வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
————————————————–
அற்புதமான விவாதங்கள் கொண்ட ஹுதைபியா உடன்படிக்கையின் சம்பவங்கள் அத்தனை சுவாரசியங்கள் நிறைந்தது. கடைசியாக இரு தரப்பிற்கும் இடையில் ஒரு பத்தாண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதில் முக்கியமாக இரண்டு ஒப்பந்தங்கள் இருந்தது.
முதலாவது ஒப்பந்தமாக, மக்காவிலிருந்து யாராவது முஸ்லிமாக மாறி மதினாவிற்கு வந்தால் நீங்கள் அவர்களை எங்களிடம் திருப்பி தர வேண்டும்! அதேபோல மதினாவில் இருந்து யாராவது மக்காவிற்கு வர விரும்பினால் அவர்களை நீங்கள் அனுப்ப வேண்டும் என்பதாகும். இது ஒரு அநியாயமான கோரிக்கையாக இருந்தாலும் நபி அவர்களுக்குத்தான் தெரியும் இது எந்த அளவிற்கு நன்மையாக முடியும் என்று. ஆகவே அதற்கு ஒத்துக் கொண்டார்கள்.
இரண்டாவது ஒப்பந்தமாக, மக்காவை சுற்றி இருக்கக்கூடிய கோத்திரத்தார் முஸ்லிம்களோடு சேர விரும்பினால் அவர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள். குறைஷிகளோடு சேர விரும்பினால் அவர்கள் அவர்களோடு சேர்ந்தவர்கள். ஆகவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு யாரும் சண்டை இடக்கூடாது என்பதாகும். இந்த இரண்டாவது ஒப்பந்தமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மக்காவிற்கு அருகாமையில் இருந்த இரண்டு கோத்திரத்தார் குஸாஆ மற்றும் பக்ர். இவர்கள் எதிரும் புதிருமாக சண்டை போட்டு கொண்டு இருந்தவர்கள். இவர்களில் குஸாஆ கோத்திரத்தார் நபிகளாருடனும் பக்ர் கோத்திரத்தார் குரைஷிகளுடனும் சேர்ந்தார்கள்.
ஒப்பந்தத்தை எழுதும் பொழுது முஹம்மது நபி ஆகிய நான் என்று எழுதினார்கள். ஆனால் எதிரிகளோ உங்களை நபியாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே வெறும் முஹம்மது என்று தான் நீங்கள் எழுத வேண்டும் என்றார்கள். இந்த கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த அலி (ரலி) அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். உடனே நபியவர்கள் “பரவாயில்லை அதை அடித்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
ஆனாலும் அலி (ரலி) அவர்கள் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். உடனே நபி அவர்கள் “அந்த வாசகம் எங்கே இருக்கிறது?” என்று கேட்டு தன் கைப்பட ‘நபி’ என்று எழுதி இருந்ததை அழித்தார்கள். ஆம் நபி என்று எழுதியதைக் கூட படிக்கத் தெரியாதவர்களாக நபியவர்கள் இருந்தார்கள்.
பேச்சுவார்த்தை தொடக்கத்தில் எதிரிகள்… ‘முகமதே நீங்கள் யாரை அழைத்து வந்திருக்கிறீர்கள்? அவுஸ் கஸ்ரஜ் கோத்திரத்தோடவா சேர்ந்து வருவது?’ என்று எதிர்த்தார்கள்.
நபியவர்கள் மக்காவில் பிரச்சாரம் ஆரம்பித்து கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்கள் இன்னும் இந்த சாதிவெறியைக் கைவிடவே இல்லை. அந்தச் சொல்லை அத்தனைப் பேரும் சேர்ந்து எதிர்த்தார்கள்.
ஒரு வழியாகப் போரைத் தவிர்த்து நபியவர்கள் தங்களது பயணத்தை ஹுதைபியாவிலேயே முடித்துக் கொண்டார்கள். ஆனால் இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் மிகப்பெரிய ஒரு வெற்றியை இறைவன் வைத்திருந்தான்.
அநியாயமாக குறைஷிகள் நடந்து கொண்டார்கள் என்று மக்காவிலேயே நபிகளாருக்கு மிகப்பெரிய ஆதரவு கிளம்பியது. அது மட்டுமல்லாமல் இஸ்லாத்திற்கு மாறியவர்கள் மதினாவிற்கு போக முடியாமலும், குறைஷிகள் கொடுத்த தண்டனைகளையும், கொடுமைகளையும், தாங்க முடியாமல் தப்பிச்சென்று மக்காவிலிருந்து சிரியா செல்லும் வழியில் குடியேறினார்கள்.
நாளடைவில் அதுவே மிகப்பெரிய சோதனையாக குறைஷிகளுக்கு மாறியது. குறைஷிகள் மக்காவை விட்டு சிரியா பயணிக்க முடியவில்லை. இவர்களால் பாதிக்கப்பட்ட அவர்கள் அங்கே வாள் ஏந்தி நின்று கொண்டிருந்தார்கள். மிகப்பெரிய தொழில் இழப்பு மக்கா வாசிகளுக்கு ஏற்பட்டது. குறைஷிகளுக்கு வேற வழியே தெரியவில்லை. நபியவர்களிடம் போய் நின்றார்கள்.
“நாங்கள் போட்ட எங்களது ஒப்பந்தங்களில் ஒன்றை முறித்துக் கொள்கிறோம். முஸ்லிம்களாக மாறியவர்களை மதீனாவிற்கு தயவு செய்து அழைத்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சி நின்றார்கள்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்.