வரலாற்றுத் தொடர்
திப்பு ரஹிம்
—————————————————————
முந்தைய பகுதிகளை வாசிக்க
அத்தியாயம் – 1 அத்தியாயம் – 2
அத்தியாயம் – 3 அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5 அத்தியாயம் – 6
அத்தியாயம் – 7 அத்தியாயம் – 8
அத்தியாயம் – 9 அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11 அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13 அத்தியாயம் – 14
அத்தியாயம் – 15 அத்தியாயம் – 16
அத்தியாயம் – 17
—————————————————————
நபி அவர்களின் இறை கட்டளைகள் தொடர்ச்சி…
2. முதல் போரில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து எதிரிகளிடமே உதவி கேட்ட நபிகளார் ஏற்படுத்திய கல்வி புரட்சி, மிகப்பெரிய மாற்றத்தை அரபு உலகில் ஏற்படுத்தி, கல்வியின் சிகரங்களாக அம் மக்களை மாற்றி இருந்தது.
அதன் தொடர்ச்சி உலகம் முழுவதும் பரவியதோடு இன்றளவும் நாம் பயன்படுத்திக் கொண்டிருக்க கூடிய பேனா, பேப்பரில் இருந்து அல்ஜீப்ரா வரைக்கும் கண்டுபிடித்தார்கள். எங்கேயெல்லாம் பள்ளிவாசல் கட்டப்படுகிறதோ! அங்கேயெல்லாம் ஒரு சிரிய நூலகமும் வைக்கப்படுகிறது. இந்த நிமிடம் எங்கோ ஒரு இடத்தில் ஒரு அரேபிய நூல் அச்சாகிக் கொண்டிருக்கும்.
அனைத்து துறையிலும் மிகச்சிறந்த எழுத்தாளர்களும் அறிஞர்களும் உருவானார்கள், மருத்துவ உலகில் ‘இப்னு சீனா’ என்றப்பெயர், தெரியாத மருத்துவர் இருக்க முடியாது. நூற்றுக்கணக்கான புத்தகங்களை எழுதியவர் மருத்துவ உலகின் புரட்சி நாயகன். அவரைப் போல ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சியாளர்களும் எழுத்தாளர்களும் உலகிற்கு கிடைத்தார்கள்.
நபிகளார் இறந்து சில காலங்களிலேயே பாக்தாத் என்ற ஒரு செயற்கை நகரை, நடுவில் நதியை வைத்து பாலங்கள் அமைத்து, திட்டமிடப்பட்ட அகலமான சாலைகளை இட்டு அப்போதே மிக அழகாக வடிவமைத்தார்கள். பாக்தாத்தின் அழகை மேலும் மெருகூட்டியது அங்கு கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய நூலகம் தான். இப்படி கல்வி உலகிற்கு நபிகளார் காண்பித்த வழி எண்ணிலடங்கா நன்மைகளைத் தந்தது.
3. பெண் பிள்ளைகள் பிறந்தால் அன்றைய அரபுகள் வெட்கி தலை குனிந்து வீட்டை விட்டு வெளியே வருவதற்கு கூச்சப்படுவார்கள். அதற்காக உயிரோடு பெண் குழந்தைகளைப் புதைக்கக் கூடிய காலகட்டத்தில், நபி அவர்கள் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையாக இருந்து திருமணம் நடத்தி வைத்த மிகச் சிறந்த தந்தையாகவும் இருந்தார்கள்.
பெண்களை தொழிலுக்கு செல்வதற்கு அனுமதித்தார்கள், (அவர்களின் பாதுகாப்பிற்காகதான் ஹிஜாப் சட்டம் வந்ததே தவிர வீட்டில் இருப்பவர்களுக்கு அல்ல! அன்றைய ஆடை என்பது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் தைக்கப்படாத துண்டுகள் தான். ஆண்களைவிட பெண்களுக்கு சற்று பெறிய ஆடை அதுதான் ஹிஜாப்), போர்க்களத்தில் அனுமதித்தார்கள், நபிகளார் அமர்ந்து இருக்கக்கூடிய அத்தனைப் பெரிய சபையில் ஆண்களைப் போல பெண்களும் இருந்தார்கள். கேள்விகள் கேட்டு பதில்களைப் பெற்றார்கள்.
திருமணத்தில் கணவன் மட்டுமே விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற நிலையில், பெண்களுக்கும் ‘குலா’ என்ற உரிமையை கொடுத்து “கணவன் சரியில்லை என்றால் உடனடியாக பிரிந்து கொள்ளலாம்” என்ற உரிமையை வழங்கினார்கள்.
விதவைப் பெண்களை மறுமணம் செய்து கொள்ள அனுமதித்தார்கள். ஆண்களைப் போல பெண்களுக்கும் உரிமை உண்டு, சொத்தில் பங்கும் உண்டு என்று பெண்களுக்கு அதிகமான உரிமைகளை வழங்கி அந்த இருண்ட காலத்திலேயே பெண்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தார்கள்.
4. மக்களுடைய வறுமையை ஒழிப்பதை மிக முக்கியமாக கருதினார்கள். இரண்டு பெருநாட்களில் மக்கள் யாரும் பட்டினி கிடந்து விட கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள்.
நோன்பு பெருநாள் தினத்தில் வீட்டில் இருப்பவர்கள், வேலைக்காரர்கள், வயிற்றிலே இருக்கக்கூடிய குழந்தைகள் உட்பட அனைவரையும் கணக்கிட்டு ஒருவருக்கு ஒரு ஸாவு(இரு கைகள் சேர்த்து அள்ளினால் வருவது) என்று கணக்கிட்டு நாம் உண்ணக்கூடிய உணவு பொருளை ஏழைகளுக்கு தானமாக வழங்க வேண்டும். அதுவும் பெருநாளுடைய தொழுகைக்கு போவதற்கு முன்பாக கட்டாயம் வழங்கி விட வேண்டும் என்றார்கள்.
“உங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது தான தர்மம்” என்பதை வலியுறுத்தினார்கள்.
“என்னிடம் தான தர்மம் செய்வதற்கு பணம் இல்லை” என்று கூறியவரிடம்
“உழைத்தாவது நீங்கள் தான தர்மம் செய்ய வேண்டும்!” என்று வலியுறுத்தினார்கள்.
முக்கியமாக சதக்கத்துல் ஜாரியா என்ற தர்மத்தை மிக அதிகம் அதிகம் வலியுறுத்தினார்கள். அதாவது நிரந்தர தர்மம், பள்ளிக்கூடங்கள் கட்டுவது அதற்கு உதவி செய்வது, இறைவனை வணங்குவதற்கு பள்ளிவாசல்கள் கட்டுவது, அதில் பங்கு கொள்வது, நீர் நிலைகளை உருவாக்கித் தருவது, “ஒரு மரத்தையாவது நட்டு வைக்க வேண்டும். அதில் இருக்கக்கூடிய பழங்களை பறவைகள் உண்ணும் போதெல்லாம் அதனுடைய நன்மைகள் நமக்கும் வந்து சேரும்”. என்று நிரந்தரமான செயல்களை செய்து, நாம் மரணித்த பிறகும் அது மக்களுக்கு பயன் தர வேண்டும். என்பதை வலியுறுத்தினார்கள்.
தான தர்மங்களை சாதாரணமாக நன்மை என்று சொல்லி விடாமல்… இறைவனை வணங்கக்கூடிய ஒன்றாக ஆக்கினார்கள்.
ஏழைகளுக்கு நீங்கள் செய்யக்கூடிய தர்மங்கள் இறைவனுக்கு செய்ததாக ஆகும் என்று கூறினார்கள். இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஒன்றாக தான தர்மம் உள்ளது. தான தர்மம் செய்யாத ஒருவன் முஸ்லிமாக இருக்கவே முடியாது.
இதனுடைய தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால்… மதினா அரசாங்கத்தினுடைய கருவூலம் நிறைந்து இருந்தது. மேலும் நபிகளார் மக்களுக்கு அறிவித்தார்கள் “இங்கு யார் சொத்துக்களை விட்டுச் மரணிக்கிறாரோ அது அவர்களின் வாரிசுகளுக்கு சொந்தம் யார் கடனை விட்டு விட்டு மரணிக்கிறாரோ அதை அரசாங்கம் அடைக்கும்” என்றார்கள். இத்தனைப் பெரிய புரட்சிகளையும் செய்து அந்த மக்களை உலகத்தின் மிகச்சிறந்த நாகரீக மனிதர்களாகவும், நிர்வாகிகளாகவும் மாற்றி அமைத்த நபிகளாரின் சொந்த குடும்ப நிதி நிலை எப்படி இருந்தது?
நன்றி : படம் (ஆசிரியரின் தேர்வு) இணையத்திலிருந்து
திங்கள்கிழமை தொடரும்.