ஜெஸிலா பானு
சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் கணிதம், அறிவியல், புவியியல், வரலாறு என்று ஏதேதோ படித்திருப்போம். ஆனால் வாழ்க்கைப் பாடமென்று நமக்கு சொல்லித் தரப்படுவதில்லை. அப்படியே சொல்லித் தந்தாலும் நம்மால் கடைப்பிடிக்க முடியுமா? அமைதியான ஆரோக்கியமான இன்புற்ற நிலையில் நம் மனம் எப்போதுமே இருக்க வேண்டுமென்று யார் தான் விரும்பமாட்டார்கள்? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? யோசிக்கலாமா?
ஏமாற்றம், ஆற்றாமை, துரோகம், பகை, பொறாமை இப்படிப்பட்டவற்றில் நாம் சிக்கிக் கொள்ளும்போதுதான் நம் மனம் அதிக அழுத்தத்தில் இருக்கும்,
பல ஆண்டுகளாகப் பழகிய நண்பர், நம்பி நட்பு பாராட்டியவர், உங்கள் வாழ்க்கையில் பாதிக் காலம் அவருக்காகவே நீங்கள் செலவழித்திருக்கிறீர்கள். அப்படிப்பட்டவர் பலரிடம் உங்களைப் பற்றித் தவறாகப் பேசியிருக்கிறார், எள்ளி நகையாடியிருக்கிறார், புறம் பேசியிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரிய வருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
உங்கள் துணை ஏதோவொரு விஷயத்தில் உங்களை ஏமாற்றிவிட்டார் என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டது. எப்படி கையாள்வீர்கள்?
நெருங்கிய உறவின் நம்பிக்கைத் துரோகம். கேள்வி கேட்டும் மாற்ற முடியாத சூழல். எங்கே சென்று புகார் தர இயலும்?
’எனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, எனக்குத்தான் தருவேன் என்று சொல்லப்பட்டிருந்ததை இன்று யாருக்கோ தருகிறார்கள்’ இந்த ஆதங்கத்தைச் சட்டையைப் பிடித்துக் கேட்கவா முடியும்?
அவர் துரோகம் செய்துவிட்டார், முதுகில் குத்திவிட்டார், ஏமாற்றிவிட்டார், வாக்கு தவறிவிட்டார்– இதையெல்லாம் புலம்புவதன் மூலமோ, வெட்டவெளிச்சமாக்குவதன் மூலமோ அவர்கள் தன் தவறை உணர்வார்களா? வெட்கப்படுவார்களா? வேதனை கொள்வார்களா? நீங்கள் உணர்வது போல் கண்டிப்பாக உணரவும் மாட்டார்கள், வருந்தவும் மாட்டார்கள், உங்கள் வேதனையைப் புரிந்து கொள்ளவும் போவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்காக நீங்கள் ஏன் வருந்த வேண்டும்? மாறாதவர்களுக்காக நம் பொன்னான நேரத்தை நாம் வீணாக்க வேண்டுமா? யோசித்துப் பாருங்கள். நற்குணம் படைத்த, இரக்கமுள்ள, தாராள மனப்பான்மை உள்ள நீங்கள், தரங்கெட்ட செயலை, உங்களை நிலைகுலையச் செய்த விஷயங்களை எண்ணிக் கலங்குவதேன்?
உண்மையில் நீங்கள் என்ன செய்தால் சரியாக இருக்கும் தெரியுமா?
சரியில்லாத அல்லது தவறு நடந்த அனைத்தையும் பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இல்லாமல் சிந்தித்துக் கொண்டே இல்லாமல், இப்படியாகிவிட்டதே என்று எண்ணாமல், இவ்வளவு முட்டாளாக இருந்தேனா என்று கதறாமல், நான் செய்த பிழை என்ன, எனக்கு ஏன் இப்படி நேர்கிறது என்று யோசிக்காமல்… என்ன நடந்தது என்பதை முழுவதுமாக மறந்து விடுங்கள். மன்னித்துவிடுங்கள். இதைத்தான் நான் மிகவும் கடினமான பயிற்சி/ திறன் என்கிறேன். இந்தத் திறனைப் பயில்வது சொல்வது அளவுக்கு எளிதில்லை. முனைய வேண்டும். வாழ்க்கைப் பாடத்தில் ‘மன்னிப்பு’ என்ற ஆற்றல் ’முனைவர்’ பட்டத்தைப் போன்றது. காசு கொடுத்து வாங்கும் முனைவர் பட்டத்தைச் சொல்லவில்லை. உண்மையில் ஆராய்ந்து ஆழ்ந்து வாசித்துத் தெரிந்து தேர்ச்சி பெறும் முனைவர் பட்டத்தைச் சொல்கிறேன்.
சொல்வது எளிமை என்று நினைக்கலாம். ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் உங்களையே மன்னிக்கப் போகிறீர்கள்!
’என்னது, நான் என்னையே மன்னிக்க வேண்டுமா? நான் என்ன தவறு செய்தேன், என்னை நானே மன்னித்துக் கொள்ள’ என்று நீங்கள் நினைக்கலாம். உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு என்கிறது பிரம்மசூத்திரம். அப்படியிருக்க, மற்றவர் உங்களைக் காயப்படுத்தியதற்கும் நீங்கள் பொறுப்பென்ற போது ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதற்கேற்ப உங்களின் ஏதோவொரு செயல் அந்த நிகழ்விற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதி, முதலில் நீங்களே உங்களை மன்னித்துக் கொள்ளும் பக்குவத்தைப் பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு மற்றவர்களை மன்னிக்கலாம். அதுதான் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
எதிர்மறையான சிந்தனையும் சுயமதிப்பீடும் உங்களுக்கு உதவாது. அவை அதிகச் சிக்கல்களை ஈர்க்கின்றன. உங்கள் சுயமரியாதையைக் குறைக்கின்றன, மேலும் உங்களை இன்னும் மோசமாக உணரவைக்கும். இந்தச் சுழற்சியை முதலில் உடைத்தெறியவேண்டும். வெறுப்பை வைத்துக் கொண்டு இருப்பது காற்றடிக்கும்போது ஒரு கை மண்ணெடுத்துத் துற்றுவதுபோலாகிவிடும், நம் மீதே புழுதியை வாரி இறைப்பதுபோலாகிவிடும்.
மன்னிப்புடன் புதிதாகத் தொடங்குங்கள்! கடந்த காலத்தில் நீங்கள் வருந்திய அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி, அனைத்திற்கும் உங்களை மன்னியுங்கள். உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த நினைத்தால், சிறந்த வாழ்க்கையை உருவாக்க விரும்பினால், முதலில் நீங்கள் உங்களை மன்னிக்க வேண்டும்.
‘அவருக்காகவே வாழ்ந்த என்னை அவர் ஏமாற்றிவிட்டார்’ என்று துவண்டுபோகாமல் அடுத்தது என்ன என்பதில் கவனம் செலுத்தினால் மனவுறுதியுடன் இருந்தால், மன்னிப்பது எளிமையாகிவிடும். நீங்கள் வார்த்தையால் ‘உன்னை மன்னித்தேன்’ என்று சொல்ல வேண்டாம். உங்கள் மனதில் அப்படி நிறுத்திக் கொண்டால் உங்களால் அந்தச் சவாலைச் சமாளிக்க இயலும் என்றுதான் சொல்கிறேன். எதையுமே ‘பிரச்சினையாக’ பார்க்காமல் ‘சவாலாக’ பார்த்துப் பழகுங்களேன். சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையும் பிறக்கும். மன்னிக்க வேண்டுமே என்று உங்களை நீங்களே கஷ்டப்படுத்திக் கொள்ளாமல் அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் தொடர்பில்லாமல் அப்படியொன்று நிகழாதவாறு கடந்துவிடுங்கள்.
தவறு செய்தவருடனே வாழ வேண்டியிருக்கிறதே – அந்தச் சூழ்நிலையிலும் என்னைதான் நான் மன்னித்தாக வேண்டுமா என்று கேட்டால். ஆம், நீங்கள் உங்களை மன்னிக்காதபோது, எதிர்மறை உணர்ச்சிகளால் நிரப்பப்படுகிறீர்கள். அது நீங்கள் சுற்றியுள்ள உலகத்தைச் சிதைக்கிறது. மன்னித்துவிட்டால் வருத்தம், குற்ற உணர்வு மற்றும் அவமானம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட எதிர்மறை ஆற்றலை நீங்கள் மாற்றுகிறீர்கள். உங்களை நீங்களே வருத்திக் கொள்ளாமல் இருப்பீர்கள். உங்களுக்குக்கான நல் அதிர்வுகளையும் ஆற்றலையும் அதிகரிக்கிறீர்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் சிறந்த சூழ்நிலைகளை ஈர்க்கிறீர்கள்.
பத்து வருடத்திற்கு முன்பான ஒரு சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அமெரிக்காவில் 48 பெண்களைக் கொன்ற கேரி ரிட்ஜ்வேவை நீதிபதி முன்பு நிறுத்தியபோது எந்த உணர்வுமில்லாமல் ‘ஆம் கொன்றேன், எதற்கென்றெல்லாம் தெரியவில்லை நினைவில் இல்லை’ என்றபோது அந்தப் பெண்களின் உறவினர்கள் அவனை வசை பாடிய போது அதனைக் கண்டுகொள்ளாமல் கல்லாக நின்றிருந்த கொலைகாரனை ஒரே ஒரு பெண்ணின் தந்தை மட்டும் முன் வந்து ‘ நான் உன்னை மனப்பூர்வமாக மன்னித்துவிட்டேன்’ என்று சொன்ன தருணம் மாற்றியது. ஈவு இரக்கமின்றி இருந்த அந்தக் கொலைகாரனின் கண்களிலிருந்து கண்ணீர் சொரிந்தது. அதுதான் ‘மன்னிப்பின் பலம்’.
இப்படித்தான் எனக்குத் தெரிந்த ஒருவர் தனது சகோதரரோடு வருடக் கணக்கில் பேசுவதில்லை, காரணமே மறக்கும் அளவிற்கு வருடங்களாகிவிட்டது என்று என்னிடம் முறையிட்டார். நானும் அவரிடம், சகோதரர் அவருக்குச் செய்த மன வலியை வைத்திருக்காமல் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அதற்காக அவர் ஒரு வாரம் பயிற்சியாகத் தினமும் தன் சகோதரரை எண்ணி அவர் செய்த காரியத்தை மறந்து, அதனை மனப்பூர்வமாக மன்னிப்பதாக மனதுக்குள் நினைத்துக் கொண்டே வந்தார். ஒரு வாரம் முடியும் முன்பே பல வருடங்கள் தொடர்பில் இல்லாத சகோதரர் இவருக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார். கடிதத்தை மறுபடியும் மறுபடியும் வாசித்துவிட்டு எப்படி இது நிகழ்ந்தது என்று அவருக்கு மிகுந்த ஆச்சர்யம். இது எப்படி நிகழ்ந்தது என்று தொடர்ந்து ‘நலம் வாழ’ கட்டுரையை வாசிப்பவர்களுக்கு விளங்கியிருக்கும். இதுதான் மன்னிப்பின் வலிமை.
”என்னடா இது புது உருட்டா இருக்கே!?” என்று நீங்கள் அதிருப்தியடைவது தெரிகிறது. ஆனால் வருந்தினால் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறதா? இல்லை. துன்பம் தீர்வு தருமென்றால் அதே நிலையில் இருக்கலாம். கவலை எதையுமே மாற்றப் போவதில்லை என்றால் அப்படியே விட்டுவிட்டு அடுத்து என்ன என்று சிந்திப்பதிலும், நம்மை நாமே திசைத் திருப்புவதிலும் அக்கறை செலுத்தலாமே.
உங்களை மகிழ்ச்சியான மனநிலையில் வைத்திருங்கள். மன்னித்து விடுவோமா, உங்கள் மனம் இரங்கி…?
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
Leave a reply
You must be logged in to post a comment.