உலக வரலாற்றிலேயே 9 ஆண்டுகள் ரயில் நிலையத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கிய முதல் பபூன் குரங்கு.
1800-களின் இறுதியில் தென் அமெரிக்காவின் கேப்டவுன் நகர ‘UITENHAGE’ என்கிற ரயில் நிலையத்தில் பாதுகாவலராக இருந்தவர் ஜேம்ஸ் வைட். இவருக்கு ஜம்பர் என்கிற இன்னொரு பெயரும் இருந்தது. ஓடுகிற ரெயிலில் இருந்து அடிக்கடி எகிறிக் குதித்து சாகசங்கள் செய்வதால் அவருக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. சில நேரங்களில் ஓடுகிற ரயிலில் இருந்து இன்னொரு ரயிலுக்குக் கூட பாய்ந்திருக்கிறார். அதுவே அவரது வாழ்க்கையைத் திருப்பிப் போடவும் காரணமாக அமைந்தது. 1877-ம் ஆண்டு ஜேம்ஸ் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கிக் கொள்கிறார். அந்த விபத்தில் அவரது இரண்டு கால்களும் பறிபோகின்றன.
விபத்துக்குப் பிறகு மீண்டு வருகிற ஜேம்ஸ் செயற்கை கால்கள் உதவியுடன் மீண்டும் பாதுகாவலர் பணியை தனக்குத் தருமாறு கேப்டவுன் ரெயில்வே நிர்வாகத்திடம் வேண்டுகிறார். ஜேம்ஸ் விபத்தில் சிக்கிய இடைப்பட்ட காலத்தில் வேறு யாரையும் நிர்வாகம் அங்கு பணியமர்த்தவில்லை. ஜேம்ஸ் இருந்த வீட்டுக்கும் ரயில்வே நிலையத்துக்கும் இடையே 500 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது. வீட்டுக்குச் சென்று வரச் சிறிய சக்கர நாற்காலி போன்ற டிராலி ஒன்றை அவர் பயன்படுத்தி வந்தார். கருணையின் அடிப்படையில் மீண்டும் அதே ரயில் நிலையத்தில் ஜேம்ஸ்க்கு வேலை கிடைக்கிறது. ரயில் நிலையத்தைப் பாதுகாப்பது, வந்து போகிற ரயில்களுக்கு சிக்னல் கொடுப்பது, பூங்காக்கள் அமைப்பது என தன்னால் இயன்ற வேலைகளைச் செய்கிறார். ஒரு நாள் அவர் இருந்த நகருக்குப் பக்கத்தில் இருந்த மார்க்கெட்டில் ஒருவர் அமர்ந்திருக்க அவரைப் வைத்து டிராலி ஒன்றைப் பபூன் குரங்கு தள்ளிக் கொண்டு வருவதைப் பார்க்கிறார். உடனே அதன் உரிமையாளரிடம் பபூன் குறித்து விசாரித்து அதை விலைக்கு வாங்கி விடுகிறார்.
விலைக்கு வாங்கிய பபூனுக்கு ஜாக் என்று பெயரிடுகிறார். வீட்டுக்கும் ரயில்வே நிலையத்துக்குமான தூரத்தை பபூன் உதவியுடன் கடக்கிறார். ஜேம்ஸ் டிராலியில் அமர்ந்து கொள்ள ஜாக் ட்ராலியை தள்ளிக் கொண்டு வருவதும் போவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதற்கிடையில் ஜேம்ஸ் செய்கிற வேலைகளை ஜாக் உள்வாங்க ஆரம்பிக்கிறது. ரயில்களுக்குச் சிக்னல் அளிப்பது, ட்ராக் மாற்றுவது என ஜேம்ஸின் எல்லா வேலைகளின் போதும் உடனிருந்து கவனிக்கிறது.
சிறிது நாட்களில் ஜாக் எளிதாக அந்த வேலைகளைச் செய்யவும் பழகியது. அதற்கு ஜேம்ஸ் சில பயிற்சிகளையும் கொடுத்திருந்தார். ட்ராக் மாற்றுவது, மற்றும் சிக்னல் வழங்கும் வேலைகளை ஜேம்ஸின் கட்டளைப்படி செய்து வர ஆரம்பித்தது. எந்த வேலையாக இருந்தாலும் ஜேம்ஸின் கட்டளை கிடைத்தால் மட்டுமே செய்யும் அளவுக்கு ஜாக் வளர்ந்திருந்தது.
ஜேம்ஸுக்கும், ஜாக்குக்குமான நெருக்கமும் உறவும் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு சிலருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஜாக்கின் சிக்னல் பணிகளைப் பார்க்கிற பெண் ஒருவர், அதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கிறார். முதலில் அவர்கள் நம்பவில்லை. நேரடியாக ரயில்வே நிலையத்துக்கு வந்து சோதனை செய்தனர். சோதனையில் ஜாக் பணிகளை மேற்கொள்வதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்கள். உடனடியாக இருவரையும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேற்றுகிறார்கள்.
ஆனால், ஜேம்ஸ் ஜாக் தனக்கு உதவியாகத்தான் இருக்கிறது, இதுவரை எந்த அசம்பாவிதங்களும் நிகழவில்லை, வேண்டுமானால் ஜாக்கை சோதனை செய்து பாருங்கள் என வேண்டுகோள் வைக்கிறார். ரயில்வே அதிகாரிகள் அதற்கு ஒப்புக்கொண்டு ஜாக்கை சோதனை செய்கிறார்கள். சோதனையில் ஜாக் வெற்றி பெறுகிறது. சோதனை செய்த அதிகாரிகள் ஜாக்கின் செயலால் ஆச்சர்யமடைகிறார்கள். ஜேம்ஸின் வேலை திரும்பக் கிடைக்கிறது. ஜாக்குக்கு சிக்னல் மேன் என்கிற பதவியும் சம்பளமும் கிடைக்கிறது. உலக வரலாற்றில் இப்போதுவரை ஜாக் பபூன் மட்டுமே ரயில்நிலைய பணியாளராக பணியாற்றியுள்ளது. ஒன்பது வருடங்கள் சம்பளத்துடன் பணியாற்றிய ஜாக் 1890-ம் ஆண்டு காசநோயால் இறந்து போனது.
அது சரி, அப்போது ஜாக்கின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஒரு நாளைக்கு 20 செண்டும், ஒரு வாரத்துக்கு அரை பாட்டில் பீரும்! அது மட்டுமின்றி தன் 9 வருடப் பணியில் ஜாக் ஒருமுறைகூட தவறு செய்யவில்லையாம்!
படத்துக்கும் பகிர்வுக்கும் நன்றி : திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
Leave a reply
You must be logged in to post a comment.