அத்தியாயம் – 20 : மக்கா முதல் மைசூர் வரை

வரலாற்றுத் தொடர்

திப்பு ரஹிம்

பியவர்களோ இரண்டு வாய்ப்பு கொடுத்து ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள்.

“உங்களுக்கு பொருளாதாரம்தான் வேண்டும் என்றால் நான் உங்களை விட்டு விடுகிறேன். எல்லோருக்கும் கிடைப்பது போல உங்களுக்கும் பொருளாதாரம் கிடைக்கும். அல்லது அல்லாஹுவின் தூதரின் மனைவியாக இருக்க வேண்டுமென்றால் நான் இப்படித்தான் இருப்பேன் முடிவு செய்து கொள்ளுங்கள்” என்றார்கள்.

உடனடியாக மனைவிமார்கள் “இல்லை இல்லை அல்லாஹ்வின் தூதரின் மனைவியாகவே இருக்க விரும்புகிறோம்” என்றார்கள்.

நபியவர்களின் மனைவிமார்கள் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் தாயாக கருதப்பட்டார்கள். ஆகவே அவர்கள் இதையே தேர்ந்தெடுத்தார்கள்.

நபிகளாரின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் “நபியவர்கள் மதீனா வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை. ஒரு நாளில் இரண்டு வேளை உணவு அதிலும் ஒருவேளை ரொட்டியும் இன்னொரு வேலை பேரீச்சம் பழமும் மட்டும் தான் உணவாக இருக்கும்”.

அதே ஆயிஷா (ரலி) அவர்கள் தனது அக்காவின் மகன் உர்வா பின் ஜீபைர்(ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள் “நாங்கள் மூன்று பிறைகளைப் பார்த்து விடுவோம் (மூன்று மாதங்கள்) அதுவரையிலும் எங்கள் வீட்டில் அடுப்பு எரிக்காமல் இருந்திருக்கிறோம்” என்பார்கள்.

மூன்று மாதங்கள் ஒரு நாட்டின் மன்னருடைய வீட்டில் அடுப்பு எரிக்காமல், சலிக்கப்படாத கோதுமையில் தண்ணீரைத் தெளித்து அதை சாப்பிட்டு உள்ளார்கள். சில நேரங்களில் ஒருவேளை மட்டும் கோதுமையில் ரொட்டி கிடைத்தது.

மதினாவிற்கு வந்த பிறகு நபியவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டால் தனித்து இருக்கவில்லை, கூடவே தோழர்கள் சூழ்ந்து விடுவார்கள். அப்படி இருக்கையில் ஒரு முறை மனைவிமார்களிடம் பேசாமல் ஒரு மாத காலம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்கள்.

செய்தி கேள்விப்பட்ட உமர் (ரலி) அவர்கள் நபிகளாரைச் சந்திக்க அவர்கள் தங்கி இருந்த இடத்திற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி உமர் (ரலி) அவர்களின் கண்களில் கண்ணீர் வர வைத்தது. ஒரு ஈச்சம் பாயில் படுத்திருந்தார்கள், சறுகுகலால் செய்யப்பட்ட தலையணை, தலைக்கு மேலாக ஒரு தோல் பையில் தண்ணீர் தொங்கியது.

உமர் (ரலி) அவர்களை பார்த்ததும் நபியவர்கள் எழுந்து அமர்ந்தார்கள். அப்போது அவர்கள் உடலில் ஈச்சம்பாயின் அந்த அச்சிகள் தெரிந்தது. அதைக் கண்ட உமர்(ரலி) அவர்கள் நபிகளாரிடம் “பக்கத்து நாட்டு அரசர்கள் எல்லாம் எப்படி சுகபோகமாக வாழ்கிறார்கள்? அது போல் நீங்களும் கொஞ்சமாக வாழலாம் இல்லையா?” என்றார்கள்.

அதற்கு நபி அவர்கள், அவர்களுக்கு அறிவுரைகளைச் சொல்லி விட்டு சொன்னார்கள், “அந்த அரசர்கள் இந்த உலகத்தின் ஆசா பாசங்களை விரும்புகிறார்கள். ஆனால் நானோ மறு உலகை தான் விரும்புகிறேன்” என்றார்கள்.

அதேபோல “நான் இந்த உலகத்தில், மர நிழலில் சற்று நேரம் ஒதுங்கி ஓய்வெடுக்கக்கூடியவன் போல தான்” என்றார்கள்.

இப்படி இந்த உலக ஆசாபாசங்களை விரும்பாதவர்களாக வறுமையோடு வாழ்ந்தார்கள். அரசு சொத்தை தனக்கும் தன் மனைவிகளுக்கு மட்டுமல்ல தனது வாரிசுகளுக்கும், தலைமுறைக்கும் கூட ஹராம் (தடை) என்று தடுத்து விட்டார்கள்.

நபியவர்களின் கடைசி கால கட்டங்கள் மிகவும் வறுமையில் இருந்தது. அங்கிருந்த ஒரு யூதரிடம் சில படி கோதுமைகள் வாங்கினார்கள். அதற்கு பகரமாக தன்னுடைய கவச ஆடையை அடமானமாக அவரிடம் தந்திருந்தார்கள். அந்தக் கவச ஆடையைக் கூடத் திருப்ப முடியாமல் இறந்து விட்டார்கள். பிறருக்கு முன்னோடியாக வாழ வேண்டும் என்று நினைத்தவர்கள் கடைசிவரை வறுமையுடனே வாழ்ந்தார்கள்.

இப்படி அந்த 23 ஆண்டு காலங்களில் உலகத்தில் வெளிச்சத்தை ஏற்றி வைத்து விட்டு வறுமையை ஏற்றுக் கொண்டு அடங்கி விட்டார்கள். மார்க்கமும் முழுமைப் பெற்றுவிட்டது. இவர்களே உலகத்தின் இறுதி நபியாகவும் நபித்துவமும் முற்றுப்பெற்றது.

இனி அரபு உலகை தொடர்ந்து நடத்திச் செல்ல சரியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *