ஜெஸிலா பானு
உங்களை அப்படியே ஒரு பழைய படத்தின் காட்சிக்குள் அழைத்துச் செல்லப் போகிறேன்.
’சின்னஞ்சிறு உலகம்’ என்ற படத்தில் ஒரு காட்சி. அதில் நடிகர் நாகேஷ் தன்னிடம் வேலை செய்யும் பெண்ணின் திருமணத்திற்குச் செல்வார். அங்கு இருக்கும் குத்துவிளக்கில் எரியும் தீச்சுவாலையைக் கண்டதும் அழுவார். முதலாளி அழுவதைக் கண்டு மணப்பெண் அழுவார். அதைக் கவனித்த மணமகன், அவன் திருமணம் செய்யப் போகும் பெண்ணுக்கும் முதலாளி நாகேஷுக்கும் காதல் என்று தவறாக நினைத்துக் கொண்டு அவரும் அழுவார். மணமக்கள் அழுவதைக் கண்டு உற்றாரும் உறவினர்களும் அழத் தொடங்கிவிடுவார்கள். மங்கலமாக ஒலித்துக் கொண்டிருந்த மேளதாளமும் சோகமாக ஒலிக்கத் தொடங்கிவிடும். திடீரென்று சுதாரித்துக் கொண்டு நாகேஷ் ”ஏன் திருமண வீடு இழவு வீடு மாதிரி ஆகிவிட்டது” என்று கேட்பார். அழுகையைத் தொடங்கி வைத்ததே அவர்தான் என்று காரணம் சொல்லப்படும்போது, ”குத்துவிளக்கின் தீபம் மணமகளின் முந்தானையில் பட்டு எரிந்துவிட்டால், நெருப்புப் பரவி மணமகனும் எரிந்து… இந்த மண்டபமே எரிந்துவிட்டால்…” என்ற கற்பனையினால் அழத் தொடங்கியதை சொல்வார். அந்தத் தேவையற்ற பயம் அந்தத் திருமணத்தையே நிறுத்திவிடும்.
இதை நீங்கள் வாசிக்கும்போது அந்தப் படத்தின் காட்சி உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம், அல்லது முட்டாள்தனமென்று எண்ணிச் சிரித்திருப்பீர்கள். அதே வகையான முட்டாள்தனத்தை நாம் தினமும் செய்து கொண்டிருக்கிறோம். என்ன இல்லையென்று நினைக்கிறீர்களா?
’இளம்கன்று பயமறியாது’ என்பார்கள் அப்படிப் பயமில்லாமல் குழந்தை வீட்டு நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தாலுமே, உடனே அதன் தாய் “நாய் கடித்துவிடும்” என்று ஒரு தேவையற்ற பயத்தை விதைப்பார். ”இருட்டுல தனியா போகாதே, பூச்சாண்டி பிடிச்சிக்கும்”, “மழையில் நனையாதே சளி பிடிக்கும்” என்றெல்லாம் வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு- வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவைப்பார்கள்.
அதேபோல் உண்மைக்கு அருகே இருக்கும் தேவையற்ற பயமானது ”ஓடாதே விழுந்துறவ”, “குதிக்காதே, கால் ஒடிந்துவிடும்”, “கம்ப்யூட்டர் பார்க்காதே கண்ணு கெட்டுவிடும்”, “இரவில் இதைச் சாப்பிடாதே அஜீரணம் ஏற்படும்” இதெல்லாம் எங்கேயோ கேட்டிருப்பீர்களே? இது எந்தப் படத்திலும் வந்த நகைச்சுவைக் காட்சியில்லை.
சிலருக்குப் பயம் ஓர் உளநோயாக மிகையச்சமாகவும் இருக்கும். அதில் நிறைய வகையுண்டு. அதனை அச்சக் கோளாறு என்கின்றனர்.
என் மகளின் மேல் ‘பூச்சி’ என்று சொல்லி ஒரு பூவை வீசினாலும் ’குய்யோமுறையோ’ என்று கத்துவாள். அவளுக்குப் பூச்சிக்கு பயம். அந்தச் சிறிய பூச்சியைக் கண்டு பெரிய உருவம் பயப்படுகிறதே என்று ஏளனம் செய்தாலும் ‘அறிவுக்குப் புரியுது, மனசுக்குப் புரியல’ என்பாள். இப்படிதான் நம்மில் பலர் ஒன்றுமே இல்லை என்று தெரிந்தாலும், அனிச்சையாக அந்த நொடியில் பயத்துக்கு ஆட்பட்டுவிடுகிறோம். இது அச்சக் கோளாறு வகையில் வரும், ஆனால் அதன் தீவிரத்தைப் பொறுத்து பயத்தின் வீரியம் மாறுபடும்.
9/11 நிகழ்விற்குப் பிறகு பலருக்கு விமானப் பிரயாணத்தைப் பற்றிய பயம் அதிகரித்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சமீபத்தைய ‘கொரோனா’ பீதி பலரைப் பிடித்து உலுக்கியதில் மூன்றில் ஒருவருக்குக் கொரோனா தொற்று வந்துவிட்டே சென்றது. ‘என்ன இது முட்டாள்தனம், கொரோனா தொற்று நோய் கிருமியால் வருவது, பயத்தால் அல்ல” என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது. ஆனால் பலருக்கு கொரோனா உறுதியாகும் முன்பே மூச்சுத் திணறல் ஆரம்பமாகிவிட்டிருந்தது. ஏனென்றால் அவர்களின் ஆழ்மனதில் கொரோனாவால் மூச்சி திணறி ஆக்ஸிஜன் குறைந்து இறந்தவர்களைப் பற்றிய தகவல்கள் அவர்களைத் திணறடித்ததே முக்கியக் காரணம் என்பதை நாம் மறுக்க இயலுமா? நாம் பயப்படும்போது மூச்சு திணறும்தானே? ஆரோக்கியமாக இருப்பதற்காக உடற்பயிற்சி செய்வதற்கும், நோய் வராமல் இருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கும், நிறைய வேறுபாடு உள்ளது.
”கணவர் என்னைக் கைவிட்டுவிடுவாரோ?” என்ற பெரும்பாலான பெண்களின் பாதுகாப்பற்ற நிலை.
“வேலை இழந்துவிடுவேனோ?” என்ற உளவியல் ரீதியான உணர்வு.
“எல்லா இடத்திலும் டெங்கு காய்ச்சல் இருக்கே, இவளுக்கும் வந்துவிடுமோ” என்ற தாயின் யதார்த்த கவலை.
இவை போன்று தெரியாத ஒன்றை அல்லது தெரிந்த ஒன்றை உணர்வு ரீதியாக நினைத்துக் கொண்டு அசெளகரியத்தால் ஏற்படும் உள் நடுக்கம். – இந்தப் பதட்டத்தைத்தான் பயம் என்கிறோம்.
சிலருக்கு ‘பயம்’ கோபமாகவும், பலருக்கு மன அழுத்தமாகவும் மாறிவிடுகிறது. அதனைக் கட்டுபடுத்தவோ கையாளவோ முடியாத போது ‘என்ன நடக்குமென்றே தெரியாதபோது பயப்படாமல் எப்படி இருக்க முடியும்?’ என்பதுதான் நம் அனைவரின் நிலையும். இப்படி யோசித்துப் பாருங்கள், பயந்தால் பயப்படும் விஷயம் சரியாகிவிடுமென்றால் பயந்து கொள்ளுங்கள். பயந்தாலும் பயப்படாவிட்டாலும் நடப்பதுதான் நடக்குமென்றால் ஏன் பயப்பட வேண்டும்? ‘அப்படி நடந்துவிடுமோ, இப்படி நடந்துவிடுமோ’ என்று ஏன் மனதைக் குழப்பிக் கொள்ள வேண்டும்?
அதுமட்டுமல்லாது பயத்தால் எதிர்மறை எண்ணங்கள் பலவாறு வந்து கொண்டே இருக்கும். எது நடக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அது நடந்தேவிடும் அபாயம் உள்ளது. அது எப்படியென்றால் தேவையற்ற விஷயத்திற்கு, அதிகமாக ‘ஆற்றல்’ கிடைக்கும்போது அது அப்படியே நடந்துவிடும் சாத்தியக்கூறுகளும் அதிகரித்துவிடுகின்றன. அதனால் நாம் பயப்படுவதின் பொருள் என்ன என்பதைப் பற்றிய யதார்த்தமான சிந்தனையைப் பெற்றால், அதுவும் அடிப்படைக் குழப்பத்திற்கான காரணம் என்னவென்று யோசித்தால் பயத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளக்கூட முடியலாம்.
ஒரு குழந்தைக்கு தலைவலி, அவனை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, ஒலித்த செல்பேசியை தாய் காதில் வைக்க, அடுத்த முனையிலிருந்து அவரது தோழி ”தலைவலின்னு சாதாரணமா விட்டுடாதே, இப்படிதான் எனக்குத் தெரிந்தவருடைய குழந்தைக்கு அடிக்கடி தலைவலி வந்துருக்கு, அப்புறம் பார்த்தா மூளைக்காய்ச்சல்” என்று இவர் காதில் போட்டுவிட, இவரும் தன் குழந்தையை பார்க்கும்போதெல்லாம் “மூளைக்காய்ச்சலாக இருக்குமோ” என்ற தேவையற்ற அச்சம் ஆற்றல் பெற்று உண்மையாகிப் போனது.
தெனாலிக்கு எல்லாம் பயம் தான், தெனாலிக்கு எல்லாம் பயம். அப்படியான எல்லாம் பயமெல்லாம் நமக்குதான் இல்லையே, அதனால் வந்து போகும் பயம் பற்றி பயமில்லை என்று நீங்கள் சொல்வது புரிகிறது. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்று குறளே சொல்கிறதே – என்றும் நீங்கள் கேட்கலாம். நான் சொல்வதெல்லாம் தேவையற்ற பயம், அவசியமற்ற சிந்தனைகளைத் தரும். அது நேரான நல்ல விஷயங்களை அடைய வலுவான தடைக்கற்களாக அமைகின்றன. எப்போதும் மனதை அமைதியாக இருக்க விடாமல் குழப்பமான மனநிலையில் வைத்துவிடும். பாதுகாப்பற்ற தன்மையில் பதற்றமான நிலையில் இருப்பது உள்ளத்திற்கும் உடலுக்கும் நல்லதல்ல. எவ்வாறாயினும், அவ்வகையான பயத்தை தற்காலிக முறைகள் மூலம், நம்மை முடக்கிப்போடும் பயத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முடியும். அந்த முறையானது தேவையற்ற பயம் ஏற்படும்போதெல்லாம் – நமக்கு எப்போதுமே மனதிலுள்ள பிரார்த்தனையை, வேண்டுதல்களை, அது நிறைவேறிய சந்தோஷத்தை மனதில் காட்சிப்படுத்தி கொள்ளுங்கள். நற்கனவுகள் நிறைவாகும் மகிழ்ச்சியில் பயம் காணாமல்போகும், எதிர்மறை எண்ணங்கள் மறைந்துவிடும்.
நாம் பயத்தில் மூழ்கும்போது, அதைச் சமாளிப்பதற்கான இந்த முறைகளை நாம் நினைவில் வைத்துக் கொண்டால், பயமாகத் தோன்றிய எந்தச் சூழ்நிலையையும் நாம் அமைதியாகவும் யதார்த்தமாகவும் சமாளிக்க முடியும். மாற்றி யோசியுங்கள்.
என்ன ஆச்சு? ரொம்ப பயந்துட்டீங்களா? பயப்படாமல் இந்தக் கட்டுரையைப் பற்றிய மேலான கருத்தைகளை எங்களுக்கு அறியத் தாருங்கள்.
பயமில்லாமல் நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
Leave a reply
You must be logged in to post a comment.