வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
—————————————————————
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16
—————————————————————
நபியவர்கள் மரணத்திற்கு முன்பாக மிக ஆழமாக மக்களுக்கு பதிவு செய்தது “நான் அல்லாஹுவின் தூதர் உங்களில் ஒருவன்” என்பதைத் தான்.
“தன் உயிருக்கும் மேலாக தன்னைக் கருதும் மக்கள் பிறகு தன்னை கடவுளுக்கு நிகராக மாற்றி விடுவார்கள்” என்பதை அறிந்து அதனுடைய அத்தனை வழிகளையும் அடைத்தார்கள்.
“அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்தும் மறையக் கூடியதே. நிரந்தரமானது இறைவன் மட்டுமே. இறைவனின் கட்டளைகளை மீறி நான் நடக்க வில்லை”.
தன்னை வரைவதற்குத் தடை விதித்தார்கள், தன்னை மனிதன் என்ற நிலையைத் தாண்டி புகழ்வதை தடுத்தார்கள்.
“இந்த உலகத்தில் உள்ள அத்தனையும் படைக்கப்பட்டவை”
“படைப்பினங்கள் அனைத்தும் பலகீனமானவை”
“ஒருக்காலும் மனிதன் கடவுள் ஆக முடியாது!”
நோய்வாய் பட்டிருந்த போது கூறினார்கள், “இதற்கு முன் வந்த சமூகத்தினர் தங்கள் நபிமார்களின் அடக்கத்தலத்தை வணக்கத்தலங்களாக மாற்றிக் கொண்டனர்” என்று கூறி அவர்களை சபித்தார்கள்.
அலி ரலி அவர்களை அழைத்து தரைக்கு மேல் கட்டப்பட்ட அனைத்து அடக்கத்தலத்தையும் உடைக்கச் சொன்னார்கள்.
இன்றைய காலத்திலும் நாம், பெரிய தாடி வைத்தவர்கள், பெரிய தலைப்பாகை, மாலைகள் இட்டவர்கள், மற்ற மனிதர்கள் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக காட்சி தரும் மனிதர்களை “மகான் என்றும், கடவுளுக்கு நெருக்கமானவர் என்றும், நம்மை அவர் கடவுளிடம் அழைத்துச் செல்வார்” என்றும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் “இந்த உலகத்தில் பிறந்த அத்தனை மனிதர்களும் தவறு செய்யக் கூடியவர்கள். யாரிடம் இறையச்சம் அதிகம் உள்ளதோ அவரே சிறந்தவர் என்றார்கள்”.
“இறைவன் ஒருவனே யாதொரு தேவையும் அற்றவன் அவன் யாருக்கும் பிறக்கவும் இல்லை யாரையும் பெறவும் இல்லை அவனைப் போன்று வேறு எதுவும் இல்லை” என்ற குர்ஆன் வசனத்தை மக்களுக்குச் சொன்னார்கள்.
இதைத் தாண்டி “கடவுளுக்கு செய்கிறேன் கடவுளிடம் அழைத்துப் போகிறேன்” என்று யார் சொன்னாலும் அவர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்பதை மக்களுக்கு கற்று தந்தார்கள்.
இப்படி கடவுள் தனித்தவன் அவனுக்கு நிகராக யாரையுமே ஆக்கி விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்.
புரட்சி
நபியவர்கள் இறைச் செய்தியை மக்களிடத்திலேச் சொல்ல ஆரம்பித்த அந்த நிமிடத்தில் இருந்து மரணிக்கும் வரை துன்பங்களையும், துயரங்களையும் தான் அனுபவித்தார்கள்.
மதினாவிற்கு வந்த பத்து ஆண்டுகளில் 19 போர்கள், நபிகளார் நேரடியாக கலந்து கொண்டது மட்டும்.
அதே நேரத்தில் மக்களுக்கு உபதேசம் செய்து இறை கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பையும் சரியாகச் செய்தார்கள்.
வரலாற்றிலே இத்தனைக் குறுகிய காலத்தில் அவ்வளவுப் பெரிய மாற்றத்தை அரபு உலகில் செய்து விட முடியுமா? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் அளவிற்கு மாற்றங்களை உருவாக்கி இருந்தார்கள்.
1. அரபு உலகை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து அனைவரையும் சகோதரர்களாக மாற்றி இருந்தார்கள்.
காலம் காலமாக அடிமைத்தனம் அன்றைய உலகில் இருந்தது. அதை ‘சமூக ஒழுங்காக’ கருதினார்கள். ஆகவே தான் நபிகளாரை எதிர்த்ததில் அடிமைகளும் இருந்தார்கள். இன்றளவும் மக்கள் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். இரு சாராருக்கும் அதைப் புரியவைத்து, அந்த சமூக அமைப்பை மாற்ற சில காலம் எடுத்துக் கொண்டது.
நபிகளார் இறந்தப் பிறகும் அடிமைகள் என்ற பெயருடன் சிலர் இருந்தனர். ஆனால் யாரும் அடிமைகளை வைத்து பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. காரணம் “யார் பொறுப்பில் அடிமைகள் இருந்தாலும் அவர் களுக்கு நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ, என்ன உடுத்துவீர்களோ அதையே தான் தரவேண்டும்” என்று கட்டளை இட்டார்கள்.
மேலும் பல தொழிலாளர் சட்டங்களையும் இயற்றினார்கள். அப்போதே, “வேலையாட்கள் வேலை செய்து வியர்வை ஈரம் காய்வதற்கு முன்பே ஊதியம் கொடுத்து விட வேண்டும்” என்றார்கள். உணவு, உடை பற்றாக்குறை, அதுவே அன்றைய பொருளாதாரம் என்ற சூழலில் அடிமைகளை வைத்து பராமரிக்க முடியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அதை விட்டு விட்டார்கள்.
உலகில் சீர்திருத்தவாதிகள் நிறைய பேர் தோன்றினார்கள். ஏதோ ஒரு பகுதியில், ஏதோ ஒரு இனத்தில், ஏதோ ஒரு மொழியில் மட்டும் அவர்களுடைய சீர்திருத்தங்கள் இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எங்கே எல்லாம் இருக்கிறார்களோ! அங்கே எல்லாம் சமத்துவமும் சகோதரத்துவமும் மேலோங்கி நிற்கும்.
ஆட்சி எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் மனிதன் தலைநிமிர்ந்து வாழ்ந்தான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு முன்பாக கைகளை கட்டிக்கொண்டு தலைமுறை தலைமுறையாக குனிந்து நின்றவனுக்கு இந்தக் கொள்கை அவனிடத்திலே சென்றவுடன் நிமிர்ந்து நின்றான். அதற்குப் பிறகு எதற்காகவும், யாருக்காகவும், தலைகுனிவதில்லை! படைத்த இறைவனைத் தவிர.
“தன்னைவிட பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனும் இல்லை தாழ்ந்தவனும் இல்லை” என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைச் சொல்லிக் கொடுத்து உருவாக்கியதின் அடிப்படையில், முஸ்லிம்களை யாரும் ஆட்சி செய்ய முடியும். ஆனால் ஒருக்காலும் அடிமைப்படுத்த முடியாது! கொத்துக் கொத்தாக கொலை செய்தாலும் அவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க மாட்டார்கள். உலக நாடுகளில் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட மக்களில் பெரும்பாலானோர் நபிவழி வந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
உலகில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு கொள்ளாத இஸ்லாமிய மன்னர்கள் நல்லவர்களாகவும், அடிமைத் தனத்தையும், ஏற்றத்தாழ்வுகளையும் ஆதரிக்காத இஸ்லாமிய மன்னர்கள் கொள்ளைக்காரர்களாக, தீயவர்களாகப் புனையப்பட்டார்கள்.
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
வெள்ளிக்கிழமை தொடரும்.