அத்தியாயம் – 15 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர்

திப்பு ரஹிம்

“நான் என்ன தீர்ப்பு சொல்வேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

அதற்கு அவர்கள் “நீங்கள் உண்மையாளர், நீதியாளர், உண்மையாளரின் மகன் ஆகவே எங்கள் விஷயத்தில் நன்மையே நாடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்கள்.

அம்மக்களை நிமிர்ந்துப் பார்த்த நபிகளார் சொன்னார்கள் “உங்கள் அனைவரையும் நான் விடுதலை செய்கிறேன். இன்று முதல் நீங்கள் சுதந்திரமான மனிதர்கள். யாரும் அவர் அவர்கள் கொள்கையில் இருந்து கொள்ளலாம்” என்றார்கள்.

ஆமாம் அன்றைய மக்காவிலே சிலை வணங்கக் கூடியவர்கள் இருந்தார்கள், நெருப்பை வணங்கக் கூடியவர்கள் இருந்தார்கள், யூதர்கள் இருந்தார்கள், கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்  அனைவரும் தங்கள் கோட்பாடுகளுடன் வாழலாம் என்றார்கள்.

மக்கா வெற்றி மூலம் நபியவர்களுக்கு சர்வ அதிகாரமும் கிடைத்தது. அங்கு அவர்கள் என்ன சட்டத்தை வேண்டுமானாலும் இயற்றியிருக்கலாம். ஆனால் அவர்கள் அத்தனை மக்களையும் “தலை நிமிர்ந்து நடக்கச் சொன்னார்கள். உங்கள் கொள்கையில் நீங்கள் இருந்து கொள்ளலாம்” என்று சுதந்திரம் கொடுத்தார்கள்.

“ஒரு மனிதன் சுயமரியாதையுடன் தான் வாழ வேண்டும்” என்பதை அத்தனை மனிதர்களுக்கும் வலியுறுத்தினார்கள்.

புனிதப் பள்ளியை தூய்மைப்படுத்தி விட்டு இதுவரை அந்தப் பள்ளியினுடைய திறவுகோலை வைத்திருந்த குடும்பத்தார்களிடமே மீண்டும் அதை ஒப்படைத்தார்கள். இன்றளவும் அந்த குடும்பத்தாரிடம் தான் இருக்கிறது. காபாவினுடைய திறவுகோல்.

அதற்குப் பிறகு 19 நாட்கள் மக்காவில் தங்கியிருந்தார்கள். மக்காவைச் சுற்றி இருக்கக்கூடிய மக்கள் இந்த சம்பவத்திற்கு பிறகு சாரை சாரையாக வந்து இஸ்லாத்தில் இணைந்தார்கள்.

இதற்கு முன்பாக அந்த மக்கத்து வாசிகள் செய்த அத்தனையையும் அன்று மன்னித்தார்கள். மன்னிக்கும் குணத்தில், பாசத்தில் நபியவர்களை விட சிறந்தவர்கள் யாரையும் சொல்ல முடியாது. சான்றாக நிறைய சம்பவங்கள் உண்டு.

தனது சிறிய தந்தை ஹம்சா அவர்களை ஈட்டியை எய்து கொலை செய்த வகுஷியும் கூட இஸ்லாத்தை தழுவி இருந்தார். அவர் நபிகளாரை சந்திக்க வந்த பொழுது…

அவரைப் பார்த்து நபிகளார் சொன்னார்கள். “தோழரே நானும் மனிதனே எனது சிறிய தந்தையை கொடூரமாக கொலை செய்து இருக்கிறீர்கள். என் கண்ணுக்கு முன்பாக வராதீர்கள்” என்றார்கள்.

ஏதோ ஒரு தருணத்தில் தான் அவரை ஏதாவது பேசி விடக்கூடாது என்று பயந்தார்கள். அந்த சம்பவத்தை மறக்க நினைத்தார்கள். அதற்காகத்தான் “என் பார்வையில் வராதீர்கள்” என்று சொன்னார்கள் அதற்குப் பிறகு வகுஷி நபிகளாருக்கு முன்பு வருவதை தவிர்த்துக் கொண்டார்.

பிறகு மக்காவில் புதிய நிர்வாகத்தை நியமித்துவிட்டு மீண்டும் மதினா கிளம்பி போய் விட்டார்கள்.

கடைசி ஹஜ்:

ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு மக்கா மதினாவைச் சுற்றி முழுவதும் ஒரே தேசமாக மாறி இருந்தது. மக்களுக்கு அனைத்து கடமைகளையும் சொல்லிக் கற்றுக் கொடுத்துவிட்டார்கள்.

“ஏக இறைவன் ஒருவனே முஹம்மது இறைவனின் தூதர் ஆவார்கள்” (லாயிலாக இல்லல்லாஹ் முகம்மது ரசூலுல்லாஹ்) என்ற வாசகத்தை நம்பக்கூடியவர்களிடம்…

“வழியில் கிடக்கும் ஒரு சிறிய கல்லாக இருந்தாலும், மக்களுக்கு சிரமத்தைக் கொடுக்காமல் அதை பாதையை விட்டு அகற்ற வேண்டும்” என்பது உட்பட 60 லிருந்து 80 நற்பண்புகள் இருக்க வேண்டும் என்று போதித்திருந்தார்கள்.

அதாவது ஒரு முஸ்லிம் என்பவன், அவனுடைய கண் முன்பாக ஒரு தீமை நடந்தால் மூன்றே மூன்று நிலை தான் எடுக்க முடியும்.

  1. சக்தி இருந்தால் அந்த தீமையை அவன் கையால் தடுக்க வேண்டும்.
  2. அல்லது நாவால் தடுக்க முடியும் என்றால் பேசி அதை தடுக்க வேண்டும்.
  3. அதுவும் முடியாது என்றால் மனதால் அந்த தீமையை வெறுத்து அவ்விடத்தை விட்டு விலக வேண்டும்.

இந்த மூன்று பண்புகளை தான் தன் உள்ளத்தில் எந்த நேரமும் சுமந்து கொண்டிருக்க வேண்டும். எந்த தீமையையும் கண்டுகொள்ளாமல் போகக்கூடாது!  என்பதை நபிகளார் காட்டி தந்தார்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் மீதமிருந்தது ஹஜ் மட்டும். அதையும் செய்து காட்டிவிட வேண்டும் என்று மக்களிடத்திலே அறிவித்தித்தார்கள்.

‘நபியவர்கள் ஹஜ்ஜிக்கு செல்கிறார்கள்’ என்று தெரிந்ததும் அனைத்து மக்களும் அவர்களுடன் செல்வதற்கு தயாராகி விட்டார்கள். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மக்கள் ஹஜ்ஜிக்கு கிளம்பி விட்டார்கள்.

எட்டு நாட்கள் பயணித்து மக்கா  சென்று ஹஜ் பெருநாளின் முதல் நாள், ஒன்றரை லட்சம் மக்கள் கூடி இருக்கக்கூடிய அரபா பெருவெளியில் மிக நீண்ட ஒரு உரையை நிகழ்த்தினார்கள். அப்படி ஒரு நீண்ட ஒரு உரையை நபிகளார் இதுவரை நிகழ்த்தியது இல்லை.

அதேபோல் ஒவ்வொரு முறையும் அந்த மக்களிடத்திலே “நான் உங்களிடத்திலே சொல்லி விட்டேனா?” என்று கேட்பார்கள்.

அதற்கு மக்கள் “ஆம் சொல்லிவிட்டீர்கள்” என்று சொல்வார்கள். உடனே வானத்தை நோக்கி விரலைக் காண்பித்து இறைவனிடத்திலே மக்களை சாட்சியாக்குவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *