே பாதை அமைத்து அது நிறைவேறும் என்று முடிவெடுத்தால் அது நடந்துவிடுகிறது. இதையே நம் ஆழ் மனதில், இது எப்படி நடக்கும் நிறைவேறும் என்ற சந்தேகத்தில் இருக்கும் போது தலைகீழாக நின்றாலும் அது நிறைவேறாது.
தவறான முடிவுகளின் விளைவுகள் மன அழுத்தத்தைத் தரலாம். ஒரு முடிவு எதிர்பார்த்த விளைவை தரவில்லையென்றால் வருத்தத்தை ஏற்படுத்தலாம். அந்த வருத்தமே வாழ்வின் நிச்சயமற்ற தன்மை உருவாக காரணமாகலாம். அது மட்டுமல்லாது, தவறான முடிவுகள் நம் நேரத்தை எடுத்துக் கொள்ளும், சமயங்களில் செலவையும் இழுத்து வைக்கும்.
அதுவே சிறப்பான முடிவாக இருந்தால் உங்கள் மீதான உங்களது நம்பிக்கையும் சுயமரியாதையும் அதிகரிக்கும். முடிவுகளை எடுப்பது உங்கள் வாழ்க்கையின் மீதான கட்டுப்பாட்டை உங்களுக்குத் தரும், எதிர்காலத்தை வடிவமைக்கும், பொறுப்புணர்ச்சி வளரும், உங்கள் இலக்குகள் மற்றும் நோக்கங்களை நோக்கி முன்னேற உங்களை அனுமதிக்கும். கற்றல் அனுபவங்களை வழங்கும், புதிய திறன்களையும் அறிவையும் பெற உதவும்.
எடுக்கும் முடிவுகள் சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும், சரியானதாகவும் விளங்க வாழ்த்துகள்.
எல்லா வாரங்களும் கட்டுரையை வாசித்துப் பின்னூட்டம் தந்து உற்சாகம் அளித்ததற்கு மனமார்ந்த நன்றி
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
7 comments on “நலம் வாழ: கட்டுரைத் தொடர் 12 – முடிவு”
kumar
நிறைவடையும் இக்கட்டுரைத் தொடரின் நிறைவான கட்டுரை இது. இத்தொடரின் அனைத்துக் கட்டுரைகளும் சிறப்பு. எழுத்தாளர் ஜெசிலா அவர்களுக்கும் மற்றும் கேலக்ஸி பதிப்பகத்துக்கும் வாழ்த்துகள்.
Thileep
Well said..
Santhosh
அருமை வாழ்த்துக்கள் உங்கள் கட்டுரை.
rajaram
சிறப்பான கட்டுரை, இது நிறைவான கட்டுரை என்று எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்கள். எழுத்தாளர் ஜெஸிலா பானு அவர்கள் தொடர்ந்து எழுதிட வேண்டுகோள் விடுக்கிறோம்.
பாலாஜி பாஸ்கரன்
மிகச்சிறப்பாக பன்னிரெண்டு வாரங்கள் “நலம்வாழ” என்னும் தலைப்பில் கட்டுரைகளைத் தொடராக எழுதி, நமது கேலக்ஸியின் அடுத்த கட்ட முயற்சியின் வெற்றிக்கு தொடக்கவுரை எழுதியிருக்கிறீர்கள். எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள்.
பால்கரசு
மிகவும் பயனுள்ள கட்டுரை. எந்தவொரு செயலையும் செய்யும் முன் அச்செயலின் நன்மை தீய்மைகளை ஆராய்ந்து முடிவெடுக்கும் போது அதன் வெற்றி தோல்விகள் நம்மை பாதிக்காது. வாழ்த்துகள்
Nase
தெளிவான பல நல்ல கருத்துக்களை தொடர்ந்து எழுதி முடித்தமைக்கு வாழ்த்துகள் ஜெஸிலா.