வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15
————————————————–
மிகப் பிரபலமான அந்த உரையின் சில…
“மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.”
“மக்களே! இந்த ஹஜ் மாதத்தையும், இந்த அரபாவுடைய நாளையும், இந்த மக்கா நகரையும் நீங்கள் எப்படி புனிதமாக கருதுகிறீர்களோ! அதே போல உங்களில் இன்னொருவரின் உயிரையும், மானத்தையும், பொருளாதாரத்தையும் புனிதமாக கருதுங்கள்”.
“அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன்”.
“மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை”.
“பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்விடம் திருப்பி தரும் வாக்குறுதியுடன் (அமானிதமாக) அவர்களை நீங்கள் மனைவியராக அடைந்திருக்கிறீர்கள்”.
இப்படி மிக நீண்ட உரையை மக்களுக்குச் செய்து விட்டு “இம்மார்க்கம் இன்றோடு முழுமையடைந்து விட்டது” என்ற குர்ஆன் வசனத்தை அங்கே மொழிந்தார்கள்.
நபியவர்கள் மரணம்:
நபியவர்கள் ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு இறுதி ஹஜ்ஜிக்கு போய்த் திரும்பிய சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டார்கள். மரணத்திற்கு முன் ஐந்து நாட்கள் கடும் ஜுரம். 63வது வயதில் மரணித்தார்கள்.
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். இறைவனிடம் இருந்து வந்தது மீண்டும் இறைவனிடமே சென்று விடும்”. 2:156 அல்குர்ஆன்.
இந்த 23 ஆண்டுகளில் நபிகளார் அந்த மக்களுக்கு ஒன்று விடாமல் விளக்கியிருந்தார்கள். இந்த அளவிற்கு வேறு எந்த தலைவர்களும் எந்த மார்க்கமும் மக்களுக்கு விளக்கியது இல்லை! கற்றுக் கொடுத்ததும் இல்லை!
1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிக சிறந்த நாகரீக மனிதர்களாக அந்த மக்கள் இருந்தார்கள். அதற்கு காரணம் நபியவர்கள். “ஒரு நாளைக்கு ஐந்து முறை கை, கால், முகங்களை கழுக வேண்டும், வாரத்தில் வெள்ளிக்கிழமையாவது குளித்து விட வேண்டும், 40 நாட்களை மிகாமல் மறைவுப் பகுதியில் இருக்கக்கூடிய முடிகளை அகற்ற வேண்டும்”.
“எதைச் செய்தாலும் முதலில் வலது பக்கமாக செய்யுங்கள், தலை முடிகளை வைத்திருப்பவர்கள் தலையை வாரி சரி செய்து வைக்க வேண்டும்! நறுமணங்களை பூசிக் கொள்ளுங்கள்”.
“மலத்தைப் போலவே ஜலமும் அசுத்தம் அதையும் கழுக வேண்டும். மூக்கினுள் நீர் செலுத்தி கழுக வேண்டும் அதேபோல் காது ஓரங்களையும் கழுகுங்கள்”.
“வலது கையால் உண்ணுங்கள் பருகுங்கள், உணவை வீன் விரையம் செய்யாதீர்கள். எதிலும் இறையச்சத்தோடு நீதமாக நடந்து கொள்ளுங்கள்”.
“பிறருக்கு உதவுவது தான் ஒரு முஸ்லிம் என்பவனின் கடமை. நீங்கள் சம்பாதிப்பதில் நாற்பதில் ஒன்று உங்களோடது இல்லை அது ஏழைகளின் பங்கு”.
“சொந்தம், பந்தம், அக்கம் பக்கத்து வீடு, முதலாளி, தொழிலாளி, தலைவர், தொண்டன், அம்மா, அப்பா, மகன், மகள், சகோதரன், சகோதரி என்று நீங்கள் எதுவாக இருக்குறீர்களோ! அதைச் சரியாக செய்தீர்களா? என்று விசாரிக்கப் படுவீர்கள்”.
இப்படி, பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லித் தராத எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகளை 23 ஆண்டுகளில் அந்த மக்களுக்கு கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல சொல்லியும், செய்தும் காட்டி கற்றுக் கொடுத்தார்கள்.
ஆகவேதான் தங்கள் உயிருக்கும் மேலாக நபிகள் நாயத்தை இச்சமூகம் மதிக்கிறது.
‘விடிந்தால் நபிகள் நாயகத்தோடு தாங்கள் பயணிக்க வேண்டும்’ என்பதற்காக உமர் ரலி போன்ற தோழர்கள் தொழிலுக்கு செல்லும் பொழுது, இரண்டு பேர்கள் முறை வைத்து ‘ஒரு நாள் ஒருவரும் இன்னொரு நாள் இன்னொருவரும்’ நபிகள் நாயகத்தோடு இருக்க வேண்டும். தொழிலுக்குச் சென்றவர்களுக்கு நபிகள் சொன்னதையும் செய்ததையும் எடுத்து சொல்ல வேண்டும். என்று தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டார்கள்.
இப்படி இருந்த அம்மக்கள் “நபி அவர்கள் மரணித்து விட்டார்கள்” என்பதை உடனடியாக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்கள். பல கருத்துக்கள் அங்கே நிலவியது.
“மரணிக்கவில்லை! ஆழ்ந்து இருக்கிறார்கள். மீண்டும் எழுவார்கள்” என்றார்கள். எப்படி இந்த இழப்பை ஏற்றுக் கொள்வார்கள்?
அப்போது தூரத்தில் இருந்து வந்த அபூபக்கர் (ரலி) அவர்கள், யாரிடமும் பேசாமல் நேராக நபிகளாரை படுக்க வைத்திருந்த இடத்திற்கு வந்தார்கள். தனது நபியை, உற்ற நண்பரின் தலையைத் தூக்கி நெற்றியில் முத்தம் கொடுத்தார்கள். பிறகு சொன்னார்கள் “நீங்கள் உயிரோடு இருக்கும் போதும் வாசனையாக இருந்தீர்கள். இறந்தப் பிறகும் வாசனையோடு இருக்குறீர்கள்”. என்று கூறினார்கள். குடும்பத்தார்களுக்கு புரிந்து விட்டது.
பிறகு வெளியே வந்து கொந்தளிப்பில் இருந்த மக்களிடத்தில் சொன்னார்கள்… “யார் முகமதை வணங்குகிறீர்களோ கேட்டுக் கொள்ளுங்கள் அவர் மரணித்து விட்டார்”. என்று கூறிவிட்டு…
“மரணிக்காதவன் இறைவன் ஒருவனே முஹம்மத் இறைத்தூதர் தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்று விட்டனர். அவர் மரணித்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் நீங்கள் பழைய பாதைக்கே திரும்பிச் சென்று விடுவீர்களா?” என்ற குர்ஆனின் வாசகத்தை மொழிந்தார்கள். அதைக் கேட்டதும் மக்கள் உடனடியாக அதற்கு கட்டுப்பட்டு அமைதியானார்கள்.
அதற்குப் பிறகு நபியவர்களின் பழைய ஆடையைக் கொண்டு கபன் இடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி நபிகளார் நோய்வாய்ப்பட்டு இருக்கும் போது ஏற்கனவே அபூபக்கர் ரலி அவர்களிடம் சொல்லி இருந்தார்கள். அவர்கள் உடுத்தி இருந்த அந்த ஆடையில் கறை இருந்தது.
“அதை கழுவி விட்டு இதிலேயே என்னை கபனிட்டு விடுங்கள்” என்றார்கள்.
அதற்கு அபூபக்கர் ரலி அவர்கள் “புதிய ஆடை கொண்டு கபனிடுவோம்” என்றார்கள்.
அதற்கு நபியவர்கள் “புதிய ஆடை உயிரோடு இருப்பவனுக்குத்தான் சொந்தம். அடக்கம் செய்து உடலில் இருந்து சீழ் வரக்கூடிய உடலுக்கு எதற்குப் புதிய ஆடை?” என்று கேட்டார்கள்.
ஆகவே அவர்கள் கூறியதின் அடிப்படையில் அவர்கள் உடுத்தி இருந்த ஆடையைக் கொண்டே கபனிடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்.