வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
————————————————–
மூத்தா போர்
ஹிஜ்ரி 7, 8 ஆம் ஆண்டுகளில் நபிகளார் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கும் மன்னர்களுக்கும் இஸ்லாத்தைச் சொல்லிக் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.
கடிதம் கொண்டு சென்ற தூதுவர்கள் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிச் சென்றார்கள். அப்பொழுதே இந்தியாவிற்குள்ளும் வந்து விட்டார்கள்.
அதேபோல ஷாமை ( சிரியா, ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீன், லெபனான், ஈராக்கின் ஒரு பகுதி, சைப்ரஸ் தீவு) ஆட்சி செய்து கொண்டிருந்த ஹெர்கல் மன்னரின் ஆளுநருக்கு ஹாரிஸ் இப்னு உமைர் ரலி அவர்கள் கடிதம் கொண்டு சென்றார்கள். ஆனால் அங்கிருந்த ஆளுநர் வந்த தூதுவரை இன்றைய ஜோர்டானில் இருக்கக்கூடிய மூத்தா என்ற இடத்தில் வைத்து கொலை செய்து விட்டார்.
தூதுவர்களைக் கொல்லக்கூடாது என்ற சட்டத்தை மீறி கடிதம் கொண்டு சென்ற தூதுவரைக் கொலை செய்த ஆளுநருக்கு பாடம் புகட்ட வேண்டும்! உலக நீதியை நிலைநாட்ட அவருக்கு எதிராகப் போர் தொடுப்பது பற்றி தோழர்களுடன் ஆலோசித்து இறுதியாக “அவர்களின் மீது போர்த் தொடுக்க வேண்டும்!” என்ற முடிவுக்கு வந்தார்கள்.
ஒரு சிறிய கூட்டம் வல்லரசுக்கு எதிராக தீர்மானம் எடுப்பது என்பதெல்லாம் சினிமாக்களில் மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் நபிகளார் உருவாக்கிய இந்தப் படை போல் இதுவரை யாருமே உருவாக்கியதில்லை! நபிகளார் சொன்னார்கள் என்றால்… “எதிரி யார்? அவருடைய பலம் என்ன? எத்தனை பேர் இருப்பார்கள்?” என்பதையெல்லாம் கவலைப்படவே மாட்டார்கள்.
மரணிக்கப் போகிறோம், என்ற எண்ணத்தோடயே போவார்கள். “முடிந்தால் வெற்றி, மரணித்தாலும் வெற்றி” என்ற முடிவோடு செல்வார்கள். அப்படிப்பட்ட போர் வீரர்களை உலகம் இதுநாள் வரைக்கும் கண்டதில்லை.
சுமார் 3000 பேர்கள் கொண்ட படை கிபி 629ம் ஆண்டு ஹிஜ்ரி 8, ஹாரிஸ் இப்னு உமைர் ரலி கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் எதிரிகளை சந்திக்க வேண்டும் என்று கிளம்பியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் எதிரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம்! உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக இருந்த ரோமப் பேரரசை எதிர்க்க இறைத்தூதரால் மட்டும்தான் முடியும்.
நபிகளாரின் வளர்ப்பு மகனாக இருந்த ஜைது பின் ஹாரிஸாவின் தலைமையில் படை கிளம்பியது.(ஜைது பின் ஹாரிஸா சிறுவனாக இருக்கும் போது பிடித்து வந்து சந்தையில் அடிமையாக விற்று விட்டார்கள். அவரை வாங்கியது, நபிகளாரின் மனைவி கதீஜா ரலி அவர்கள். இது மக்காவில் இஸ்லாம் வருவதற்கு முன் நடந்தது.) சரியாக மூத்தா என்ற இடத்தில் இரண்டு படைகளும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டது.
“தான் வல்லரசு” என்ற செறுக்கில் இருந்த ஹிருக்கல் மன்னரின் படை ஆக்ரோஷமாக சண்டையிட்டது.
போர் உக்கிரத்தில் இருந்த போது ஜைது பின் ஹாரிஸா வீரமரணம் அடைகிறார்கள்.
உடனடியாக அந்த இடத்தில் அடுத்த தளபதியாக பொறுப்பேற்கிறார்கள் நபிகளாரின் சித்தப்பா மகன் ஜாபர் ரலி அவர்கள். சற்று நேரத்தில் அவர்களும் கொல்லப்படுகிறார்கள். மூன்றாவதாக படைத் தளபதி ஆகிறார்கள் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா அவர்கள்.
ரோமப் பேரரசின் படைகளுக்கு இது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது முதல் முறை அவர்கள் பார்ப்பது. ஒரு சண்டையில் தளபதி வீழ்த்தப்பட்டால் உடனடியாக அந்தப் படைத் தோல்வி அடைந்து விடும். ஆனால் இங்கு நடப்பதே வேறு ஒருத்தர் மாற்றி ஒருத்தர் கொடியை ஏந்தி முன்னுக்கு வருகிறார்கள். அதுவும் மரணத்திற்கு ஆசைப்பட்டு வருகிறார்கள்! மூன்றாவதாக அப்துல்லாஹ் அவர்களும் கொல்லப்படுகிறார்.
நன்றி : படம் இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.