ஜெஸிலா பானு
பேச வேண்டிய நேரத்தில் பேசாமல் விட்டுவிட்டு, இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டோமே என்று நீங்கள் வருத்தப்பட்டதுண்டா? நீங்கள் நினைப்பதைத் தெளிவாகவும் அமைதியாகவும் உறுதியாகவும் நேர்பட வெளிப்படுத்தினாலே உங்களுடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமென்று சொன்னால் நம்புவீர்களா? அதைப்போலவே ’இல்லை’, ’முடியாது’, ’வேண்டாம்’ என்று தைரியமாகச் சொல்வது எத்தனையோ பிரச்சினைகளை வரவிடாமல், வளரவிடாமல் தீர்க்கும் என்றால் ஒப்புக்கொள்வீர்களா?
வேலைக்கான நேர்முகத்திற்குச் சென்றிருக்கிறீர்கள், ‘அடுத்த மூன்று ஆண்டில் நீ என்னவாக இருப்பாய்’ என்று கேள்வி கேட்கப்பட்டால், ’வாழ்க்கையே நிச்சயமில்லை, என்ன வேண்டுமானாலும் ஆகலாம்’ என்று பதில் சொன்னால், அந்த எதிர்மறையான பதிலை யாருமே ரசிக்கமாட்டார்கள். அதுவே ‘உன் இடத்தில் நான் இருப்பேன்’ என்று பதில் சொன்னால் தன்னம்பிக்கையான பதிலாகத் தெரியாது, அந்த பதில் திமிராகப் பார்க்கப்படும். அதுவே நீங்கள் பணியிடத்திற்குச் சென்ற நிறுவனத்தைப் பற்றி முன்கூட்டியே இணையத்தின் மூலம் அறிந்து வைத்துக் கொண்டு அதைப் பற்றி உரையாடி ‘உங்களோடு இணைந்து நான் பயணிப்பேன், இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என் திறன் பயன்படும்’ என்று உறுதியாகச் சொல்லும்போது உங்கள் மீதான நம்பிக்கையும் மரியாதையும் கூடிவிடும்.
எதிரில் உட்கார்ந்து கேள்வி கேட்பவரை நாம் உயர்வாகக் கருதி, நாம் துவண்டுபோய்ப் பதில் சொன்னால், வெற்றி வாய்ப்புகள் குறைந்துவிடும். அதனால் எப்போதுமே மற்றவர்கள் பேசுவதைக் கவனித்து நம் கருத்துக்களை முன் வைக்கும்போது அதனைக் கேட்பர் மதிப்பர்.
மன உறுதியுடன் வெளிப்படையாக மனதில்பட்டதை எதிராளியின் மனம் புண்படாமல் கேட்டுவிட்டால் தேவைகள் பூர்த்தியாகுமென்று உத்தரவாதம் இல்லை. ஆனால் பூர்த்தியாக அதிக வாய்ப்புள்ளது. மேலும் அது மற்றவர்களுடன் உங்கள் உறவை மேம்படுத்தும். இந்தக் குணம் உடையவர்கள் தனது உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தனது அதிகாரத்துக்கும் உரிமைக்கும் உட்பட்ட பகுதிகளை அந்நியர்கள் ஆக்கிரமிப்பதை ஏற்கமாட்டார்கள். சுயமரியாதையை எல்லா நிலைகளிலும் பிரதானமாகக் கொண்டால் எந்த நிலையிலும் சிறுமைப்பட்டுப் போகாமல் அதிகத் தன்னம்பிக்கையுடன் இருக்க இயலும். இது இயல்பில் ஏற்படும் குணம் அல்ல. நேர்பட உறுதிபடப் பேசுதலை பயிற்சியாக எடுத்துக் கொண்டு பேச பழகி கொள்ளலாம், அல்லது அப்படியான முன்மாதிரியாக நீங்கள் பார்ப்பவரோடு அதிகம் பழகினால் அவர் கையாள்வதைக் கவனிக்கும்போது அப்படியான பண்பு தானே உருவாகிவிடும்.
நேர்பட உறுதிபடப் பேசும் தன்மை இல்லாதவர்கள் தன்னம்பிக்கையின்மை அல்லது குறைந்த சுயமரியாதையால் பாதிக்கப்படலாம். மற்றவரிடம் தைரியமாகப் பேசுவதற்கும் தங்களை வெளிப்படுத்துவதற்கும் தயக்கமாகவும் கடினமாகவும் இருக்கும். மற்றவர்கள் தம்மைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது தம்மைக் கேலி செய்வார்கள் என்ற தாழ்வு மனப்பான்மையும் சுயபச்சாதாபமும் பதட்டமும் எரிச்சலும் ஏற்படும் என்று மனோதத்துவ நிபுணர் ஜித்தானு ஒவனா தனது ஆராய்ச்சி கட்டுரையில் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேர்படப் பேசுவது வேறு, முகத்தில் அறைந்தாற்போல் பேசுவது வேறு. நேர்பட உறுதிபடப் பேசும்போது அதில் தன்மை இருக்கும், வெளிப்படையாகப் பேசுவதாக எண்ணி முகத்தில் அறைந்தாற்போல் மனதைக் காயப்படுத்தும்படி பேசுவதால் கசப்புணர்வு ஏற்படும். உறுதிபட நேர்படப் பேசுவதற்கும் முகத்தில் அறைந்தாற்போல் தன்மையில்லாமல் பேசுவதற்கும் மெல்லிய இடைவெளியே உள்ளதால் கவனமாகக் கையாள வேண்டும்.
எப்போதும் நம்மைவிட உயர்ந்த பதவியில் உள்ளவரிடம், அல்லது பணம் படைத்தவரிடம் பொதுவாகக் கொஞ்சம் பணிந்து பேசுவது இயல்பு. ஏன் அப்படியான ஓர் இயல்பு ஏற்படுகிறது என்று ஆராய்ந்தால் அதற்கு முக்கியக் காரணம் அந்தச் சக்திவாய்ந்த நபரைவிட நாம் ஒருபடி கீழென்று நம் மதிப்பை நாமே குறைத்துக் கொள்ளும்போது அப்படி நிகழ்கிறது. பணிந்து நடப்பது நல்ல பண்புதான், ஆனால் அதனைச் செயலற்ற தளர்ந்த உடல்மொழியில் வெளிப்படுத்தும்போது எதிரில் உள்ளவரின் ஆதிக்கம் ஓங்கிவிடுகிறது. அதுவே நம்மிடம் நமக்குக் கீழே வேலை பார்ப்பவரிடம், நாம் கொஞ்சம் அதிகார தோரணையோடே அணுகுவோம். அதற்குக் காரணம் ஆதிக்க மனப்பான்மை என்று சொல்வதைவிட அந்த இடத்தில் வெளிப்படும் தன்னம்பிக்கையும் தன்னைப் பற்றி உயர்வாக எண்ணிக் கொள்ளுதலும்தான். இதுவே தமக்குச் சமமான நண்பரோடு பேசும்போது பணியாமல் அல்லது அதிகாரமில்லாமல் இயல்பாக உறுதிபட நேர்பட நிதானமாக உரையாட இயலும். பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் தவிர்த்து எல்லா இடத்திலும் உறுதிபட நேர்பட வெளிப்படையாக நடந்து கொண்டால் ஒடுக்கப்படுவது தடுக்கப்படும்.
கணவர் – மனைவி உறவில்கூட, ஒருடைய செயல்பாட்டில், குறிப்பால் சிலவற்றை உணர்ந்தவருக்கு மற்றவர் மீது ஏதாவது சந்தேகமிருந்தால் உடனே அதனைப் பற்றிப் பேசி முடித்துவிட வேண்டுமே தவிர, கேட்கலாமா வேண்டாமா, கேட்டால் இன்ன இன்ன பிரச்சனைகள் வருமே என்று தள்ளிப்போட்டால் அது மனதில் பல எதிர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தும், உறவுகளில் சிக்கல்களை அதிகரிக்கும், தேவையில்லாத இடத்தில் ‘கோபமாக’ வெளிப்படும். ஆகையால் கேட்க வேண்டுமென்று நினைப்பதை உடனே கேட்டுவிட்டால் தீர்வுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தீர்வென்று கிடைக்காவிட்டாலும் அதனை வளர விடாமல் தடுப்பதற்காவது உதவும்.
நேர்படப்பேசுதலைவிடக் கடினமானது எதிர்மறைப் பேச்சு. பலருக்கு, ’இல்லை’, ‘முடியாது’, ’வேண்டாம்’ என்று சொல்வதே அவர்களை குற்ற உணர்வால் நிரப்பிவிடுகிறது.
குழந்தை பருவத்திலிருந்தே பெற்றோரோ அல்லது ஆசிரியரோ குழந்தையிடம் ஏதாவது செய்யச் சொன்னால், இல்லை என்று சொல்வது பின்வாங்குவதாக நினைத்துக்கொள்கிறோம். ’இல்லை’ என்று சொல்வது இயலாமை என்று கருதப்படுகிறது. பாலியல் வன்முறைகள் நிகழும்போது அவற்றைப் பெற்றோரிடம் சொல்லாமல் இருப்பதற்கும் இதே பயமும் தயக்கமும் இப்படியான பின்னடைவுமே காரணம் என்றும் கூறப்படுகிறது.
ஆசிரியர் கணக்குப் பாடம் கரும்பலகையில் எழுதும்போது ஏதாவது தவறு செய்துவிட்டால், அதனைச் சுட்டிக்காட்டுவதில் தயக்கம் இருக்கக் கூடாது. ஆசிரியர் தவறு செய்ய மாட்டார் என்றோ, தவறை நாம் சுட்டிக்காட்டினால் அவருக்குப் பிடிக்காதென்றோ எழும் தயக்கம் நாளடைவில் தவறை கண்டும் காணாததுமாகத் தவிர்க்கும் இயல்பாகிவிடும். மேலும் அது பலவகையான மனப் போராட்டத்திற்கு வழிவகுக்கும். அதேபோல சந்தேகங்கள் எழும்போது கேள்வி தவறாக இருக்குமோ என்றோ, அற்பத்தனமான கேள்வியென்று மற்றவர்கள் சிரிப்பார்களோ என்றோ, நண்பர்களிடம் கேட்டுக் கொள்வோம் இப்போது வேண்டாமென்றோ தள்ளிப் போடுவது பெரும்பாலானோரின் குணம். கேட்க வேண்டியதை சபையில் கேட்டுவிட்டால், மற்றவருக்கும் உங்கள் கேள்வியின் மூலம் முழு விளக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்களை நேசிப்பவர் உங்களிடம் ஒரு வேலையைத் தந்து செய்யச் சொல்கிறார். உங்களுக்கு அதனைச் செய்ய விருப்பமில்லையென்றால், உடனே வெளிப்படையாக ‘முடியாது’ என்று நயமாகச் சொல்லி விட்டால் அவர் புரிந்து கொள்வார். ஆனால் அவர் மனம் கோணுவாரோ என்று நினைத்துக் கொண்டு உங்களுக்குப் பிடிக்காமல் செய்யும் காரியம் இருவரையுமே காயப்படுத்தும்.
மேலாளர் ஒரு வேலையை இன்றே முடித்தாக வேண்டுமென்று கட்டளையிடும்போது. அதனை முடிக்க முடியாது என்று உங்களுக்குத் தெரிந்தால், உடனே இன்று முடிக்க இயலாது என்பதையும் எப்போது முடிக்க இயலும் என்ற கால அளவையும் அந்த நொடியிலேயே காரணத்துடன் சொல்லிவிட்டால் அவரும் புரிந்து கொள்வார். அந்த வேலையைப் பற்றி உங்களுக்குச் சரியாகத் தெரிந்திருக்கிறது என்ற நம்பிக்கையையும் அவருக்கு அளிப்பீர்கள். ஆனால் ‘சரி’ என்று பணியை எடுத்துக்கொண்டு முடிக்க முடியாமல் போனால் அழுத்ததிற்கு உள்ளாவீர்கள்.
பெரும்பாலான நேரத்தில் நேர்பட உண்மையைப் பேசுதல் அந்த நொடியில் மற்றவருக்கு அதிருப்தியைத் தந்தாலும் அவர் ஆழமாக நிதானமாக யோசிக்கும்போது அதில் உள்ள உங்களது நேர்மை மற்றவரை கவரும்.
சொல்ல வேண்டியதை அழுத்தமான குரலில் நேர்பட உறுதிபடச் சொல்லி நலமாக வாழ்வோம்.
நலம் வாழ வாழ்த்துகள்.
ஜெஸிலா பானு
Leave a reply
You must be logged in to post a comment.