வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
————————————————–
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7
அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
————————————————–
ஒரு வெள்ளிக்கிழமை மக்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கும் பொழுது பிலால் ரலி அவர்களை நிறுத்தி வைத்து, அவர்களின் தோலின் மீது கைகளை போட்டு அவர்கள் மீது சாய்ந்து நின்று கொண்டு அந்த மக்களிடையே உபதேசம் செய்தார்கள். ஒரு உயர் குலத்தின் மிக உயர்ந்த குடும்பத்தில் உறுப்பினராக இருந்த நபிகளார் எல்லோராலும் அறியப்பட்ட அந்த அடிமையின் மீது சாய்ந்து நின்றது மிகப்பெரிய ஒரு புரட்சி.
அதே போல் ஒருமுறை அபூதர் அல் கிஃபாரி (ரலி) என்ற நபித்தோழர் பிலால் ரலி அவர்களை பார்த்து “யாஇப்னு அஸ்வத்தா” (கருப்பியின் மகனே) என்று கூறி விட்டார்கள். இந்த செய்தி நபியவர்களுக்கு சென்றதும் அபூதர் அல் கிஃபாரி அவர்களை கூப்பிட்டு,
“நீங்கள் அறியாமைக் காலத்து மனிதராக இருக்கிறீர்கள்” என்று கண்டித்தார்கள். உடனடியாக ஓடிச் சென்ற அந்த தோழர் பிலால் ரலி அவர்களுக்கு கீழே படுத்துக் கொண்டு “என் முகத்திலே உங்கள் காலை வைத்து மிதித்து விடுங்கள். நான் தவறு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்” என்று மன்றாடினார்.
பிலால் ரலி அவர்கள் அவரை தூக்கி நிறுத்தி வைத்து அவரை கட்டி அணைத்துக் கொண்டார்கள். உயர் ஜாதி என்று கருதப்பட்ட ஒருவரும் அவருக்கு அடிமையாக இருந்த ஒருவரும் கட்டி அணைக்கும் சம்பவங்கள் நபிகளார் காலத்திலேயே நடந்து முடிந்தது.
அதுபோல மக்காவை வெற்றி கொண்டப்போது மூன்று பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். “குறைஷிகளின் தலைவரை அப்படியே விட்டு விடக் கூடாது” என்று.
அப்பொழுது அவர்களிடம் முதலாவது கலீபா அபூபக்கர் (ரலி) அவர்கள் “யாரை கொல்ல சொல்கிறீர்கள்? அபுசுப்யான் எவ்வளவு பெரிய தலைவர்! இதை இப்போதே நபிகளாரிடம் சொல்லி விடுகிறேன்” என்று கோபமாக கூறிவிட்டு, நபியவர்களிடமும் முறையிட்டார்கள்.
உடனே நபியவர்கள் கேட்டார்கள் “அந்த மூவரையும் நீங்கள் கோபப்படுத்தி விட்டீர்களா?”
அபூபக்கர் ரலி அவர்கள் எதுவும் பேசவில்லை.
நபிகளார் சொன்னார்கள் “அப்படி அவர்களை கோபப்படுத்தி இருந்தால் நீங்கள் அல்லாஹ்வை கோபப்படுத்தியதற்கு சமம்” என்றார்கள்.
அதைக் கேட்டதும் அபூபக்கர் ரலி அவர்கள் அங்கிருந்து ஓடி சென்றார்கள் அந்த மூவரிடமும். “நான் உங்களை கோபப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் சகோதர்களே” என்று மன்றாடினார்கள்.
அந்த மூவரில் ஒருவர் பிலால் ரலி அவர்கள். பிலால் அவர்களை முதலாளி கொடுமைப்படுத்திய போது முதலாளியிடம் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி அவரை விடுதலை செய்தது அபுபக்கர் (ரலி) அவர்கள். அவரை மட்டுமல்ல பல அடிமைகளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்தது அபூபக்கர் (ரலி) அவர்கள் தான். ஆனால் நபிகளார் கோபப்பட்டார்கள் என்றால் அதை தாங்கி கொள்ள அவர்களால் முடியாது.
இப்படி முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் ஆண்டான், அடிமை என்ற பாகுபாடு இல்லாமல் அம்மக்களை சகோதரர்களாக மாற்றி அமைத்தார்கள். அதோட நில்லாமல் “யாருடைய உள்ளத்தில் ஒரு கடுகளவு பெருமை இருக்கிறதோ! அவர் சொர்க்கம் செல்ல முடியாது” என்று சொன்னார்கள்.
ஒரு மனிதன் துவைக்கப்படாத அழுக்கான ஆடைகளை உடுத்தி அது துர்நாற்றம் வீசும் பொழுது முகம் சுழிப்போம். அதேபோல ஒருவன் மது அருந்திவிட்டு அவன் செய்யக்கூடிய செயல்கள் அருவருப்பாக இருக்கும். அல்லது ஒருவன் பேசக்கூடிய வார்த்தைகள் அருவருப்பாக இருக்கும்.
ஆனால் ஒரு மனிதனின் பிறப்பைச் சொல்லி அவனை அருவருப்பாக தீண்டத்தகாதவனாகப் பார்ப்பதை தான் நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள்.
முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல பிற சமூக மக்களாக இருந்தாலும் அவர்களுக்கும் சமமான நீதியை வழங்கினார்கள். குற்றம் செய்தவர்கள் முஸ்லிம்களாக இருந்து பாதிப்படைந்தவர்கள் வேறு மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பாகுபாடு இல்லாமல் தண்டனையை வழங்கினார்கள் அதற்கு பல்வேறு விதமான சம்பவங்கள் இருக்கின்றன.
ஒருமுறை ஒரு யூதருடைய பிணம் எடுத்துச் செல்லப்படுகிறது. நபிகளார் அமர்ந்திருக்கக் கூடிய இடத்தை கடந்து செல்கிறது நபிகளார் அவர்கள் அந்த இடத்தை கடக்கும் வரை எழுந்து நின்றார்கள்.
அங்கிருந்த தோழர்கள் “அது முஸ்லிமுடையது இல்லை ஒரு யூதருடையது” என்று எடுத்துச் சொல்கிறார்கள்.
அதற்கு நபி அவர்கள் “யாருடையதாக இருந்தால் என்ன? அது ஒரு மனிதருடைய உடல் இல்லையா?” என்று கேட்டார்கள்.
மனிதன்; ஜாதி, இனம், நிறம், மொழி, ஊர், வீடு, செல்வம், பட்டம் என்று ஏதோ ஒன்றை பெருமையாக கருதிக்கொண்டு, மனதில் அதை சுமந்து அதன் விளைவால் பலருடைய மனதையும் காயப்படுத்தி, மற்றவர்களை சிறுமைப்படுத்தி, மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அரவணைத்து சந்தோஷமாக தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டியவன், அதையெல்லாம் விடுத்து ஏற்றத்தாழ்வுகளை சுமந்துக் கொண்டு தானும் வாழாமல் பிறரையும் வாழ விடாமல் அலைந்து கொண்டிருப்பதை இன்றளவும் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
சட்டத்தை இயற்றி கட்டுப்பட மக்களை கட்டாயப்படுத்தலாம் ஆனால் அவர்கள் உள்ளங்கள் அதை ஏற்றுக் கொள்ளாது. எந்த தீண்டாமைச் சட்டமும் பயன் தரவில்லை இன்று வரை. ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் இரு மக்களுடைய உள்ளங்களில் இருந்தும் அந்த வேற்றுமை களைந்தார்கள் அவர்களுக்குள் மனதளவில் ஒற்றுமையை ஏற்படுத்தினார்கள்.
காபாவை சுத்தம் செய்யும் பணிகள் எல்லாம் முடிந்ததும் நபிகளார் அங்கிருந்த ஒரு குன்றின் மீது அமர்ந்தார்கள். அவர்களுக்கு முன்பாக மக்காவின் மக்கள் அனைவரும் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள்.
பொதுவாக அன்றைய காலகட்டத்தில் போர்களில் பிடித்து வருபவர்களும், சரணடைபவர்களும் அடிமைகள் என்று அழைக்கப்பட்டார்கள். வெற்றி பெற்றவர்கள் அவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.
அன்றைக்குச் சிறைச்சாலை கிடையாது, அடைத்து வைத்து பராமரித்து உணவு கொடுப்பதற்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே பிடிபட்டவர்களை பணம் வாங்கிக் கொண்டு விடுதலை செய்வார்கள் அல்லது சந்தைகளில் விற்று விடுவார்கள். ஆபத்து என்று தெரிந்தவர்களைக் கொன்று விடுவார்கள் அல்லது அடிமையாக்கி கொள்வார்கள். இது தான் அன்றைய எழுதப்படாத சட்டம்.
“அடித்து விரட்டி விட்டோம் இனி முகமது தலை எடுப்பதற்கு வாய்ப்பே இல்லை” என்றவர்கள், கடந்த ஆண்டு மக்காவிற்குள்ளேயே வரக்கூடாது! என்று சொன்னவர்கள், வந்தவர்களை திருப்பி அனுப்பியவர்கள்,
இப்போது தனக்கு முன்பாக தலைகுனிந்து நிற்கும் அவலத்தைப் பார்க்கிறார்கள். ஏனென்றால் வரலாற்றில் இதற்கு முன்பாக குறைஷிகள் இப்படி தலை குனிந்து நின்றதே கிடையாது. வேறு ஒரு தலைவராக இருந்தால் அந்த இடத்தில் எப்படி கொக்கறித்து இருப்பார்?
குறைஷிகளும் “தங்களுக்கு என்ன தண்டனை வழங்கப் போகிறார்?” என்ற பயத்தோடு நிற்கிறார்கள். சற்று நேரம் அமைதியாக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபிகளார் அம்மக்களைப் பார்த்து கேட்டார்கள்… “நான் என்ன தீர்ப்பு சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”
நன்றி : படம் இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்.