வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
————————————————–
“ஆஹா வந்திருப்பது சாதாரண படை அல்ல! மிகப் பெரிய ஒரு கூட்டம். நான்கு திசைகளிலும் படைகளை குவித்து வைத்திருக்கிறார் முகமது. அவர்களை எதிர்த்து நம்மால் ஒன்றுமே பண்ண முடியாது” என்று நினைத்தார்கள்.
இந்த ராஜதந்திரம் தான் அத்தனை போர்க்களத்திலும் நபிகளார் பயன்படுத்தியது. எதிரிகளை மனதளவில் முதலில் தோற்கடித்து விடுவார்கள். பிறகு அவர்களை இலகுவாக வென்றும் விடுவார்கள்.
காலையில் படை தயாரானது. படையினருக்கு நபிகளார் போதனை செய்தார்கள் “நீங்களாக உங்கள் வாள்களை உயர்த்த கூடாது. வாள்கள் உறை உள்ளே தான் இருக்க வேண்டும். அவர்கள் உங்களை எதிர்த்தாலே ஒழிய நீங்கள் சண்டையிடக் கூடாது” என்று கட்டளையிட்டார்கள்.
அதேபோல் மக்காவாசிகளுக்கும் எச்சரிக்கை செய்தார்கள். “அபூசூபியான் வீடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள், தங்கள் வீடுகளில் இருப்பவர்கள், புனித பள்ளியில் தஞ்சம் புகுந்தவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.” என்று கூறியதும், அவரவர்கள் வீடுகளுக்குள் இருந்து கொண்டார்கள்.
எந்த எதிர்ப்பும் இல்லாமல் இஸ்லாமிய படை மக்காவினுள் நுழைந்தது.
வீழ்த்தப்பட்ட இடத்தில் வீறு கொண்டு படை நுழைந்தது. பல ஆண்டுகள் ஊரை விட்டுப் போய், எத்தனை உயிர் சேதங்கள், எத்தனை துயரங்களையும், துன்பங்களையும் அனுபவித்து இருக்கிறார்கள். இந்த வெற்றியை அவர்கள் கொண்டாடும் விதமாக “லாயிலாஹ இல்லல்லாஹ் அல்லாஹு அக்பர்” என்ற முழக்கம் வானைப் பிளந்தது. வேறு எந்தப் படைகள் இப்படி நுழைந்து இருந்தாலும் எந்த அளவிற்கு அட்டூழியம் செய்திருப்பார்கள்? ஆனால் நபிகளார் உடனடியாக அவர்களை சத்தமிடுவதை நிறுத்தச் சொன்னார்கள்.
“உங்கள் இறைவன் செவிடனோ குருடனோ இல்லை. சத்தம் இல்லாமல் அவனுக்கு நன்றியை தெரிவியுங்கள்” என்று அவர்களுடைய ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் வெற்றி கையிலே கிடைத்தாலும், நபியவர்கள் அங்கே நுழைந்தபோது தனது தலையை கீழே தாழ்த்தியவாறு இறைவனுக்கு நன்றி சொல்லி உள்ளே நுழைந்தார்கள். ‘எப்பேர்பட்ட வெற்றி கிட்டினாலும் தலைக்கனம் கூடாது!’ என்று அங்கு இருக்கக்கூடிய அத்தனை கூட்டத்திற்கும் இதைச் செய்து காட்டினார்கள்.
உள்ளே நுழைந்து புனிதப் பள்ளியை ஏழு முறை சுற்றினார்கள், அதை சுத்தப்படுத்தினார்கள். மக்காவாசிகள் அனைவருக்கும் தெரிந்த அடிமை முகமான பிலால் ரலி அவர்களை மேலே ஏறி பாங்கு சொல்ல அழைத்தார்கள்.
இதுதான் மக்கா வெற்றியின் மிகப்பெரிய புரட்சி என்று சொல்லலாம். ஏனென்றால் இஸ்லாத்தை ஏற்ற முதல் அடிமை. தலை நிமிர்ந்து நடப்பதற்குக் கூட அனுமதி இல்லாமல் வைத்திருந்தார்கள். இந்த அடிமைகள் இறந்து விட்டால் அது தங்களுக்கு இழப்பாகிவிடும் என்று விற்பதற்கே முயற்சி செய்வார்கள். ஆடு மாட்டுக்கு இருக்கும் மதிப்பு தான் இவர்களுக்கும் தந்திருந்தார்கள். இந்த மக்களை தங்களின் புனித பள்ளியை தொடுவதற்கு கூட அனுமதிப்பதில்லை.
அப்படிப்பட்ட அந்தப் பள்ளியிலே பிலால் (ரலி) அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடியும் ஒவ்வொரு குரைஷிகளின் உள்ளங்களிலும் இருந்த ஏற்றத்தாழ்வுகளை மிதித்து நசுக்கியது.
ஆண்டான் அடிமை என்ற பாகுபாட்டை துடைத்தெறிந்த நாள் அது. நபி அவர்கள் “தனது வாழ்நாளிலேயே இந்த ஏற்றத்தாழ்வுகளை அரபு உலகில் ஒழித்து விட வேண்டும்! அங்கு இருக்கக்கூடிய மக்கள் ஒவ்வொருவரையும் தலை நிமிர்ந்து சுயமரியாதையுடன் வாழ வைக்க வேண்டும்” என்று நினைத்தார்கள். ஆகவே தான் அரபு உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மக்களையும் விடுதலை செய்ய முயற்சித்தார்கள்.
சிறுசிறு ஆட்சியாளர்கள், குறுநில மன்னர்களும், ஊருக்கு ஒரு அரசர்களாக இருந்துகொண்டு, அங்கு இருக்கக்கூடிய மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். அவர்களை எல்லாம் ரோம பேரரசும், பாரசீகப் பேரரசும் கட்டுப்படுத்தி தங்கள் காலனி நாடுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தன. இந்த அடிமைத்தனத்திலிருந்து அத்தனை மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள்.
முதலாவதாக மனிதனை அடிமையாக நடத்தும் அந்தப் பழக்கத்தை மக்காவாசிகளின் உள்ளத்தில் இருந்து அகற்ற நினைத்தார்கள். ஆகவேதான் அனைவருக்கும் தெரிந்த அடிமையாக இருந்த பிலால் (ரலி) அவர்களை ஒவ்வொரு சம்பவத்திலும் முன்னிலைப்படுத்தினார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.