பரிவை சே.குமார்
கந்தர்வன் கதைகள்…
அவர் எழுதிய 62 சிறுகதைகளில் 61 கதைகளின் தொகுப்பு இது… ஒரு நாளைக்கு ஒரு கதையை வாசித்தாலும் இரண்டு மாதங்கள் வேண்டும். மொத்தமாய் சிறுகதைகளை வாசிப்பதும் சிலருக்கு அயற்சியைக் கொடுக்கும் என்பதே என் எண்ணம்.
இந்தப் புத்தகத்தில் ‘மானுட உண்மை’ என்னும் தலைப்பில் கந்தர்வனைப் பற்றி எழுதியிருக்கும் ஜெயமோகன், 1986-ல் சுந்தரராமசாமி ‘பூவுக்கு கீழே’ என்னும் கந்தர்வனின் தொகுப்பை வாசிக்கச் சொன்னதாகவும், கந்தர்வனின் கதையை வாசிப்பது அதுவே முதல் முறை என்பதால் அவ்வளவாக ஈர்க்கவில்லை… கதைகளின் மேல் மதிப்பும் உருவாகவில்லை என சுந்தரராமசமியிடம் சொன்னதும் ‘அவரை அவர் இருக்கிற சூழலில் வச்சிப் பார்க்கணும்… மார்க்ஸிஸ்டு கட்சிக்காரரான கந்தர்வன், வர்க்க வேறுபாடு, சுரண்டல், போராட்டம்ன்னு எழுதாம நுட்பமான விஷயங்களை எழுதுகிறார்… தமிழ்லே அது ஒரு பெரிய திரும்புமுனை’ என்று சொன்னாராம்.
அதன்பின் ஜெயமோகன் 1999-ல் ஒரு பேருந்து நிலையத்தில் வாங்கிய குமுதத்தில் கந்தர்வன் கதையை வாசித்ததாகவும், அது தன்னை வெகுவாகப் பாதித்ததாகவும் சொல்லி முழுக்கதையையும் சுருக்கமாக எழுதியும் இருக்கிறார். கதை குறித்துச் சொல்லும் போது ‘ஏதோ ஒரு உடம்பிலிருந்து வெட்டுப்பட்டு நம் பாதையில் கிடந்து அதிரும் உயிருள்ள தசைத்துண்டு போல இருந்தது அக்கதை’ என்கிறார். அதன் பின் அவரின் கதைகளை எல்லாம் தேடிப்பிடித்து வாசித்தபோது தமிழின் பெரும் கதைசொல்லி ஒருவரைக் கண்டு கொண்டேன் என்கிறார்.
கந்தர்வன் குறித்துக் ‘கல்தடம்’ என்ற தலைப்பில் எஸ்.ரா. எழுதியிருப்பதில் அவரின் ‘சாசனம்’ என்னும் புளியமரத்தைப் பற்றிய கதையில் எளிய மனிதர்களின் விட்டுக் கொடுத்தலையும் ஆவேசத்தையும் நுட்பமாகப் பதிவு செய்துள்ளது என்று சொல்லியிருக்கிறார்.
‘முன்னுரையாக’ என்னும் தலைப்பில் சூரிய சந்திரன், கந்தர்வனின் கடைசி உரையாடலை அப்படியே கொடுத்திருக்கிறார். இந்தக் கதைகளின் தொகுப்பாளரான பவா செல்லத்துரை, உங்கள் தேர்ந்தெடுத்த கதைகளை வம்சி புக்ஸூக்காக தொகுக்கப் போகிறேன் என்று கந்தர்வனிடம் சொன்னபோது ‘நான் சாவதற்குள் என் கதைகளின் அழகான தொகுப்பை என் கையில் கொடுடா’ என்றாராம்… ஆனால் புத்தகம் அவரின் இறப்புக்குப் பின்தான் வெளிவந்திருக்கிறது.
நான் வாசித்த வரையில் மரம், செடி, பூ, நாய் என எல்லாமே கதாபாத்திரங்களாய் வாழ்ந்திருக்கின்றன. எல்லாமே அன்றாட வாழ்க்கைக் கதைகள்தான்… யாருமே எடுக்காத, தினமும் நாம் கடந்து செல்லும் வாழ்க்கைப் பாதை நிகழ்வுகளைக் களமாக் எடுத்து மிகச் சிறப்பாக கதையை நகர்த்திச் செல்கிறார். ஒவ்வொரு கதையும் நம்மையும் பூவின் பின்னேயும் மரத்தின் பின்னேயும் பயணிக்க வைக்கிறது. மெல்ல நகழும் நடையில் ஒரு அழகு இருக்கிறது.
‘சீவன்’ என்னும் கதையில் பெரும் காற்றில் அரசமரம் சாயும் போது பைத்தியக்காரனைப் பிழைக்க வைத்து, ஊர்க்காவல் தெய்வமான முனியய்யாவைச் சல்லி சல்லியாக உடைத்து விடுகிறார்.
‘காடுவரை’ என்னும் கதை ஆங்கிலோ இந்தியனைக் கல்யாணம் செய்து கொண்ட விஜயலட்சுமி என்னும் ஐயங்கார் வீட்டுப் பெண்ணின் சாவின் பின்னான நிகழ்வுகளைப் பேசுகிறது.
பள்ளிக் குழந்தைகளுக்கு வேதம் சொல்லிக் கொடுத்து தங்கள் மதத்தைப் பரப்ப நினைக்கும் மரியம்மா டீச்சரைப் பற்றி வித்தியாசமாக கதை சொல்லிப் போகிறது ‘கதை’ என்ற தலைப்பிலிருக்கும் கதை.
இப்படித்தான் பூவுக்குக் கீழே, தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்பிரஸ், தனித்தனியாய் தாகம், அடுத்தது, மங்கலநாதர், மைதானத்து மரங்கள், அரண்மணை நாய் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் சுவராஸ்யமாய் வாசிக்க வைக்கின்றன.
இராமநாதபுரத்துக்காரர் என்பதால் எங்க பக்கத்து எழுத்து நடை… வாசிப்பவர்களை ஈர்க்கும் எழுத்து… என எல்லாக் கதைகளும் அதன் போக்கில் நம்மை ஈர்த்துக் கொள்கின்றன. இவரின் கதைகளில் கிராம மக்களின் எளிய வாழ்க்கைதான் நம் முன்னே விரிகின்றன.
‘காவடி’ என்ற பெரும் நாவல் எழுதும் அவரின் முனைப்பு, அவரின் மரணத்தால் நிறைவேறாமல் போய்விட்டது. இவரின் சனிப்பிணம் என்னும் முதல் சிறுகதை தாமரை இதழில் வெளியாகி பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது
இதில் இருக்கும் 61 கதைகளையும் பற்றி எழுத இன்னொரு சந்தர்ப்பம் அமையும் என்று நினைக்கிறேன்.
நன்றி : படம் இணையத்திலிருந்து.
Leave a reply
You must be logged in to post a comment.