(இத்தொடர் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் வெளிவரும்)
அத்தியாயம் – 9
நடந்தது:
தொழிலதிபர் தணிகாசலம் ஊட்டியில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க தனது விசாரணையைத் தொடங்கும் இன்ஸ்பெக்டர் சுகுமாரன், வேலைக்காரி முதல் அவரது வாரிசுகள் வரை விசாரிக்க எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறுகிறார்.
நடப்பது:
கையிலிருந்த மோதிரத்தை பார்த்துச் சிரித்தார் பொன்னம்பலம், அது பெண்கள் அணியும் விலை உயர்ந்த வைர மோதிரம்… தணிகாசலத்தின் கொலை விவரம் அறிந்து முதலில் சென்ற பொன்னம்பலம் இஞ்ச் பை இஞ்சாத் தேடித்தான் இதைக் கண்டுபிடித்தார். மனைவியிடம் கொடுத்து விட ஆசைதான்… இருந்தாலும் ஏனோ மனசு யோசித்தது… அதனாலேயே இரண்டு நாட்களாக பேண்ட் பாக்கெட்டில் வைத்து கொண்டு அலைகிறார். ‘இனி தடயம் கிடைக்குதா..? அதான் இருந்த ஒண்ணையும் நான் வச்சிருக்கேனே…’ என்று வாய்க்குள் முணுமுணுத்தார். ‘இதைக் கொடுத்தா கேசு முடியும்ன்னா கொடுக்கலாம்… ஆனா இது வெளியவே தெரியாமப் போயிருமே…’ என்று நினைத்தவரின் செல்போன் கூப்பிட்டது. அதை எடுத்துப் பார்த்தவர் சுகுமாரன் அழைக்கவும், வேகமாக பட்டனைப் பிரஸ் பண்ணி “என்ன சார்… சொல்லுங்க…” என்றார்.
“எங்கய்யா இருக்கே… வீட்டுக்குப் பொயிட்டியா என்ன…?”
“இல்ல சார்… ஸ்டேசன்லதான்… சொல்லுங்க…”
“நீ என்ன பண்றே…? அந்த லதாக்கிட்ட இப்பவே போயி விசாரிச்சிட்டு எனக்கு என்னன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போ…”
“அப்படி என்ன சார் அவசரம்…? நாளைக்குப் போகலாமே…”
“இல்ல நாளைக்குத்தான் எனக்கு கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்குன்னு சொன்னேனுல்ல….விசாரிச்சி முடிச்சிட்டா நாளைக்கு வேற வேலை பாக்கலாம்ல்ல… அதான் இன்னைக்கே முடிச்சிடு… இது தேவையில்லாத்துதான்… பட்… உன்னோட கருத்துக்கும் மதிப்பளிக்கணுமில்ல… ஏதாவது அவகிட்ட கிடைக்கிதான்னு பார்க்கலாம்…. என்ன சரியா?”
“சரிதான் சார்… காலையில இருந்து அலையிறேன்… எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா? இங்கயும் கொஞ்சம் வேலை இருக்கு… நாளைக்குப் போறேன் சார்…” என்றபடி அவனின் பதிலைக் கேட்காமல் போனைக் கட் பண்ணினார்.
“வாங்க சார்… என்ன சார்…?” பயத்தோடு கேட்டாள் லதா, அவள் கணவனும் இருந்தான்.
“சும்மாதான்… உங்க ஐயா கொலையில சில தடயம் கிடைச்சிருக்கு அதான் உங்கிட்ட விசாரிச்சிட்டுப் போகலாம்ன்னு வந்தேன்…”
“எ… என்ன… தடயம் சா… சா….ர்…. அதுதான்…. எ…ல்லாம் சொ…ல்…லிட்டேனே…” பயம் கலந்த பதட்டத்தோடு கேட்டாள்.
“எதுக்கு பயப்படுறே..? ஆமா உங்க ஐயாவுக்கு அன்னைக்கு ராத்திரி நீதானே சாப்பாடு கொடுத்தே…?”
“ஆ…ஆமா…”
“என்ன மருந்து கலந்து கொடுத்தே…?”
“மருந்தா… நானா… என்ன சார் சொல்றீங்க… நா எதுக்கு கொடுக்கணும்…?”
“எதுக்கு கொடுத்தேன்னு நீதான் சொல்லணும்…”
“என்ன சார் மிரட்டுறீங்க… பெரிய இடத்து கொலையில எங்களை பலிகடா ஆக்கப் பாக்குறீங்களா?” அவளின் கணவன் வேகமாகக் கேட்டான்.
“என்னடா குரலை உயர்த்துறே… பொத்திக்கிட்டு உக்காரு… ஸ்டேசனுக்கு இழுத்துக்கிட்டுப் போனா விசாரிக்கிற விதமே வேற தெரியுமா… உம்பொண்டாட்டி உடம்புல ஒட்டுத்துணி இல்லாம விசாரிப்போம்… கூட்டிக்கிட்டு போகவா…”
“சா….சார்…”
“பேசாம உக்காரடா…” என்று உறுமிவிட்டு “நீ கேக்குறதுக்கு சரியான பதிலைச் சொல்லு… என்ன இல்லேன்னா ஸ்டேசனுக்குத்தான் வர்ற மாதிரி இருக்கும்…” என்றார் லதாவிடம்.
“சொ… சொல்…றேன்… சார்…” என்ற லதா, உலர்ந்த உதடுகளை நாக்கால் ஈரப்படுத்திக் கொண்டாள். அதற்குள் பக்கத்து வீட்டு ஆட்கள் எல்லாம் கூடிவிட “இங்க ஒண்ணும் யாரும் அவுத்துப் போட்டுக்கிட்ட ஆடலை… வாயத் தொறந்துக்கிட்டு வந்து நிக்க… இவ மொதலாளியை யாரோ கொலை பண்ணியிருக்காக அதான் விசாரிக்க வந்திருக்கேன்… எல்லாரும் போயி அவுக அவுக வேலையைப் பாருங்க…” என்று கத்திவிட்டு, “இங்க பாரு லதா… உனக்கு விவரம் தெரிஞ்சா சொல்லு… நீ பண்ணுனேன்னு சொல்ல வரலை… ஆனா யாருக்கோ உதவியிருக்கேன்னு சந்தேகம் இருக்கு…” என்றார் சற்றே கடுமையுடன்.
“சார்… சத்தியமா எனக்கு ஒண்ணுந் தெரியாது…”
“அப்ப எப்படி சாப்பாட்டுல மயக்க மருந்து கலந்துச்சு…”
“அதான் எனக்கும் புரியலை… ஆனா…”
“என்ன ஆனா… சொல்லு…”
“ஐயா படுக்கப் போகுமுன்னால ஒரு டானிக் சாப்பிடுவாங்க… அது அவருக்குன்னே ஸ்பெஷலா மதுரையில நாட்டு மருந்துக்கடையில தயார்ப்பண்றதுன்னு ரெத்தினண்ணன் சொல்லியிருக்கு… அதைச் சாப்பிட்டா தூக்கம் நல்லா வரும்ன்னு ஐயா சொல்லுவாங்கன்னு அண்ணன் சொல்லியிருக்கு…”
“ம்…” என்றவர் ‘அட என்னடா இது புஸ்ஸூன்னு போச்சு’ என்று நினைத்துக் கொண்டே, “அப்ப அதுல யாரோ மருந்து கலந்திருக்காக… நீ இல்லை அப்படித்தானே…?”
“சத்தியமா… ஏம் புள்ள மேல சத்தியமா எனக்குத் தெரியாது…” பதட்டம் குறைந்து தெளிவாய்ப் பேசினாள்.
“ம்… சரி அங்க ஒரு வைர மோதிரம் கிடைச்சிருக்கு… சார்க்கிட்ட இருக்கு… உனக்கு ஏதாவது அதைப் பற்றி தெரியுமா..?” மெதுவாக பிட்டைப் போட்டார்.
“ம்… வைர மோதிரம்….? ஐயா கையில கூட ஒண்ணு இருக்குமே…?”
“அதான் இருந்துச்சே… அது இல்ல… இது லேடீஸ் மோதிரம்… வித்தியாசமாய் வைரக்கல் பதிச்சி… பாக்க…. அதை எப்படி சொல்றது…? ம்…” சொல்ல வராதது போல் நடித்தார்.
“அன்னப்பட்சி மாதிரியா சார்…?” லதா கண்கள் விரியக் கேட்டாள்.
“எஸ்… அதே… அதேதான்… நீ பாத்திருக்கியா..?”
“ஆமா சார்… அது எங்க தர்ஷிகா அம்மா போட்டிருப்பாங்க… இங்க வர்றப்போ நான் பாத்திருக்கேன்… நானும் அவுகளும் போன்ல போட்டோ எடுத்திருக்கோம்… அதுல கூட இருக்கும்… இருங்க காட்டுறேன்…” என்றபடி தனது மொபைலில் போட்டோவைத் தேடி எடுத்துக் காட்டினாள்.
அதில் லதாவின் தோளில் தனது வலது கையைப் போட்டபடி சிரித்துக் கொண்டு நின்றாள் தர்ஷிகா. அவளது விரல்களைப் பெரிதுபடுத்திப் பார்த்த பொன்னம்பலம் அதிர்ந்தார்.
அவளின் கையில்…
அதே வைர மோதிரம்.
(புதன்கிழமை – விசாரணை தொடரும்)